disalbe Right click

Saturday, February 20, 2016

அடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டின் பரப்பளவை தெரிந்துகொள்ள


அடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டின் பரப்பளவை தெரிந்துகொள்ள 
என்ன செய்ய வேண்டும்?


வீட்டுமனை வாங்கும்போது அதன் பரப்பளவு நமக்குத் தெளிவாகத் தெரியும். பத்திரப் பதிவுக்குப் பிறகு பட்டா பெறும்போது பரப்பளவு உறுதியாகவும் தெரியும். கட்டி முடிக்கப்பட்ட தனி வீடுகளை வாங்கினாலும் அப்படித்தான். ஆனால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்கும்போது வீட்டின் பரப்பளவை எப்படித் தெரிந்துகொள்வது?

அடுக்குமாடிக் குடியிருப்பு களுக்கான விளம்பரங்களில் தவறாமல் சதுர அடி கணக்கு இடம்பெற்றிருக்கும். அந்தச் சதுர அடி கணக்கு, சுவர்களுக்கு இடையே உள்ள பரப்பளவைக் குறிக்கிறதா? இல்லை சுவர்கள் அமைந்திருக்கும் இடத்தையும் சேர்த்துக் குறிக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளலாம்.

கார்பெட் ஏரியா
நான்கு சுவர்களுக்கு இடையில் அமைந்திருக்கும் பரப்பளவுக்கு கார்பெட் ஏரியா என்று பெயர். 



நம் நாட்டில் எல்லா வீடுகளிலும் கார்பெட் பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் எல்லா அறைகளிலும் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் சுவர்களைத் தவிர்த்து பரப்பளவைக் கணக்கிடுவதால் கார்பெட் ஏரியா என்றே அழைக்கிறோம்.

பிளின்த் ஏரியா
வீட்டின் பரப்பளவைக் கணக்கிடும்போது சுவர்கள் இருக்கும் இடத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் அது பிளின்த் ஏரியா ஆகும். 



பிளின்த் ஏரியாவைக் காட்டிலும் கார்பெட் ஏரியாவின் அளவு கொஞ்சம் குறைவாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் கார்பெட் ஏரியாவைக் காட்டிலும் அதிகமாக வித்தியாசப்படும் இன்னொரு ஏரியாவும் இருக்கிறது. அதற்கு சூப்பர் பில்டப் ஏரியா என்று பெயர்.

சூப்பர் பில்டப் ஏரியா
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் மட்டுமா இருக்கின்றன? விளையாட்டுத் திடல், பூங்கா, நீச்சல் குளம், நடைபாதை, வாகனங்கள் நிறுத்துமிடம் என்று ஏகப்பட்ட இணைப்புகளையும் சேர்த்துப் பெறுகிறோம் இல்லையா? அவை இலவச இணைப்புகள் அல்ல. இவற்றுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களின் அளவையெல்லாம் கூட்டி அங்கு இருக்கும் மொத்த வீடுகளின் எண்ணிக்கையால் வகுத்து அதை ஒவ்வொரு வீட்டின் அளவோடும் சேர்த்துக் கணக்கிடுவார்கள்.


இந்த சூப்பர் பில்டப் ஏரியாவானது, கார்பெட் ஏரியாவைக் காட்டிலும் அதிகமாகவே வித்தியாசப்படும். ஆனால் இந்தப் பரப்பு அவ்வாறு குறிப்பிட்ட காரணங்களுக்காகத்தான் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். நடைபாதைக்கான இடம் என்று சொல்லிவிட்டு அங்குக் கடைகளைக் கட்டுகிறார்கள் என்றால் நீங்கள் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

வீட்டை வாங்கும்போது கூடுதல் பரப்பளவு சொன்னார்கள், ஆனால் கொடுத்தபோது மிகவும் குறைவாக இருக்கிறது என்று பின்னால் வருத்தப்படக் கூடாது. வீட்டின் பரப்பளவு பற்றிய விவரத்தை முதலில் கேட்கும்போதே கார்பெட் ஏரியா, பிளின்த் ஏரியா, சூப்பர் பில்டப் ஏரியா என்று ஒவ்வொன்றின் அளவையும் தனித்தனியாகக் கேட்டுத் தெரிந்துகொள்வதே மிகச் சிறந்தது.

நன்றிஇளவேனில்
தி இந்து தமிழ் நாளிதழ் - 20.02.2016

No comments:

Post a Comment