disalbe Right click

Sunday, March 26, 2017

விசாரணைக்கு 20 மாதம்; தீர்ப்புக்கு 22 மாதம்

Image may contain: text
விசாரணைக்கு 20 மாதம்; தீர்ப்புக்கு 22 மாதம் 
தேர்தல் வழக்கில் தான் இந்த கூத்து
பொதுவாக, எந்த வழக்கானாலும், உடனடியாக விசாரணை நடந்து, தீர்ப்பு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, அனைவருக்கும் உண்டு. ஆனால், தீர்ப்பு வழங்க, 22 மாதங்கள் எடுத்து கொண்ட தேர்தல் வழக்கு பற்றி யாருக்கு தெரியும்.
அது நடந்தது, வேறு எந்த நீதிமன்றத்திலும் அல்ல; சென்னை உயர் நீதிமன்றத்தில் தான்.
இந்த வழக்கில் விசாரணை நடந்தது, 20 மாதங்கள்; தீர்ப்புக்காக, தேதி தள்ளி வைக்கப்பட்டு, 22 மாதங்களுக்கு பின், உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சுவாரஸ்யமான வழக்கின் விவரம் இதோ:
கடந்த, 1996 சட்டசபை தேர்தலில், தி.மு.க., உடன், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்., அணி சேர்ந்தது. இந்த அணி, மகத்தான வெற்றி பெற்றது.
அப்போது, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தொகுதியில், த.மா.கா., சார்பில் போட்டியிட்டவர் வேல்துரை. இவரை எதிர்த்து போட்டியிட்டவர், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன். தேர்தலில், வேல்துரை வெற்றி பெற்றார்.
அவரின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பி.எச்.பாண்டியன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தில், 20 மாதங்களாக நடந்தது.
நீதிபதி ஜெயசிம்ம பாபு, வழக்கை விசாரித்தார். 1996 ஜூன் 24ம் தேதி, தேர்தல் வழக்கு தொடரப்பட்டது. 1998 பிப்., 24ம் தேதி, விசாரணை முடிந்தது; தீர்ப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டது.இந்த வழக்கில், 1999 டிச., 29ம் தேதி, தீர்ப்பு வழங்கப்பட்டது.
பி.எச்.பாண்டியன் தொடர்ந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, 22 மாதங்களுக்கு பின், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் வழக்கில், விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இவ்வளவு மாதங்கள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டது,
இந்த வழக்கில் தான்.தீர்ப்பு வழங்கியதற்கு, 22 மாதங்களானது மட்டுமல்லாமல், தீர்ப்பின் நகல் வழங்குவதற்கும், 11 மாதங்கள் எடுத்து கொள்ளப்பட்டது தான், முக்கியமான விஷயம்.
உயர் நீதிமன்றத்தில், தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பி.எச்.பாண்டியன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த, நீதிபதிகள் லகோத்தி, அசோக் பன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', 2001 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.பி.எச்.பாண்டியன் தரப்பில், மூத்த வழக்கறிஞர் சிவசுப்ரமணியம் ஆஜராகி, ''22 மாதங்களுக்கு பின், உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது; தீர்ப்பு எழுதும் போது, நாங்கள் எழுப்பிய வாதங்கள் பரிசீலிக்கப்படாமல் இருக்கலாம்,''என்றார்.
'இந்த ஒரு காரணத்திற்காகவே, உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து விட்டு, புதிதாக விசாரிக்கும்படி திருப்பி அனுப்பலாம்' என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதற்கு, மூத்த வழக்கறிஞர், ''மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு அனுப்புவதால், எந்த பலனுமில்லை; அடுத்த தேர்தலும் நடந்து முடிந்து விட்டது,'' என்றார்.
இந்த வழக்கில் எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு, போதிய ஆதாரமில்லை' என கூறிய உச்ச நீதிமன்றம், சில அறிவுரைகளை உயர் நீதிமன்றத்துக்கு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:விசாரணை முடிந்து, தீர்ப்பு தேதியை தள்ளி வைத்து, 22 மாதங்களுக்கு பின், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் வழக்கில், இவ்வளவு நீண்ட கால தாமதம் செய்தது முறையற்றது. 22 மாதங்களாக தீர்ப்பு வழங்காமல் இருந்ததை, நியாயப்படுத்த முடியாது. இத்தகைய தாமதம், விமர்சனத்துக்கு வழிவகுக்கும்; அதற்கு இடம் கொடுக்கக் கூடாது.தீர்ப்பின் நகலை அளிக்கவும், 11 மாதங்களாகி உள்ளது.
உயர் நீதிமன்றத்தில், தேர்தல் வழக்கை, சாதாரணமாக அணுகுவது ஏன் என்பதை, எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தீர்ப்பின் நகல், கால தாமதமாக வழங்குவது, ஆட்சேபனைக்குரியது. இந்த விஷயத்தை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கவனிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் நாளிதழ் - 26.03.2016

No comments:

Post a Comment