disalbe Right click

Saturday, April 28, 2018

நீதிமன்றத்தில் ஆவண நகல்களைப் பெற.....

நீதிமன்றத்தில் உள்ள ஆவண நகல்கள்
கடந்த வாரத்தில் ஒரு நாள், எனது நண்பரின் கடைக்குச் சென்றிருந்தேன். அவர் போட்டோ ஸ்டுடியோ ஒன்று வைத்து நடத்தி வருகிறார். அத்துடன் ஜெராக்ஸ் கடையையும் இணைத்து நடத்தி வருகிறார். நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர் ஜெராக்ஸ் எடுக்க வந்திருந்தார். எனது நண்பர் அவர் கொண்டு வந்த ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது அவற்றை நான் கவனித்ததில் அது ஒரு நீதிமன்றத்தின் உத்தரவு நகல் என்பதையும், அவரை கவனித்ததில் மிகவும் ஏழ்மையானவர் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
எவ்வளவு செலவு?
  • அதைப் பெறுவதற்கு எவ்வளவு செலவழித்திருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆசையாக இருந்தது.
  • ஏனென்றால், எனது வழக்கில் பார்ட்டி இன் பெர்சன் ஆக ஆஜராகி அந்த வழக்கின் உத்தரவு ஆவணங்களை அந்த சமயத்தில்தான் நான் பெற்றிருந்தேன்.
7 பக்க உத்தரவு நகலைப் பெற்றுத் தருவதற்கு வழக்கறிஞர் கட்டணம் ரூ.1300
  • இதற்குள் ஜெராக்ஸ் எடுத்து முடிக்கப்பட்டு அதற்கு கூலியாக எனது நண்பர் அவரிடமிருந்து 14 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டார்.
  • அங்கிருந்து கிளம்பிய அவரிடத்தில், யார் மூலமாக இந்த உத்தரவு நகலைப் பெற்றீர்கள்?, இதனைப் பெறுவதற்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்று கேட்டேன்.
  • அவர் அவரது வழக்கறிஞர் மூலமாக பெற்றதாகவும், அதற்காக அவருக்கு 1300 ரூபாய் கொடுத்ததாகவும் வருத்தத்தோடு கூறினார்.
  • அதிர்ச்சி அடைந்தேன் நான்.
  • வழக்கு சம்பந்தமான ஆவண நகல்களை நாமே மனுச் செய்து பெற முடியும் என்பதையும், அதற்கு செலவு அதிகபட்சம் 50 ரூபாய்தான் ஆகும் என்பதையும் அவரிடத்தில் எடுத்துக் கூறினேன்.
  • இது பற்றி ஒன்றுமே தனக்குத் தெரியாது என்றும், இது போன்ற ஒரு சூழ்நிலை இனி ஏற்பட்டால் என்னை சந்தித்து சட்ட ஆலோசனை பெற்றுக் கொள்கிறேன் என்றும் கூறி எனது முகவரியை பெற்றுச் சென்றார்.
  • நமது மக்கள் சட்ட அறிவு இல்லாத காரணத்தால், எவ்வளவு நஷ்டம் அடைகிறார்கள் என்ற கவலையையும், நமது மாநிலத்தில் சட்ட விழிப்புணர்வு இலவச முகாம்களை நடத்தி வருகின்ற ”லா பவுண்டேஷன், சென்னை”-யின் நிறுவனர் நண்பர் சரவண அர்விந்த் போல, எங்கள் பகுதியிலும் இலவச சட்ட விழிப்புணர்வு நடத்த வேண்டிய அவசியத்தையும் அந்த சம்பவம் எனக்கு ஏற்படுத்தியது.
  • மேலும், இந்த பதிவை போடத் தூண்டியது அந்த நிகழ்ச்சிதான்!
நகல்களை எந்த வழிகளில் பெறலாம்?
  • பொதுவாக, அரசு அலுவலகங்களில் உள்ள ஆவணங்களின் நகலை பொதுவாக நாம் இரண்டு வழிகளில் பெறலாம்.
  • 1. தகவல் அறியும் உரிமைச் சட்டம்
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)ன் கீழ், பத்து ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட மனு மூலம் நமக்குத் தேவையான ஆவண நகல்களைக் கேட்டு, அதற்கு அவர்கள் சொல்கின்ற கட்டணத்தை மாவட்ட கருவூலம் மூலம் செலுத்தி தபால் மூலம் அவைகளைப் பெறலாம்.
  • 2. இந்திய சாட்சியச் சட்டம்
  • இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 76ன் கீழ் ஐந்து ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட மனு மூலம் நமக்குத் தேவையான ஆவண நகல்களைக் கேட்டு, அதற்கு அவர்கள் சொல்கின்ற கட்டணத்தை செலுத்தி, நேரிடையாகவும், தபால் மூலமாகவும் அவைகளைப் பெறலாம்.
நீதிமன்றங்களில் உள்ள ஆவண நகல்களைப் பெற......
  • மேற்கண்ட முறைகளில் எவரும், பதிவுத்துறையில் மற்றும் நீதிமன்றத்தில் உள்ள ஆவண நகல்களைப் பெற முடியாது.
  • பதிவுத்துறைக்கென்றும், நீதிமன்றத்திற்கென்றும் சில வழிமுறைகளை நமது அரசு வகுத்து வைத்து உள்ளது.
  • அதன்படிதான் அவர்களிடமிருந்து நாம் ஆவண நகல்களைப் பெற முடியும்.
  • இதனைப் பெறுவதற்கு ஆங்கிலத்தில் C.A என்று ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்கிறார்கள். அதன் விரிவான வார்த்தை Copy Application ஆகும்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
  • நீதிமன்றத்தில் உள்ள ஆவண நகல்களை அந்த வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத மூன்றாவது நபர்கூடப் பெறலாம்.
  • ஆனால், எந்த வழக்கின் ஆவண நகல்கள் உங்களுக்கு வேண்டுமோ, அந்த வழக்கின் எண், அந்த வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதிகள் பெயர்கள் நமக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
  • அவற்றை பச்சைக் கலர் பேப்பரில் (கான்கிரிட் பேப்பர்) எழுதி, அதில் 20 ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டி கையொப்பமிட்டு, நீதிமன்றம் துவங்கும் நேரத்தில், நீதிமன்ற ஊழியர் பிராது வாங்கும் சமயத்தில் அவரிடத்தில் அதனை கொடுக்க வேண்டும்.
  • ஆவண நகல்கள் அவசரமாக வேண்டும் என்றால், அதில் அவசரம் என்றோ அல்லது ஆங்கிலத்தில் EMERGENT என்றோ எழுதி மேற்கொண்டு 2 ரூபாய்க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டி கொடுக்க வேண்டும்.
மாதிரி மனு 


