disalbe Right click

Sunday, April 19, 2015

வெறிநாய்க்கடி


வெறிநாய்க்கடி
விலங்குகள் மூலம் நமக்குப் பரவும் நோய்களில் மிக முக்கியமானது ‘ரேபீஸ்’ (Rabies). தெருக்களில் அலையும் வெறிநாய்கள் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது என்பதால், இதனை ‘வெறிநாய்க்கடி நோய்’ என்கிறோம். ரேபீஸ் எனும் வைரஸ் கிருமி, நாய், பூனை, நரி, கீரி, ஓநாய், குரங்கு, குதிரை போன்ற விலங்குகளைத் தாக்கி, அவற்றுக்கு நோயை உண்டாக்கும். இந்த வைரஸ் தாக்கப்பட்ட விலங்குகள், மனிதர்களைக் கடிக்கும்போது மனிதர்களுக்கும் ரேபீஸ் நோய் ஏற்படும்.
நோய் வரும் வழி:
ரேபீஸ் நோய் உள்ள நாயின் உமிழ்நீரில் இருந்து ரேபீஸ் கிருமி வெளியேறும். இந்த நாய், மனிதர்களைக் கடிக்கும்போது, அந்தக் காயத்தின் வழியாக, இந்தக் கிருமி உடலுக்குள் புகுந்துகொள்ளும். பிறகு, நரம்புகள் வழியாகவும், முதுகுத் தண்டுவடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து, அங்குள்ள திசுக்களை அழித்து ரேபீஸ் நோயை உண்டாக்கும். சிறிய அளவில் வெறிநாய் பிறாண்டினாலும், நம் காயங்களில் வெறிநாய், தன்  நாக்கினால் தீண்டினாலும் இந்த நோய் வரலாம்.

