disalbe Right click

Saturday, March 16, 2019

சில வழக்குகளில் சூழ்நிலை சாட்சியத்தின் பங்கு

சில வழக்குகளில் சூழ்நிலை சாட்சியத்தின் பங்கு
பல சட்டங்களின் கீழ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த வழக்குகளுக்குரிய தக்க ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பவருக்குத்தான் வெற்றி கிடைக்கிறது. தகுந்த ஆதாரங்கள் மட்டும் இல்லாவிட்டால், உண்மையான வழக்காக இருந்தால்கூட நிதிமன்றத்தில் தள்ளுபடி ஆகிவிடும். நீதிமன்றத்தில் கொடுக்கப்படுகின்ற வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களை சாட்சியம் என்று சொல்கிறோம். வழக்கை உடல் என்றால், சாட்சியத்தை உயிர் என்று கூறலாம். 
இந்திய சாட்சியச் சட்டம் - 1872
நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் ஒரு சங்கதியை சாட்சியங்கள் மூலம் எவ்வாறு மெய்ப்பிக்கலாம்! என்பதற்கு ஏற்படுத்தப்பட்ட விதிகள்தான் இந்திய சாட்சியச் சட்டம் ஆகும். சாட்சியச் சட்டம் என்று ஒன்று இல்லாவிட்டால், வழக்குகளுக்கு முடிவு இருக்காது. சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்பவர்கள் சாட்சியச் சட்டத்தைப் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இருபெரும் சாட்சியங்கள்
சாட்சியங்கள் ஆனது  வாய்மொழி சாட்சியம்  என்றும், ஆவண சாட்சியம் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாக உள்ளன.  மேற்கண்ட இரண்டு சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு வேறு சில சாட்சியங்களும் உள்ளது. நாம் இங்கு சூழ்நிலை சாட்சியம் பற்றிக் காண்போம். 
சூழ்நிலை சாட்சியம்
நீதிமன்றத்தில் ஒருவர் கொடுத்த சாட்சியத்தில் இருந்து அல்லது அவர் அளித்த ஆவணத்திலிருந்து  வழக்கிலுள்ள சங்கதியினை யூகித்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலை வந்தால், அதுவே சூழ்நிலை சாட்சியம் ஆகும். எடுத்துக்காட்டாக  ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மண்ணெண்ணைக் கேனுடன் வெளியே செல்வதை பார்த்ததாக ஒருவர் சாட்சி கூறுகிறார். அந்த  வீட்டிற்குள் பெண் இறந்து கிடக்கிறார். அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது.  ஒருவர் மண்ணெண்ணைக் கேனுடன் வெளியே செல்வதை பார்த்ததாக ஒருவர் சாட்சி கூறியது சூழ்நிலை சாட்சியம் ஆகும். மண்ணெண்ணைக் கேனுடன் வெளியே  சென்ற ஆண், வீட்டுக்கு உள்ளே இருந்த பெண்ணை கொலை செய்து எரித்துள்ளார் என்று வேறு சாட்சியங்கள் இல்லாத பட்சத்தில் யூகித்து அறிந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
சூழ்நிலை சாட்சியம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டே (வேறு சாட்சியங்கள் இல்லாத பட்சத்தில்) குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றம் தண்டிக்கமுடியும். இதற்கு பல வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறலாம். அவற்றில் உச்சநீதிமன்றத்தின் பிரபலமான வழக்கு ஒன்றை கீழே காண்போம்.
இந்த வழக்கில் கொலை செய்தவராக குற்றம் சாட்டப்பட்டவர் பூனாவில் தொழில் புரியும் ஒரு டாக்டர். கொலையாகி இறந்து போனவர், பெரும் சொத்துக்கு சொந்தக்காரியான அதே பூனா நகரத்தில் வசித்து வந்த ஒரு விதவை. அந்த பெண்ணிற்கு சர்க்கரை நோயும், எலும்புருக்கி நோயும் இருந்தது. அவருக்கு சிகிச்சை அளித்து வந்தவர்தான் மேலே கண்ட டாக்டர் ஆவார். தனது உடல் உபாதைகள் மட்டுமல்ல, தனது சொத்து விபரங்கள் அனைத்தும் அந்த டாக்டரிடம் அந்தப் பெண்மணி தெரிவித்து இருந்தாள்.
