disalbe Right click

Saturday, February 11, 2017

மனைவி

Image may contain: text

மனைவி

இதுதான்... இவ்வளவுதான் அவள் உங்களிடம் எதிர்பார்ப்பது!

ஆண் - பெண் உறவில், பெண் தன் நேசத்தில் நிறைந்து தளும்புகிறவளாக இருக்கிறாள். அவள் காதலை மட்டும் கடலெனப் பருகிவிட்டு, அவன் அவளுக்கு பதிலுக்குக் கொடுப்பது, காகம் கல்லைப்போட்டுக் குடித்த தண்ணீரைப்போல தூரில் கிடக்கும் பிரியம் மட்டுமே. நியாயம்தானா இது? 

‘நான் என்னதான் செய்யணும்... அப்படி அவளுக்கு என்னதான் வேணும்?’ என்ற ஆண்களின் கேள்விகள் வேண்டுமானால், அதை ஒரு சிக்கலான விஷயம்போல சித்தரிக்கலாம். ஆனால் அதற்கான பதிலும், அவள் எதிர்பார்ப்பும் மிகவும் எளிமையானவை. உங்கள் காதலி, மனைவி உங்களிடம் வேண்டுவது, ஏங்குவது, அன்பின் பரிமாற்றமே! 

உங்களுடன் பேச வேண்டும்!
அவளுக்கு உங்களுடன் பேச வேண்டும். எவ்வளவு பரிதாபமான கோரிக்கை இது? ஆனால் அதுதான் அவள் நிலை. அவள் சந்தோஷங்களை, துக்கங்களை, அச்சங்களை, கேளிக்கைகளை அவள் உங்களிடம் பேச வேண்டும், பகிர வேண்டும். யோசித்துப் பாருங்கள்... சமையல் குறித்த கட்டளைகள், பள்ளி, ட்யூஷன், ஃபீஸ் என்று குழந்தைகள் குறித்த விசாரிப்புகள், அலுவலகம், தொழிலில் நீங்கள் பெற்று வரும் அழுத்தங்களை வெளிப்படுத்தும் கோபங்கள், தலைவலி, கால்வலி என்று உங்கள் உடல் நோவைச் சரிசெய்யச் சொல்லும் ஏற்பாடுகள்... இதுதான் உங்களுக்கும் அவளுக்குமான உரையாடலாக இருக்கிறது. 

என்றாவது அவளிடம், உங்கள் தொழிலின் வெற்றித் தருணங்களை, அலுவலகத்தில் அன்று பெற்ற பாராட்டை, வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கில் ரசித்த ஒரு பதிவை அவளுடன் பகிர்ந்திருக்கிறீர்களா? அல்லது, அவளது செடி பூத்த முதல் மலரை, அவள் ரசித்த பாடலை, அவள் ஊரின் கதைகளைப் பற்றி அவள் உங்களுடன் பேசி மகிழும் மணித்துளிகளை அவளுக்குத் தந்திருக்கிறீர்களா? அதைவிட மேலான வேலைகள் உங்களுக்கு இருப்பதாக இப்போதும் நீங்கள் நினைத்தால், ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் வெட்டியாகக் கழிக்கும் பொழுதுகளைச் சுட்டிக்காட்டட்டும் உங்கள் மனசாட்சி உங்களுக்கு! 

சின்னச் சின்ன அக்கறை வேண்டும்!
சமையல் அறையில் குக்கர்பட்ட சூடு, காய் நறுக்கும்போது கத்தி அறுத்த வெட்டு, வழுக்கி விழுந்த ரத்தக்கட்டு, வேலைக்கு விரைந்து ஓடுகையில் எங்கோ இடித்து கன்னிப்போயிருக்கும் வலிகளில் இருந்து பிரசவத் தையல்கள் வரை... அவளின் எந்தக் காயங்களும் உங்களுக்குப் பதறாதுதான். அதனால் இப்போதெல்லாம் அவளுக்கு எல்லாக் காயங்களும் ஊமைக்காயங்களே. ஆனால், இத்தனை வலிகளையும் அவள் உங்களுக்காக, உங்களாலேயே அனுபவிக்கிறாள் என்ற உண்மையும் உங்களால் உணரப்படாமல் ஊமையாகிக்கிடப்பதுதான் வேதனை. 

