disalbe Right click

Saturday, September 14, 2019

குற்றம் சாட்டப்பட்டவருக்கே புகாரை அனுப்பும் அதிகாரிகள்

குற்றம் சாட்டப்பட்டவருக்கே புகாரை அனுப்பும் அதிகாரிகள்
புகார்தாரரை திசை மாற்றிய அதிகாரி
கடந்த மாதம் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று எங்களது சங்கத்தின் மோசடியான நிதிநிலை அறிக்கையை கோர்வை செய்த வகையில் ஊழல் செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள் மீது புகார் அளித்தேன். என்னிடமிருந்த ஆவணங்களை வாங்கி பார்த்த அங்கிருந்த அலுவலர், நீங்கள் நேரடியாக, சென்னையிலுள்ள எங்களது துறையின் இயக்குநர் அவர்களுக்கு இதனை தபாலில் அனுப்பி வையுங்கள். அருமையான கேஸ் இது. உடனடியாக எங்களுக்கு அங்கிருந்து உத்தரவு வரும். நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார். நானும் சரி என்று அங்கிருந்து வந்துவிட்டேன்.
சிஸ்டம் சரியில்லை!
இது ஒரு வகையில் குற்றம் செய்த அரசு அதிகாரியை காப்பாற்ற, லஞ்ச ஒழிப்புத் துறை எடுக்கின்ற முதல் முயற்சியாகும்.  இப்படி தட்டிக் கழிக்கும்போது சில மனுதாரர்கள் அடுத்த முயற்சி எடுக்க முடியாமல் போகலாம்; அல்லது அவர்கள் வேகம் தணியலாம்; அல்லது தவறு செய்த அதிகாரிகளை அதற்குள் எச்சரிக்கைப்படுத்தி விடலாம். வேலை செய்தாலும், வேலை செய்யவில்லை என்றாலும் லஞ்ச ஒழிப்புத்துறை ஊழியர்களுக்கு ஊதியம் மாதாமாதம் போய்ச் சேர்ந்துவிடும். பிறகு ஏன் அவர்கள் வருகின்ற புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்? நமது நாட்டு காவல்துறையிலும் இதே கதைதான். காரணம் சிஸ்டம் சரியில்லை!
தள்ளிப்போடுவதால் ஒரு காரியம் என்ன ஆகும் - ராஜா காலத்துக் கதை!
ஒரு நாட்டில் ஒருவன் மிகப்பெரிய குற்றம் ஒன்றை செய்துவிட்டான்,  அரசன் அவனுக்கு தூக்கு தண்டணை விதித்தான். தூக்கு மேடைக்கு அவனை கொண்டு செல்லும் முன், அரசன் அவனிடம், உனது கடைசி ஆசை என்ன? என்று கேட்டான். அதற்கு அவன், ”என்னிடம் அதிசயமான திறமை இருக்கிறது”; யாருக்கும் அதனை சொல்லித்தராமல் சாகப்போகிறோமே! என்று வருந்துகிறேன். அதனை யாருக்காவது சொல்லிக் கொடுத்துவிட்டால் நான் நிம்மதியாக சாவேன் ! என்றான். அரசன் அது என்ன திறமை என்றான். ஒரு சாதாரண குதிரையை பறக்கும் குதிரையாக மாற்றும் திறமை என்னிடம் இருக்கிறது என்றான் கைதி. அப்படியா? என்று வியந்த அரசன், அதற்கு எவ்வளவு நாளாகும்? என்றான். ஒரு வருட காலமாகும் என்றான் கைதி. தூக்குத் தண்டணையை நிறுத்திய மன்னன், கைதிக்கு ஒரு குதிரையையும் அதனை வளர்க்க வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்து துணைக்கு ஒரு ஆளையும் ஏற்பாடு செய்து கொடுத்து, இன்றிலிருந்து ஒரு வருடகாலம் உனக்கு அவகாசம் தருகிறேன். குதிரை பறக்கவில்லை என்றால் எனது தலை கொய்யப்படும் என்று கூறினான். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டான் கைதி. ஒரு மாத காலம் போயிற்று. அவனை பார்க்க வந்த நண்பன், உனக்கு என்ன பைத்தியம்  பிடித்திருக்கிறதா? குதிரை எப்படி பறக்கும்? என்றான். அது எனக்கும் தெரியும். தண்டணையை ஒத்தி வைத்திருக்கிறேன். அந்த பொய்யை கூறாவிட்டால் இப்போது உன்னிடம் பேசிக் கொண்டிருக்க நான் உயிருடன் இருந்திருக்க மாட்டேன் என்றான் கைதி. அது சரி எப்படியும் இன்னும் ஒரு வருடத்தில் நீ கொல்லப்பட்டுவிடுவாயே! என்றான் நண்பன். அதற்கு கைதி, இந்த ஒரு வருடத்தில் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். நானே நோய்வாய்பட்டு இறந்து போகலாம். அல்லது தண்டணையளித்த மன்னன் இறந்து போகலாம். வேற்று நாட்டு அரசன் படையெடுத்து வந்து இந்த அரசை அழித்துவிடலாம். ஒருவேளை குதிரை பறந்தாலும் ஆச்சர்யமில்லை என்றான். இதைப் போலத்தான் நமது நாட்டில் துறை அதிகாரிகள் நடவடிக்கைகளை தள்ளிப் போடுகிறார்கள். அயோக்கியன் யோக்கினாகிறான். குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டணை வழங்கப்பட்ட தலைவர்களுக்குக் கூட அரசு செலவில் மரியாதை செய்யப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு இயக்குனருக்கு அனுப்பிய புகார்
கடந்த 16.09.2019 அன்று சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகத்திற்கு எனது புகாரை உரிய ஆதாரங்களுடன் அனுப்பி வைத்திருந்தேன். அதில்  மோசடியான நிதிநிலை அறிக்கையை கோர்வை செய்து ஊழல் செய்த விருதுநகர் மாவட்டப் பதிவாளர் மற்றும் அவர்மீது ஆதாரத்துடன் புகார்கள் அளித்தும் துறை ரீதியாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பதிவுத்துறைத்துணைத்தலைவர்,  பதிவுத்துறைத்தலைவர்  ஆகியோர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டி அதற்குரிய ஆவண நகல்களை இணைத்திருந்தேன். அதனை பெற்றுக் கொண்ட  லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர்  அவர்கள் எனக்கு உடனடியாக பதில் அனுப்பி இருந்தார்கள். அதன் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கடிதத்தில் சட்டப்படி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக பதிவுத்துறைத் தலைவர், சென்னை அவர்களுக்கு எனது புகார்மனு அனுப்பப்படிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
எந்த நாட்டிலும் இல்லாத நடவடிக்கை இது!
உங்கள் புகாரில் முகாந்திரம் இல்லை, அதனால் நடவடிக்கை எடுக்க இயலாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர்   கூறியிருக்கலாம். அல்லது இந்த புகாரில் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிய விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு இருக்கலாம். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு அனுப்பப்பட்ட புகாரை, அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கே அனுப்பி சட்டப்படி தேவையான நடவடிக்கையை  லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரே எடுக்கச் சொல்வது, நம் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் காணமுடியாத கீழ்தரமான நடவடிக்கை ஆகும்.  
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம்
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரே சொல்லிவிட்டார் என்று என்னால் ஏதும் செய்யாமலிருக்க முடியவில்லை. எடுத்தேன் பேனாவை. தொடுத்தேன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கணைகளை. அதனை கீழே காணலாம்.




தகவல்கள் கிடைத்ததும் பகிர்ந்து கொள்கிறேன்.
*********************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 14.09.2019


No comments:

Post a Comment