மருத்துவ ஆலோசணைப் பயணம்
இந்த நிலையில் அந்தப் பெண்மணிக்கு இருக்கின்ற நோய்க்கு மும்பையில் உள்ள சிறப்பு மருத்துவரிடம் ஆலோசணை பெறலாம்! என்று அந்த டாக்டர் அழைத்ததன் பேரில் அந்தப்  பெண்மணி அவருடன் பூனாவில் இருந்து 12.12.1956 அன்று இரவு 10 மணியளவில் ரயில் மூலம் மும்பைக்குப் பயணமானார்.  மும்பையை அதிகாலை 05.45க்கு அடைந்தனர். ஆனால், மும்பையை அடைந்தபோது அந்தப் பெண்மணி மயக்கமாக இருந்தார். மயக்கமாக இருந்த அந்த பெண்மணியை  டாக்டர் மும்பை ஜி.டி.மருத்துவமனையில் அட்மிட் செய்தார். அங்கு அவருக்கு சர்க்கரை வியாதி காரணமாக ஏற்பட்ட கோமா என்று கருதி அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆவால், நினைவு திரும்பாமலேயே அந்தப் பெண்மணி 13.12.1956  பகல் 11.30 மணிக்கு இறந்துவிட்டார். அந்தப் பெண்மணியின் உடலை 14.12.1956 வரை யாரும் வாங்க வராத காரணத்தால், அது மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது.
சந்தேகத்தின் பெயரில் போஸ்ட்மார்ட்டம்
மருத்துவக் கல்லூரியின் பியூன் ஒருவர் அந்தப் பெண்மணியின் உடலில் இருந்த சிராய்ப்புகளைக் கண்டு அதனை பிண ஆய்வாளருக்கு தெரிவித்தார்.  சந்தேகத்தின் பெயரில் அந்த உடல் 19.12.1956 அன்று போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டது. அந்தப் பெண்மணி விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருப்பாரோ என்ற சந்தேகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், ஆய்வில் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. எனவே, அந்தப் பெண்மணி இறப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
காவல்துறையில் புகார் அளித்த உறவினர்கள்
இந்த நிலையில் பூனாவில் இருந்த அந்தப் பெண்மணியின் உறவினர்கள் நீண்ட நாட்களாக அவரை காணவில்லை என்பதால் காவல்துறையில் புகார் அளித்தனர். அந்தப் பெண்மணி இறந்து சுமார் 14 மாதங்கள் கழித்து நடைபெற்ற புலன்விசாரணையில், சொத்துக்கு ஆசைப்பட்டு ஏதோ ஒரு விஷத்தைக் கொடுத்து அந்தப் பெண்மணியை கொன்றதாக, அந்த டாக்டர் மீது காவல்துறையினர் இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.  அந்த டாக்டருக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது. அந்த டாக்டர் மேல்முறையீடு செய்தார். மும்பை உயர் நீதிமன்றம் தண்டணையை உறுதி செய்தது. இந்தக் கொலைக்கு நேரடி சாட்சியம் என்று யாரும் இல்லை. சூழ்நிலை சாட்சியங்களின் அடிப்படையில் அந்தப் பெண்மணியை கொன்றவர் இந்த டாக்டர்தான் என்று வழக்கில் முடிவு செய்யப்பட்டது.  
சூழ்நிலைச் சாட்சியம்
இந்த டாக்டர்தான் அந்தப் பெண்மணியை கொலை செய்தார் என்பதற்கு கிடைத்த சூழ்நிலை சாட்சியங்கள் என்னென்ன?
  1. இந்த டாக்டரும், அந்தப் பெண்மணியும் ரயிலில் ஒரே பெட்டியில் பயணம் செய்தனர்.
  2. பூனாவில் இருந்து மும்பைக்கு வேகமாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பல இருக்க மிக மெதுவாக செல்லும் பாஸஞ்சர் ரயிலை டாக்டர் தேர்ந்தெடுத்தார்.
  3. பூனாவில் ரயிலில் ஏறும்போது அந்தப் பெண்மணி மிக ஆரோக்யமாக நடந்து சென்று ரயிலில் ஏறியதை பலர் பார்த்ததாக சாட்சி கூறினர்.
