disalbe Right click

Tuesday, May 18, 2021

லஞ்ச ஒழிப்புத்துறை - புகார் - விசாரணை

லஞ்ச ஒழிப்புத்துறை - புகார் - விசாரணை

நம்மில் சிலர் ”லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததாகவும், அதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லை” என்று முகநூலில் பதிவிட்டு வருகிறார்கள்.
அவர்கள் யார் மீது என்ன புகார் அனுப்பினார்கள்? எந்த முறையில் புகார் அனுப்பினார்கள் என்பதும், அவற்றின் மீது எதனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியாது.
அதனால், பொதுமக்கள் அளிக்கின்ற புகாரினை லஞ்ச ஒழிப்புத்துறையினர் எப்படி கையாள்கின்றனர் என்பது பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடுவது என்று தீர்மானித்து, எனக்குள்ள அனுபவத்தின் அடிப்படையில் இந்த பதிவை இங்கு வெளியிடுகிறேன்.
பொதுமக்கள் அளிக்கின்ற புகார்
  • உங்களில் ஒருவர் அரசு அதிகாரியின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளிப்பதாக இருந்தால், 293, எம்.கே.என். ரோடு, ஆலந்தூர், சென்னை - 600 016 என்ற முகவரியில் செயல்பட்டு வருகின்ற லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரடியாக பதிவுத்தபால் மூலம் அதனை அனுப்புங்கள்.
  • ஏனென்றால், உங்கள் மாவட்டத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நீங்கள் நேரடியாக சென்று புகார் அளித்தாலும், அது சென்னையிலுள்ள இயக்குநர் அலுவலகத்திற்கு அவர்களால் அனுப்பப்பட்டு அவர் எடுக்கின்ற முடிவின்படி அதன்பிறகே உத்தரவு அவர்களுக்கு பிறப்பிக்கப்படுகிறது.
  • ஆகையால், நீங்கள் நேரடியாக சென்னைக்கு புகாரை அனுப்பினால், காலதாமதத்தை தவிர்க்கலாம்.
  • புகார்மனுவில் இருக்கின்ற உங்களது முகவரி மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கண்டிப்பாக உங்களது செல்போன் எண்ணை அதில் குறிப்பிட வேண்டும். இரண்டு தொடர்பு எண்கள் இருந்தால், அவற்றையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.
  • புகாரில் உங்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதிகாரிக்கு புகார் நகலை அனுப்பும் தவறை கண்டிப்பாகச் செய்யாதீர்கள். சிலர் இதனை தைரியம் என்றும், இதனால் அந்த அதிகாரி பயப்பட்டு தன்னைத் தேடி வருவார் என்றும் தவறாக நினைக்கிறார்கள்.
  • அது அந்த அதிகாரிக்கு விழிப்புணர்வை தோற்றுவிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு உங்கள் மீது ஒரு கெட்ட அபிப்பிராயத்தையும் ஆரம்பத்திலேயே ஏற்படுத்திவிடும்.
  • புகார்தாரர் கடைசி வரையிலும் நமக்கு ஒத்துழைப்பு அளிப்பார்! என்று உங்களது ஒவ்வொரு நடவடிக்கையும் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது.
  • நீங்கள் அனுப்புகின்ற புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியின் பெயர், அவரது பதவி, அவர் பணியாற்றுகின்ற அலுவலக முகவரி ஆகியவற்றை மிகத் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
  • அவர் செய்துள்ள குற்றம் பற்றியும், அது நடைபெற்ற காலம், இடம் ஆகியவற்றையும் குறிப்பிட்டு அதற்குண்டான ஆவண நகல்களையும் புகாருடன் வரிசையாக இணைக்க வேண்டும்.
  • ஆதாரம் இல்லாமல் புகார் அனுப்பினாலோ, யூகத்தின் அடிப்படையில் புகார் அனுப்பினாலோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.
முதல் நிலை விசாரணை (Preliminary Enquiry):
  • உங்களது புகார் இயக்குநர் கையில் கிடைத்தவுடன் அவர் அதனை படித்து பார்த்து, புகாருடன் இணைக்கப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்து, குற்றம் நடைபெற்று இருக்கிறது; நாம் நடவடிக்கை எடுக்கலாம்! என்று திருப்தி அடைந்தால், உங்களது புகார் நகலை மட்டும் நீங்கள் வசிக்கின்ற பகுதியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அவர் அனுப்பி வைப்பார்.
  • அது கிடைத்தவுடன், உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இருந்து உங்களது செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்களை ஒரு நாளில் விசாரணைக்கு அழைப்பார்கள்.
  • அவர்கள் அழைத்தவுடன் நீங்கள் உடனே விசாரணைக்கு சென்றால், அவர்களுக்கு உங்கள் மீது முதற்கட்ட நம்பிக்கை பிறக்கும் என்பதை மறக்காதீர்கள்.
  • அந்த விசாரணையில் உங்கள் புகார் நகலை காண்பித்து, நீங்கள்தான் புகார்தாரரா? இது நீங்கள் அனுப்பிய புகார்தானா? என்பதை உங்களிடம் உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.
  • ஏனென்றால், யாரோ ஒருவரது உண்மையான பெயர், முகவரி, செல்போன் எண்னை குறிப்பிட்டு, பொய்யான கையெழுத்து போடப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
  • இந்த விசாரனை முடிந்தவுடன் அவர்களால் அது பற்றிய அறிக்கை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்படும்.
விரிவான விசாரணை (Detailed Enquiry):
  • முதற்கட்ட விசாரணை முடிந்து அதில் திருப்தி அவர்களுக்கு ஏற்பட்டவுடன் விரிவான விசாரணைக்கான பணிகள் ஆரம்பமாகும்.
  • உதாரணமாக ஒரு அதிகாரி தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார் என்பது பற்றிய புகாராக இருந்தால், அவரது பணியிடத்து அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி அவர் தனது அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் குறித்து அளித்துள்ள அறிக்கைகளை பெறுவார்கள்.
  • பதிவுத்துறைக்கு கடிதம் அனுப்பி அவரது பெயரில், அவரது நெருங்கிய உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ள அசையாச் சொத்துக்கள் குறித்த அறிக்கைகளை பெறுவார்கள்.
  • அதனையும், தாங்கள் புகாரில் அனுப்பிய ஆவணத்தையும் ஒப்பிட்டு பார்த்து அதற்கு தகுந்தாற்போல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடரும்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 18.05.2021 

No comments:

Post a Comment