disalbe Right click

Tuesday, July 4, 2017

டேப்லெட் வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?

டேப்லெட் வாங்கும் போது கவனிக்க வேண்டியது என்ன?
ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட சந்தையில், ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு தொழில்நுட்பச் சாதனம் டேப்லெட். இது மக்களால் பெரிதும் விரும்பப்படுவதற்குக் காரணம், எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில், எளிமையாக வடிவமைக்கப்பட்டிருப்பதுதான். ஸ்மார்ட்போனில் உள்ள வசதிகளும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில், லேப்டாப் அளவுக்கு விலை அதிகமாகவும் இருக்கக்கூடாது என நினைப்பவர்கள், தாராளமாக டேப்லெட்டைத் தேர்வு செய்யலாம்.
டேப்லெட் வாங்குவதற்கு முன்...
தேவைகளை அறிந்து அதற்கேற்ப டேப்லெட்டைத் தேர்ந்தெடுங்கள். டேப்லெட்கள் பெரும்பாலும் வாசிப்பதற்கானவை, விளையாடுவதற்கானவை, அலுவலக வேலைகளுக்கானவை, குழந்தைகளுக்கானவை என ஒரு குறிப்பிட்ட தேவையை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வாசிப்புத் தேவைக்காகத் தயாரிக்கப்படும் டேப்லெட்களின் திரையின் தரம் சற்று மேம்பட்டு இருக்கும். ஆனால், அவை விளையாடுவதற்காகப் பயன்படுத்தப்படும் டேப்லெட்களின் ரேம் மற்றும் பிராசஸரைக் கொண்டிருக்காது. குழந்தைகளுக்கு எனத் தயாரிக்கப்படும் டேப்லெட்களின் பயன்பாடு, அவர்களுடைய கற்றல்திறனை மேம்படுத்தும் வகையில் மட்டுமே இருக்கும். அவற்றில் மற்ற வேலைகளைத் திறம்படச் செய்யமுடியாது. எனவே, உங்களின் தேவையைப் பொறுத்து டேப்லெட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
திரை : டேப்லெட் வாங்க நினைப்பவர்கள் முதலில் அதன் திரையின் (ஸ்க்ரீன் சைஸ்) அளவையும், தரத்தையும் கவனத்தில்கொள்ள வேண்டும். 7 இன்ச் முதல் 10 இன்ச் வரை திரையின் அளவு கொண்ட டேப்லெட்கள் சந்தையில் கிடைக்கின்றன. உங்கள் தேவைக்கேற்ப திரையின் அளவை முடிவு செய்யலாம். டேப்லெட் வாங்கும்போது திரையின் PPI (Pixels per Inch) அளவைத் தெரிந்துகொள்வது அவசியம். இந்த அளவு அதிகமாக இருந்தால், காட்சிகள் தெளிவாக இருக்கும். PPI-ன் அளவு அதிகமாக இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், குறைந்தபட்சம் 250 பிக்ஸலாவது இருக்க வேண்டும்.
பேட்டரி : டேப்லெட் இயங்கத் தேவையான சக்தியை அளிப்பது பேட்டரிதான். அதுவும் குறிப்பாக டேப்லெட்டில் திரையின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால், அதிக பேட்டரித் திறன் இருக்கும் டேப்லெட்டை வாங்குவது நல்லது.
சிம் கார்டு வசதி : டேப்லெட்களைப் பொதுவாக சிம் கார்டு பயன்படுத்தக்கூடியவை, சிம் வசதி இல்லாதவை என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தற்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான டேப்லெட்கள், சிம் கார்டு பயன்படுத்தும் வசதியைக் கொண்டிருக்கின்றன. ஆனால், சிம் இல்லாத டேப்லெட்களின் விலையைவிட இவற்றின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும். சிம் வசதி இல்லாத டேப்லெட்கள் பொதுவாகக் குறைந்த விலைக்கும், அதே சமயத்தில் அதிக வசதிகளுடனும் கிடைக்கும்.
இயங்குதளம் : டேப்லெட்களைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு, விண்டோஸ், ஐ.ஓ.எஸ் என அனைத்து வகையான இயங்குதளங்களிலும் கிடைக்கின்றன. ஆனால், ஆண்ட்ராய்டு டேப்லெட்களே சந்தையில் அதிகமாகக் கிடைக்கின்றன. சாதாரண உபயோகத்திற்கு ஆண்ட்ராய்டு டேப்லெட்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவற்றின் விலையும் குறைவு. மற்றபடி, அலுவலக உபயோகத்திற்கு என்றால் விண்டோஸ் அல்லது ஐ.ஓ.எஸ் இயங்குதளங்களில் இயங்கும் டேப்லெட்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
பிராசஸர், ரேம் மற்றும் மெமரி : டேப்லெட்டைத் தேர்வு செய்யும்போது அதன் ரேம் மற்றும் இன்டர்னல் மெமரி ஆகியவை அதிகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒரு சில டேப்லெட்களில் மெமரியை நீட்டிக்கும் வசதி இருப்பதில்லை. குறைந்தபட்சமாக 2 ஜி.பி ரேம் இருக்குமாறு வாங்கினால் சிறப்பு. கேமிங் பயன்பாட்டுக்காக எனில் கிராபிக்ஸ் கார்டுகள், பிராசஸர் பொருத்தப்பட்ட டேப்லெட்டைத் தேர்ந்தெடுக்கலாம்.
எடை குறைவான டேப்லெட் வாங்கினால், எங்கும் எளிதாக எடுத்துச்செல்ல முடியும். டேப்லெட்டில் உள்ள கேமராவுக்குப் பொதுவாக அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்பதால், அதில் குறைவான கவனம் செலுத்தினால் போதும்.
மடிக்கணினியாகவும், அதில் இருந்து தனியே பிரித்தெடுத்து டேப்லெட்டாகவும் பயன்படுத்தும் வகையில் சில தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. நீங்கள் வாங்கும் டேப்லெட்டில் பென் டிரைவ் பயன்படுத்த உதவும் OTG வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். HDMI போர்டுகள் கொண்ட டேப்லெட்கள், மீடியா அவுட்புட் செய்வதற்கு வசதியாக இருக்கும்.
படங்கள் வரைய, எழுத எனில், ஸ்டைலஸ் எனப்படும் பேனா போன்ற உபகரணம் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள டேப்லெட்களை வாங்கலாம்.
மு.ராஜேஷ்

நன்றி : நாணயம் விகடன் - 09.06.2017

No comments:

Post a Comment