disalbe Right click

Tuesday, December 18, 2018

வாரிசுரிமை வழக்கின் தீர்ப்பு

வாரிசுரிமை வழக்கின் தீர்ப்பு 
தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற ஒரு இந்துப் பெண்ணிற்கு குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்து, அந்த பெண் இறந்துவிட்ட நிலையில், அந்த சொத்துக்களை பெறுவதற்கு இந்து வாரிசுரிமை சட்டப்படி கணவருக்கு உரிமை உள்ளதா? அல்லது அந்த சொத்துக்கள் அந்த பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு சென்றடைய வேண்டுமா?
இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 15
இந்துப் பெண்ணின் வாரிசு பற்றிய பொதுவிதிகள்
பிரிவு 15(1)ன்படி உயில் எழுதாமல் இறந்து போன இந்துப் பெண் ஒருவரின் சொத்தை, பிரிவு 16 ன் குறிப்பிட்டபடி கீழ்க்கண்ட வாரிசுகள் அடைவார்கள்.
1. முதலாவதாக இறந்த பெண்ணின் மகன்கள் மற்றும் மகள்கள் (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உட்பட) கணவனும் அடைவார்கள்.
2. இரண்டாவதாக கணவனின் வாரிசுகள் அடைவார்கள்
3. மூன்றாவதாக தாயும், தந்தையும் அடைவார்கள்
4. நான்காவதாக தந்தையின் வாரிசுகள் அடைவார்கள்
5. கடைசியாக தாயின் வாரிசுகள் அடைவார்கள்
பிரிவு 15(2)ன்படி பிரிவு 15(1) ல் என்ன கூறியிருந்தபோதிலும்,
இந்துப் பெண் ஒருவர் தன்னுடைய தந்தை அல்லது தாயின் வாரிசு என்ற முறையில் அடைந்த சொத்துக்களை, அவளுக்கு மகனோ அல்லது மகளோ (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உள்ளடங்கலாக) இல்லாதபோது, உட்பிரிவு 15(1)ல் குறிப்பிட்டுள்ள மற்ற வாரிசுகளுக்கு பொருந்தாது. ஆனால் தந்தையின் வாரிசுகளுக்கு பொருந்தும்.
அதேபோல் இந்துப் பெண் ஒருவர் தன்னுடைய கணவன் அல்லது மாமனாரின் வாரிசு என்ற முறையில் அடைந்த சொத்துக்களை, அவளுக்கு மகனோ அல்லது மகளோ (முன்னதாக இறந்து போன மகனின் அல்லது மகளின் குழந்தைகள் உள்ளடங்கலாக) இல்லாதபோது, உட்பிரிவு 15(1)ல் கூறப்பட்டுள்ள வாரிசுகள் அடைய மாட்டார்கள். அவளது கணவனின் வாரிசுகள் அடைவார்கள்.
இந்து வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 16
ஒரு இந்துப் பெண்ணிற்குள்ள வாரிசுகளுக்கிடையே சொத்துக்கள் எப்படி பிரிக்கப்பட வேண்டும்? 
மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தை தெளிவாக படித்துப் பார்த்தால், இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15(2) யை, பிரிவு 16 எந்த வகையிலும் கட்டுப்படுத்துவதில்லை. பிரிவுகள் 15(1) மற்றும் 15(2) ஆகியவற்றை படித்து பார்க்கும் பொழுது பிரிவு 15(2) ஒரு விதிவிலக்கான சட்டப் பிரிவாக அமைந்துள்ளது தெரிய வரும். தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்றிருக்கும் ஒரு இந்துப் பெண் இறந்துவிடும் நிலையில், அந்த சொத்துக்களை எவ்வாறு பிரித்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு மாறுபட்ட நடைமுறை பிரிவு 15(2) ல் கூறப்பட்டுள்ளது.
வாரிசுரிமை அடிப்படையில் தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற ஒரு இந்துப் பெண்ணிற்கு குழந்தைகள் எதுவும் இல்லாமல் இருந்தால், அந்த பெண் இறந்ததற்கு பின்னர், அந்த பெண்ணின் தந்தையுடைய வாரிசுகளுக்கு தான் அந்த சொத்துக்கள் சென்றடையும். மாறாக அந்த சொத்து இறந்து போன பெண்ணின் கணவருக்கு சென்றடையாது.
இது குறித்து உச்சநீதிமன்றத்தில்
இராதிகா Vs அக்னுராம் மாத்தோ (1994-5-SCC-761) மற்றும் 
பகவத் ராம் Vs தேஜ் சிங் (1999-2-LW-520)” ஆகிய வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்பட்டுள்ளது.
எனவே ஒரு இந்துப் பெண் தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்ற அனுபவித்து வரும் நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லாமல் இறந்து போனால், மேற்படி சொத்துகள் இந்து வாரிசுரிமை சட்டப்படி அந்த இறந்து போன பெண்ணின் தந்தை வழி வாரிசுகளுக்கு தான் சென்றடையும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
நன்றி..முகநூல் நண்பர் திரு எஸ்.முருகேசன் அவர்கள்

No comments:

Post a Comment