disalbe Right click

Wednesday, June 28, 2017

ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 3
அறிவோம் ஜிஎஸ்டி: ரசீது இல்லாமல் பொருட்களை அனுப்பலாமா?
ஜாப் ஒர்க் மேற்கொள்ள சரக்குகளை ஒப்படைக்கும்போது அதற்கு உரிமையாளர் யார் ?
வரி செலுத்தும் நபரால் அனுப்பப்படும் சரக்குகள் மீது கூடுதலாக மேற்கொள்ளப்படும் பணிகள் ஜாப் ஒர்க் என்று ஜிஎஸ்டி வரையறுக்கிறது. அதாவது வேறொருவரின் சரக்குகளைக் கையாள அல்லது பிராசஸ் செய்வதற்காக வாங்கப்படுகிறது என்று பொருள் தருகிறது. ஜாப் ஒர்க் வாங்குபவர் பணியாளர் என்றும், பணி அளிப்பவர் சரக்குகளுக்குச் சொந்தக்காரர் என்றும் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் தற்போது இப்படி ஒப்படைக்கப்பட்டால் உற்பத்தி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் பணி அளிப்பவர்தான் சரக்குகளின் உரிமையாளராக இருப்பார்.
ஜாப் ஒர்க் நிறுவனங்களும் ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டுமா?
ஜாப் ஒர்க் என்பதும் சேவையின் கீழ் வருவதால் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். வேலைப் பணி பெற்றவர் அல்லது நிறுவனத்தின் லாப வரம்பு, வரி விலக்கு வரம்புக்குள் இருந்தாலும் பதிவு செய்ய வேண்டும்.
ஜாப் ஒர்க் இடத்திலிருந்து சரக்குகளை திரும்ப எடுக்கவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு?
ஜாப் ஒர்க் இடத்திலிருந்து குறிப்பிட்ட கால கெடுவுக்குள் சரக்குகள் திரும்பப் பெறப்படாவிட்டால் பணி அளிப்பவர் சரக்குகளை வெளியே அனுப்பிய அதே நாளில் அவர் விற்பனை செய்ததாக கணக்கிடப்படும். அல்லது ஜாப் ஒர்க் இடத்துக்கு அனுப்பி, அவரால் பெறப்பட்ட தேதியில் விற்பனை செய்யப்பட்டதாக கணக்கிடப்படும்.
தற்போது 14 சதவீத வரி விதிப்பில் உள்ள ஒரு பொருள் ஜிஎஸ்டியில் 18 சதவீதமாகிறது என்று வைத்துக் கொள்வோம். ஜூலை மாதத்தில் இது விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதற்கான பணத்தை முன்பணமாக ஏற்கெனவே வாங்கியிருந்தால் எத்தனை சதவீத வரி கணக்கிடப்படும்?
விற்பனைச் சரக்கும் அதற்கான ரசீதும் ஜூலை 01ம் தேதிக்கு பிறகே வழங்கப்படும் என்றால் புதிய வரி விகிதமான 18 சதவீதத்தின் அடிப்படையில் விற்பனை கணக்கு கணக்கிடப்பட வேண்டும்.
ரசீது இல்லாமல் பொருட்களை அனுப்பலாமா? அல்லது எத்தனை நாட்களில் ரசீது அளிக்க வேண்டும்?
ஜிஎஸ்டி சட்டப்படி ரசீதுகள் இல்லாமல் பொருளை அனுப்பக் கூடாது. வரி செலுத்தும் நபர் பொருட்களின் விவரம், அளவு, அதன் மதிப்பு மற்றும் அந்த மதிப்புக்கு செலுத்த வேண்டிய வரி என எல்லாவற்றையும் கணக்கிட்டு உடனடியாக ரசீதுகள் அளிக்க வேண்டும். பொருட்களை அனுப்பும்போது உடனடியாகவோ அல்லது டெலிவரி பெறுபவருக்கு பொருட்கள் கிடைக்கும்போதோ ரசீது அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தொடர்ச்சியாக அளித்துவரும் சேவைகளுக்கு ரசீதும் உடனடியாக அளிக்க வேண்டுமா?
சேவைகள் தொடர்ச்சியாக அளிக்கும் பட்சத்தில், அதற்கான ஒப்பந்தத்தில் பணம் பெறுவதற்கான தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். எனவே பணத்தை தரும் தேதிக்கு முன்னரோ அல்லது பிறகோ ரசீது வழங்க வேண்டும். ஒப்பந்தத்தில் பணம் பெறுவதற்கான தேதி குறிப்பிடவில்லை என்றால், ஒவ்வொரு முறையும் சேவை அளித்த பின்னர் வழங்கலாம். அல்லது பணம் பெறும் முன்னர் அல்லது பெற்ற பிறகு அளிக்கலாம். ஆனால் சேவைகளை அளிப்பவர் தனக்கு பணம் வருகிறதோ இல்லையோ இதற்காக குறிப்பிடப்பட்டுள்ள கால இடைவெளியில் ரசீதுகளை வழங்க வேண்டும்.
