disalbe Right click

Tuesday, June 21, 2016

உயிர் காக்கும் நிமிடங்கள்


உயிர் காக்கும் நிமிடங்கள் - என்ன செய்ய வேண்டும்?
கோல்டன் ஹவர்

“கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாமே… 10 நிமிஷத்துக்கு முன்னாடி கூட்டிட்டு வந்திருந்தா, உயிரைக் காப்பாத்தியிருக்கலாம்” என்று ஆபத்தான நிலையில் டாக்டர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய சில பிரச்னைகளுக்கு,  ‘பொன்னான நேரம்’ (Golden hour) என்று ஒன்று உள்ளது. இந்தக் குறிப்பிட்ட நேரத்துக்குள் போதுமான சிகிச்சை கிடைக்கச் செய்துவிட்டால், உயிரிழப்பைத் தவிர்க்க முடியும் என்கிறது மருத்துவ உலகம்.

 இரண்டு நிமிடங்களுக்கு முன்பு வந்து பிழைத்தவர்களும் உண்டு. இரண்டு நிமிடத் தாமதத்தால் இறந்தவர்களும் உண்டு. ஒரு உயிரைக் காப்பாற்றும் இந்த ஒவ்வொரு மணித் துளியின் முக்கியத்துவத்தை அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த பொன்னான நேரத்தில் உயிருக்குப் போராடும் ஒருவரை எப்படிக் காப்பாற்றுவது? அவர்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி, சிகிச்சைகள் என்னென்ன?

சாலை விபத்து

கோல்டன் ஹவர்: ஒரு மணி நேரத்துக்குள்

யாருக்கு அதிகமாக அடிபட்டு உள்ளதோ, அவரை முதலில் ஆம்புலன்ஸில் ஏற்ற உதவ வேண்டும். அடிபட்டவரைச் சுற்றிலும் கூட்டமாக நின்று வேடிக்கை பார்ப்பதால், மூச்சுவிட அதிக சிரமப்பட்டு, உடல்நிலை மேலும் பாதிக்கும்.

அதிகப்படியான ரத்தப்போக்கின்போது ஒரு சுத்தமான பருத்தித்துணியால் (துப்பட்டா, கைக்குட்டை, துண்டு) கட்டுப்போட்டால் ரத்தம் வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும். இதற்குப் பெயர் ‘ப்ரீ ஹாஸ்பிடல் டிராமா கேர்’ (Pre Hospital trauma care). இதனால், உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அடிபட்டவரை ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

விபத்தில் முதுகு அல்லது கழுத்தில் காயம்

கோல்டன் ஹவர்: ஒரு மணி நேரத்துக்குள்

விபத்தில் சிக்கியவருக்குக் கழுத்து, முதுகில் காயம் ஏற்பட்டிருந்தால் அல்லது அந்தப் பகுதியில் வலிக்கிறது என்றால், இன்னும் சற்று கவனத்துடன் அவர்களைக் கையாள வேண்டும். தலை தொங்குவது போல தூக்கக் கூடாது. தலையும் உடலும் நேர்க்கோட்டில் இருப்பது போல தூக்கிவைக்க வேண்டும். கவனம் இன்றித் தூக்கும்போது, உடைந்த முதுகெலும்போ கழுத்து எலும்போ மேலும் சேதமாகி, கோமா நிலைக்குப் போகலாம். முதுகு, கழுத்து எலும்பில் அடிபட்டவர்களை நேராகத் தூக்கிவைக்க ஸ்ட்ரெச்சரோ பலகையோ இல்லை என்றால், ஆம்புலன்ஸ் வரும் வரை தூக்காமல் இருப்பதே பேருதவி.

அடிபட்டவருக்கு ஜூஸ், பால், உணவுகளைக் கொடுக்கக் கூடாது. இதனால், வாந்தி வரக்கூடும். தலையில் அடிபட்டு இருந்தால், பெரும் சிக்கல் ஆகிவிடும். சிறிது தண்ணீர் வேண்டுமெனில் கொடுக்கலாம்.

அடிபட்ட, முதல் 10 நிமிடங்களில் செய்யக்கூடிய, முறையான முதலுதவியால் உயிர் பிழைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

பக்கவாதம்

கோல்டன் ஹவர்: மூன்று மணி நேரத்துக்குள்

மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் ரத்தக்கசிவு காரணமாகப் பக்கவாதம் வரும். தலைசுற்றல், இரண்டு நிமிடங்களுக்கு சுயநினைவு இழந்துபோதல், கை, கால் இழுத்தல், வாய் ஒருபக்கம் இழுத்தல், பேச்சுக்குழறல் என்று சொன்னால், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். இதற்கு மூளை நரம்புகளில் ஏற்பட்ட அடைப்பைக் கரைப்பதற்கான மருந்தை மூன்று முதல் நான்கரை மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும். எனவே, பக்கவாதத்துக்கு சிகிச்சை அளிக்கும் வசதி உள்ள மருத்துவமனையை அணுகினால், பக்கவாதப் பாதிப்பில் இருந்து முற்றிலும் நீங்கலாம்.

