disalbe Right click

Thursday, August 2, 2018

ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் பற்றி....

ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் பற்றி....
நமது நாட்டில் செய்யப்படுகின்ற குற்றங்கள் ஜாமீன் கொடுக்கக்கூடியவை (Bailable) என்றும், ஜாமீன் கொடுக்க இயலாதவை (Non bailable) என்றும் பிரித்துப் பார்க்கப்படுகிறது.
நம் நாட்டின் சட்டங்கள் பல ஆங்கிலேயரால் இயற்றப்பட்டது ஆகும். அவற்றை சில சட்ட திருத்தங்களுடன் நாம் பயன்படுத்தி வருகிறோம். இந்திய தண்டனை சட்டமும் அப்படித்தான். சமுதாயத்துக்கு எதிரான குற்றங்களையும் அதற்கான தண்டனைகளையும் மட்டுமே குறிப்பிடும் சட்டம் இந்திய தண்டனை சட்டம் ஆகும்.
ஜாமீன் (Bail) என்றால் என்ன?
ஓர் நீதிமன்றத்தில் சொத்து அல்லது வைப்புத்தொகையை பிணையாக வைத்து குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவரை சிறையிலிருந்து வெளிக்கொணர வகை செய்யும் நீதிமன்ற ஆணையை நாம் ஜாமீன் என்கிறோம்.
குற்றஞ் சாட்டப்பட்டு பிணை பெற்றவர் நீதிமன்ற விசாரணையில் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் அவரது ஜாமீன் ரத்து செய்யப்படும்.மேலும் பிணையை மீறியவர் என்ற குற்றமும் சேரும்
குறிப்பிட்ட சில குற்றங்களுக்கு மட்டும் ஜாமீன் கொடுப்பதற்கு காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. கடுமையான குற்றங்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டும் போது அதனை கொடுக்க காவல்துறையினர் தங்களது ஆட்சேபணையை தெரிவிப்பார்கள்.
ஜாமீனில் விடக்கூடாது என்று மறுக்க காவல்துறையினர் நீதிமன்றத்தில் பொதுவாக கூறும் காரணங்கள்...
குற்றவாளி விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டார்.
குற்றம் சமபந்தப்பட்ட முக்கிய சாட்சியங்களை அவர் கலைத்துவிடுவார்.
ஜாமீனில் வெளி வந்த பிறகு அவர் மேலும் குற்றம் புரிவார்.
காவல் துறையினரின் விசாரணை இன்னும் முடியவில்லை
திருட்டு போனதாக சொல்லப்படும் பொருட்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை.
குற்றம் புரிய குற்றவாளிகள் பயன்படுத்திய ஆவணங்கள் இன்னும் கைப்பற்றப்படவில்லை.
குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இன்னும் சிலர் தலைமறைவாக உள்ளனர்.
ஜாமீன் வேண்டுபவர் என்ன செய்ய வேண்டும்?
ஜாமீன் வேண்டும் நபர் காவல்துறையினர் கூறும் இத்தகைய கூற்றுகளை மறுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜாமீன் கிடைக்காது.
ஜாமீன் மனுவில் பொதுவாய் சொல்லப்படுகின்ற காரணங்கள்...
ஜாமீனில் செல்லாவிடில் தனது வேலையை இழக்க நேரிடும்.
குடும்பத்தில் தான் மட்டுமே சம்பாதிக்கும் நபர் என்பதால், தனது குடும்பம் பாதிக்கப்படும்.
தான் மிகவும் வயதானவர், உடல் நலம் இல்லாதவர் சிகிச்சை வெளியில் எடுப்பது தான் சாத்தியம்.
ஜாமீன் வழங்கும் சூழ்நிலைகள் என்ன?
ஜாமீன் ஒருவர் கேட்கும்போது கொடுத்துதான் ஆகவேண்டும். ஜாமீன் கொடுப்பதற்கு காவல் துறையோ, நீதிமன்றமோ மறுத்தால் அதற்கான காரணத்தை பதிவு செய்ய வேண்டும்.
பொதுவாக, ஒரு குற்றத்தின் தன்மை, அதன் அளவு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக இருக்கும் சாட்சியங்கள், குற்றம் சாட்டப்பட்டவர் சாட்சியத்தை அழிக்கக்கூடிய அல்லது கலைக்கக்கூடிய வாய்ப்புகள், குற்றம் சாட்டப்பட்டவரால் சமுதாய அமைப்புக்கு பங்கம் ஏற்படக்கூடிய ஒரு நிலை, குற்றம் சாட்டப்பட்டவரின் சுதந்திரம், மேலும் பல குற்றங்களைப் புரிய வாய்ப்பாக அமைதல், இவற்றையெல்லாம் பரிசீலணை செய்தே நீதிமன்றம் ஜாமீன் வழங்கும்.