அறிகுறிகள்:
வெறிநாய் கடித்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, ஆறு வருடங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் அறிகுறிகள் தொடங்கலாம். நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படும். காய்ச்சல், வாந்தி வரும். உணவு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாது. தண்ணீரைப் பார்த்தாலே, தொண்டைத் தசைகள் இறுக்கமடைந்து சுவாசம் நிற்கின்ற உணர்வு ஏற்படும்.  ‘எங்கே உயிர் போய்விடுமோ’ என்று பயம் உண்டாகும்.  இவர்கள் தண்ணீரைக்  குடிக்க மாட்டார்கள். அதிக வெளிச்சம் அல்லது காற்று பட்டால் உடல் நடுங்கும். மனம் எந்த நேரமும் அமைதி இன்றி இருக்கும். எதையாவது பார்த்து ஓடப் பார்ப்பதும், மற்றவர்களைத் துரத்திக் கடிக்க வருவதுமாகவும் இருப்பார்கள். நோயின் இறுதிக் கட்டத்தில் வலிப்பு வந்து, சுவாசம் நின்று உயிரிழக்க நேரிடும்.
ரேபீஸ் தடுப்பூசிகள்:
தற்போது, ரேபீஸ் நோயைத் தடுக்க நான்கு வகை தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளன. அவை, சுத்தப்படுத்தப்பட்ட கோழிக்கரு உயிரணுத் தடுப்பூசி (Purified Chick Embryo Cell Vaccine), மனித இரட்டை உயிரணுத் தடுப்பூசி (Human Diploid Cell Vaccine), சுத்தப்படுத்தப்பட்ட குரங்குச் சிறுநீரக உயிரணுத் தடுப்பூசி (Purified Vero Cell Vaccine), சுத்தப் படுத்தப்பட்ட வாத்துக் கரு உயிரணுத் தடுப்பூசி (Purified Duck Embryo Cell Vaccine). இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி ரேபீஸ் நோயைத் தடுக்கலாம். ஒருமுறை தரப்படும் ஊசிமருந்தின் அளவு 1 மி.லி. இதைப் புஜத்தில் தசை ஊசியாகச் செலுத்த வேண்டும்.
ரேபீஸ் தடுப்புப் புரதம்:
ரேபீஸ் நோயைத் தடுக்க, ‘ரேபீஸ் தடுப்புப் புரதம்’ (Human Rabies immunoglobulin) ஒன்றும் உள்ளது. இது, ரேபீஸ் கிருமிகள் காயத்தில் இருந்து உடலுக்குள் நுழைவதற்கு முன்பே, அவற்றை அழித்துவிடும் தன்மை உடையது. நாய் கடித்தவுடன், கடிபட்ட காயத்திலும், அதைச் சுற்றிலும் இது செலுத்தப்பட வேண்டும். நாய் கடித்த 7 நாட்களுக்குள் இதனைப் பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும் பாதிக்கப்பட்ட வரின் ஒரு கிலோ உடல் எடைக்கு 20 யூனிட் என்ற அளவில் இதைச் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், ரேபீஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியவை:
குறைந்தது 10 நிமிடங்களுக்கு காயம்பட்ட இடத்தில், சோப்பு போட்டு, வேகமாக விழுகின்ற குழாய்த் தண்ணீரில் நன்றாகக் கழுவ வேண்டும். காயத்தின் மீது பொவிடின் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான் போன்ற ஏதாவது ஒரு ‘ஆன்டிசெப்டிக்’ மருந்தைத் தடவலாம். முடிந்தவரை, காயத்துக்குக் கட்டுப் போடுவதையும், தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும். தையல் போடும் அளவுக்குக் காயம் மிகப் பெரிதாக இருந்தால், காயத்திலும் காயத்தைச் சுற்றிலும் தடுப்புப் புரதம் போட்ட பிறகே தையல் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து ரேபீஸ் தடுப்பூசி போட  வேண்டும். எந்த ஒரு காயத்துக்கும் ‘டெட்டனஸ் டாக்சாய்டு’ (Tetanus Toxoid) தடுப்பூசி அவசியம். கூடவே, காயம் குணமாக, தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளையும் சாப்பிட வேண்டும்.
தடுப்பூசி போடப்படும் முறை:
நாய் கடித்த நபருக்கு, நாய் கடித்த நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14-வது நாள்,     28-வது நாள் என ஐந்து தவணைகள் (0, 3, 7, 14, 28) ரேபீஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும். காயம் கடுமையாக ஏற்பட்டவர்கள் 6-வது ஊசியை 90-வது நாளில் போட்டுக்கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் என்று எவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. வீட்டு நாய் கடித்துவிட்டால், என்ன செய்வது?
வீட்டு நாய்க்கு முறைப்படி ரேபீஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தால்கூட, அந்த நாயால் கடிபட்டவரும் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் அந்த நாயை 10 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நாயின் குணத்தில் எந்தவித மாறுதலும் தெரியவில்லை எனில், முதல் மூன்று தடுப்பூசிகளுடன் (0, 3, 7-வது நாள்) நிறுத்திக்  கொள்ளலாம். நாயிடம் மாறுதல்கள் தெரிந்தால், மீதம் உள்ள தடுப்பூசிகளையும் (14,   28-வது நாள்) போட்டுக் கொள்ள வேண்டும்.
வெறிநாய் என்பதை  எப்படித் தெரிந்துகொள்வது?
ரேபீஸ் கிருமி தாக்கிய நாய் காரணமின்றிக் குரைக்கும். ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும். பார்ப்போர் அனைவரையும் துரத்தும்; தூண்டுதல் இல்லாமல் கடிக்க வரும். நாக்கு வெளித்தள்ளி இருக்கும். எந்தநேரமும் எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கும். பொதுவாக, ரேபீஸ் நோய் வந்த நாய், 10 நாட்களுக்குள் இறந்துவிடும்.
முன்னெச்சரிக்கை தடுப்பூசி தேவைப்படுபவர்கள்:
சிலருக்கு நாய் கடிப்பதற்கான வாய்ப்புகள் அல்லது நாயிடமிருந்து ரேபீஸ் கிருமிகள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும், இப்படிப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.
பெரும்பாலும், இந்தியக் குழந்தைகள்தான் பெற்றோர் துணையின்றி  தெருக்களில் விளையாடுகிறார்கள். நாய் பிறாண்டினாலோ, நாக்கினால் தீண்டினாலோ அதன் ஆபத்துகளை அறியாமல், பெற்றோரிடம் கூறாமல் விட்டுவிடுவார்கள்.
அடுத்ததாக, கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், நாய் வளர்ப்போர், நாய் பிடிப்போர், நாயைப் பழக்குவோர், தபால், காவல் துறைப் பணியாளர்கள், ரத்தப் பரிசோதனைக்கூடப் பணியா
ளர்கள், ரேபீஸ் நோய் ஆராய்ச்சியாளர்கள், ரேபீஸ் நோய்க்குச் சிகிச்சை தரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், விலங்குகளைப் பதப்படுத்துவோர், வன இலாகாவினர், மிருகக்காட்சி சாலையில் பணிபுரிவோர், தெருநாய்கள் கட்டுப்பாடின்றி அலையும் தெருக்களில் வசிப்போர் மற்றும் அதுபோன்ற ஊர்களுக்கு அடிக்கடி பயணம் செய்வோர், முன்னெச்சரிக்கையாக ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது அவசியம்.
முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி தவணை முறைகள்:
ரேபீஸ் தடுப்பூசியின் முதல் ஊசியை ஆரம்ப நாளில் போட்டுக்கொண்டு, இரண்டாவது ஊசியை ஏழாம் நாளிலும், மூன்றாவது ஊசியை 28-வது நாளிலும் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘ஊக்குவிப்பு ஊசி’யாக (Booster dose) இந்தத் தடுப்பூசியை ஒரு தவணை போட்டுக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை வெறி நாய் கடித்துவிட்டால், நாய்க்கடி காயத்தை நன்றாகச் சுத்தப்படுத்திவிட்டு, நாய் கடித்த நாளில் ஒரு தடுப்பூசியும், மூன்றாவது நாளில் ஒரு தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். இந்தக் காயத்தில் ரேபீஸ் தடுப்புப் புரதம் போட்டுக்
கொள்ளத் தேவை இல்லை.