ஒரு காய்ச்சல் என்றால்கூட அம்மாவையோ, மனைவியையோ படுத்தியெடுக்கும் ஆண்களின் சௌகரியம் எல்லாம் அறியாதவள் அவள். ஒருவேளை அவளது தலைவலியை அவள் வாய்விட்டுச் சொன்னால், முதுகு வலிப்பதாகச் சொன்னால், பித்தவெடிப்பில் ரத்தம் கசிவதாகச் சொன்னால், சொன்னதில் இருந்து மறுமுறை, ஒரே ஒருமுறை, ‘சரியாயிடுச்சா?’ என்று மனதிலிருந்து கேளுங்கள். காலையில் சொன்ன அவளின் வலியை, அந்த நாளின் முடிவில் நீங்கள் நினைவுவைத்துக் கேட்பதிலேயே பாதி நோவு பறந்துவிடும் அவளுக்கு!

அவள் சுமை உணர வேண்டும்! 
வீடு, வேலை என்று இரட்டைச் சுமையில் தள்ளாடும் பெண்களைப் பற்றி பேசினாலே பிடிப்பதில்லை உங்களுக்கு. உங்களின் தேவைகள், உங்கள் வீட்டின் ஒழுங்கு, உங்கள் பிள்ளைகளின் பொறுப்புகள் இவற்றில் எல்லாம் எந்தக் குறையும் இல்லாதவாறு, அவள் பணிக்குச் செல்ல ஆட்சேபம் சொல்லாத மகத்தான சுதந்திரம் நீங்கள் அவளுக்குக் கொடுத்திருப்பது. ஆம், அவள் தலையணை உறை மாற்றி ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டதுதான். ஆம், அவள் இந்த வீட்டை இன்னும் நேர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டும்தான். ஆம், நீங்கள் மெத்தைமீது வீசிவிட்டுப் போகும் ஈரத்துண்டை அப்புறப்படுத்துவதைத் தவிர அவளுக்கு வேறு முக்கிய வேலைகள் இல்லைதான். செய்கிறாள். சிணுங்கிக்கொண்டோ, முணங்கிக்கொண்டோ, விம்மிக்கொண்டே அவள் இதையெல்லாம் செய்கிறாள். 

அலுவலகத்தின் திறன் ஓட்டத்தில், முதுகில் உங்கள் வீட்டைச் சுமந்தபடியே ஓடும் அவளை, கால்கள் இரண்டையும், கைகள் இரண்டையும் காற்றின் விசையில் வீசி ஓடும் அவளின் சக ஆண் போட்டியாளர் கடந்துசென்று எக்களிக்கும்போதும், அவள் துவண்டுபோய்விடுவதில்லை. ஏனெனில், தன் வீட்டை விலையாகக்கொடுத்து ஈட்டும் எந்த வெற்றியும் வெற்றியல்ல என்பதை அவள் அறிவாள்.

அப்படியிருந்தும், ‘வீட்டை ஒழுங்காவே பார்க்கிறதில்ல’ என்ற உங்களின் நன்றியில்லாத பேச்சுதான் அவளைத் துண்டு துண்டாக்கிவிடுகிறது. பெரிதாக அடுக்குவதால், பெரிதாக எதுவும் கேட்கவரவில்லை. அவள் தன் இரட்டைச் சுமை பற்றிப் புலம்பும்போது, அதை நம்புங்கள். அவள் சிரமங்களை ஒப்புக்கொள்ளுங்கள். ‘ரொம்ப வேலையா... ரெஸ்ட் எடுத்துக்கோ’ என்ற உங்களின் வார்த்தைகளே, அவள் இயக்குத்துக்கான எரிபொருள்! 

