disalbe Right click

Thursday, July 16, 2015

தமிழகத்திலுள்ள சட்டக் கல்லூரிகளில் சேர


தமிழகத்திலுள்ள சட்டக் கல்லூரிகளில் சேர என்ன செய்ய வேண்டும்?
********************************************************************************
தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகள் அனைத்தும் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பல்கலைக்கழகத்தில் 7 அரசு கல்லூரிகளும், ஒரு சுயநிதிக் கல்லூரியும் இணைப்பு பெற்றுள்ளன. இங்கு இளநிலை சட்டப் படிப்பில் ஐந்து ஆண்டுகள் படிப்பும், மூன்று ஆண்டு படிப்பும் என இரு வகையான பட்டப்படிப்புகள் உள்ளன.
ஐந்தாண்டு பட்டப்படிப்பிற்கு நுழைவுக் கல்வித் தகுதியாக மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியும், மூன்றாண்டு பட்டப்படிப்பிற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு கல்லூரிகள்
*******************************

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு மற்றும் வேலூர் ஆகிய ஊர்களில் அரசினர் சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையிலுள்ள கல்லூரி மட்டும் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி என்றும் பிற கல்லூரிகள் அரசினர் சட்டக் கல்லூரி என்றும் பெயரிடப்பட்டு செயல்படுகின்றன.
சுயநிதிக் கல்லூரி
******************************

சேலம் நகரில் சுயநிதி சட்டக் கல்லூரி ஒன்றும் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.
சட்டப் படிப்புகளில் யார் சேரலாம்?
******************************************************
ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ.,பி.எல்., சட்டப் படிப்புகளில் சேர விரும்புபவர்கள் பிளஸ் டூ தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பொதுப் பிரிவினர், 20 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 22 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும். இப்படிப்பில் மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன.
பிளஸ் டூ வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒற்றைச் சாளர முறையில், வேலூர் நீங்கலாக (வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் இப்படிப்பு இல்லை) தமிழகம் முழுவதிலும் உள்ள 6 அரசு சட்டக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூன் மாதம் 13-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தர வரிசைப் பட்டியல் (ரேங்க் லிஸ்ட்) ஜூன் மாதம் 23-ஆம் தேதி வெளியிடப்படும்.

தமிழகம் முழுவதிலும் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளிலும் சேர்த்து மூன்று ஆண்டு பி.எல். பட்டப் படிப்பில் மொத்தம் 1,262 இடங்கள் உள்ளன.
மூன்றாண்டுகளுக்கான பி.எல். பட்டப் படிப்பில் சேர, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப் பிரிவினர் பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்கவேண்டும்.
பொதுப் பிரிவினராக இருந்தால், 30 வயதுக்குட்பட்டவர்களாகவும், மற்ற வகுப்பினராக இருந்தால் 35 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும்.
மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடங்களில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இப்படிப்பில் சேர மே 26-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் (School of Excellence in Law ) என்னென்ன சட்டப் படிப்புகள் உள்ளன?
இங்கு 5 ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எல். (ஆனர்ஸ்) பி.காம்.,பி.எல். (ஆனர்ஸ்) பட்டப் படிப்புகளும், 3 ஆண்டு பி.எல். (ஆனர்ஸ்) பட்டப் படிப்பும் கற்றுத் தரப்படுகின்றன. இந்த மூன்று படிப்புகளிலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக 15 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
5 ஆண்டு ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எல். (ஆனர்ஸ்) பட்டப் படிப்பில் சேர விரும்புவோர், பிளஸ் டூ வகுப்பில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இப்படிப்பில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. மொத்த இடங்களில் 4 சதவீத இடங்கள், பிளஸ் டூ வகுப்பில் வொகேஷனல் பிரிவை எடுத்துப் படித்த மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
5 ஆண்டு பி.காம்., பி.எல். (ஆனர்ஸ்) பட்டப் படிப்பிற்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிளஸ் டூ வகுப்பில் காமர்ஸ் குரூப்பை எடுத்துப் படித்து 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 6-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். தர வரிசைப் பட்டியல் ஜூன் 13-ஆம் தேதி வெளியிடப்படும்.
3 ஆண்டு பி.எல் (ஆனர்ஸ்) பட்டப் படிப்பில் சேர, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்படிப்புக்காக 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 26-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 11-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தர வரிசைப் பட்டியல் ஜூலை 21-ஆம் தேதி வெளியிடப்படும்.
சட்டப் படிப்புகளுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்கள்
************************************************************************************************

தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டுகளுக்கான பி.ஏ. பி.எல்., பட்டப் படிப்பில் சேர தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், 1,625-ரூபாயை ரொக்கமாக செலுத்தவேண்டும். கவுன்சலிங்கிற்குப் பிறகு, ஓராண்டுக்கான அட்மிஷன் கட்டணமாக ரூ.1,205 செலுத்த வேண்டும்.
3 ஆண்டுகளுக்கான பி.எல். பட்டப் படிப்பில் சேர தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், கவுன்சலிங்கின்போது 1,520- ரூபாயை ரொக்கமாகச் செலுத்த வேண்டும். அட்மிஷனின்போது ரூ.1,205-ஐ ரொக்கமாகச் செலுத்த வேண்டும்.
ஓராண்டிற்கான கட்டணம் இவை மட்டுமே. மிகக் குறைந்த கட்டணத்தில் சட்டப் படிப்பை வழங்கும் சட்டக் கல்லூரிகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன.
5 ஆண்டுகளுக்கான பி.ஏ., பி.எல் (ஆனர்ஸ்), பி.காம்., பி.எல். (ஆனர்ஸ்), 3 ஆண்டு பி.எல். (ஆனர்ஸ்) படிப்புகளுக்குக் கட்டணமாக ஆண்டுக்கு தலா ரூ.65,620 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அட்மிஷன் கட்டணம், டியூஷன் கட்டணம், இன்டர்நெட் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் அடங்கும்.
அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள மற்ற சட்டப் படிப்புகள்
******************************************************************************************