நாய்க்கடி ஓலம்!
உலக அளவில், ஆண்டுக்கு சுமார் 55,000 பேர் ரேபீஸ் நோயால் இறக்கின்றனர். இவர்களில் 40 சதவிகிதம் பேர் இந்தியர்கள் என்கிறது, உலக சுகாதார நிறுவனம். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் ரேபீஸ் நோயால் இறக்கின்றனர். இவர்களில் 35 சதவிகிதத்தினர் 15 வயதுக்குட்பட்டவர்கள்.  தமிழ்நாட்டில், 2011-ம் ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 17,848 பேர் நாய்க்கடிக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர் என்றால், இதன் கொடூரமான தாக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

வீட்டு நாய்க்கு ரேபீஸ் வராமல் காத்துக் கொள்வது எப்படி?
வீட்டில் நாய் வளர்ப்பவர்கள் நாய்க்குட்டிக்கு மூன்று மாதம் முடிந்ததும், ஒன்பது மாதம் முடிந்ததும் என  இரண்டு தவணைகள் ரேபீஸ் தடுப்பூசியைப் போட்டுவிட வேண்டும். அடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை ரேபீஸ் தடுப்பூசியைக் கட்டாயம் போட வேண்டும். தெரு நாய்களுடன் வீட்டு நாய்கள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டு நாய் சோர்ந்திருந்தால், சாப்பிடாமல் இருந்தால் அல்லது எல்லோரையும் கடித்துக் கொண்டிருந்தால், நாயைக் கட்டிப்போட வேண்டும். அந்த நாயைக் கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.

Thanks : vayal 16.03.2015

1 comment:

  1. பதிவை பார்க்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
    தயவுசெய்து உங்களது எண்ணங்களை இங்கு எங்களுக்குத் தெரிவியுங்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால், எங்களது சேவையை இன்னும் சிறப்பாக தங்களுக்கு வழங்க இயலும்! என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete