disalbe Right click

Monday, June 5, 2017

ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் நடவடிக்கை : உயர்நீதிமன்றம் உத்தரவு
அவமதிப்பு வழக்கில் கலெக்டர் ஆஜர்  
மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், புதுக்கோட்டை கலெக்டர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார். ஆக்கிரமிப்புகளை அகற்றத் தவறினால், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை புத்தாம்பூர் குமரேசன் தாக்கல் செய்த மனு: 
புதுக்கோட்டையில் நீர்நிலைகள், ரோடு, பொது இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர், அதிகாரிகளிடம் மனு அளித்தேன். நடவடிக்கை இல்லை. உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தேன். நீதிபதிகள், 'ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்திற்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என பிப்.,2 ல் உத்தரவிட்டனர். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) சுப்பிரமணியன், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் செந்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய (என்.எச்.ஏ.ஐ.,) திட்ட இயக்குனர் முத்துடையார் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குமரேசன் மனு செய்திருந்தார். நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு விசாரித்தது.
கலெக்டர் கணேஷ் உட்பட நான்கு அதிகாரிகள் ஆஜராயினர்.

நீதிபதிகள் உத்தரவு: 

இந்நீதிமன்றம் பிப்.,2 ல் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஆக்கிரமிப்புகளை ஜூன் 27 க்குள் அகற்ற வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கலெக்டர் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். ஜூன் 28 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.06.2017


No comments:

Post a Comment