disalbe Right click

Wednesday, August 14, 2019

வக்கீல் நோட்டீஸ் –ஐப் பற்றி தெரிந்து கொள்வோமா?

வக்கீல் நோட்டீஸ்ஐப் பற்றி தெரிந்து கொள்வோமா?
ஒருவர் மீதோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீதோ சிவில் அல்லது கிரிமினல் வழக்கு தொடர்வதற்கு முன்னால், அது பற்றிய அறிவிப்பை அவருக்கு அல்லது அவர்களுக்கு வழக்கறிஞர் மூலம் நாம் கொடுக்கின்ற அறிவிப்பையே வக்கீல் நோட்டீஸ் என்று சொல்கிறோம்.  
வழக்கறிஞர் மூலமாகத்தான் இதை கொடுக்க வேண்டுமா?
அப்படி ஒன்றும் கட்டாயம் இல்லை. சட்டம் தெரிந்தால் நாமே இதனை அனுப்பலாம். பொதுவாக இதற்குப் சட்ட அறிவிப்பு என்பதே சரியானது. விபரம் தெரியாதவர்கள் வழக்கறிஞர் மூலம் இதனை அனுப்புவதால் இதனை வக்கீல் நோட்டீஸ் என்கிறார்கள்.
இந்த அறிவிப்பில் என்ன சங்கதி இருக்கும்?
ஒரு செயலை செய்ய வேண்டும் என்றோ அல்லது ஒரு செயலை செய்யாமல் இருக்க வேண்டும் என்றோ அல்லது செய்யப்பட இருக்கும் சில செயல்களால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை குறித்து அறிவுறுத்தி, ஒரு நபர் மற்றொரு நபருக்கு அல்லது நபர்களுக்கு எழுத்து மூலமாக கொடுக்கும் எச்சரிக்கைதான் "சட்ட அறிவிப்பு" எனப்படுகிறது.
இதனை அனுப்பாமல் வழக்கு தொடுக்க முடியாதா?
பொதுவாக நாம் தாக்கல் செய்யப்போகின்ற வழக்கு எதுவாக இருந்தாலும், அதற்கு முன்பு எதிர் தரப்பினருக்கு அந்த வழக்கு பற்றிய அறிவிப்பு ஒன்றை கொடுப்பதுதான் நல்லது. தான் செய்தது அல்லது செய்யப்போவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை எதிர்தரப்பினர் உணர்ந்து கொண்டு அதை செய்யாமல் இருக்கவும், சமாதானத்திற்கு வரவும் அது உதவும். வழக்கிற்கான செலவு மிச்சமாகும். நேரமும் மிச்சம் ஆகும்.
சட்ட அறிவிப்பு கொடுக்காமல் வழக்கு தொடர்ந்தால், அதனாலேயே சில சமயங்களில் வழக்கு தள்ளுபடி ஆகலாம்.  ஆகையால் சில வழக்குகளுக்கு கண்டிப்பாக சட்ட அறிவிப்பு கொடுத்தே ஆகவேண்டும்.
இதற்கு உதாரணமாக
அரசாங்கத்திற்கு எதிராக நாம் வழக்கு தொடரும் முன்பாக உரிமையியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 80 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு
சொத்துரிமை மாற்றுச் சட்டம் 106 வது பிரிவின்படி கொடுக்க வேண்டிய அறிவிப்பு
இரயில்வே சட்டம் பிரிவு 106 ன் கீழ் கொடுக்க வேண்டிய அறிவிப்பு
ஆகியவற்றைக் கூறலாம்.
சட்ட அறிவிப்பில் என்னென்ன இருக்க வேண்டும்?
பொதுவாக சட்ட அறிவிப்பில் நாம் தாக்கல் செய்ய இருக்கும் வழக்கின் சங்கதிகள் பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும்.
⧭ சட்ட அறிவிப்பை கொடுக்கிறவரின் பெயர் மற்றும் முகவரி
⧭ சட்ட அறிவிப்பு பெறுபவரின் பெயர் மற்றும் முகவரி
⧭ வழக்கின் பிரச்சினை குறித்த விபரம்
⧭ சட்ட அறிவிப்பிற்கான வழக்கு மூலம்
⧭ வேண்டுகின்ற பரிகாரம்
⧭ பரிகாரத்தை நிறைவேற்றவில்லை என்றால், அதனால் ஏற்படும் விளைவுகள்
⧭ எத்தனை நாட்களுக்குள் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும்?
⧭ சட்ட அறிவிப்பு வழக்கறிஞர் மூலமாக கொடுக்கப்பட்டால் இறுதியில் வலது புறம் அவரது கையொப்பம் அல்லது அனுப்புபவரின் கையொப்பம்
⧭ சட்ட அறிவிப்பின் கடைசியில் இடதுபுறம் அனுப்புபவரின் ஊரும், தேதியும் குறிப்பிட வேண்டும்.
அறிவிப்பை எப்படி அனுப்ப வேண்டும்?
யாருக்கு அறிவிப்பு கொடுக்க வேண்டுமோ,  அவரது பெயரைக் குறிப்பிட்டு முகவரிக்கு பதிவுத் தபாலில் ஒப்புகை அட்டை இணைத்து, இந்திய தபால்துறை மூலம் அனுப்பி வைக்க வேண்டும். கொரியர் சர்வீஸ் மூலம் அனுப்பாதீர்கள். இ மெயில் மூலம், வாட்ஸப் மூலமும் இப்போது அனுப்புகிறார்கள். முக்கியமாக பெறுபவரின் பெயர் மற்றும் முகவரியில் தவறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அனுப்பியதற்கான ரசீது மற்றும் ஒப்புதல் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். வழக்கின் போது அவைகளும் ஒரு ஆதாரமாக பதிவு செய்யப்படும்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 14.08.2019 

No comments:

Post a Comment