  4. டாக்டர் அந்த ரயில் பெட்டியில், தானும் அந்தப் பெண்மணியும் மட்டுமே தனித்து பயணம் செய்வதற்கு வசதியாக தனது செல்வாக்கை பயன்படுத்தி ஏற்பாடு செய்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
  5. அந்தப் பெண்மணி ரயிலில் திடீரென மயக்கமடைந்து விட்டதாக மருத்துவமனையில் சேர்க்கும்போது தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் பெண்மணி எந்தவித நோயினாலோ அல்லது சர்க்கரை வியாதியினால் ஏற்படும் மயக்க நிலையினாலோ  இறக்கவில்லை! என்று மருத்துவ நிபுணர் டாக்டர் மேத்தா சாட்சியம் அளித்தார். ஏனென்றால், மேற்படி கோமாநிலை திடீரென ஏற்படாது. அதற்கு முன் பல தொந்தரவுகள், உடல் உபாதைகள் ஏற்படும் என்றும் சாட்சியம் அளிக்கப்பட்டது.  
  6. மேலும், மருத்துவ நிபுணர் டாக்டர் மேத்தா தனது சாட்சியத்தில் அங்கீகரிக்கப்படாத விஷம் ஏதோ அந்தப் பெண்மணிக்கு கொடுத்ததன் விளைவாக அவர் இறந்திருக்கலாம் என்றும், காலம் கடந்து பரிசோதனை செய்ததால் அதனை தங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் கூறினார்.
  7. அந்தப் பெண்மணி இயற்கையாக இறந்துவிட்டார் என்று அறிக்கை தயாரிக்கும்படி மருத்துவமனை மருத்துவருக்கு தனக்குத் தெரிந்த ஒரு நண்பர் மூலம் லஞ்சம் கொடுக்க அந்த டாக்டர் முயற்சி செய்திருந்தார்! என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
  8. மெதுவாக கொல்லக்கூடிய விஷத்தை அந்த டாக்டர் பூனாவில் ஒரு கடையில் வாங்கி, தனது கையினாலேயே ரயில் பயணத்தில் அந்தப் பெண்மணிக்கு கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார்! என்பது ஊர்ஜிதமானது. 
  9. தனது கடையில்தான் டாக்டர் அந்த விஷத்தை வாங்கினார்! என்றும், எதற்காக இதை வாங்குகிறீர்கள்? என்று தான் அவரை கேட்டபோது, தேவையில்லாமல் எதையும் என்னிடம் கேட்காதே! என்று டாக்டர் கூறியதாக கடை உரிமையாளர் சாட்சியம் அளித்தார்.
  10. மும்பை மருத்துவமனையில் அந்தப் பெண்மணியை சேர்க்கும்போது அந்தப் பெண்மணிக்கு தவறான பெயரையும் உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் மருத்துவமனையில் டாக்டர் தெரிவித்துள்ளார்.
  11. பூனா ரயில் நிலையத்தில் அந்தப் பெண்மணி ரயில் ஏறும்போது போட்டிருந்த நகைகள் மும்பையை அடையும் போது அவரது கழுத்தில் காணப்படவில்லை என்று பலர் சாட்சியம் அளித்தனர்.
  12. அந்தப் பெண்மணியை மும்பையில் மருத்துவமனையில் சேர்த்திருப்பதை அவளது உறவினர்கள் எவரிடமும் டாக்டர் தெரியப்படுத்தவில்லை. அந்தப் பெண்மணி இறந்த பிறகு உறவினர்களின் முகவரிகள் டாக்டருக்கு தெரிந்திருந்தும் அவர்களுக்கு அதனை அறிவிக்கவில்லை.
  13. அந்தப் பெண்மணி இறந்தவுடன் அவரது உடலைப் பெற முன்வராமல் டாக்டர் தலைமறைவானார். இதனால், அவர்தான் அந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை அதிகமாக்கியது.
  14. அந்தப் பெண்மணியில் உடல் தகனம் செய்யப்பட்ட சில நாட்களுக்குள் அந்தப் பெண்மணியின் போலிக் கையொப்பம் இட்டு அவளது சொத்துக்களின் சில பகுதிகளை டாக்டர் தன்வசப்படுத்திக் கொண்டிருந்தார்.
இதனால், சொத்துக்கு ஆசைப்பட்டு மேற்படி கொலையை டாகடர் செய்துள்ளார் என்று நிரூபணம் ஆகின்றது.  அந்த டாக்டருக்கு மரணதண்டணை அளிக்கப்பட்டது.
வழக்கு எண்: Anant Chintaman Lagu vs State of Bombay AIR 1960 SC 500
********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 16.03.2019 

No comments:

Post a Comment