disalbe Right click

Friday, September 30, 2016

EMI லாபமா? நஷ்டமா?


EMI லாபமா? நஷ்டமா? - என்ன செய்ய வேண்டும்?

கன்ஸ்யூமர் ஸ்பெஷல்
இஎம்ஐ கடன் மூலம் நாம் பல்வேறு பொருட்களை வாங்குகிறோம். இஎம்ஐயில் பர்சனல் லோனையோ, கன்ஷுயூமர் லோனையோ வாங்குவது தவறல்ல. அந்தக் கடனை வாங்கும்முன் அது நம் முன்னேற்றத்துக்கு பயன்படுமா என்று பார்ப்பது முக்கியம்.

பொதுவாக தனிநபர் கடன், நுகர்வோர் கடனுக்கு 14% முதல் 22% வட்டி வசூலிக்கப்படுகிறது.

ஆண்டுக்கு 14% வட்டியில், ஒரு நுகர்வோர் ரூ.3 லட்சம் கடன் வாங்கி அதனை 3 வருடங்களில் திரும்பச் செலுத்தினால், இஎம்ஐ-ஆக ரூ.10,255 கட்டவேண்டும். 

வட்டிக்கு மட்டும் ரூ.69,200-ஆக செல்லும். இதுவே 22 சதவிகித வட்டிக்கு தனிநபர் கடன் என்றால், வட்டிக்கு செல்வதோ ரூ.1.12 லட்சம். 

வாங்கிய கடனோ ரூ.3 லட்சம் ரூபாய்தான்.

சில உதாரணங்கள் மூலம் பார்த்தால், இன்னும் தெளிவாக இருக்கும். உதாரணத்துக்கு, 

ரூ. 3 லட்சம் ரூபாய்க்கு ஒருவர் தங்க நெக்லஸ் வாங்கியதாக வைத்துக்கொள்வோம். அவர் நகை வாங்கும்போதே குறைந்தது 15 – 20% செய்கூலி, சேதாரம் போய்விடும். இந்த நகையை பர்சனல் லோன் வாங்கி, அதன் மூலம் வாங்கி இருந்தால், அதற்கான வட்டி 22% மற்றும் சேதாரம் 20% சேர்ந்து மொத்தம் 42%  போய்விடும். 

தங்கத்தின் விலை 42% அதிகரித்து இருந்தால் மட்டுமே இஎம்ஐ மூலம் வாங்கும் கடன் நமக்கு லாபம் அளிக்கும். 


இதேபோல்தான் இஎம்ஐ மூலம் தனிநபர் கடன் வாங்கி, நிலத்தில் முதலீடு செய்வதும். மனை வாங்கும்போது பதிவு மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் 8%, தரகர் கட்டணம் 2% என குறைந்தது 10% செலவு ஆகிவிடும். 

இதனை தனிநபர் கடன் 22% வட்டியில் வாங்கி இருந்தால், மூன்றாண்டு கழித்து விற்பதாக இருந்தால் மனை விலை 32 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்திருந்தால் மட்டுமே லாபம். 

எனவே, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே இஎம்ஐ -ல் கடன் வாங்கலாம். இல்லை என்றால் கடன் வாங்குவது கூடாது. அதிலும் இஎம்ஐ-ல் கடன் வாங்குவது கூடாது. 

மேலே குறிப்பிட்டதுபோல, இஎம்ஐ கடன் பெற்று, அந்தக் கடனுக்காக மாதம்தோறும் (அதாவது, 36 மாதங்களுக்கு) வட்டியாக ரூ.10,000 அல்லது ரூ.15,000 (வட்டி விகிதத்துக்கேற்ப  செலுத்தும் திறனுடைய ஒருவர் ஏன் அந்த  இஎம்ஐ தொகையை முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையைக் கொண்டு பொருட்களை வாங்கிக் கொள்ளக்கூடாது? 

இதற்கு ஒருவர் செய்ய வேண்டிய தியாகம், குறிப்பிட்ட அந்தப் பொருளை சில ஆண்டுகள் கழித்துப் பயன்படுத்துவதுதான். 

குறிப்பிட்ட அந்தப் பொருள் (தங்க ஆபரணம், பெரிய அளவு டிவி, வாஷிங் மெஷின், டைனிங் டேபிள், ஃப்ரிட்ஜ்) இல்லாமல் வாழப் பழகி இருக்கும் ஒருவரால் இன்னும் சில ஆண்டுகள் அது இல்லாமல் இருக்க முடியாதா?

   
இஎம்ஐ-ல் பொருள்கள் வாங்கு வதற்கு பதில் அதற்கான தொகையை மாதா மாதம் முதலீடு செய்து, வாங்கினால் எவ்வளவு லாபம் என்று பார்ப்போம். 

ஒருவர் மாதம் ரூ.10,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு ஈக்விட்டி பேலன்ஸ்டு ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். 

இந்த ஃபண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 12% வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொண்டால், முதலீடு செய்த தொகை ரூ.3.6 லட்சம். 

3 ஆண்டுகளில் இது ரூ.4.4 லட்சமாகப் பெருகி இருக்கும். அதாவது, லாபம் மட்டும் ரூ.75,000.  

இஎம்ஐ கடன், முதலீடு இந்த இரண்டில் எது பெஸ்ட் என்பதை ஆராய்ந்தால், இஎம்ஐ கடன் லாபமல்ல என்பது தெளிவாக விளங்கும்!

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.com.

நன்றி : நாணயம் விகடன் - 02.10.2016

No comments:

Post a Comment