disalbe Right click

Friday, August 26, 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005


தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - என்ன செய்ய வேண்டும்?

ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி?

கேள்வி கேட்பது சுலபம்... பதில் சொல்வதுதான் சிரமம் என்கிறீர்களா? பதில் சொல்லக்கூடிய மாதிரியான கேள்விகளைக் கேளுங்கள். கண்டிப்பாகப் பதில் கிடைக்கும். 

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் (Right To Information Act 2005 - RTI) மூலம் அரசுத் துறை, அரசு உதவி பெறும் தனியார் துறைகளில் நமக்கு தேவையான தகவல்களை நாம் பெற முடியும்.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி ஒரு தனிநபர் எந்தத் தகவலையும் (விதிவிலக்குகளைத் தவிர) கேட்டுப் பெற முடியும். ‘எனக்கு இந்தக் காரணத்துக்காக அந்தத் தகவல் தேவைப்படுகிறது’ என்று நாம், தேவைக்கான காரணங்களைத் தகவல் கொடுப்போரிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அதற்காக. 'என்னுடைய பக்கத்து வீட்டுல இருக்குற ஆசாமி ரொம்ப ஹெல்த்தியா இருக்கான். அவன் என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்கிறான்னு தெரியலை. கொஞ்சம் கேட்டுச் சொல்றீங்களா... என்று நாம் கேட்க முடியாது; பதிலும் கிடைக்காது. 

இதுபோன்ற ஒரு தனி மனிதனின், தனிப்பட்ட விஷயங்களைக் கேள்வியாகக் கேட்டால் நேரம்தான் வீண்.

ஆர்.டி.ஐ சட்டத்தில் தகவலைக் கேட்டு வாங்க, நாம் அனுப்பும் சம்பந்தப்பட்ட துறை அலுவலரால் தள்ளுபடி செய்ய முடியாதபடி அந்த விண்ணப்பம் இருக்கவேண்டும். மனுவில், நம்முடைய கையெழுத்தும் பெயரும் இருந்தால் போதுமானது. நம்முடைய வேலை, பதவி, பொறுப்பு போன்ற எதையும் குறிப்பிட வேண்டியதில்லை.

மனுவின் தொடக்கத்திலேயே, ‘‘ஏன் அந்தச் சாலையில் ஆறு மாதங்களாகக் கல்லைக் கொட்டி வைத்திருக்கிறீர்கள் என்றோ, எப்படி அந்த இடத்தில் கொட்டினீர்கள் என்றோ அல்லது எப்போது கல்லைக் கொட்டினீர்கள் என்றோ கேள்வியை ஆரம்பித்தால் பதிலை வாங்குவது கடினம். 

கான்ட்ராக்ட் எடுத்தவர், அதை மேல் கான்ட்ராக்ட்டுக்கு பெற்ற நான்கைந்து பேர், கல்லைக் கொட்டிய லோடு லாரி ஓனர், லாரியில் வந்த ஊழியர்கள் (இப்போது அவர்கள் எங்கு கல்லைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்களோ?) என்று பலரைத் தேடிப்பிடித்துப் பதிலை வாங்கித் தரவேண்டும் அல்லவா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகள், கேள்வி வடிவத்திலோ, ஆலோசனை வழங்கும் விதத்திலோ இருக்கக் கூடாது. உதாரணத்துக்கு, ‘என்னுடைய தொகுதியில் பல ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அங்கு ஒரு கோழிப்பண்ணை வைத்தால் என்ன’ என்று கோரிக்கை மனுபோல விண்ணப்ப மனு இருத்தல் கூடாது.

தகவலைத் தருகிற பொதுத் தகவல் அலுவலர், இந்த மனுமீது பதிலை தரலாம்... தராமலும் இருக்கலாம். அவர் தகவல் தரவில்லையே என்பதற்காக நாம் அடுத்தடுத்து மனு செய்யலாம்.

ஆனால், நம்முடைய மனுமீது பொதுத் தகவல் அலுவலர் பதில் தரவில்லை என்பதற்காக நாம் அவர்மீது மேல் நடவடிக்கை எதையும் எடுக்க முடியாது. 'நான் மனஉளைச்சலுக்கு ஆளாகி நிற்கிறேன். இந்த மனுதாரரை என்னால் சமாளிக்கவே முடியவில்லை' என்று சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்தான் நம்மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பார்.

