disalbe Right click

Saturday, April 7, 2018

காவல் வட்ட ஆய்வாளருக்கு சட்ட அறிவிப்பு

வழக்கின் சாராம்சம் என்ன?
நான் சார்ந்துள்ள சங்க நிர்வாகிகள் 19.07.2015 அன்று நடைபெற்ற மகாசபைக் கூட்டம் குறித்து, போலி ஆவணம் தயாரித்துள்ளது பற்றியும், அதனை உண்மையானது போல பயன்படுத்திக் கொண்டிருப்பது பற்றியும், தகுந்த ஆவண சாட்சியங்கள் மூலம் எடுத்துக் கூறி, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய திருத்தங்கல் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று, குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 156(3)ன் கீழ்,  பார்ட்டி இன் பெர்சன் ஆக, குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், சிவகாசியில் வழக்கு ஒன்று தொடுத்திருந்தேன். நீதிமன்ற நடுவர் அவர்கள், எனது குற்றச்சாட்டுகள் குறித்து இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்கள். 
போலி ஆவணம் பற்றி.....
ஷை சங்க நிர்வாகிகள் தயாரித்த போலி ஆவணத்தில் பல நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கையெழுத்துக்கள் செய்திருந்தார்கள். கூட்டத்திற்கு வராத உறுப்பினர்களின் பெயர்கள் வரிசையாக அந்த (கூட்ட நடவடிக்கைக் குறிப்பேடு) போலி ஆவணத்தில் எழுதப்பட்டு இருந்தது. மேலோட்டமாக நான் ஆராய்ந்து பார்த்ததிலேயே 40 கையெழுத்துக்கள் போலியாக இருந்தது.  அந்த போலி கையெழுத்துகளின் தொகுப்பு தங்களது பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



திருத்தங்கல் காவல் வட்ட ஆய்வாளர் அவர்களின் அறிக்கை 
திருத்தங்கல் வட்டக் காவல் ஆய்வாளர் அவர்கள் என்னிடமும், அவர்களிடமும் விசாரணை நடத்தினார். ஏற்கனவே என்னிடம் உள்ள ஆவணங்களை நான் கோர்ட்டில் தாக்கல் செய்து விட்டதால், நான் புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது,  அந்த மகாசபைக் கூட்டத்தில் ஆண்டு வரவு செலவு கணக்குகள் அடங்கிய (பேலன்ஸ் ஷீட்) ஒரு ஆவணம் கிடைத்தது. மொத்தமுள்ள 7 தாள்களில், நிர்வாகிகள் கையெழுத்து போட வேண்டிய 6 தாள்களில் ஒரு இடத்தில்கூட, நிர்வாகிகளின் கையொப்பம் இல்லாமல் அது இருந்தது.
சங்கத்தின் பைலா சொல்வது என்ன?
எங்களது சங்க பைலாவை பொருத்த அளவில், ஆடிட்டர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து கொடுத்த பிறகு, சங்க நிர்வாகிகள் அதனை நிர்வாக சபையில் வைத்து ஒப்புதல் பெற்று, அதன்பிறகு நடைபெறுகின்ற மகாசபையில் வைத்து உறுப்பினர்களிடையே அந்த வரவு செலவுகள் குறித்து விவாதம் செய்து அவர்களின் ஒப்புதல் பெற்று தீர்மானம் இயற்றப்பட வேண்டும். அதன் பிறகு அந்த ஆவணங்கள் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் ஒப்புதல் பெற சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
மாவட்டப் பதிவாளர் அவர்களும் உடந்தை
மேற்கண்ட நடவடிக்கைகளில் அந்த வரவு செலவு அறிக்கை (சுமார் ஒன்பது கோடி ரூபாய்) நிர்வாகிகளின் கையெழுத்து இல்லாமலேயே பயணித்திருக்கிறது. தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டப் பிரிவு மற்றும் விதிகளின்படி இது மோசடி குற்றமாகும். இதனை கண்டு கொள்ளாமல் மாவட்டப்பதிவாளர் அவர்களும் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்திற்கு எதிராக, சட்டவிரோதமாக  அதனை கோர்வை செய்துள்ளார்.
குற்றம் சம்பந்தமான ஆவணங்களை வாங்க ஆய்வாளர் மறுப்பு
இதனை வட்டக் காவல் ஆய்வாளரிடம் தெரிவித்து அதன் நகல்களை சமர்ப்பித்தேன் அவர் அதனை வாங்க மறுத்ததால் அதனை பதிவுத்தபால் மூலம் அவருக்கு அனுப்பி வைத்தேன். அதனை பெற்றுக் கொண்ட அவர், சங்க நிர்வாகிகளை காப்பாற்ற வேண்டும் என்ற தவறான நோக்கத்தோடு, குற்றங்களை மறைத்து, தனது ஆய்வு அறிக்கையை உருவாக்கி, அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன் நகல்கள் கீழே காணலாம்.




இந்த அறிக்கையில் வட்ட ஆய்வாளர் அவர்கள் என்னிடமிருந்து கடிதம் மூலமாக பெற்றுக் கொண்ட ஆண்டு வரவு செலவு அறிக்கையினைப் பற்றி எந்த ஒரு கருத்தும் சொல்லவில்லை. அதனை பெற்றுக் கொண்டதாகக் கூட அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. 
சங்க நிர்வாகிகள் மூன்று பேர்களிடம் மட்டுமே இரண்டு கையெழுத்து போட்டது பற்றி விசாரித்துள்ளார். அவர்களும் இரண்டு கையெழுத்துகள் போட்டதை ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால், குற்றம் நடைபெற்றுள்ளது, அவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்யலாம் என்பதை நடுவரிடம், வட்ட ஆய்வாளர் அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், குற்றம் கூறிய என்மீதே குற்றம் சுமத்தியிருக்கிறார். உண்மைக்குப் புறம்பான சங்கதியை தாக்கல் செய்துள்ளதாக தனது அறிக்கையின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.  
குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற எழுதப்பட்ட காவல் ஆய்வு அறிக்கை
என்னால் ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற காவல் ஆய்வாளர் அவர்கள், செய்யப்பட்ட குற்றத்தை மறைத்து, பல பொய்யான தகவல்களை இணைத்து, குற்றம் கூறிய என்மீதே குற்றம் சுமத்தியுள்ளார். இது இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 219ன் கீழ் குற்றமாகும். இதனால், வட்ட ஆய்வாளர் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடிவு செய்துள்ளேன். அவருக்கு சட்ட அறிவிப்பும் அனுப்பிவிட்டேன். அந்த சட்ட அறிவிப்பு நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




வட்ட ஆய்வாளர் அவர்கள் என்ன பதில் தரப்போகிறார்? காத்திருப்போம்.
*************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.04.2018


No comments:

Post a Comment