disalbe Right click

Sunday, November 19, 2017

ஆளுநரின் அதிகாரங்கள்

அதிகாரிகளை ஆளுநர் கலந்தாலோசிக்க அதிகாரம் இருக்கிறதா?
அண்ணா கேட்டார், “ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநரின் எதற்கு?” என்று! ஆனால், அரை நூற்றாண்டாகிவிட்டாலும் அந்தப் பதவியை ஒழித்தபாடில்லை. சுதந்திரத்துக்குப் பின் தொடர்ச்சியாக காங்கிரஸே மாநிலங்களிலும் ஆட்சியிலிருந்த சூழல் பெரிய அளவில் 1967 தேர்தலில் மாறியது. ஆனால், காங்கிரஸ் விடவில்லை; எட்டு மாநிலங்களில் புதிய அரசுகள் பதவியிலிருந்து விரட்டப்பட்டன. இதற்குப் பின்னரே மாநிலங்களின் உரிமைகள் அரசமைப்புச் சட்டத்தில் முறையாகப் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதைப் பல கட்சிகளும் உணர ஆரம்பித்தன. எனவே மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று பேச ஆரம்பித்தனர். இதற்கு முன்னரே 1959-ல் .எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் கேரளாவில் அமைந்த கம்யூனிஸ்ட் கட்சி அரசு காங்கிரஸால் கலைக்கப்பட்டது. இந்தியாவில் நடந்த முதல் ஆட்சிக் கலைப்பு இது.
மாநில சுயாட்சி
அண்ணாவுக்குப் பிறகு கருணாநிதியும்மாநில சுயாட்சிக்காக வலுவாகக் குரல் கொடுத்தார். அவர் தலைமையிலான திமுக அரசு மத்திய அரசு - மாநில அரசு இடையிலான உறவு, அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப் பரிந்துரைத்தது ராஜமன்னார் குழு. “ஒரு ஆளுநர் மத்திய அரசின் ஏஜென்டாக செயல்படக் கூடாது; மாநில அமைச்சரவை சட்ட மன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் செயல்படும்போது அந்த மாநில ஆட்சியைக் கலைக்க முற்படக் கூடாதுஎன்றெல்லாம் பரிந்துரைத்திருந்தாலும் ஆளுநர் பதவியை ரத்துசெய்ய வேண்டும் என்று ராஜமன்னார் குழு பரிந்துரைக்கவில்லை.
தொடர்ந்து, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்குவது பற்றி ஆராய்வதற்காக இந்திரா காந்தியால் அமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா ஆணையமும் ஆளுநர் பதவியை ரத்துசெய்வதுகுறித்துப் பேசவில்லை. அதன் பின்னர் பல குழுக்களும் அரசமைப்புச் சட்டத்தைச் சீராய்வதற்காக அமைக்கப்பட்டன. அக்குழுக்களும் ஆளுநர் பதவியின் மாண்பு காக்கப்பட வேண்டும் என்றும், அந்தப் பதவியை வகிப்பவரை மத்திய அரசு மனம்போல மாற்றம் செய்வதும் பதவி நீக்கம் செய்வதும் கூடாது என்றுதான் குறிப்பிட்டிருந்தன.
மாற்றிப் பேசும் பாஜக
காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடு தொடர்பாக நிறையவே விமர்சித்துப் பேசியிருக்கிறது பாஜக. ஆனால், பின்னர் அக்கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஆளுநர் நியமனங்களில் தன் விருப்பப்படியே செயல்பட்டது. பல மாநிலங்களில்காவிப் பாதுகாவலர்களே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு போன்ற ஒரு பெரிய மாநிலத்துக்கு நிரந்தர ஆளுநர் இல்லாமல் ஓராண்டு காலம் ஒரு தூரத்திய மாநிலத்தின் ஆளுநரே பொறுப்பு ஆளுநராகப் பதவி வகித்துவந்தார்.
அரசமைப்புச் சட்டத்தில் ஆளுநராக ஒருவர் பதவி வகிப்பதற்கான தகுதிகள் ஏதும் வரையறுக்கப்படவில்லை. 35 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன் எவரேனும் ஆளுநர் பதவி வகிக்க முடியும். ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு மாநிலத்திலும் தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற விழைந்தவர்களுக்கும், மாநிலங்களில் நடைபெற்ற அரசியல் பலப்பரீட்சையில் சமாளிப்பதற்காகவும் ஆளுநர் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளன. மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் கட்சி மத்திய அரசுக்கு எதிரான கொள்கைகளைக் கடைப்பிடித்துவந்தால் அவற்றைப் பலவீனப்படுத்தவே ஆளுநர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
