disalbe Right click

Tuesday, May 18, 2021

பிழை திருத்தப் பத்திரம்

பிழை திருத்தப் பத்திரம்
சொத்து சம்பந்தமான பத்திரங்களில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஆவணங்களில் பிழை திருத்தப் பத்திரமும் ஒன்றாகும்.
ஆங்கிலத்தில் இதனை Amendment Deed என்றும் Rectification Deed என்றும் சொல்கிறார்கள்.
சொத்துக்களை வாங்குபவர்கள் அந்த சொத்து குறித்த பத்திரத்தை தாய்பத்திரத்துடன் ஒப்பிட்டு, வரிக்கு வரி மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும்.
எவற்றை சரிபார்க்க வேண்டும்?
  • பத்திரத்தின் முகப்பில் சொத்தின் மதிப்பு
  • சொத்தின் வழிகாட்டி மதிப்பிற்கு ஏற்றாற்போல் பத்திரம் வாங்கப்பட்டுள்ளதா?
  • நாள், மாதம் மற்றும் வருடம்
  • வாங்குபவர் மற்றும் விற்பவரது தந்தையார்/கணவர் பெயர்
  • ஆதார் அட்டை எண்/வேறு அடையாள அட்டை எண்
  • வாங்குபவர் மற்றும் விற்பவரது முகவரிகள்
  • தாய்பத்திரத்தில் உள்ள ஆவண எண், நாள், மாதம், வருடம் மற்றும் சார்பதிவகம் பெயர்
  • சொத்து இருக்கின்ற ஊரின் பெயர்
  • சொத்தின் பட்டா எண் மற்றும் சர்வே எண்கள்
  • சொத்தின் பரப்பளவு
  • சொத்தின் நான்குபுறமும் உள்ள அளவுகள்
  • சொத்தின் நான்குபுறமும் உள்ளவர்களின் பெயர்கள்
  • சொத்தின் மின் இணைப்பு எண்
  • சொத்தின் குழாய் இணைப்பு எண்
  • பவர் பத்திரம் மூலமாக அந்த சொத்தை வாங்கினால், அது சம்பந்தமான ஆவணங்கள்
பாத்து பாத்துத்தான் வாங்குனேன்;
இது மட்டும் எப்படியோ கண்ணுக்கு சிக்கல!
  • இப்படி பல பேர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அது போன்ற நேரங்களில் என்ன செய்வது?
  • சிறிய தவறுகளான கதவு எண், மின் இணைப்பு எண், குழாய் இணைப்பு எண், சர்வே எண், பட்டா எண், சொத்தின் நான்கு புறமுள்ள அளவுகள், திசைகள், ஊர் பெயர் மற்றும் தனது பெயரில் உள்ள தவறுகளை சாதாரணமாக பிழை திருத்தல் பத்திரம் மூலமாக திருத்தி விடலாம்.. எந்த பிரச்சனையும் வராது. ஒரு 1000 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.
பிரச்சனையுள்ள திருத்தங்கள் என்ன?
  • சொத்தின் பரப்பளவை குறைத்து எழுதிவிட்டால், குறைத்து எழுதப்பட்ட பரப்பளவிற்காக மறுபடியும் பத்திரங்கள் வாங்க வேண்டும்.
  • சொத்தை விற்றவர் உயிருடன் இருந்தால் அவரையும் அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • அவர் உயிருடன் இல்லை என்றால், அவரது வாரிசுகளை அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • ஒரு வேளை அவருக்கு நேரடியான வாரிசுகள் இல்லை என்றால், அவரது இரண்டாம் நிலை வாரிசு, மூன்றாம் நிலை வாரிசு ஆகியவர்களை அழைத்து வந்து அந்த பத்திரங்களில் கையெழுத்து பெற வேண்டும்.
  • சொத்தை விற்றவர் உயிருடன் இருந்து கையெழுத்துப் போட வரமாட்டேன் என்றாலோ, அவர் இறந்த பின் அவருக்கென்று வாரிசுகள் (இரண்டாம் நிலை வாரிசு, மூன்றாம் நிலை வாரிசு உள்பட ) யாருமே இல்லை என்றாலோ நீதிமன்றம்தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.
  • இது போன்ற நிலையில் சொத்தை வாங்கியவருக்கு அது மிகுந்த மன உளைச்சலையும், செலவையும் அளிக்கும்.
ஆகவே சொத்துக்களை வாங்கும்போதே மிக கவனமுடன் வாங்குங்கள்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.05.2021
 

No comments:

Post a Comment