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டப் படிப்பில், அதாவது எம்.எல். பட்டப் படிப்பில் 8 பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 20 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். வணிகச் சட்டம் (பிஸினஸ் லா), அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் (கான்ஸ்டிடியூஷனல் லா அண்ட் ஹியூமன் ரைட்ஸ்), அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் (இன்டலக்ச்சுவல் புராப்பர்டி லா), சர்வதேசச் சட்டம் மற்றும் அமைப்பு (இன்டர்நேஷனல் லா அண்ட் ஆர்கனைசேஷன்), சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் லீகல் ஆர்டர், கிரிமினல் சட்டம் மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் அட்மினிஸ்டிரேஷன், லேபர் லா அண்ட் அட்மினிஸ்டிரேட்டிவ் லா, ஹியூமன் ரைட்ஸ் அண்ட் டியூட்டீஸ் எஜுகேஷன் போன்ற பல பிரிவுகளில் முதுநிலை சட்டப் படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் மே 26-ஆம் தேதி தொடங்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தர வரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியிடப்படும்.
இவை தவிர, சட்டத்தில் பிஎச்டி படிக்கலாம். தொலை நிலைக் கல்வி முறையில் 11 வகையான முதுநிலை பட்ட டிப்ளமோ (பிஜி டிப்ளமோ) படிப்புகளையும், டாக்குமெண்டேஷனில் சான்றிதழ் படிப்பு ஒன்றையும் வழங்குகிறோம். பிஸினஸ் லா, என்விரான் மெண்டல் லா, இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி லா, இன்டலக்ச்சுவல் பிராப்பர்ட்டி லா, லேபர் லா, ஹியூமன் ரைட்ஸ் அண்ட் டியூட்டீஸ் எஜூகேஷன், லா லைஃப் ரேரியன்ஷிப், கன்ஸ்யூமர் லா அண்ட் புரடக்ஷன்,சைபர் ஃபோரன்சிக் அன்ட் இன்டர்நெட் செக்யூரிட்டி, கிரிமினல் லா, கிரிமினாலஜி அண்ட் ஃபோரன்சிக் சயின்ஸ், மெடிக்கோ - லீகல் ஆஸ்பெக்ட்ஸ் போன்ற 11 பிரிவுகளில் முதுநிலை பட்ட டிப்ளமோ படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 26-ஆம் தேதி தொடங்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 8-ஆம் தேதி அனுப்ப வேண்டும்.
சட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள்
***************************************************************************************

சட்டப் படிப்பு படித்தவர்களுக்கு வானமே எல்லை. உலகில் இதுவரை மூன்று வகையான புரட்சிகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒன்று, விவசாயப் புரட்சி, இரண்டாவது தொழிற்புரட்சி, மூன்றாவது பணிப் புரட்சி. பணிப் புரட்சியில் சர்வீஸ் செக்டார் எனப்படும் சேவைகள் பிரிவுக்கு மிகப் பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. 

உலகிலேயே இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. பணிப் புரட்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. இந்த சர்வீஸ் செக்டாரில், சட்ட சேவை மிக மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. அதாவது, லீகல் புராசஸ் அவுட்சோர்ஸ் மற்றும் நாலெட்ஜ் புராசஸ் அவுட்சோர்ஸ் போன்ற பணிகளிலும் சட்டம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நீங்கலாக அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் தமிழிலேயே வழக்குகள் நடைபெறுகின்றன.

சட்டப் படிப்பை முடித்துவிட்டு, பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவில் பதிவு செய்து கொள்பவர்கள், வழக்குரைஞர்களாக நீதிமன்றங்களில் வாதாடலாம். வழக்குரைஞராகப் பணியாற்ற விரும்பாதவர்கள், சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்துகொண்டு வழக்கறிஞர்களாகி, மற்றவர்களுக்கு சட்ட சேவை புரியலாம். 

பல்வேறு கம்பெனிகளுக்கு சட்ட ஆலோசகர்களாகப் பணியாற்றலாம். சட்டம் படித்துவிட்டு, யுஜிசி நெட் தேர்வு எழுதி, சட்டக் கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றலாம். 

பி.எல். படித்தவர்கள், கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளாகப் பணியாற்ற, சிவில் சர்வீஸ் பயிற்சி பெறலாம். லீகல் ஜர்னலிசம், லீகல் டூரிஸம் என்று சட்டம் நுழையாத துறையே இல்லை. சட்டத்தைத் தெளிவாக அறிந்துகொண்டு, முனைப்போடும், முறையான பயிற்சியோடும், ஆக்கப்பூர்வமாகச் செயல்படுபவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

மேலும் விபரங்களுக்கு http://www.tndalu.ac.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

No comments:

Post a Comment