disalbe Right click

Wednesday, January 11, 2017

பணமில்லா பரிவர்த்தனை


பணமில்லா பரிவர்த்தனை

ரொக்கமில்லா பண பரிவர்த்தனை!

நவ., 8, 2016 - அன்று தான், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தது, மத்திய அரசு.கறுப்பு பணம் ஒழியுமா, இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மக்கள் வேறொரு நிலைக்கு தள்ளப்பட்டு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு தயாராக வேண்டிய நிலைக்கு வந்து விட்டனர்.

ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை, எப்படியெல்லாம் செய்யலாம், அவற்றிற்கான சாதனங்கள் எவை, அவற்றை எப்படிப் பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்:

டெபிட் கார்டு - பற்று அட்டை:
'டெபிட்' கார்டு அதாவது, பற்று அட்டை என்றால் என்ன?

நீங்கள் எங்கே போனாலும், உங்கள் நண்பர் ஒருவர் கூடவே வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம், உங்கள் சேமிப்பை கொடுத்து வைத்திருக்கிறீர்கள். கடைக்கு போனதும் சில பொருட்களை வாங்குகிறீர்கள். பின், அந்த நண்பரிடம் அதற்கான தொகையை சொல்கிறீர்கள்; உடனே, அந்த நண்பர் அத்தொகையை, கடைக்காரரிடம் கொடுத்து விடுவார்.

இங்கு, நண்பருக்கு பதிலாக, வங்கி செயல்படுகிறது; அவ்வளவு தான். நண்பரை போல், வங்கி உங்களுடன் கூடவே வர முடியாது; எனவே, தன் சார்பாக, 'டெபிட்' அட்டையை உங்களுக்கு தருகிறது, வங்கி. 

கடையில், பொருட்கள் வாங்கியவுடன், 'டெபிட்' அட்டையை, கடைக்காரரிடம் இருக்கும், சிறு கருவியில், 'ஸ்வைப்' செய்தால் போதும்; 

அதிலுள்ள காந்தப் பெட்டியில் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் பதிவாகி, உங்கள் கணக்கிலிருந்து, அத்தொகை கழிக்கப்பட்டு, கடைக்காரரின் கணக்குக்கு, வங்கியால் மாற்றப்பட்டு விடும். 'டெபிட்' அட்டையை, 'செக்கிங்' அட்டை என்றும் கூறுவதுண்டு.

கிரெடிட் கார்டு - கடன் அட்டை:

கிரெடிட் கார்டு - கடன் அட்டை என்றால் என்ன?

உங்களுடன் வரும் நண்பரிடம் உங்கள் சேமிப்பான, 2,500 ரூபாயை கொடுத்து வைத்துள்ளீர்கள். கடையில், நீங்கள் மொத்தம், 3,500 ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளதாக, கடைக்காரர் தெரிவிக்கிறார். இதை, நண்பரிடம் கூறுகிறீர்கள். அவர், நீங்கள் கொடுத்த, 2,500 ரூபாயுடன், தன் பணமான, 1,000 ரூபாயை சேர்த்து கடைக்காரருக்கு கொடுக்கிறார். அவர், அதை சும்மா கொடுத்து விடவில்லை. அந்த, 1,000 ரூபாயை, நீங்கள் அந்த நண்பருக்கு, மாதக் கடைசிக்குள் கொடுத்து விட வேண்டும். இந்த நண்பரை, வங்கி அளிக்கும், கடன் அட்டையுடன் ஒப்பிடலாம்.

இப்படி செய்வதால், வங்கிக்கு நஷ்டம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்; இல்லை என்பது தான் பதில். ஏனென்றால், கடன் அட்டை மூலம் பொருட்களை வழங்கும் கடைக்காரர்கள், மாத கடைசியில் தான், இந்த பரிவர்த்தனை விவரங்களை, வங்கிக்கு அளித்து, அப்பணத்தை பெற்றுக் கொள்வர். 

மாத கடைசிக்குள், நீங்கள், உங்கள் வங்கி கணக்கில் உரிய பணத்தை செலுத்தவில்லை என்றால் கூட, வங்கி, கடைக்காரருக்கு உரிய முழு தொகையை செலுத்தி விடும்; ஆனால், உங்களிடம் அதிகப்படி தொகையை, கொழுத்த வட்டியுடன், திரும்ப வசூலித்து விடும்.

டெபிட் அல்லது கிரெடிட் - 

எந்த அட்டையை நீங்கள் பெற வேண்டுமென்றாலும், உங்களுக்கு, வங்கி கணக்கு இருக்க வேண்டும். பொதுவாக, டெபிட் அட்டையை, வங்கி, எளிதில் வழங்கி விடும். ஆன்லைனில் கூட, 'டெபிட்' அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆனால், கடன் அட்டையை, அவ்வளவு சுலபத்தில் தந்து விடாது. அதற்கு, சிறிது காலமாவது, வங்கியில், நீங்கள், உங்கள் கணக்கை எந்த சிக்கலுமின்றி இயக்கியிருக்க வேண்டும். அதில் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையை, நீங்கள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள், அந்த வங்கியில், ஏதாவது கடன் பெற்றிருந்தால், அதற்கான தவணைகளை, உரிய காலத்தில் செலுத்தியிருக்க வேண்டும். இதிலெல்லாம் அந்த வங்கி திருப்தியானால் மட்டுமே, உங்களுக்கு கடன் அட்டை வழங்கும்.

