disalbe Right click

Sunday, November 8, 2020

கொடுக்கல், வாங்கல் - கடன் விதிமுறைகள்
அவசரத்திற்கு பணம் தேவைப்படுகிறது என்று உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ அல்லது வட்டிக்கு பணம் கொடுக்கின்ற தொழில் செய்பவர்களிடமோ நாம் கடனாக பணம் வாங்குகிறோம்.
அதிக வட்டி கிடைக்கிறது என்பதால், அதற்கென்று சில நிபந்தனைகளை வகுத்துக் கொண்டு, அடியாட்களை வைத்துக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுக்கின்ற தொழிலை சிலர் செய்து வருகிறார்கள்.
ஆனால், நமது அரசாங்கம் இதற்கென்று சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளது. அதனை பின்பற்றாமல். நீங்கள் கடன் வாங்கினாலும், கடன் கொடுத்தாலும் அது சட்ட விரோதம் ஆகிவிடும்! என்பது உங்களுக்குத் தெரியுமா?
கடன் கொடுப்பவருக்குண்டான விதிமுறைகள்:
வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் இருந்து கடன் வாங்கும் போது, கடன் பெறுபவர்களிடம் பல தாள்களில் கையெழுத்து வாங்குவார்கள். இதற்கென்று பல்வேறு விதிமுறைகளும், நடைமுறைகளும் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
அறிமுகமானவர்களுக்கோ அல்லது அறிமுகமானவர்கள் பரிந்துரைக்கின்றவர்களுக்கோ அவசரத் தேவைக்காக நீங்கள் அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரொக்கமாக கொடுக்க கூடாது என்ற விதிமுறை இருக்கிறது.
ரொக்கமாக எவ்வளவு கொடுக்கலாம்?
கடன் வழங்கும் போது, 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் அதிகமான தொகையாக இருந்தால் எனில், அதை ரொக்கமாகவோ அல்லது பெயர் தாங்கிய காசோலை மூலமாகவோ நீங்கள் வழங்க முடியாது.
அதனை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தக்கூடிய காசோலையாகவோ, வரைவோலையாகவோ அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ மட்டுமே வழங்க வேண்டும்.
கொடுத்த கடனை தொகையை திரும்ப பெறுகின்ற போதும் இந்த முறையை கண்டிப்பாக நீங்கள் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், அது சட்டவிரோத செயலாகிவிடும்.
வாடகை மற்றும் கட்டணங்கள்
வீடுகளுக்கோ, கடைகளுக்கோ மற்றும் திருமண மண்டபங்களுக்கோ நீங்கள் வாடகை செலுத்துவதாக இருந்தாலும் மேற்கண்ட முறையை பின்பற்ற வேண்டும். கல்வி கட்டணங்கள் செலுத்துவதற்கும் இந்த விதிமுறை உண்டு.
அபராதம் உண்டு:
மேற்கண்ட விதிமுறையை நீங்கள் மீறியது தெரியவந்தால், உங்களுக்கு வருமான வரித்துறையால் அபராதம் விதிக்கப்படும்.
இதற்கென்று வரி விதிப்பும் உண்டு
கடன் வழங்குவதற்கென்று வரி ஏதும் கிடையாது. ஆனால், கொடுத்த கடனுக்கு நீங்கள் பெறுகின்ற வட்டிக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். ஒருவரது இதர வருமானம் என்ற பிரிவின்கீழ் இது வரும்.
பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள்
சிலர் சொத்து வாங்கும்போது, கொடுக்கின்ற முன்பணத்தை 20 ரூபாய் பத்திரம் வாங்கி அதில் அதனை எழுதியோ, டை அடித்தோ வைத்துக் கொள்கிறார்கள். இது சட்டப்படி செல்லாது. உங்களிடம் பணம் வாங்கியவர் மிகவும் நம்பிக்கையானவராக இருக்கலாம். எதிர்பாராவிதமாக அவர் இறந்துவிட்டால் நீங்கள் கொடுத்த தொகையை திரும்பப்பெறுவது கேள்விக்குறி ஆகிவிடும்.
ஒப்பந்த பத்திரங்கள் சட்டம்
ஒப்பந்த பத்திரங்கள் சட்டம் பிரிவு 17ன்படி, 5,000 ரூபாய்க்கு மேல் உள்ள சொத்தினை வாங்கும்போதோ அல்லது கொடுக்கும்போதோ போடப்படுகின்ற ஒப்பந்தங்களை கண்டிப்பாக பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
எச்சரிக்கையுடன் இருங்கள்!
மேற்கண்ட முறைகளை பயன்படுத்தாமல் கொடுக்கல், வாங்கல் செய்பவர்களுக்கு சட்டச்சிக்கல் வரும் என்பது நிச்சயம். எனவே எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 09.11.2020

No comments:

Post a Comment