disalbe Right click

Showing posts with label அரசாணை. Show all posts
Showing posts with label அரசாணை. Show all posts

Thursday, June 6, 2019

24 மணி நேரமும் இனிமேல் கடை - அரசாணை.


24 மணி நேரமும் இனிமேல் கடையை திறந்து வைக்கலாம்.
தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பைகளை அதிகரிக்கும் விதமாக தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறந்திருக்க அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
இந்த அரசாணை 11.07.2019-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இது அமுலில் இருக்கும். இதன்படி கடைகள், தொழில் நிறுவனங்கள், உணவகம், விடுதிகள், திரையரங்குகள் ஆகிய அனைத்துமே வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கலாம்.
அரசாணையின் முக்கிய அம்சங்கள்
⧭ ஒவ்வொரு வேலைக்காரருக்கும் சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்.
⧭ 'பார்ம் எஸ்' என்ற விண்ணப்பத்தின் மூலம் ஒவ்வொரு வேலைகாரரைப் பற்றிய தகவல்களை உரிமையாளர் பெற வேண்டும்.
⧭ ஒவ்வொரு நாளும், இன்று வேலை செய்பவர்கள் யார்? விடுமுறையில் இருப்பவர் யார் என்ற தகவலை அந்தந்த நிறுவனங்கள் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும்.
⧭ ஒரு வேலையாளை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த முடியும். ஒரு வேளை கூடுதல் நேரம் அவரை வேலைக்கு பயன்படுத்த வேண்டியது இருந்தால், அந்த வேலைக்காரரிடம் எழுத்துப்பூர்வ அனுமதியை நிறுவனம் முன்கூட்டியே பெறவேண்டும்.
⧭ விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்கான நேரத்தை விடகூடுதல் நேரமோ வேலையாட்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் அந்த நிறுவன உரிமையாளருக்கு எதிராகவோ அல்லது மேலாளருக்கு எதிராகவோ சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
⧭ வழக்கமாக வேலை செய்யும் 8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் வேலையாட்கள் விருப்பப்பட்டு வேலை செய்தால் அவர்களது வங்கி கணக்கில் தான் அந்த பணத்தை நிறுவனங்கள் சேர்க்க வேண்டும்.
⧭ வேலையாட்களுக்கு ஓய்வு அறை, குளியல் அறை,பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் அந்தந்த நிறுவனத்தில் இருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 10.30 மணி நேரத்திற்கு அதிகமாகவோ அல்லது வாரத்திற்கு 57 மணி நேரத்திற்கு அதிகமாகவோ ஒரு வேலைக்காரரிடம் வேலை வாங்கக்கூடாது. 
பெண் வேலையாட்களுக்கான விதிமுறைகள்
⧭ இரவு 8 மணி வரை மட்டுமே பெண்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்
⧭ ஒரு வேளை பெண்கள் இரவில் வேலை செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி எழுதி வாங்க வேண்டும். மேலும், அவர்களுக்கு இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த நிறுவனங்கள் செய்து கொடுக்க வேண்டும்..
⧭ ஷிப்ட் அடிப்படையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு, அந்த நிறுவனத்தின் மெயின் நுழைவு வாசல் வரை வாகன வசதிகளை அந்த நிறுவனம் கட்டாயம் அளிக்க வேண்டும்.
⧭ பாலியல் ரீதியான தொந்தரவுகள் இல்லாமல் இருக்க கட்டாயம் பெண்கள் தலைமையிலான புகார் அளிக்கும் குழு ஒன்றை அந்தந்த நிறுவனத்தில் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
மேலே சொன்ன விஷயங்களில் கவனமாக இருப்பதை நீங்கள் உறுதி செய்தால், 24 மணிநேரமும் கடையை அல்லது நிறுவனத்தை திறக்க அனுமதி வேண்டி தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்.
அவர்கள் நேரில் வருகை தந்து உங்களது கடையை அல்லது நிறுவனத்தை ஆய்வு செய்து 24 மணி நேரமும் திறக்க அனுமதிப்பார்கள்.
Image may contain: text

No photo description available.

Related image

No photo description available.


