disalbe Right click

Tuesday, November 27, 2018

புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்

கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
உரிய காரணத்தை குறிப்பிட்டு ரசீது தராமல் பத்திரம் பதிவு செய்ய மறுத்தால் புகார் அளிக்கலாம்: கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
பத்திரப்பதிவின்போது, நிலுவை மற்றும் பதிவு மறுப்பு ஆகியவற்றுக்கு உரிய காரணத்துடன் சீட்டு வழங்காமல், வாய்மொழியாக சார்பதிவாளர் மறுத்தால் பொதுமக்கள் 18001025174 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என பதிவுத்தறை தலைவர் ஜெ.குமர குருபரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு
பதிவுத் துறைக்கான ஒருங்கி ணைந்த வலை அமைப்பான ஸ்டார் 2.0 திட்டம் கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக இதுவரை 19 லட்சத்து 20,174 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பத்திரம் முறையாக பதிவு செய்யப்பட்டு அதற்கான ரசீது சார்பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு வழங்கப்படும்.
பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட பட்டா உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கும் போதும், தேவையான முத்திரைத் தீர்வை செலுத்தாத போதும் இன்னும் சில வரையறுக்கப்பட்ட காரணங்களுக்காகவும் பத்திரம் நிலுவையாக பதிவு செய்யப்பட்டு, நிலுவைக்கான காரணம் ரசீதில் அச்சடிக்கப்பட்டு சார்பதிவாளரால் வழங்கப்படும். நிலுவைக்கான காரணம் சரி செய்யப்பட்டதும் பத்திரம் முறையாக பதிவு செய்யப்பட்டு திரும்ப வழங்கப் படும்.
பதிவுச்சட்டம், பதிவு விதிகள், அரசாணைகள் மற்றும் பதிவுத்துறைத் தலைவர் சுற்றறிக்கையில் கூறியுள்ளபடி தேவையான விவரங்களுடன் பத்திரம் தாக்கல் செய்யப்படாத நிலையில், பத்திரப்பதிவு மறுக்கப்படும். இவ்வாறு பதிவு மறுக்கப்படும் நிகழ்வுகளில் என்ன காரணத்துக்காக பதிவு மறுக்கப்பட்டது போன்ற விவரங்களுடன் பதிவு மறுப்புச்சீட்டு அச்சிடப்பட்டு சார்பதிவாளரால் வழங்கப்படும். இந்த நிகழ்வுகளில், பதிவு மறுப்புச்சீட்டில் தெரிவிக் கப்பட்டுள்ள காரணங்களை சரிசெய்து மீண்டும் பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, ஒரு பத்திரம் பதிவுக்கு அனுமதிக்கப்பட்டு முறையாக பதிவு செய்யப்பட்டாலோ, நிலுவை வைக்கப்பட்டாலோ, அல்லது பதிவு மறுக்கப்பட்டாலோ எந்த நிகழ்வாக இருந்தாலும் காரணம் குறிப்பிட்டு சார்பதிவாளரால் ஆவணதாரருக்கு ரசீது வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறில்லாமல் வாய் மொழியாக சார்பதிவாளர் ஆவணப்பதிவை மறுத்தால் 18001025174 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
**********************************நன்றி : இந்து தமிழ் நாளிதழ் - 28.11.2018

No comments:

Post a Comment