அரசமைப்புச் சட்டத்தில் (பிரிவு 153) ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பிரிவு 163-ன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை ஆளுநருக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆலோசனைகளை அவர் கட்டாயமாக ஏற்றுக்கொள்வதைப் பற்றி சட்டம் மௌனிக்கிறது. அதேசமயத்தில், 1976-ல் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டபோது, “குடியரசுத் தலைவர் மத்திய அமைச்சரவையின் ஆலோசனைகளுக்குக் கட்டுப்பட்டவர்என்று சட்டம் திருத்தப்பட்டது.
என்னென்ன அதிகாரங்கள்?
ஒரு மாநில அரசு பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தும் ஆளுநரின் பெயராலேயே வெளியிடப்படுகின்றன. அலுவல் விதிகளின்படி அனைத்துக் கோப்புகளும் ஆளுநருக்கு அனுப்பப்பட மாட்டா. ஆனால், ஆளுநரின் உத்தரவு தேவைப்படும் கோப்புகள் சம்பந்தமாக ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விளக்கத்தைக் கேட்பதற்கு சட்டத்தில் தடையில்லை. அதேபோல, தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அதிகாரிகளை ஆளுநர் சந்திக்கவும் சட்டத்தில் எவ்விதத் தடையும் இல்லை. மேலும் ஒவ்வொரு கோப்பும் தலைமைச் செயலகத்திலிருந்து ஆளுநரின் ஒப்புதலுக்குச் செல்லும்போதும் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் நேரில் சென்று விளக்கமளிக்கக் கடமைப்பட்டவர்கள்.
இதைத் தாண்டி அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமலேயே சில விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய விஷயங்களில் அவர் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதற்கும் சட்டத்தில் தடையில்லை. மேலும், நடைமுறை விதிகளின்படி அவர் மத்திய அரசுக்கு ஒரு மாநில அரசின் செயல்பாட்டைப் பற்றி அறிக்கைகளை அனுப்புவதற்குக் கடமைப்பட்டவர். ஒரு மாநில அமைச்சரவை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட்டால், அந்த அரசைக் கலைப்பதற்குக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநரால் பரிந்துரைக்கவும் முடியும். முதலமைச்சரையும், மற்ற அவரது அமைச்சரவை சகாக்களையும் ஆளுநர்தான் நியமிக்கிறார். அவரது நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அமைச்சரவைக்கு ஒரு மூத்த நிர்வாகி என்ற முறையில் தக்க ஆலோசனை வழங்க அவர் கடமைப்பட்டவர்.
அர்த்தமற்ற சர்ச்சைகள்
தமிழ்நாட்டில் பதவியேற்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சமீபத்தில் கோவையில் அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டது சர்ச்சையானது. என்னைப் பொறுத்தளவில் இந்தச் சர்ச்சைகள் எல்லாம் அர்த்தமற்றவை. ஏனென்றால், பலவீனமான முதல்வர்கள் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ஆளுநர்கள் அதிகாரம் ஓங்குவது எப்போதுமே நடந்துகொண்டுதான் இருக்கிறது; அதேபோல, பலமான முதல்வர்கள் ஆட்சிக் காலத்தில் ஆளுநர் பதவி வெற்று அலங்காரப் பதவியாக இருப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
மக்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆளுநர்கள் மத்திய அரசின் முகவர்களாகவே செயல்பட்டுவருகின்றனர். அவர்களது செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக இருந்தால் அவற்றை நீதிமன்றங்கள் ரத்துசெய்ய முடியும். நளினி மற்றும் மூவரின் கருணை மனுவை அமைச்சரவையின் ஆலோசனையைப் பெறாமலேயே தள்ளுபடிசெய்த ஆளுநர் பாத்திமா பீவியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்ததை இங்கு நினைவுகூறலாம். அப்படி இல்லாத சூழலில் இத்தகைய சர்ச்சைகள் வெறும் ஊடக விவாதங்களோடு முடிந்துவிடும்!
- கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), உயர் நீதிமன்றம், சென்னை
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 20.11.2017

No comments:

Post a Comment