****************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி – 06.06.201

Monday, August 27, 2018

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை
அரசு அலுவலர்கள் என்ன செய்ய வேண்டும்?
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் அளிக்கப்படுகின்ற மனுக்கள் மீது அந்த அலுவலகத்திலுள்ள அதிகாரியால் எத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்? என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாத நேரங்களில் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்றும் சில திருத்தங்களை  தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத் (ஏ) துறை அரசாணை (எண்:73) சமீபத்தில் வெளியிட்டுள்ளது.  
அலுவலக நடைமுறை நூல் - அத்தியாயம் 22 - மனுக்கள் - அனுப்புதல் & முடிவு செய்தல்
➽  குறை களைவு மனுக்கள் பெறப்பட்ட மூன்று நாட்களுக்குள் அந்த மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு, மனுதாரருக்கு உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.
➽      குறை களைவு மனுக்கள் பெறப்பட்ட நாளிலிருந்து அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் குறைகள் களையப்பட வேண்டும். 
➽     மனுக்களை அனுப்பியவர்கள்  அரசுத்துறை அலுவலர்களை அணுகி  கேட்கும்போது, அவர்களது குறை களைவு மனுக்களின் மீதான நடவடிக்கை தொடர்பான நிலையினை அவர்களிடன் தெரிவித்தல் வேண்டும்.
➽    ஏதேனும் காரணங்களால்,  மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க கூடுதலாக அவகாசம் தேவைப்படும்போது, அதுபற்றிய நீட்டிக்கப்பட்ட கால அளவு குறித்து எழுத்துபூர்வமாக மனுதாரருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
➽    மனுதாரரின் மனுக்களை ஏற்க இயலாது என்றால், அதற்குரிய காரணத்துடன் கூடிய பதிலை மனுதாரருக்கு ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும். 
ஆளுநர் அவர்களது ஆணையின்படி அரசு தலைமைச் செயலாளர் இதனை வெளியிட்டு அனைத்து அரசுத்துறைகளுக்கும் அனுப்பியுள்ளார்.
அரசாணையின் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.



*********************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 28.08.2018  

Tuesday, November 28, 2017

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை - அரசாணை

அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்று கடந்த 2017 செப்டம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இது தொடர்பாக தமிழக பணியாளர், நிர்வாக சீர்திருத்த துறை செயலர் ஸ்வர்ணா அவர்கள், ”அரசு ஊழியர்கள் அலுவலக நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும். இல்லாத பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்!” என்றும் உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
அரசு அலுவலகங்களில் இடைத்தரகர்களின் இடையூறு இல்லாமல், அரசு ஊழியர்களை நேரடியாக பார்த்து தங்களுக்குத் தேவையான அரசு சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும், லஞ்சம் பெறுகின்ற அரசு ஊழியர்கள் மீது புகார் அளிக்கும் போது, அந்த ஊழியரின் பெயர் மற்றும் பதவியை யாரிடமும் விசாரிக்காமல், யாருக்கும் தெரியாமல் புகாரில் குறிப்பிட முடியும்! என்றும் பொது மக்கள் இந்த உத்தரவைக் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.
கானல் நீரான உத்தரவு
இது போன்ற ஒரு உத்தரவை ஏற்கனவே தமிழக அரசு கடந்த 09.01.2014 அன்று போட்டு அதற்கு ஒரு அரசாணையை வெளியிட்டு இருந்தது. அதன் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெளியிட்ட உத்தரவையே அரசு இன்னும் செயல்படுத்தவில்லை. வெளியிட்ட அரசாணைக்கும் ஒரு மதிப்பு இல்லை. இந்த நிலையில் அடையாள அட்டை சம்பந்தமாக அதே போன்று மற்றொரு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Image may contain: text
 
அரசு உத்தரவை, அரசாணையை அரசு ஊழியர்களே மதிக்காமல் தங்கள் இஷ்டம் போல் செயல்பட்டு வருவது வேதனைக்குரிய விஷயமாகும். இதன் மீது கவனம் செலுத்தி அனைத்து அரசு ஊழியர்களும் பணி நேரத்தில் அடையாள அட்டை அணிவதற்கு தமிழக அரசு உரிய கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் எதிர்ப்பார்க்கிறார்கள்.
**************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Tuesday, November 7, 2017

மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு

சென்னை: அரசு பணியிடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, 4 சதவீதமாக உயர்த்தி வழங்க, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில், 1981ல் இருந்தே, மாற்று திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவற்றில், பார்வை குறைபாடு உடையவர், செவித்திறன் குறைபாடு உள்ளவர், கை, கால் பாதிக்கப்பட்டோருக்கு, தலா, 1 சதவீதம் பணியிடம் ஒதுக்கப்பட்டு வருகிறது.மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் - 2016ன் படி, அரசு பணியிடங்களில், 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில், 3 சதவீத ஒதுக்கீட்டை, 4 சதவீதமாக, தமிழக அரசு பணிகளில் உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த ஒதுக்கீட்டில், பார்வை குறைவுடையோருக்கு, 1 சதவீதம்; செவித்திறன் குறைபாடு உள்ளவர், 1 சதவீதம் வழங்கப்படும். கை, கால் பாதிக்கப்பட்டோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், குள்ளத்தன்மையுடையோர், அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு, 1 சதவீதம் வழங்கப்படும்.
புற உலகு சிந்தனையற்றவர், மன நலம் பாதிக்கப்பட்டவர் உள்ளிட்டோருக்கு, 1 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த 4 சதவீதம் இட ஒதுக்கீடானது, அனைத்து அரசு பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனம், வாரியம், உள்ளாட்சி அமைப்பு, கல்வி நிறுவனம், அரசு நிதியுதவி பெறும் அமைப்புகளுக்கு பொருந்தும்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் -30.05.2017