disalbe Right click

Wednesday, June 22, 2016

பாஸ்போர்ட் - இனி போலீஸ் விசாரணை கிடையாது


பாஸ்போர்ட் - இனி போலீஸ் விசாரணை கிடையாது
என்ன செய்ய வேண்டும்?

பாஸ்போர்ட் வாங்கும் போது இனி போலீஸ் விசாரணை  இருக்காது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும்போது பான்கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்களார் அடையாள அட்டை, மூத்த குடிமக்களுக்கான அட்டை என ஏதாவது ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். இதனுடன் ரேஷன் கார்டு, மின்சார கட்டணம் செலுத்தும் ரசீது, வீட்டு வாடகை ரசீது ஆகியவற்றை பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஆவணங்களாக  சமர்ப்பிக்க  வேண்டும். இப்படி செய்யும் போது அதிக சிக்கலாக மற்றும் கடினமாக இருக்கும் போலீஸ் விசாரணையைத்  தவிர்க்க முடியும். இது முதல் முறையாக பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம் செய்பவர்களுக்குதான்.

இப்போது இந்த மாற்றம் செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம் பல்வேறு மாநிலங்களிலும் போலீஸ் விசாரணையை  முடிப்பதற்கே பல நாட்கள் ஆகிகின்றன. இதனால் பாஸ்போர்ட் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்பதால்தான். 

வழக்கமாக போலீஸ் விசாரணையை முடிப்பதற்கு வளர்ச்சி அடைந்த மெட்ரோ நகரங்களில்  10-15 நாட்களும், கிராமப்புறங்களில்  20-30 நாட்களும் ஆகின்றன. தமிழகத்தில் 18 நாட்களும், குஜராத்தில் 27 நாட்களும், டெல்லியில் 12 நாட்களும், அசாமில் சராசரியாக 265 நாட்களும் ஆகின்றன.

இதைக் குறைக்கும் விதமாக பெங்களூருவில் ஆன்லைன் மூலம் போலீஸ் விசாரணை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வேலை எளிதாக முடிக்கப்பட்டு பாஸ்போர்ட் 10 நாட்களில் வழங்கப்படுகிறது. இது எல்லா மாநிலத்திலும் அமலானால் நன்றாக இருக்கும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறத் தொடங்கி இருக்கிறது எனலாம்.
  
இது குறித்து   மண்டல பாஸ்போர்ட் அதிகாரி (Regional Passport Officer) க.பாலமுருகனிடம் பேசினோம். 

"போலீஸ் விசாரணை என்பது ஒருவரின் குற்றப் பின்னணி குறித்து தெரிந்து கொள்வதற்காகத்தான். முன்பெல்லாம் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் நேரில் வரமாட்டார்கள். ஆனால் இப்போதுள்ள முறையில் ஒருவருக்கு பாஸ்போர்ட் வேண்டுமெனில் கட்டாயம் பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு நேரில் வரவேண்டும்.  அங்கு வைத்துதான் விண்ணப்பதாரரை புகைப்படம் எடுப்பது, கைரேகை  பதிவு செய்வது ஆகியவை செய்யப்படுகிறது.  அதோடு இரண்டு டிசிஎஸ் பணியாளர்கள், இரண்டு அரசு அதிகாரிகள் என 4 நபர்களின் விசாரணைக்கு பிறகுதான் பாஸ்போர்ட் வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்படும்  இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. இதனால் போலி பாஸ்போர்ட் பெறுவது மற்றும் குற்றப்  பின்னணி இருப்பவர்கள் பாஸ்போர்ட் பெறுவது குறைந்துள்ளது. 

ஆனால் இப்போது உள்ள நடைமுறை மற்றும் தொழில்நுட்பங்களின்படி, காவல் நிலையத்தில் பதிவாகும் புகார்களின் விவரங்கள் அனைத்தும்  பாஸ்போர்ட் வழங்கும் மையத்துடன் இணைக்கப்பட்டு விடும். இதன் மூலமாக குற்றப் பின்னணி இருப்பவர்களின் விவரத்தை எளிதாக  தெரிந்து கொள்ள முடியும்.  

இதற்கு முன்பு, போலீஸ் விசாரணை இல்லாமல் பாஸ்போர்ட் வழங்கும் நடைமுறை இருந்தது. ஆனால் அந்த முறையில் பாஸ்போர்ட் வழங்கிய பிறகு போலீஸ் விசாரணை இருக்கும். அதாவது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான்கார்டு ஆகிய ஏதாவது ஒரு ஆவணத்துடன்,  விண்ணப்பதாரர், என் மீது எந்தவிதமான வழக்கும் இல்லை. நான் வெளிநாடு செல்வதால் எந்தவிதமான சிக்கலும் வராது' என இணைப்பு படிவம் 'ஐ' யில் கையெழுத்துப் போட்டு கொடுக்க வேண்டும். 

இதைக்  கொடுத்த பிறகு பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வந்த 4வது நாளில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும். இதற்கு சாதாரண கட்டணம்தான். இருப்பினும் பாஸ்போர்ட் பெறுபவர் குறித்து அவரது வாழ்நாளில் ஒருமுறையாவது போலீஸ் விசாரணை இருக்கும்" என்றார்.

போலீஸ் விசாரணைக்கு பயந்தே பலரும் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதை தவிர்ப்பார்கள். இனி அந்த கவலை இருக்காது. எளிதாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!

- இரா. ரூபாவதி

நன்றி : விகடன் செய்திகள் = 20.06.2016

No comments:

Post a Comment