ஜாமீன் மறுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
ஜாமீனில் குற்றம் சாட்டப்பட்டவரை விட நீதிபதி மறுத்தால் அதற்கான காரணங்களை அவர் தனது தீர்ப்பில் கூறவேண்டும். அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். ஒருவரது ஜாமீன் தள்ளுபடியானால் அதே நீதிமன்றத்தில் சில காலம் கழித்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் அல்லது உயர்நீதி மன்றத்தில் அப்பீல் செய்யலாம்.
எந்தெந்த சூழ்நிலைகளில் ஜாமீன் ரத்து செய்யப்படும்?
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கிடைக்கப் பெற்றவுடன், ஏதோ குற்றத்திலிருந்தே விடுதலை அடைந்தவர் போல நடந்து கொள்வதால், அது கொடுக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதற்கோ, மீண்டும் ஜாமீன் கொடுக்காமல் இருப்பதற்கோ வாய்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. இதுதவிர, ஜாமீனிலிருக்கும் போது அதே குற்றத்தையோ, புதிய குற்றத்தையோ புரிதல், விசாரணைக்கு குந்தகம் விளைவித்தல். சாட்சிகளை கலைப்பது அல்லது பொய் சாட்சி தயாரித்தல், ஜாமீன் கையொப்பமிட்டவரின் பாதுகாப்பிலிருந்து தப்பித்தல், காவல் துறையினரின் மீதோ, அரசு தரப்பு சாட்சியின் மீதோ, வழக்குக்கான புகார் கொடுத்தவரின் மீதோ தாக்குதல் நடத்துதல், காயம் பட்டவரின் உடல்நிலை மாற்றத்தால்ஜாமீன் மறுப்பு குற்றம்ஆக மாறக்கூடிய வாய்ப்பு, அதனால் ஜாமீன் மறுப்பு, கீழமை நீதிமன்றம் தவறான நபர்களின் ஜாமீன் கையெழுத்து, ஆகிய காரணங்களால் வழங்கப்பட்ட ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது.
முன் ஜாமீன் (Anticipatory Bail) என்றால் என்ன?
குற்றம் சாட்டப் பட்டிருக்கும் நபர் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பிருக்கும் ஒரு சூழ்நிலையில் அதனை தவிர்க்க நீதிமன்றத்தில் பெறுவது முன் ஜாமீன் ஆகும். ஆனால், முன் ஜாமீன் என்பது எளிமையாக கிடைக்கக்கூடியது அல்ல.
எவர் ஒருவரும் தன் எதிராளிகளால் பொய்யான வழக்கு தன் மீது போடப்பட்டு சில நாட்களாவது தன்னை சிறை வைக்க முயல கூடும் என எண்ணினால் முன் ஜாமீன் (Anticipatory Bail ) கேட்டு மனு செய்யலாம்.
இதற்கான மனுவை அவர் வசிக்கின்ற மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் அல்லது உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யலாம். ஒரு வேளை வாரன்ட் இல்லாமல் காவல்துறையால் கைது செய்யப்பட்டால் , அவர் ஜாமீன் தர தயார் என்றால் அவரை ஜாமீனில் விட வேண்டும் என்று இந்த ஆண்டிசிபேட்டரி பெயில் மூலம் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிடுகிறது.
முன் ஜாமீன் கொடுக்கும் நீதிமன்றங்கள் எவை?
செய்யப்பட்டுள்ள குற்றத்தின் தன்மை, குற்றம் சாட்டப்பட்டவரின் நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டே முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. ஜாமீன் மறுக்கக்கூடிய (Non bailable) வழக்கில்தான் ஒருவருக்கு முன் ஜாமீன் கொடுக்கப்படும் செஷன்ஸ் அல்லது உயர் நீதிமன்றத்துக்கு மட்டுமே முன் ஜாமீன் கொடுக்கக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் முன் ஜாமீன் ஆணையில்ஒருவேளை கைது செய்யக்கூடிய நிலையில் இவருக்கு ஜாமீன் வழங்கலாம்!’ என்ற வாசகத்தை முன்வைத்து முன் ஜாமீன் உத்தரவில் அதற்கான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருக்கும்.
********************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 02.08.2018

No comments:

Post a Comment