disalbe Right click

Wednesday, January 11, 2017

டூவீலர் ஓட்டுவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்


டூவீலர் ஓட்டுவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

தேவை அதிக கவனம்
பறந்து செல்ல விரும்பும் பெண்களுக்குக் கிடைத் திருக்கும் புதிய சிறகுகளே இருசக்கர வாகனங்கள். காற்றைக் கிழித்துப் பறக்கும் நொடியில், காலின் கீழே வானம் நழுவும். உடல்தொட்டு வருடும், காற்றின் சந்தங்களுக்கு வார்த்தைகள் பிடித்து வந்து, மனம் கவிதை வாசிக்கும்!

ஆனால், ‘`இருசக்கர வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் அதை இயக்கும் முறைகளால், பெண்களுக்கு ஏற்படும் பிறப்புறுப்புப் பிரச்னைகள் பலரும் அறியாதது’’ என்று எச்சரிக்கிறார், சேலத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ரம்யா.

‘`பெண்கள் இருசக்கர வாகனத்தில் சரியான பொசிஷனில் அமர்ந்து இயக்க வேண்டும். மாறாக, தன்னை வருத்தி அமர்ந்து ஓட்டும்போது, அவர்களின் எடை முழுவதையும் பிறப்புறுப்பு தாங்க நேர்வதால், அவ்விடம் மரத்துப் போவதோடு, நாளடைவில் அவர்களின் தாம்பத்ய இன்பம் உணரும் தன்மையும் குறைந்துபோகும்’’ என்று அதிர்ச்சித் தகவல் கூறிய ரம்யா, அதுபற்றி விளக்கமாகப் பேசினார்.

ஆண்கள் சந்தித்த பிரச்னை இப்போது பெண்களுக்கும்…

‘`சைக்ளிக் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் பெரினியல் பெயின் (Perineal Pain) பிரச்னையை, முன்னர் சைக்ளிங் விளையாட்டில் ஈடுபடும் ஆண்கள் மட்டுமே சந்தித்து வந்தனர். இப்போது, இருசக்கர வாகனம் இயக்கும் பெண்களில் 60% பேருக்கு இந்தப் பாதிப்பு உள்ளது.

என்ன காரணம்?

சரியான பொசிஷனில் அமர்ந்து இருசக்கர வாகனத்தை இயக்கும்போது, உடலின் எடை இடுப்பு எலும்பின் அடிப்பகுதியில் இறங்கும். அதுவே, ஸீட்டின்முன் நகர்ந்தவாறு அமரும்போது, உடலின் எடை பிறப்புறுப்புக்குச் செல்லும். எலும்புகளைப் போல தசைகளால் எடையைத் தாங்கமுடியாது என்பதால், அந்தத் தசைகள் பாதிக்கப்படும். 
குறிப்பாக, நாப்கின் பயன்படுத்தும் மாதவிடாய் நாட்களில், இந்த அழுத்தம் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.  உடலின் எடையைத் தாங்குவதோடு, வாகனம் இயக்கும்போது அழுத்தம், உராய்வுக்கும் உள்ளாவதால் அந்தத் தசை நரம்புகள் நாளடைவில் மரத்துப்போகும். சிலிர்ப்பு, கூச்சம் என மிக நுண்ணிய உணர்வுகள் பரவும் பிறப்புறுப்புத் தசைகள் மரத்துப்போவது மற்றும் பாதிப்புக்குள்ளாவதால், அந்த உணர்வுகளை உறுப்பு உணரும் தன்மை பெண்களுக்குக் குறையும். அதன் விளைவாக, தாம்பத்யமே அலுத்துப்போகலாம். 

அறிகுறிகள் என்னென்ன?

* பிறப்புறுப்பில் வலி மற்றும் எரிச்சல், சில நேரங்களில் மரத்துப்போன உணர்வு

* குதிரைவால் எலும்பில் வலி (முதுகுத் தொடரின் கடைசி எலும்பு) வலி

* தொடை இடுக்குகளில் வலி

* தாம்பத்யத்தின்போதும் பின்னரும் வலி மற்றும் திருப்தியின்மை

* சிறுநீர் கழிக்கையில் வலி மற்றும் எரிச்சல், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு அடிக்கடி ஏற்படுவது, சிறுநீர் முழுமையாக வெளியேறாத உணர்வு

 * தொடைகள்,  வயிற்றை இறுக்கிப்பிடிக்கும் ஜீன்ஸ் உள்ளிட்ட உடைகள் அணியும் போது ஏற்படும் அசௌகர்யம்.

என்ன தீர்வு?

* இருசக்கர வாகனத்தை இயக்கும்போது  எடையை இடுப்பு எலும்பு தாங்குவது போல் நேராக அமர வேண்டும்.

* எடை அதிகம் உள்ளவர்கள் டபுள்ஸ் செல்லும்போது, வாகனத்தை இயக்குபவர் ஸீட்டின் நுனிக்குத் தள்ளப்படுவார் என்பதால், அவற்றைத் தவிர்க்கலாம். ட்ரிபுள்ஸ் செல்லக் கூடாது.

* இருசக்கர வாகனத்தில் அதிக தூரப் பயணங்களைத் தவிர்க்கலாம். வேறுவழியின்றி செல்ல நேர்ந்தால், உடலை வருத்தாமல் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்ளலாம். பயணங்களின்போது ஜீன்ஸ், லெகிங்ஸ் போன்ற இறுக்கமான உடைகளைத் தவிர்க்கலாம்.

* பெண்கள் சரியான நிலையில் அமர்ந்து வாகனம் இயக்க நினைத்தாலும், பொதுவாக இருசக்கர வாகனங்களின் இருக்கை அமைப்பே, முன்புறம் வழுக்கிக் கொண்டு வருவது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதைத் தவிர்க்கும்விதமாக, முன்பகுதியில் ஸீட்டின் அகலத்தை, உயரத்தை அதிகரித்து மறுவடிவமைப்பு செய்து கொள்ளலாம். 

* உயரம் குறைவான பெண்கள், தங்கள் உயரத்துக்கேற்ப ஸீட்டின் உயரத்தை மறுவடி வமைப்பு செய்து பயன்படுத்தலாம்.

* குஷன் ஸீட் பயன்படுத்துவது சிறந்தது.

சிகிச்சைகள் உண்டு!

பெரினியல் பெயின் பிரச்னையில் இருந்து விடுபட, எளிமையான பிசியோதெரபி பயிற்சிகளைச் செய்யலாம். பிறப்புறுப்பின் ரத்த ஓட்டம் அதிகரித்து நுண்மையான உணர்வுகளைத் தூண்டும் கெஜல்ஸ் பயிற்சிகள் (Kegels exercise) செய்யலாம். வாரம் ஒரு முறை பாத்டப்பில் வெதுவெதுப்பான நீரில் அமரலாம். பிறப்புறுப்பில் தொற்று உள்ளிட்ட வேறு பிரச்னைகள் இருப்பின், அதற்கான மருத்துவச் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்’’ – வலியுறுத்துகிறார் ரம்யா.

நன்றி : அவள்விகடன் - 27.01.2017

No comments:

Post a Comment