disalbe Right click

Monday, April 6, 2015

மோசடி நிறுவனங்களை அடையாளம் காண


மோசடி நிறுவனங்களை அடையாளம் காண 10 வழிகள்
***************************************************************
பிஏசிஎல், எம்ஆர்டிடி மாதிரி பல நூறு மோசடி நிறுவனங்கள் தமிழகம் முழுக்க ராஜ்ஜியம் நடத்தி வருகின்றன. இந்த நிறுவனங்களைக் கண்டுபிடிப்பதற்கான பத்து வழிகள் இருக்கிறது.

1. நாம் முதலீடு செய்யப்போகும் நிறுவனம் எந்தமாதிரியானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக, தனிநபர் நடத்தும் அமைப்பா, கூட்டாண்மை நிறுவனமா, இன்ஷூரன்ஸ் நிறுவனமா, வங்கியா, வங்கியல்லாத நிதி நிறுவனமா, பப்ளிக் லிமிடெட் கம்பெனிகளா, பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை ஒளிவுமறைவற்ற முறையில் தங்கள் கணக்குவழக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், அவற்றைத் தேர்வு செய்வது நல்லது. ஆனால், அது மட்டுமே நம் பணத்துக்குப் பாதுகாப்பல்ல.

2.நிறுவனங்கள் எந்தச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது, எந்த ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் கீழ் நெறிமுறைப்படுத்தப் படுகிறது என்பதை இணையம் மூலமாகவோ, நேரடி யாகவோ தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களால் ஒரு பிரச்னை எனில், யாரிடம் முறை யிடுவது என்பது தெரியும். உதாரணமாக, இன்ஷூரன்ஸ் நிறுவனம் எனில், ஐஆர்டிஏவால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். (பதிவு பெற்ற நிறுவனங்களின் பெயர் பட்டியல் ஐஆர்டிஏ இணையதளத்தில் கிடைக்கிறது). வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் எனில், இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். ஈக்விட்டி சார்ந்த முதலீடுகள் எனில், அந்த நிறுவனங்கள் செபியால் அங்கீகரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும். உற்பத்தி/சேவைத் துறை நிறுவனங்கள் எனில், கம்பெனி சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

3.முதலீடுகளை பணமாகவே பெறுவோம் எனில், அந்த நிறுவனங்களை நம்பாதீர்கள். அதேபோல், நிறுவனத்தின் பெயரில் மட்டுமே காசோலைகளை எழுதுங்கள். குறிப்பிட்ட வேறு நிறுவனத்தின் பெயரில் எழுதவோ, தனி நபரின் பெயரிலோ காசோலையை தரச் சொன்னால் போலி நிறுவனங்கள் என்பதை அடையாளம் கண்டுவிடலாம். நிறுவனத்தின் பெயரில் காசோலை எடுக்கச் சொன்னாலும், அதில் க்ராஸ் செய்ய வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது போலி நிறுவனமாகவே இருக்க வாய்ப்புண்டு.

4.ஒரு நிறுவனம் மக்களிடமிருந்து பணத்தை டெபாசிட்டாகப் பெறுகிறது எனில், அதற்கு இந்திய ரிசர்வ் வங்கியிடம் முன் அனுமதி பெற்று இருக்க வேண்டும். ரிசர்வ் வங்கி தவிர, வேறு அரசு அல்லாத அமைப்புகளிடம் அனுமதி பெற்று டெபாசிட் பெற்றாலும் அதைப் போலி நிறுவனமாகக் கருதலாம்.

5.பட்டியலிடப்படாத நிறுவனங்களில் நிதி சார்ந்த பிரச்னைகள் இருந்தால் நமக்குத் தெரியாது. எனவே, பட்டியலிடப்படாத நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

6.நிதி நிறுவனங்களில் முதலீடு மேற்கொள்ளும் போது அவர்கள் வழங்கும் விண்ணப்பங்களில் தந்திருக்கும் டிஸ்க்ளெய்மர் விதிகள் மற்றும் நம் சந்தேகங்களுக்கு விளக்கம் தர மறுத்தாலோ, இழுத்தடித்தாலோ, மழுப்பினாலோ அந்த நிறுவனம் போலி நிறுவனம் என்று முடிவு செய்யலாம். முழுவதும் பூர்த்தி செய்யாத எந்த விண்ணப்பத்திலும் கையெழுத்திடாதீர்கள்.

7.முதலீடு செய்த நிறுவனத்தின் செயல்பாடுகள், புரமோட்டர்களின் செயல்பாடுகள், கணக்கு வழக்குகள், நிறுவன நிர்வாகம், நிதி நிலைமை, சந்தையில் நிறுவனத்துக்கு ஏற்படும் மாற்றங்கள் என்று எதையும் தெளிவாக வெளியிடாமல், ரகசியமாக வைத்திருந்தால் அந்த நிறுவனத்தைப் போலி நிறுவனமாகக் கருதலாம். குறிப்பாக, பெறப்படும் பணம் எதில் முதலீடு செய்யப்படுகிறது, எப்படி நிர்வகிக்கப்படுகிறது என்பதை வெளி யிடாத நிறுவனங்கள் மிக ஆபத்தானவை.

8.நிறுவனத்தின் எந்த முக்கிய மாற்றமும் முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்த பின்னரே செய்ய வேண்டும். அப்படி தெரிவிக்காமல் செய்தால், அது போலி நிறுவனம்.

9.போலி நிறுவனங்கள் வளர வளர தன் வெளிப்படைத்தன்மையை வெகுவாகக் குறைத்துக் கொள்ளும். சரியான பதில்கள் கிடைக்காது, பணம் சம்பந்தமான பரிமாற்றங்கள் படிப்படியாகக் குறையத் தொடங்கும். இறுதி நிலையில் அவை எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்கிற மாதிரி மர்மமாக செயல்படத் தொடங்கும்.

10.கவர்ச்சிகரமான ஆஃபர்கள், அதிக டிவிடெண்ட், குலுக்கல் முறை யில் கோடி ரூபாய்க்கு பரிசு, தங்க காசு, ஆண்டுக்கு 35% வட்டி, ரியல் எஸ்டேட் கூட்டு முதலீடுத் திட்டம் என்கிற மாதிரியான, பேராசையைத் தூண்டக்கூடிய வார்த்தைகளைச் சொல்லும் எல்லா நிறுவனங்களும் 200% போலிதான். இந்த நிறுவனங் களிடமிருந்து தூர விலகி நில்லுங்கள்!


No comments:

Post a Comment