8 முதல் 12 மணி நேரத்துக்குள் வந்தால், உயிரிழப்பைத் தவிர்க்கலாம். ஆனால், அதற்குள் மூளையில் உள்ள நியூரான்கள் அதிக அளவில் உயிரிழந்திருக்கும். இதனால், உடலின் சில செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

12 மணி நேரத்துக்குப் பிறகு உயிரைக் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. அப்படியே உயிரைக் காப்பாற்றினாலும், கை, கால் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியாது.

குடல்வால் வெடிப்பு – வயிற்றுவலி

கோல்டன் ஹவர்: 4-6 மணி நேரத்துக்குள்

வயிற்றுவலிக்கு நிறையக் காரணங்கள் உள்ளன. சிறுநீரகக் கல் அடைப்பால் ஏற்படும் வலி, குடல்வால் வீக்கம் (Appendicitis), குடல் முறுக்கு, அடைப்பு போன்ற தீவிரமான வலி எனில், 4-6 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

குடல்வால் பிரச்னை என்றால் வாந்தி, தீவிர வயிற்று வலி இருக்கும். இதற்கு, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை அல்லது மாத்திரை, மருந்துகளால் சரிப்படுத்த முடியும். மிகவும் தீவிர நிலையில் இருக்கிறது என்றால், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குடல்வால் வெடித்துவிட்டது என்றால், நோய்த்தொற்று குடல் முழுவதும் பரவிவிடும். இந்த நிலையில், குடல் வாலை அகற்றுவதுடன், நோய்த்தொற்றை நீக்க, குடல் பகுதியை முற்றிலும் சுத்தம் செய்ய வேண்டும்.  
காலராவால் வயிற்றுப்போக்கு ஏற்படும்போது, உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறிவிடும். இதனுடன், தாதுஉப்பும் வெளியேறிவிடும். குழந்தைகளைப் பாதிக்கும்போது, உயிரிழப்பு வாய்ப்பு அதிகரிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எலெக்ட்ரோலைட் அல்லது உப்பு சர்க்கரை நீர்க் கரைசலைக் கொடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலே, உயிரிழப்பைத் தவிர்க்கலாம்.

பாம்புக் கடி 

கோல்டன் ஹவர்:  (3 மணி நேரத்துக்குள்)

சினிமாவில் காட்டுவது போல, பல்லால் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவது, கத்தியால் வெட்டுவது என வித்தைகள் எதுவும் செய்யக் கூடாது. குழாய் நீரில் நன்றாகக் கழுவ வேண்டும். கடித்த இடத்தை அதிக அசைவுகள் கொடுக்காமல் இருந்தாலே போதும். பாம்பு கடித்த, மூன்று மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது நல்லது. மருத்துவர் ஆன்டிவெனோம் மருந்தைக் கொடுத்தால், விஷம் முறிந்துவிடும். மருத்துவமனைக்கு வராமல் தாமதித்தால், சிறுநீரகச் செயலிழப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். ஆனால், இவற்றுக்கும் சிகிச்சைகள் உண்டு.

தீக்காயம்

கோல்டன் ஹவர்: (உடனடி – 1 மணி நேரத்துக்குள்)

பால், சுடுதண்ணீர், கஞ்சி போன்றவை மேலே ஊற்றிக்கொண்டால், உடனே குழாய் நீரைக் காயத்தின் மேல் விட்டு, ஈரமான பருத்தித் துணி, வாழை இலையால் போர்த்தி, மருத்துவமனைக்கு உடனே கொண்டுசெல்லவும். பஞ்சு, சாக்குப் பை, சிந்தடிக் துணி ஆகியவற்றால் துடைக்கவோ, போர்த்தவோ கூடாது. நூல் நூலாகப் பிரிந்த துணியைக் காயத்தின் மேல் போர்த்தக் கூடாது. இது, காயத்தை மேலும் பாதிக்கும்.

குழந்தைகள் பொருட்களை விழுங்கிவிட்டால் (உடனடி)

குழந்தைகள் விளையாட்டாகச் செய்யும் சில காரியங்கள் உயிரிழப்பை ஏற்படுத்தலாம். கையில் கிடைக்கும் காசு, சிறிய விளையாட்டுப் பொருட்கள், பட்டாணி, வேர்க்கடலை போன்றவற்றை விழுங்கும்போது, அது மூச்சுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தலாம்.  இதை, உடனடியாகச் சரிசெய்யாவிட்டால் உயிரிழப்பு ஏற்படலாம். உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.  தண்ணீர், உணவு கொடுக்கவே கூடாது.

தற்கொலைக்கு முயன்றவர்கள் (உடனடி)

பூச்சிக்கொல்லி, எலி மருந்து, வயலுக்கு அடிக்கும் மருந்தைக் குடித்துவிட்டால், உடனே மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். மயங்கிய நிலையில் இருப்பவருக்கு, சோப்பு கரைசல், உப்புக் கரைசல் கொடுக்கக் கூடாது. இதனால், புறை ஏறி, நுரையீரல் பாதித்து உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவாகிவிடலாம்.