வரித் தாக்கலுக்கு அளிக்கும் விவரங்கள் பொருந்தாமல் இருந்தால் என்ன செய்வது?
அளித்துள்ள பணத்துக்கு ஈடாக சரக்குகளின் மதிப்பு குறைவாக இருந்தாலோ அல்லது அதிகமாக இருந்தாலோ அது குறித்து அதை விற்பனை செய்தவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இது அவரது மாதாந்திர வரிக் கணக்கில் திருத்தப்பட வேண்டும். விற்பனையாளர் அளிக்க வேண்டிய நிலை இருந்தால், மாதத்தின் அடுத்த மாதம் அவர் செலுத்த வேண்டிய தொகையுடன் இது கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்படும். அவரது மாதாந்திர நிலுவைத் தொகையுடன் சேர்த்து இந்த தொகைக்கு வட்டியுடன் செலுத்த வேண்டும். ஆனால் வர்த்தகத்தை முறையாக மேற்கொள்ளும்பட்சத்தில் விவரங்கள் பொருந்தாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
வரி செலுத்தாத மூன்றாவது நபருக்கு சரக்குகளை அனுப்பினால் இன்புட் டாக்ஸ் கிரெடிட் யாருக்கு கிடைக்கும்?
வரி செலுத்தும் நபர் கேட்டுக் கொண்டதன் பேரில் மூன்றாவது நபருக்கு சரக்குகள் அனுப்பினால், பதிவு செய்துள்ள நபர் அல்லது நிறுவனம் பெற்றதாகவே எடுத்துக் கொள்ளப்படும். அல்லது யாருக்காக மூன்றாவது நபருக்கு சரக்கு அளிக்கப்பட்டதோ அவரது பெயரில் இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்கும்.
தள்ளுபடி சரக்குகளுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்குமா?
தள்ளுபடி சரக்குகளின் மீது இன்புட் டாக்ஸ் கிரெடிட் கேட்க முடியாது. தவிர பரிசாக கிடைத்த அல்லது இலவச மாதிரி பொருட்களுக்கு இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்காது. முறையாக வாங்கப்பட்ட சரக்குகள் பல்வேறு காரணங்களால் அழிந்து அல்லது தொலைந்து போனாலும் இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற முடியாது.
நிறுவனத்தின் கட்டுமான பணிக்காக சரக்குகள் வாங்கினால் இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்குமா?
அசையாச் சொத்துகளை கட்டுவதற்கு சரக்குகள் வாங்கினால் இன்புட் டாக்ஸ் கிரெடிட் கிடைக்காது. ஆனால் பொருத்தப்பட்ட கருவிகள், இயந்திரம் வாங்குகிற பட்சத்தில் இன்புட் டாக்ஸ் கிரெடிட் எடுக்கலாம். நிலத்துக்கும் கட்டிடத்துக்கும் பெற முடியாது.
வரி தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதில் திருத்தங்கள் மேற்கொள்ள முடியுமா?
ஜிஎஸ்டியில் தனிப்பட்ட ஒவ்வொரு பரிவர்த் தனைக்கும் வரி தாக்கல் செய்யப்படுகிறது என்பதால், திருத்தப்பட்ட வரி தாக்கலுக்கு தேவை ஏற்படாது. ஆனால் பற்று/வரவு குறித்த விவரங்கள் மாற்றப்பட வேண்டும் என்றால் வரி தாக்கலிலும் மாற்றம் தேவைப்படும். ஆனால் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வரி தாக்கலில் திருத்தங்கள் செய்வதற்கு பதிலாக மாற்றப்பட வேண்டிய விவரங்களை மட்டும் மாற்றிக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
தொடரும்..
- ஆடிட்டர். கோபால் கிருஷ்ண ராஜூ
 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 25.06.2017

No comments:

Post a Comment