disalbe Right click

Thursday, January 21, 2016

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்

தஞ்சாவூர் புகைப்படங்கள் - பிரகதீஸ்வரர் கோயில்

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் பற்றிய தகவல்கள்


தமிழராய் பிறந்த நாம் எல்லோரும் பிறப்பால் எத்தகைய பெருமையை அடைந்திருக்கிறோம் என்று ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். இன்று உலகத்தில் புழக்கத்தில் இருக்கும் மிகப்பழமையான மொழி. தோராயமாக பத்தாயிரம் ஆண்டு கால வரலாற்றினை கொண்டிருக்கும் மொழி. இன்றிருக்கும் மொழிகள் தோன்றும் முன்பே 'தொல்காப்பியம்' போன்ற மொழிக்கு செறிவூட்டும் இலக்கண நூல்களை கொண்டிருந்த மொழி. இன்று தன் கடவுளே சிறந்தவர், தான் சார்த்த மதமே முக்திக்கான மார்க்கம் என்று மூடர்கள் பிதற்றிக்கொண்டிருக்க ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர் அனைவருக்கும் பொருந்தும் தமிழ் மறையாம் வள்ளுவம் கொண்ட மொழி நம் தமிழ் மொழி. இப்படியொரு புகழ் தமிழுக்கு கிடைக்க காரணம் அகத்தூய்மையும், அகண்ட அறியும் கொண்டிருந்த நம் முன்னோர்கள் தான். வெறும் சொல்லிலும், எழுத்திலும் மட்டுமில்லாது நவீன யுகத்தின் அறிவியலுக்கும் புதிராக இருக்கும் கட்டிடங்களையும் எழுப்பியிருக்கின்றனர் நம் மூதாதையர். அப்படிப்பட்ட கட்டிடங்களில் ஒன்று தான் ஆயிரம் வருடங்களை கடந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலாகும். தமிழர் கட்டிடக்கலையின் மனிமகுடமான இக்கோயிலை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ்த்திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோயில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக வீற்றிருப்பதோடு உலகளாவிய கீர்த்தியையும் பெற்றுத்தந்திருக்கிறது. இக்கோயில் யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச்சின்னம் எனும் பெருமையை பெற்றுள்ளது.

தஞ்சை பெரிய கோயில்!! கி.பி 1010 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில் எனப்படும் பிரஹதீஸ்வரர் கோயில் ஆயிரம் வருடங்களை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது. இதனை கட்டியவர் முதலாம் ராஜ ராஜ சோழன் ஆவர்.  இன்று உலகில் இருக்கும் மிகத்துல்லியமான கணித அளவீடுகளுடன் கட்டப்பட்ட கட்டிடங்களில் ஒன்றான இக்கோயிலை பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள். 
தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயில் அல்லது பெருவுடையார் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்’ என்பதாகும்.



பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சை நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை.
எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு’ எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது.
முதன்முதலாக தஞ்சை பெரிய கோயிலை பார்க்கும் எவருக்கும் தோன்றும் வியப்பு இது வேறெந்த தென்னகக்கோயில்கள் போன்றும் இல்லையே என்பதுதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதலாவது இங்கு நாம் காணும் கோபுரம் வாயிற்பகுதி ராஜகோபுரமன்று. இந்த ஆலயத்தில் கருவறை விமானக்கோபுரமே விண்ணை முட்டுவது போன்று வளாகத்தின் மையப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
மற்றொரு விசேஷம் என்னவெனில் தென்னிந்திய கோபுரங்கள் யாவுமே தட்டையான சரிவுடன் மேல் நோக்கி உயர்ந்திருப்பதே அப்போதைய கோயிற்கலை மரபு. ஆனால் இக்கோயிலின் கோபுரம் ஒரு எகிப்தியபாணி பிரமிடு போன்று அடுக்கடுக்கான நுண்ணிய தளங்களாக மேனோக்கி சென்று உச்சியில் தட்டையான கடைசி பீடஅடுக்கில் பிரம்மாண்ட குமிழ் மாட கலச அமைப்பு பொருத்தப்பட்டிருப்பதோடு முடிவடைகிறது.
ஒரே விதமான ஒத்திசைவான அலங்கார நுட்பங்கள் ஒரு ஆபரண அட்டிகையைப்போன்று  கோபுரத்தின் உச்சிவரை நுணுக்கமாக வடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
ஒருவகையில் இந்த அலங்கார நுட்பம் அந்நாளில் தென்னிந்தியாவில் இருந்திராத தன்மையை கொண்டதாய் காட்சியளிக்கிறது. கொஞ்சம் கிழக்குத்தேச கோயில்களின் சாயலும் இந்த கோபுர அலங்கார நுட்பங்களில் தென்படுகிறது.
மற்றொரு முக்கிய அம்சம் வட நாட்டுக்கோயில்களை போன்றே பீட அமைப்பையும் இந்த கோயில் பெற்றுள்ளது என்பதாகும். இதில் மற்ற தமிழ்நாட்டு கோயில்கள் போன்று நாற்றிசை வாசல்கள் மற்றும் தீர்த்தக்குளம் ஆகிய அம்சங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகத்தை அடிப்படை அறமாக கொண்டு முழுக்க முழுக்க ஒரு கலைப்படைப்பை உருவாக்கும் நோக்குடன் இந்த கோயில் எழுப்பப்பட்டிருப்பதை இந்த பிரம்மாண்டத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் நம்மால் உணர முடிகிறது.
வட நாடெங்கும் பயணித்து பல வெற்றிகளை சுமந்து வந்த ராஜராஜ சோழன் தான் வழியில் கண்ட பல்வேறு சிற்பக்கலை மரபுகளைச் சேர்ந்த கோயில்களின் தோற்றத்தில் கவரப்பட்டு அவற்றினும் சிறந்த ஒரு உன்னத கலைப்படைப்பை தனது ராஜ்ஜியத்தில் நிர்மாணிக்க விரும்பி மிகுந்த  முனைப்புடன் இந்த கோயிலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பது இந்த கோயிலின் வடிவமைப்பை பார்க்கும் போதே புலனாகிறது.
வார்த்தைகளில் விவரிக்க முடியாத நுண்ணிய வடிவமைப்பு,  கற்பனா சக்தி, மேலாண்மை துல்லியம், பொறியியல் நுணுக்கங்கள், அப்பழுக்கற்ற ஒழுங்கு, துளியும் பிசகாத கணக்கீடுகள் போன்ற அறிவியல் பூர்வமான நுட்பங்கள் இந்த ஒட்டுமொத்த கோயிலின் உருவாக்கத்தில் நிரம்பியுள்ளன என்றால் அது மிகையில்லை.
கோயிலின் நிர்வாகம் செம்மையாக நடைபெற விரிவான நடைமுறைகளும் முறைமைகளும் உருவாக்கப்பட்டிருந்தன என்பதை கோயில்பகுதியிலேயே இடம்பெற்றுள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 
இளம் வயதில் முடி சூடி பல போர்க்கள வெற்றிகளையும் கண்டு கலாரசனையும் அதீத மேலாண்மைத்திறனும் வாய்க்கப்பட்டிருந்த ராஜராஜ சோழர் நிச்சயம் அந்த கீர்த்திப்பெயருக்கு எல்லாவிதத்திலும் தகவமைந்தவர் என்பதற்கான சான்றுதான் இந்த ‘ராஜராஜுச்சரம் கோயில்’.
இந்த கோயிலில் எழுப்பப்பட்டிருக்கும் புதுமையான விமான கோபுரத்தின் உயரம் 190 அடி ஆகும். கோயில் வளாகத்தில் ‘முன் தாழ்வாரம்’, நந்தி மண்டபம், கருவூர்த்தேவர் கோயில், சுப்ரமணியர் கோயில் போன்றவை பின்னாளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயிலின் கருவறையின் மேல் இருக்கும் விமான கோபுரமானது 216அடி உயரம் உடையதாகும். உலகிலிருக்கும் மிக உயரமான விமான கோபுரங்களில் ஒன்றான இதன் மேல் 80டன் எடையுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்ட கலச பீடம் இருக்கிறது.  ஆயிரம் வருடங்களுக்கு முன்னாள் பெரிதாக தொழில்நுட்ப வசதிகள் ஏதும் இல்லாத பொழுது எப்படி இவ்வளவு பெரிய எடையுள்ள பொருளை இத்தனை உயரத்திற்கு கொண்டு சென்றிருப்பார்கள் என்பது இன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது. 
இங்கு காணப்படும் கல்வெட்டுகள் மறுக்க முடியா வரலாற்று ஆவணங்களாக பல தகவல்களை கொண்டுள்ளன. இந்த கல்வெட்டுகளின் தொலைநோக்கு பார்வைமொரு முக்கியமான பிரமிக்க வைக்கும் அம்சமாக விளங்குகிறது.
இங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நந்தி ஒரே கல்லால் ஆனதாக  வீற்றிருக்கிறது. இதன் எடை 25 டன் என்பதாக சொல்லப்படுகிறது. பிருகதீஸ்வரர் என்ற பெயருடன் சிவபெருமான் உறையும் இந்த திருக்கோயிலில் மே மாதத்தின்போது வருடாந்திர திருவிழா கொண்டாடப்படுகிறது.
அதேபோல இக்கோயிலில் இருக்கும் நந்தி சிலையும் ஒரே கல்லினால் வடிக்கப்பட்டது ஆகும். இந்தியாவிலிருக்கும் மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றான இது 16அடி நீளமும், 13அடி உயரமும் கொண்டதாகும்.  இதற்கு தேவையான கிராண்ட் கற்களை தஞ்சையில் இருந்து 60 கி.மீ தொலைவிலிருக்கும் திருச்சியில் இருந்து வெட்டி எடுத்து வந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. 
தஞ்சை பெரிய கோயிலின் தலைமை கட்டுமான பொறியாளராக 'குஞ்சர மல்லன் ராஜ ராஜ பெருந்தச்சன்' என்பவர் இருந்ததாக கோயில் கல்வெட்டுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.  தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்ட காலத்திற்கும் 2000 ஆண்டுகள் பழமையானதான சிந்து சமவெளி நாகரீகத்தில் நகரங்களை அமைக்க அவர்கள் பயன்படுத்திய கணித அளவீடுகளே இக்கோயிலுக்கும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 