____________________________________________________

மாரடைப்பு, நெஞ்சு வலி

கோல்டன் ஹவர்: 1 மணி நேரம்

இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்பு. ரத்தக்குழாயில், ரத்தம் உறையும்போதும், கொழுப்பு அடைத்துக்கொள்ளும்போதும், இதயத்தசைகள் பாதிக்கப்படும். செல்கள் உயிர்வாழ ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் தேவை. இதை, ரத்தம் மூலம்தான் உடல் பெறுகிறது. இதயத்திசுக்களுக்கு ரத்தம் கிடைக்காமல் போகும்போது, அது உயிரிழக்க ஆரம்பிக்கிறது. எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு வந்து, சிகிச்சையைத் தொடங்குகிறோமோ, அந்த அளவுக்கு இதயத்திசுக்களின் உயிரிழப்பைத் தவிர்க்க முடியும்.

 40 வயது கடந்த ஆண்கள், 45 வயது கடந்த பெண்கள் அவர்கள் வாழ்நாளில் சந்திக்காத வலி இடது கை, இடது பக்கத்தில் ஏற்படும், மயக்கம் வரும். இதுவே மாரடைப்பு.

மாரடைப்பில் தீவிரமானது மேசிவ் அட்டாக் (Massive attack), 50 சதவிகித இதயத் தசைகள் வேலை செய்யாமல் போக, இதயம் திணறும். அப்போது அவர்களுக்கு மூச்சு வாங்கும். அவர்களால் படுக்க முடியாது. ஆதலால், படுக்கக் கட்டாயப்படுத்தாமல் அவர்களைச் சாயவைத்து மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.

சளி, மூச்சுத் திணறல் இருப்பவர்களைப் படுக்கவைக்காமல், தலையணை வைத்து அதில் சாய்த்தது போல கொண்டு செல்லலாம். படுத்தால், மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள், ஆஸ்பிரின் மாத்திரையைத் தண்ணீரில் கலந்து உடனே குடித்துவிட வேண்டும். மாரடைப்பு நோயாளியை ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சீக்கிரம் சிகிச்சை எடுத்துக்கொண்டால், இதயம் பாதுகாக்கப்படும், தசைகள் அழிவது மற்றும் மாரடைப்பு திரும்ப வருவது தடுக்கப்படும்.

கவனிக்க: சர்க்கரை நோயாளிகளுக்கு பல நேரங்களில் மாரடைப்பின் அறிகுறிகள் வெளிப்படாமலேகூட இருக்கும். லேசாக நெஞ்சுவலி வந்தாலே, இவர்கள் மருத்துவமனையை அணுக வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மனச்சோர்வு, மனஅழுத்தம், உடலுழைப்பு இல்லாதவர்கள், முதியவர்கள், 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், 40 வயதுக்கு மேற்பட்ட பெண் ஆகியோர் வீட்டில் கட்டாயம் ‘ஆஸ்பிரின் மாத்திரை’ வைத்துக்கொள்ள வேண்டும்.

108 நம்பர், அருகில் உள்ள மருத்துவமனையின் அவசர எண் நம்பரை பதிவுசெய்து வைத்திருக்க வேண்டும்.

சடன் கார்டியாக் அரெஸ்ட்
சீராகத் துடித்துக்கொண்டிருக்கும் இதயம் திடீரென்று, துடிப்பை நிறுத்திக்கொள்ளும். இதற்கு, சடன் கார்டியாக் அரெஸ்ட் (திடீர் இதயத்துடிப்பு முடக்கம்) என்று பெயர். பலரும் இதை மாரடைப்பு எனத் தவறாகக் கருதுகின்றனர்.

இதயத்துக்கு ரத்த ஓட்டம் குறைந்து இதயம் இயங்காமல் நிற்பது, இதயத்துடிப்பு குறைந்து அப்படியே நின்றுவிடுவது, மாரடைப்பு வருவதால், மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இதயம் பாதிக்கப்படுவது, சிறுநீரகச் செயலிழப்பு எனப் பல்வேறு காரணங்களால் சடர்ன் கார்டியாக் அரெஸ்ட் வரலாம்.

சடன் கார்டியாக் அரெஸ்ட் வந்து 4-10 நிமிடங்களுக்கு, எந்த ஓர் உறுப்புக்கும் ரத்த ஓட்டம் செல்லவில்லை எனில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படும். உடனடியாக, அவசர உதவிக்கு அழைத்துவிட்டு, சி.பி.ஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். இதயத்துக்குத் துடிப்பு கொடுக்கும் முதலுதவி செய்ய நெஞ்சுப் பகுதியில் மசாஜ், மூச்சுக்குழாயில் ஆக்சிஜன் கொடுத்துக் காப்பாற்றலாம். மீண்டும் இதயம் துடிக்கவில்லை எனில், நிமிடத்துக்கு 100- 120 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். அவருக்கு டேஃபிபிரிலேட்டர் (Defibrillator) சிகிச்சை அளிக்க வேண்டும்.

நன்றி : டாக்டர் விகடன் - 01.06.2016

No comments:

Post a Comment