disalbe Right click

Sunday, February 5, 2017

ஆதார் அட்டை இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட்

No automatic alt text available.

ஆதார் அட்டை இருந்தால் 3 நாளில் பாஸ்போர்ட்

சென்னை: பாஸ்போர்ட் பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை சமர்ப்பித்தால் 3 நாட்களில் பாஸ்போர்ட் பெற்றுக்கொள்ள முடியும் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " சாதாரண முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கும்போது, காவல்துறை அறிக்கை பெற்று, பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்குக் கட்டணம் 1,500 ரூபாய்தான். இந்த நடைமுறையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் மாற்றம் செய்துள்ளது.

இனிமேல் சாதாரண முறையில் 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கும் போது 'ஆதார்' அட்டை, 'பான்கார்டு' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் சுய ஒப்புதல் அளிக்கும் இணைப்பு - 1 படிவம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பம் வழங்கினால், காவல்துறை அறிக்கை பெறாமலேயே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதன்பின், காவல்துறை அறிக்கை பெறப்படும்.

தற்போது பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் 'தக்கல்' முறையும் அமலில் உள்ளது. அதற்குக் கட்டணம் 3,500 ரூபாய் ஆகும்.

ஆவணங்கள் சரிபார்ப்பு பணிக்கு, விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக, 'ஆன்லைனில்' தேதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற வேண்டும். திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்களில், வசதிப்பட்ட நேரத்தில் நேரில் ஆஜராவதை ஆன்லைனில் உறுதி செய்யலாம். ஒரு முறை உறுதி செய்த தேதியை மறுமுறை மாற்றிக் கொள்ளவும் முடியும்.

காவல்துறையின் அறிக்கை பெற விண்ணப்பதாரரின் விவரங்கள் மொபைல் போன் மூலம் அனுப்பும் முறை தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வர உள்ளது. போலீசாரின் மொபைல் போனுக்கு, விண்ணப்பதாரரின் விவரங்கள் அனுப்பப்பட்டு சரிபார்ப்பு பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 21 நாட்களுக்கு முன் மொபைல் போன் மூலம் அறிக்கையை பெற முடியும்.

பாஸ்போர்ட் உதவிமையங்கள், அரசு கேபிள், 'டிவி' நிறுவனம் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படுகின்றன.இதற்கு சேவை கட்டணம் 100 ரூபாய்.

மழை வெள்ளத்தில் பாஸ்போர்ட் சேதமடைந்தோருக்கு, கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட் வழங்கும் வசதி, வரும் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஆவணங்களை பெற, பாஸ்போர்ட் அலுவலகங்களில், சமூக தணிக்கை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. ஹஜ் பயணத்துக்கு பாஸ்போர்ட் கோருபவர்கள் வரும் 8 ம் தேதி வரை விண்ணப்பம் அளிக்கலாம்.

பாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் இரு நிலைகள் உள்ளன. அதாவது 1989 ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் அவசியமில்லை. அவர்கள் தங்களின் கல்விச் சான்றிதழில் உள்ள பிறப்புத் தேதியை பிறப்புச் சான்றிதழாகப் பயன்படுத்தலாம்.

அத்தோடு வரையறுக்கப்பட்ட சான்று ஆவணங்களை இணைக்க வேண்டும். 1989- ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.அவர்கள் கணினியில் சென்னை மாநகராட்சியின் பிறப்பு சான்றிதழ் பிரிவுக்கு சென்று பிறந்த தேதியை பதிவிட்டு பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

அதில் பெற முடியாவிட்டால் தாங்கள் பிறந்த மருத்துவமனையை அணுகி பிறப்புச் சான்றிதழ் பெற வேண்டும். அதனுடன் தங்களின் எல்லைக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் " என்று கூறினார்.

நன்றி :விகடன் செய்திகள் - 04.02.2016

No comments:

Post a Comment