நீங்கள் விண்ணப்பித்த சிறிது நாட்களில், உங்களுக்கு, 'டெபிட்' அட்டை அல்லது கடன் அட்டை வந்து சேர்ந்தவுடன், அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். 

வங்கியில், உங்களுக்கு ரகசிய எண்ணை கொடுப்பர். இந்த ரகசிய எண்ணை, நீங்கள் குறிப்பிட்டால் தான், அட்டை பயன்பாட்டை துவக்க முடியும். 

வங்கி அளித்த ரகசிய எண்ணை தான், நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. நீங்களாகவே, நான்கு இலக்கு கொண்ட ரகசிய எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கடன் அட்டையை பயன்படுத்துவதில் பல ஆதாயங்கள் உண்டு. உங்கள் கணக்கில், இப்போதைக்கு தொகை இல்லையென்றால் கூட நீங்கள், கடன் அட்டை மூலம் பொருட்களை வாங்க முடியும். 

தவிர, கடன் அட்டையை அதிகமாக பயன்படுத்தும் போது, உங்களுக்கு பாயின்ட்கள் வழங்குவர். இதைக் கொண்டு, நீங்கள், சில கடைகளில், பரிசு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

சில வகை கடன் அட்டைகளை பயன்படுத்தும் போது, விற்பனை தொகையில், ஒன்றிலிருந்து, ஐந்து சதவீதம் வரை தள்ளுபடியும் அளிப்பதுண்டு.

கடன் அட்டையை பயன்படுத்தும் போது, சில விமான சர்வீஸ்கள், தங்கள் கட்டணத்தில், சலுகை கொடுக்கும். வங்கிகள் வழங்கிய கடன் அட்டை என்றாலும், இவற்றில் மாஸ்டர் கார்டு, விசா கார்டு என்றெல்லாம் போட்டிருப்பர். இந்த அமைப்புகளுக்கும், விமான சர்வீஸ் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் இது!

எனினும், நீங்கள் கீழ்காணும் குணம் கொண்டவராக இருந்தால், கடன் அட்டையை தவிர்ப்பது நல்லது. 

உங்களால் குறிப்பிட்ட காலத்துக்குள், சரியான தொகையை உங்கள் கணக்கில் செலுத்த முடியவில்லை என்றால், எக்கச்சக்கமான வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள், இயல்பாகவே வரவுக்கு மீறி செலவு செய்பவர் என்றால், 'டெபிட்' அட்டை தான் உங்களுக்கு லாயக்கு!'

உங்கள், 'டெபிட்' அட்டை தொலைந்து விட்டால், அதிகபட்சம், உங்கள் கணக்கிலுள்ள தொகை தான், களவு போகும்; ஆனால், கடன் அட்டை தொலைந்து விட்டால், நீங்கள், உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கா விட்டால், ஏமாற்றப்படும் தொகை, மிக அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.

'டெபிட்' அட்டையோ, கடன் அட்டையோ தொலைந்தால், நீங்கள் உடனடியாக உங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு தெரிவித்து, அதை பெற்றதற்கான, 'அக்னாலட்ஜ்மென்ட்' வாங்கிக் கொள்ளுங்கள். மேலும், அருகிலுள்ள காவல் நிலையத்தில், தொலைந்து போன விவரத்தை பதிவு செய்து, எப்.ஐ.ஆர்., பெற்றுக் கொள்வது நல்லது.

உங்களுக்கு வங்கியில் கணக்கே இல்லையென்று வைத்துக் கொள்வோம். 

அதேசமயம், கையில் தொகையை எடுத்துக் கொண்டு வெளியே செல்லப் பிடிக்கவில்லை. அதுவும், வெளியூர் செல்லும் போது, உங்களுக்கு, 'டெபிட்' அட்டையோ, கடன் அட்டையோ அதிகம் பயன்படும். என்ன செய்யலாம்?

ப்ரிபெய்ட் டெபிட் கார்டு

ப்ரிபெய்ட் டெபிட் கார்டு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதாவது, வங்கியில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, அத்தொகைக்கான, 'டெபிட்' அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அந்த வங்கியில், உங்களுக்கு கணக்கு இருக்க வேண்டும் என்பதில்லை. 
பின், வழக்கமான, 'டெபிட்' அட்டை போலவே, அதை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால், ஒரு முக்கிய விஷயம். இந்த ப்ரீபெய்டு டெபிட் அட்டை தொலைந்து விட்டால், வங்கி உங்களுக்கு உதவிக்கு வராது. 

இந்நிலை மாற வேண்டும் என்றும், 'பிற வழக்கமான டெபிட் அட்டைதாரர்களுக்கு உள்ள பாதுகாப்புகளை இவர்களுக்கும் வங்கி தர வேண்டும்...' என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 

ஆனால், அது, அக், 1, 2017 - லிருந்து தான் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இவை மட்டுமல்ல, ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்த, வேறு பல, 'ஆயுதங்களும்' உள்ளன.


- ஜி.எஸ்.சுப்ரமணியன்

நன்றி : தினமலர் (வாரமலர்) - 08.01.2017

No comments:

Post a Comment