disalbe Right click

Showing posts with label ஆதார் அட்டை. Show all posts
Showing posts with label ஆதார் அட்டை. Show all posts

Thursday, January 4, 2018

ஆதார்' கைவிரல் ரேகை பாதுகாக்க......

இப்போது 'ஆதார்' பதிவேட்டில் உள்ள, நமது கைவிரல் ரேகையை பாதுகாக்க,  ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.
நமது நாடு முழுவதும், வங்கிக் கணக்கு, அலைபேசி, எரிவாயு இணைப்பு, வாக்காளை அட்டை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணி, வேகமாக நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்கள், போலிகளை ஒழிப்பதற்காக சேகரிக்கப்பட்டாலும் அவை கசிந்தால், பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்ற எண்ணம் கொண்ட சில மக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
500 ரூபாய் கொடுத்தால், ஒருவரது ஆதார் குறித்த அனைத்து விபரங்களையும், சிலர் விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆனால், அதை மத்திய அரசு மறுத்துள்ளது
பயோமெட்ரிக் டேட்டா
ஆதாரில், 'பயோமெட்ரிக் டேட்டா' என்ற தகவல் தொகுப்பில், ஒருவரது கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. அதை, யாரேனும் போலியாக தயாரித்து, அதன் வாயிலாக பயனடைய வாய்ப்புள்ளது என்ற அச்சம் பொதுமக்களிடையே உள்ளது.  அதனைப் போக்கவும், தற்போது ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
செக்யூர் பயோமெட்ரிக்ஸ்
ஆதார் அமைப்பின், www.uidai.gov.in என்ற, வலைதளத்திற்குள் நீங்கள் நுழைந்ததும், 'ஆதார் சர்வீசஸ்' என்ற தலைப்பின் கீழ், 'செக்யூர் பயோமெட்ரிக்ஸ்' என்ற வார்த்தையை பார்க்கலாம். அதன் அருகில், 'லாக்/அன்லாக் பயோமெட்ரிக்ஸ்' என்ற இடத்தில், நீங்கள் 'கிளிக்' செய்து,  உரிய இடத்தில், உங்களது ஆதார் எண்ணை பதிவிட்டால், உங்களது பதிவு செய்யப்பட்ட அலைபேசிக்கு, ஒரு (OTP) 'பாஸ்வேர்டு' வரும். அதை உரிய இடத்தில் பதிவிட்டால், உங்கள், பயோமெட்ரிக் கைவிரல் ரேகை உடனே, 'லாக்' ஆகிவிடும். அதற்குப் பிறகு அதனை யாரும் பார்க்கவே முடியாது.
அதனை நீங்களே கூட, பயன்படுத்த நினைத்தாலும் பயன்படுத்த முடியாது. மீண்டும் அதனை நீங்கள் செயல்படுத்த நினைத்தால் மேற்கண்ட இணையதளம் சென்று, அதே வழிமுறையை பின்பற்றி, 'அன்லாக்' செய்ய வேண்டும்.
*************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 05.01.2018 