இக்கோயிலின் மூலவராக சிவ பெருமான் பிரகதீஸ்வரராக வணங்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தி, சூரிய பகவான், சந்திர பகவான், வருண பகவான், குபேரர் ஆகியோரது சிலைகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவர்கள் எல்லோரது சிலையும் ஒரு வளர்ந்த மனிதனின் சராசரி உயரமான 6 அடிக்கு இருக்கின்றன. இந்த உயரத்திற்கு கடவுளர்களின் சிலைகளை காண்பது அரிதானதாகும்.


தஞ்சை பெரிய கோயில்!! பெரிய கோயிலின் விமான கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் அது உண்மையல்ல.   குறிப்பிட்ட சில கோணங்களில் சூரியன் இருக்கும் போது இதன் நிழல் கீழே விழாதே தவிர மற்ற நேரங்களில் எல்லா கட்டிடங்களையும் போல இதன் நிழல் கீழே விழுவதை நாம் காண முடியும். 


 1010ஆம் ஆண்டு இக்கோயில் கட்டிமுடிக்கப்பட்ட போது இக்கோயிலில் மட்டும் அர்ச்சகர்கள், நடன மங்கைகள், இசை வாத்திய கலைஞர்கள், கணக்கர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இருந்திருக்கின்றனர்.  இவர்கள் எல்லோரையும் பற்றிய குறிப்புகள் இக்கோயிலில் இருக்கும் கல்வெட்டுகளில் நாம் காண முடியும்.  


தஞ்சை பெரிய கோயிலில் இருக்கும் முதலாம் ராஜ ராஜ சோழனின் கற்சிற்பம். இக்கோயிலில் நாம் மிக மிக நுணுக்கமாக வடிக்கப்பட்ட சிற்பங்களை காண முடியும். கையில் உள்ள நுண்ணிய நரம்புகள் கூட சிலைகளில் அவ்வளவு தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கும். 


பிரகதீஸ்வரர் கோயிலில் இருக்கும் ஆள் உயர கற் சிற்பங்கள். 


தஞ்சை பெரிய கோயில்!! சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் கருவறைக்கு அருகில் ரகசிய அறை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனுள் ராஜ ராஜன் தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பணிவாக நிற்பது போன்ற சுவரோவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சோழர்கள் சிற்பம் வடிப்பதில் மட்டுமில்லாமல் ஓவியக்கலையிலும் சிறந்து விளங்கியிருக்கின்றனர் என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகும். 


தஞ்சை கோயிலில் காணப்படும் மட்டுமொரு ஓவியம்.  இவையெல்லாம் மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டிருகின்றன. இதனாலேயே தான் இந்த ஓவியங்கள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருகின்றன.


தஞ்சை பெரிய கோயில்!! ஒவ்வொரு மாதமும் பிரதோஷ தினத்தன்றும், பௌர்ணமி தினத்தன்றும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.  மஹா சிவராத்திரியும் இங்கே வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்நாளில் பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. 


ஒரு மஹோன்னத பொற்காலத்தின் சாட்சியமாகவும் கல்லிலே பொறிக்கப்பட்ட ஆவணமாகவும் வீற்றிருக்கும் இந்த தட்சிண மேருவை தமிழர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிப்பது அவசியம்.

“இதனை விட்டுச்சென்றார் நம் முன்னோர் – எதனை விட்டுச்செல்வோம் நாம் நாளை?” 
என்ற ஒரு கேள்வியும் காத்திருக்கிறது இக்கோயிலில் நமக்கு.


No comments:

Post a Comment