விண்ணப்பம் செய்வதற்கு ஒரு வெள்ளை பேப்பர் போதும். நீதிமன்ற முத்திரைத்தாள் (கோர்ட் ஸ்டாம்ப்) தேவையில்லை. எழுதுவதைத் தெளிவாக எழுதினால் போதும். கையால் எழுதினால்கூடப் போதும். டைப் செய்து அனுப்புவது நம்முடைய நேரம், விருப்பத்தைப் பொறுத்தது. ஒரு மனுவில் எத்தனை தகவல்களைக் கேட்க முடியுமோ, அத்தனை தகவல்களையும் கேட்கலாம். கேள்வி நீளமாக இருந்தால், ஒரே கேள்வியோடு மனுவை முடித்துக்கொள்வது நல்லது.

நாம் தகவலைக் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுத் தகவல் அலுவலர் யார், நாம் அவருக்குத்தான் மனுவை அனுப்புகிறோமா என்பதைத் தயக்கம் காட்டாமல் பலமுறை உறுதி செய்துகொண்டு, பின் மனுவை அனுப்பலாம். இதனால், ‘அவர் வருவாரா, பதிலைத் தருவாரா’ என்று ஒரு மாத காலம் வரையில் காத்திருப்புப் பாடல் பாடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுத் தகவல் அதிகாரியின் முகவரி குறித்து நம்மால் அறிய முடியவில்லை என்றால், மாநில அரசாக இருந்தால் நாம் தகவலைக் கேட்கும் மாவட்டத்தில் வருகிற மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால் தலைமைத் தபால் அலுவலருக்கும் மனுவை அனுப்பிவைக்கலாம். ‘அவர் வருவாரா’ என்ற பாடலைப் பாடாமல் மூச்சுக்காற்றை மிச்சப்படுத்தலாம்.

மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளும், தலைமைத் தபால் துறை அலுவலக அதிகாரிகளும் நம்முடைய மனுக்களை எங்கு அனுப்பிவைக்க வேண்டுமோ, அங்கே அனுப்பிவைப்பார்கள்.
'திரு. திருவாடானை மெய்யகாத்தான் அவர்கள்' என்று ஆரம்பித்து பின்னர் அந்த அதிகாரியின் பதவி, பொறுப்பைக் குறிப்பிடுவது எப்போதும் சரியாய் வராது. 

நாம் மனுவை அளிக்கும்போது திருவாடானை மெய்யகாத்தான் இடத்துக்கு, வேப்பம்பட்டி வேம்புலிங்கம் வந்திருக்கக் கூடும். அதிகாரிகள் மாறுவர், பதவி, பொறுப்பு, இடம் மாறுவதில்லை. ஆக, எப்போதுமே அதிகாரிகளின் பெயரைக் குறிப்பிடாமல், அவர்களின் பதவிப் பொறுப்பையும், குறிப்பிட்ட மாவட்டத்தையும் மட்டும் குறிப்பிடலாம்.

முதன்முறை விண்ணப்பம் அனுப்ப, கட்டணம் 10 ரூபாய். நாம் விண்ணப்பித்துப் பெறும் தகவல் நகலின் பக்கம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும். குறுந்தகடுகள் வழியில் தகவலைப் பெற கட்டணம் 50 ரூபாய். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு எந்தவிதக் கட்டணமும் இல்லை. ஆனால், இதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்ப்கள், வரையறுக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம்.
மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலகத் துறை, ‘Accounts officer’ என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்புக் காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம்.

இந்தியக் குடிமகன்கள், அயல்நாட்டு வாழ் இந்திய வம்சாவளியினர், www.epostoffice.gov.in என்ற இணைப்புக்குள் போய், தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பதிவு செய்துகொள்ளலாம். இதன் பின்னர் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி இணையத் தபால் ஆணையை (இ-போஸ்டல் ஆர்டர்) பெறலாம். பிரத்யேகமான எண்கள் இதற்காக வழங்கப்படும். இந்த எண்களைத் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும்.

30 நாட்களுக்கு மேலாகிவிட்டால் தகவலை இலவசமாகத் தரவேண்டும். நேரடியாக நம்முடைய விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டபின், அதற்கான நகல், கட்டணம் செலுத்திய சான்றான ரசீது, அதில் கையெழுத்து, தேதி, அலுவலக முத்திரை போன்றவைகள் உள்ளனவா என உறுதி செய்துகொள்ளுதல் அவசியம்.