சிம் கார்டு ஆதார் எண் இணைப்பு

மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மூன்று புதிய வழிமுறைகளை 01.01.2018 முதல் மத்திய தொலைத்தொடர்பு துறை செயற்படுத்தி  உள்ளது
மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு
மத்திய அரசின் அறிவித்துள்ளபடி தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து மொபைல் எண்களுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில்,  பொது மக்கள் தற்போது ஆதார் கார்டு எண்ணை இணைக்க தங்களுக்கு அருகாமையில் உள்ள தொலைத்தொடர்பு ரீடெயிலரிடம் சென்று இணைக்கும் வகையிலான வழிமுறை பின்பற்றப் பட்டு வருகிறது.
01.01.2018  முதல், ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு மூன்று விதமான சுலபமான வழிமுறைகளை செயற்படுத்தி உள்ளது.
1 . முதலாவதாக, மொபைல் எண் வாயிலாக IVRS எனப்படும் Interactive Voice Response System அழைப்பு வாயிலாக ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
2 . இரண்டாவதாக OTP எனப்படுகின்ற ஒரு முறை கடவுச்சொல் கொண்டு மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட உள்ளது.
3.  மூன்றாவதாக ஆதார் எண்ணை இணைக்க பிரத்தியேகமான ஆப் ஒன்றை செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.
பிஎஸ்என்எல், வோடபோன், ஏர்டெல், ஏர்செல் மற்றும் ஐடியா போன்ற பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆதார் எண் இணைக்க மேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற உள்ளது.
இதுவரையில் அருகாமையில் உள்ள ஸ்டோர்களுக்கு சென்று ஆதார் எண்னை இணைக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இனி அது தேவை இல்லை. கீழ்கண்ட வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் இருந்த இடத்தில் இருந்தே உங்கள் மொபைல் சிம்முடன் உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம். 
  1.  முதலில் உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற Interactive Voice Response System  எண்ணுக்கு கால் செய்யுங்கள்.
  2.  தொடர்பு கிடைத்தவுடன் உங்களுக்கான மொழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  3. அதன் பிறகு நீங்கள் இந்திய பிரஜையா அல்லது வெளிநாட்டவரா என்ற கேள்விக்கு பதிவு செய்ய வேண்டிய எண்னை அழுத்த வேண்டும்.
  4. உங்களுடைய ஆதார் எண் இணைக்க என்பதை அதில் உறுதி செய்து கொள்ளுங்கள்.
  5.  உங்கள் ஆதார் எண் நீங்கள் மொபைலில் டைப் செய்த பிறகு உங்கள் ஆதார் எண்னை உறுதி செய்வதற்காக உங்களது மொபைல் எண்னுக்கு OTP மெசேஜ் வரும்.  
  6.  அதனை நீங்கள் உறுதிப்படுத்திய பிறகு உங்களது ஆதார் எண் சிம் கார்டுடன்    இணைக்கப்பட்ட எஸ்எம்எஸ் வந்து சேரும்.
குறிப்பு : உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளபடி ஆதார் எண்களை மொபைல் எண்ணுடன் இணைக்க வரும் 06.02.2018 வரை கால அவகாசம் உள்ளது.
********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 05.01.2018 

Saturday, June 24, 2017

உங்கள் ஆதார்கார்டு செல்லாமல் போக வாய்ப்பிருக்கு!

உங்கள் ஆதார்கார்டு செல்லாமல் போக வாய்ப்பிருக்கு!
இந்தியாவில் இப்போது ஆதார் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக அனைவரும் வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறலாம். ஆம், இன்று அரசு மானியங்கள் முதல் நிதி பரிவர்த்தனைகள் என அனைத்திற்கும் ஆதார் கட்டாயம் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.
சரி, உங்களிடம் ஆதார் கார்டு இருந்தாலும் அது செல்லாத கார்டாக மாற வாய்ப்புள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே எதனால் உங்கள் ஆதார் கார்டு செல்லா கார்டாக மாறும்?, எப்படி அதனை மீண்டும் முறையாக இயங்க வைப்பது? என்று இங்குப் பார்ப்போம்.
எப்போது உங்கள் ஆதார் கார்டு செயல்படாமல் போகும்?
உங்கள் ஆதார் கார்டை தொடர்ந்து மூன்று வருடங்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அதாவது வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு, குடும்ப அட்டை உள்ளிட்டவையில் இணைக்கப்படாமல் இருந்தால் அல்லது பிஎப் உள்ளிட்ட கணக்குகளில் இணைக்காமல் இருந்தால் ஆதார் கார்டு செயல்படாது.
ஆதார் கார்டு செயல்படுகின்றதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது?
முதலில் ஆதார் இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். அதில் ஆதார் சேவைகள்(Aadhaar services) டேபின் கீழ் உள்ள ஆதார் எண்ணைச் சரிபார்க்கவும்(Verify Aadhaar Numbe) என்ற தெரிவை தேர்வு செய்ய வேண்டும்.
ஆதார் இணையதளம் செல்ல இங்குக் கிளிக் செய்க. www.uidai.gov.in
செயல்படுகின்றதா என்று சரிபார்த்தல்
ஆதார் எண்ணைச் சரிபார்க்கும் பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சாவை உள்ளிட்டுச் சரிபார்க்கும் என்ற பொத்தானை அலுத்த வேண்டும். அப்படிச் செய்யும் போது ஆதார் எண் செயல்படும் போது பச்சை நிற டிக் மார்க்கும் இதுவே இயங்கவில்லை என்றால் சிவப்பு நிற கிராஸ் மார்க்கும் வரும்.
ஆதார் கார்டு செயல்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் ஆதார் கார்டு செயல்படவில்லை என்றால் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் சரியான ஆவணங்களுடன் செல்ல வேண்டும். உங்களுக்கு அருகில் எங்கு ஆதார் மையம் உள்ளது என்று கண்டறிய இங்குக் கிளிக் செய்க. www.uidai.gov.in
இங்கு என்ன செய்வார்கள்?
ஆதார் கார்டினை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்த பிறகு உங்கள் பையோமெட்ரிக் தரவுகளை உள்ளிட வேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
ஆதார் கார்டின் விவரங்களைப் புதுப்பித்துச் செயல்படுத்த 25 ரூபாய்க் கட்டணமாக வசுலிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் ஆதார் விவரங்களைப் புதுப்பித்துச் செயல்படுத்த விரும்பும் போது சரியான் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
கண்டிப்பாக ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டுமா?
ஆம், முன்பே நாம் அளித்த பையோமெட்ரிக் விவரங்களும், இப்போது புதிதாக நீங்கள் அளிக்கும் பையோமெட்ரிக் விவரங்களுடன் பொருந்துவதை வேண்டும். அப்படியானால் நீங்கள் கண்டிப்பாக ஆதார் உள்ளிட்டு மையத்திற்குச் செல்ல வேண்டும்.
நன்றி : குட்ரிட்டர்ன்ஸ் - தமிழ் - செய்திகள் - 23.06.2017