நடுவர் என்ன செய்வார்?
  • அதில் நடுவர் அவர்கள் தன்னுடைய சுருக்குக் கையெழுத்து இட்டு கீழே அமர்ந்துள்ள MC என்று சுருக்கமாக சொல்லப்படுகின்ற Magistrate Clerkகிடம் கொடுப்பார்.
  • அவர் டவாலியிடம் அதனை அளிப்பார்.
  • டவாலி அதனை RC எனப்படும் Record Clerkகிடம் கொடுப்பார்.
  • Record Clerk அதனை பதிவு செய்வார்.
  • இது நீதிமன்றம் துவங்கிய சிறிது நேரத்திற்குள் நடந்து முடிந்துவிடும்.
  • நடுவர் அனுமதி கொடுத்திருக்கிறாரா? இல்லையா? என்பது அங்கு நாம் இருந்தால், உடனடியாக நமக்குத் தெரிந்துவிடும்.
  • நம்மை அழைக்க மாட்டார்கள். நாமாகத்தான் இதனை இருந்து அறிந்து கொள்ள வேண்டும்.
  • வேறு அவசர வேலைகள் இருந்தால் அன்று அல்லது மறுநாள் மாலை நேரத்தில் நீதிமன்றம் சென்றும் அதனை அறிந்து கொள்ளலாம்.
நகல் வழங்க நடுவர் அனுமதி கொடுத்தே ஆகவேண்டுமா?
  • ஆவண நகல்கள் கேட்டு விண்ணப்பித்தவருக்கு அதைத் தருவதில் நடுவருக்கு இயலாமை இருந்தால், அதனை உங்கள் மனுவின் பின்புறத்தில் எழுதி கொடுத்துவிடுவார்.
  • அந்த மனுவை நீங்கள் Record Clerkகிடம் இருந்து முறைப்படி பெற்றுக் கொள்ளலாம். மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
  • உதாரணமாக குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 156(3)ன் கீழ் தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்றில் காவல்துறை ஆய்வாளர் அவர்களின் விசாரணை அறிக்கையின் நகலை நான் கேட்டு Copy Application செய்திருந்தேன்.
  • அந்த அறிக்கையை காவல் ஆய்வாளர் அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இரண்டு நாட்களுக்குள் Copy Application நான் செய்ததால் அதனை வழங்க இயலாது என குறிப்பிட்டு எனது மனுவை நடுவர் அவர்கள் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
  • சில மாதங்கள் கழித்து மீண்டும் விண்ணப்பித்து அவைகளைப் பெற்றேன்.
நடுவர் அனுமதி கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்?
  • நடுவர் அனுமதி கொடுத்தால், கேஸ்கட்டுகளை வைத்து பராமரிக்கும் அலுவலரை நீங்கள் அணுக வேண்டும்.
  • அவர் ஒரு இரண்டு நாட்கள் கழித்து உங்களை வரச்சொல்லுவார்.
  • அந்த நேரம் சென்றால், நகல் எடுத்து வைக்கப்பட்டுள்ள ஆவணத்திற்கான (ஜெராக்ஸ்) செலவை, உங்களிடம் இருந்து மெமோவில் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டுவதன் மூலமாக, பெற்றுக் கொள்வார்.
  • அதன் பிறகு அந்த ஆவண (அனைத்து) நகல்களில் அவர் கையொப்பம் இட்டு, நடுவர் அவர்களிடமும் கையொப்பம் பெற்று அவற்றை உங்களுக்கு அளிப்பார்.
  • அவைகள் உண்மை நகலாகும்.
மாதிரி மெமோ

அமர்வு நீதிமன்றங்களில் நகல் பெற வேண்டுமென்றால், நகல் கண்காணிப்பாளர் Copy Superintendent அவர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

*******************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.04.2018 

No comments:

Post a Comment