disalbe Right click

Tuesday, March 17, 2020

அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்புகின்ற கடிதம்

அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்புகின்ற கடிதம்
விருதுநகர் மாவட்டப் பதிவாளர் திரு து.குணசேகரன் அவர்கள், எனது 30.06.2018 புகார்மனு ஒன்றின் மீது விசாரணை நடத்தி 01.11.2018 அன்று எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பாமலேயே,  அனுப்பியதாக ஒரு பொய்யான ஆதாரத்தை ஏற்படுத்தி, என்னிடம் இருந்து பதில் ஏதும் வராத காரணத்தினால்  எங்களது சங்க நிர்வாகிகளுக்கு சாதகமாக உள்நோக்கத்தோடு எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வழங்கி எனது மனுவை முடித்து வைத்துள்ளார். எனக்கு இது கடந்த மாதம் வரை தெரியாது.
அந்த கடிதத்தில் இருந்த சங்கதி என்ன?
மேற்கண்ட 01.11.2018 கடிதத்தில் சங்கநிர்வாகிகளின் மீது நான் தொடுத்த வழக்கு, அவர்கள் அளித்த வாக்குமூலம், நடுவர் அளித்த தீர்ப்பு மற்றும் நான் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனு ஆகியவற்றின் நகல்களை தன்னிடம் அளித்தால் அது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எனக்கு மாவட்ட பதிவாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம் எனக்கு அப்போதே கிடைத்திருந்தால், விசாரணையின் முடிவானது சங்க நிர்வாகிகளுக்கு எதிராக மாவட்டப்பதிவாளர் அவர்களால் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.
எனக்கு இந்த வருடம் கிடைத்த அந்த கடித நகல்
கடந்த 2019ம் வருடத்தில் பதிவுத்துறை தலைவர் அவர்களிடம் அளித்த புகார் மனு குறித்து விசாரணை செய்ய மதுரை -  பதிவுத்துறை துணைத் தலைவர் அவர்கள் பணிக்கப்பட்டிருந்தார். அவரிடம் நான் கேட்ட ஆவணங்களோடு அவரையும் அறியாமல் மேற்கண்ட 01.11.2018  கடிதத்தை எனக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்
அந்தக் கடிதத்தை பார்த்து நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். 2018ம் ஆண்டிலேயே இந்த கடிதம் கிடைத்திருந்தால் என்னிடம் உள்ள வழக்கு ஆவண நகல்களை நான் அளித்திருப்பேன். போலி ஆவணம் தயாரிக்கப்பட்ட குற்றத்தை மாவட்ட பதிவாளரிடம் சங்கநிர்வாகிகள் ஒத்துக் கொண்டு போயிருப்பார்கள். அந்த பிரச்சனையில் ஒரு முடிவு அப்போதே வந்திருக்கும். நமக்கு தெரியாமலேயே கடிதம் வந்துவிட்டு திரும்பி இருக்குமோ? அல்லது நமது பெயரில் வேறு யாருக்காவது அஞ்சல் செய்திருப்பார்களோ? என்று எனது எண்ணம் அலைபாய்ந்தது.
கை கொடுத்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்
மதுரை -  பதிவுத்துறை துணைத் தலைவர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி தகவல்களை பெற்றுத்தர வேண்டினேன். அவரும் துறைமாற்றம் செய்தார். பதிவாளர் சாதாரண தபாலில் அனுப்பியதாக தகவல் தந்ததோடு மட்டுமல்லாமல் அந்த கடிதத்தின் நகல் ஒன்றையும் சேர்த்து மாவட்டப் பதிவாளர் அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதம் தங்கள் பார்வைக்காக கீழே உள்ளது.


குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது
மாவட்டப் பதிவாளர் செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனது கைகளுக்கு அந்த கடிதம் கிடைக்கக்கூடாது என்பதற்காக அந்த கடிதம் சாதாரண தபாலில் அனுப்பப்பட்டதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. அவர் செய்தது எந்த சட்டத்தின் கீழ் அது குற்றம்? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  பொதுவாக அவர் செய்தது குற்றம்! என்று சொல்வதைவிட,  அவர் செய்தது இந்த சட்டத்தின் கீழ் இன்ன பிரிவின் கீழ் குற்றம் என்று சொல்வதை விரும்புபவன் நான். அதனால், எனது தேடலை ஆரம்பித்தேன். 
கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்: தேடுங்கள் கிடைக்கும்!
நண்பர்கள் சிலரிடம் விபரம் கேட்டேன். அவர்களும் அதை குற்றம் என்ற்ய் சொன்னார்களே தவிர,. எந்த சட்டத்தின்படி அது குற்றம் என்பது அவர்களுக்கும் குறிப்பாகத் தெரியவில்லை. இணையத்தில் இரண்டு மணி நேரம் தேடினேன். ஒரு வழியாக விபரம் எனக்கு கிடைத்தது. பெரியவர்கள் சொல்லி வைத்த வாசகங்கள் பொய்யில்லை.
அரசு அலுவலக நடைமுறை நூல்
அரசு அலுவலக நடைமுறை நூலில் இதற்கான விடை எனக்கு கிடைத்தது. அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்பப்படுகின்ற முக்கியமான கடிதங்கள், ”பத்தி 159ன்படி”  பதிவு அஞ்சலில்தான் அனுப்பப்பட வேண்டும்! என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கை
மாவட்ட பதிவாளரது மேற்கண்டதிட்டமிட்ட மோசடி செயல் குறித்து எனது அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க ஆயுத்தமானேன்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 17.03.2020  

No comments:

Post a Comment