பதிவு அஞ்சலுடனான (ரிஜிஸ்டர் போஸ்ட்) பதில் அட்டை (AD)-யில் உள்ள தபால் துறை முத்திரை, நமக்கான ஓர் அத்தாட்சி ஆகும். பதிவு அஞ்சலுடனான அட்டையில் கையெழுத்து, தேதி, முத்திரை சரியாக இல்லையென்றால், தபால் அலுவலகத்துக்குச் சென்று இவற்றையெல்லாம் சரி செய்துகொள்ள வேண்டும்.

கட்டணம் செலுத்திய காசோலை, கேட்புக் காசோலை, அஞ்சலகத் தபால் ஆணை ஆகியவை பற்றிய குறிப்புகளை விண்ணப்ப மனுவின் இறுதியில் தவறாமல் குறிப்பிடுவது மிகவும் அவசியம்.
www.indiapost.gov.in/speednew/trackaspx என்ற இணையதளம் மூலம், நம்முடைய மனு உரிய அலுவலகத்துக்குச் சென்று சேர்ந்துள்ளதா என்பதை அறிந்து, அதற்கான அத்தாட்சி சீட்டை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். தனியார் விரைவு அஞ்சல் சேவை மூலம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பக் கூடாது. நாம் அனுப்பிய இடத்துக்கு, அந்த மனுக்கள் சென்று சேர்ந்ததற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

நாம் அனுப்பும் கேள்விக்குப் பொதுத் தகவல் அலுவலரிடம் இருந்து 30 நாட்களுக்குள் பதில் கிடைக்கப் பெறவில்லை என்றாலோ, (இணைத் தகவல் உரிமை அலுவலரிடம் விண்ணப்பித்திருந்தால் 35 நாட்கள்) அல்லது பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ, முடிவு பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அந்தத் துறையின், முதல் மேல் முறையீட்டு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.

முதல் மேல்முறையீட்டு அலுவலர் 30 நாட்களுக்குள் தனது பதிலை அளிப்பார். தாமதத்துக்கான காரணங்களை எழுத்து மூலம் அவர் நம்மிடம் தெரிவித்துவிட்டு, அவர் மேலும் 15 நாட்கள் (மொத்தம் 45 நாட்கள்) எடுத்துக்கொள்ளலாம்.

முதல் மேல்முறையீட்டு அலுவலர் வாய்மொழி ஆணை அல்லது எழுத்துப்பூர்வ ஆணை அளிக்க அதிகாரம் பெற்றவர் ஆவார்.

இரண்டாம் மேல்முறையீட்டு மனுவைப் பூர்த்திசெய்து, இதுவரை கிடைக்கப்பெற்ற பதில்களின் நகல்களையும், கட்டணம் செலுத்திய அனைத்து ரசீதுகளையும் இணைத்து அனுப்பலாம்.

இரண்டாம் முறை மேல்முறையீடு செய்ய 
மாநில அரசின் கீழ்வரும் துறைகளுக்கு இவரிடம் விண்ணப்பிக்கலாம். அவர், 
மாநில தலைமை தகவல் ஆணையர், 
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 
2, தியாகராயர் சாலை, 
ஆலையம்மன் கோயில் அருகில், 
தேனாம்பேட்டை, 
சென்னை-600018
(அல்லது) 

மாநில தலைமை தகவல் ஆணையர், 
தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையம், 
தபால் பெட்டி எண்: 6405,
தேனாம்பேட்டை, 
சென்னை-600018 

என்ற முகவரிக்கு உரியவர். 

அவருடைய தொலைபேசி எண்: 044-24347590, 
பேக்ஸ்: 044-24357580, 
Email: sicnic.in Web: www.tnsic.gov.in.

மத்திய அரசின் கீழ்வரும் துறைகளுக்கு, 

“CENTRAL INFORMATION COMMISSION,
 II floor, August Kranti Bhavan,
 Bhikaji Kama Place,
 NEW DELHI – 110 066 

என்ற இந்த முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் என்றால்,
 www.rtionline.gov.in/ என்ற தளத்தில்
 மத்திய அரசின்கீழ் வரும் துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம். 

இதே ஆன்லைன் தளத்திலேயே முதல் மேல்முறையீடும் செய்யலாம்.

www.rti.india.gov.in என்ற தளத்தில் இரண்டாம் மேல் முறையீடு செய்யலாம். இதற்கான 10 ரூபாய் கட்டணத்தை கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/எஸ்.பி.ஐ. வங்கியின் மூலம் செலுத்தலாம். மேற்கண்ட தளங்களிலேயே கூடுதல் விவரங்களையும் நாம் தெரிந்துகொள்ளலாம்.

 ந.பா.சேதுராமன்
நன்றி : விகடன் செய்திகள் - 25.08.2016

No comments:

Post a Comment