disalbe Right click

Thursday, March 23, 2017

நீதிமன்ற அவமதிப்பு - வங்கி அதிகாரிகளுக்கு சிறை!


நீதிமன்ற அவமதிப்பு - வங்கி அதிகாரிகளுக்கு சிறை!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : வங்கி அதிகாரிகளுக்கு 7 நாள் சிறை

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உயர் அதிகாரிகளுக்கு, ஒரு வார சிறை தண்டனை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர் சென்ன கிருஷ்ணன்; வங்கியில் நடந்த ஊழியர் தேர்வில் மோசடி நடந்ததாக, சென்னகிருஷ்ணன் உட்பட சில ஊழியர்களுக்கு, குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது.

 ஒரே குற்றச்சாட்டு தொடர்பாக, கிரிமினல் வழக்கும், துறை ரீதியான விசாரணையும் நடந்தது. கிரிமினல் வழக்கு விசாரணை முடியும் வரை, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தடை கோரி, சென்னகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, நேரில் ஆஜராகும்படி, சென்ன கிருஷ்ணனுக்கு, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள், 'நோட்டீஸ்' அனுப்பினர். அந்த நோட்டீசுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

தடையை நீக்க கோரி, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி மனு தாக்கல் செய்தார். விசாரணை முடிந்து, உத்தரவு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி, சென்னகிருஷ்ணனை பணி நீக்கம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி உத்தரவிட்டார். 

அந்த உத்தரவில், நீதிமன்ற தடை நீக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார்.இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் கணபதி சுப்ரமணியன், என்.சுப்ரமணியன் ஆகியோருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனுவை, சென்னகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி முரளிதரன் பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல், அவசர கதியில் பணி நீக்க உத்தரவை, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். 

நீதிமன்ற உத்தரவை, வேண்டுமென்றே அதிகாரிகள் மீறியுள்ளனர். எனவே, அதிகாரிகள் இருவருக்கும், ஒரு வார சாதாரண சிறை தண்டனை, தலா, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. 

சிறை தண்டனை அனுபவிப்பதை, உயர் நீதிமன்ற பதிவுத்துறை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

நன்றி : தினமலர் நாளிதழ் -23.03.2017

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உயர் அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

- தினமலர் நாளிதழ் -26.03.2017

No comments:

Post a Comment