சிரிப்பில் கரைய வேண்டும்! 
அவளை நீங்கள் கடைசியாக சிரிக்கவைத்தது எப்போது? மிகக் கடினமான கேள்வி இது. சரி, அவளிடம் நீங்கள் கடைசியாக சிரித்துப் பேசியது எப்போது? அதனினும் கடினமான கேள்வியாக இருக்கக்கூடும். அலுவலகம், முகநூல், வாட்ஸ்அப் குரூப்கள் என்று எங்கும் பொங்கிப் பிரவாகமெடுக்கும் உங்கள் நகைச்சுவை உணர்வால், உலகத்தையே சிரிக்கவைக்க மெனக்கெடுகிறீர்கள். உங்கள் அலைபேசியில் உள்ள பெண் கான்டாக்ட்களுக்கு செய்தி அனுப்பும்போது, அது அலுவல் செய்தியாக இருந்தாலும்கூட குறைந்தபட்சம் ஒரு ஸ்மைலி இல்லாமல் அனுப்புவதில்லை. 

ஆனால், அவளிடம் நீங்கள் சிரித்துப் பேசவும், அவளை நீங்கள் சிரிக்கவைக்கவுமான தகுதியற்றவளாக அவள் ஆகிப்போனது துயரம். ஓர் உண்மை என்னவெனில், நீங்கள் சிரிக்கப் பேசும்போது மற்றவர்கள் எல்லாம் நீங்கள் உதிர்க்கும் சிரிப்புத் துணுக்குகளை ரசிப்பவர்கள். அவள், அந்தச் சிரிப்பில் பூக்கும் உங்களை ரசிப்பவள். மகிழ்ந்து, லயித்து நீங்கள் அவளிடம் ஒரு நகைச்சுவையை பகிரும்போது, மின்னும் உங்கள் கண்களில் காதல் கொள்பவள். யார் யாருக்கோ விதவிதமான ஸ்மைலிங் எமோஜிகளை தேடித் தேடித் தட்டும் நீங்கள், சின்ன ஸ்பரிசம் தரும் அருகாமையில் அவளிடம் அமர்ந்து சிரித்துப் பேசினால்போதும், அருவி அன்பு அது அவளுக்கு. நனைந்து கரைந்துபோவாள்! 

காற்றலையில் அனுப்பும் காதல் வேண்டும்!
வீட்டைவிட்டு வெளியேறும்போது அவளை மறந்துபோகிறீர்கள். மீண்டும் வீட்டுக்குள் நுழையும்போதே உங்கள் உலகில் அவள் நுழைகிறாள். ஆனால் அவளால் அவ்வாறு உங்கள் நினைவின்றி இருக்க முடியாது. அந்தத் தனிமையை துரத்தத்தான் டிவியில் இருந்து இணையம்வரை தன்னை ஒப்படைக்கிறாள். அந்தப் பகல்களில் அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி, ஓர் அலைபேசி அழைப்பு உங்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றால், அவளின் அந்த நாள் அத்தனை அழகாகிவிடும். 

சப்பாத்திக்கு மாவு பிசைந்துவைப்பதில் இருந்து, பிள்ளைகள் இரைத்துவிட்டிருந்த பொருட்களை எடுத்து வைப்பதுவரை, பின் இரவு நீங்கள் வீடு திரும்பும் சூழலை சுகமாக்குவதற்கான வேலைகளை முன் இரவே முடித்துவைப்பவள் அவள். காலணி கழட்டும்போது அவளைக் கண்டுகொள்ளாமல் கவிழ்ந்துகொண்டாலும்கூட, உங்கள் கண்களை விடாமல் துரத்தி அசதியா, அழுத்தமா, சந்தோஷமா, கோபமா என்று உங்கள் முகத்தில் மனதைத் தேடி நிற்பவள் அவள். அவள் பகல்களை மலரச் செய்யும் பிரியத்தை காற்றலையில் அனுப்பலாம்தானே?! 

அவள் புரிந்துகொள்ளப்படப் பிறந்தவள் அல்ல. நேசிக்கப்படப் பிறந்தவள். அவள் தன்னைப்பற்றி விளக்கத் தேவையில்லாத அளவுக்கு நீங்கள் அவளுக்குக் கிடைத்துவிட்டால், அவள்தான் இந்த உலகின் மிக சந்தோஷமான, ஆசிர்வதிக்கப்பட்ட பெண்!

உங்கள் வீட்டில் அப்படி ஒருத்தி இருக்கிறாளா?!

- தீபிகா (விகடன் செய்திகள் - 10.05.2016)

No comments:

Post a Comment