Monday, May 15, 2017

பான் அட்டை, ஆதார் எண்ணில் தவறுகளை களைய புதிய வசதி

பான் அட்டை, ஆதார் எண்ணில் தவறுகளை களைய புதிய வசதி
வருமான வரித்துறை அறிமுகம்
பான் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளில் தவறான விவரங்கள் இருந்தால் ஆன்லைன் மூலமாக சரிசெய்து கொள்ளும் வசதியை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைத்து கொள்ளும் வசதியை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக இரண்டு இணையதள ஹைப்பர்லிங்கை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. ஒன்றில் ஆதார் எண்ணோடு பான் எண்ணை இணைக்கும் வசதி செய்துதரப்பட்டுள்ளது. மேலும் பான் எண்ணில் ஏதேனும் மாறுதல் செய்யவேண்டுமென்றாலும் அல் லது புதிய பான் எண்ணுக்கு விண்ணபிக்க வேண்டுமென்றாலும் இந்த இணைப்பை பயன்படுத்தலாம்.
ஆதார் அட்டையில் பெயர் அல்லது மற்ற விவரங்கள் தவறாக இருந்தால் சரிசெய்து கொள்வதற்கு இரண்டாவது இணைப்பை பயன்படுத்தலாம்.
ஆதார் அட்டையில் நீங்கள் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ஸ்கேன் செய்து ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஏற்கெனவே 1.22 கோடி பேர் ஆதார் எண்ணோடு பான் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் 25 கோடி மக்கள் இந்தியாவில் பான் எண் வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 111 கோடி பேர் இந்தியாவில் ஆதார் அட்டை வைத்துள்ளனர். வரித்துறை தகவலின்படி 6 கோடி பேர் தற்போது வருமான வரித்தாக்கல் செய்துள்ளனர்.
நிதி மசோதா 2017-18ன் படி வருமான வரித் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் என்று கூறப்பட்டது. மேலும் ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பதற்கான வசதியை கடந்த வாரம் வரித்துறை அறிமுகம் செய்தது. ஆதார் எண், பான் எண் ஆகிய இரண்டிலும் ஒரே மாதிரியான விவரங்கள் இருக்க வேண்டும். ஒரே மாதிரியான விவரங்கள் உள்ளனவா என்பதை தனிநபர் அடையாள ஆணைய விவரங்களோடு சரிபார்க்கப்படும். சரிபார்ப்புக்குப் பிறகு ஆதார் எண்ணையும் பான் எண்ணையும் இணைப்பது முடிவடையும். ஒருவேளை விவரங்கள் பொருந்த வில்லையென்றால் ஆதாரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைத் தேர்வு செய்து அதை மொபைல் மூலம் உறுதி செய்துகொள்ள முடியும்.
https://incometaxindiaefiling.gov.in
நன்றி ; தி இந்து தமிழ் நாளிதழ் - 15.05.2017

Sunday, April 30, 2017

ஆதார் ஏன் அவசியமாகிறது?

ஆதார் ஏன் அவசியமாகிறது?

இன்றைய தேதியில் நீங்கள் இந்தியாவில் வாழ எது அவசியமோ இல்லையோ ஆதார் அவசியம். ரேஷனில் அரிசி வாங்குவது முதல் வருமான வரி கட்டுவது வரை, பள்ளி அட்மிஷன் முதல் மருத்துவமனை அட்மிஷன் வரை, ரயில் டிக்கெட்டிலிருந்து விமான டிக்கெட் வரை… ஆதார் அவசியமாக்கப்படுகிறது.
``ஆதார் இல்லாத மனிதன் அரைமனிதன்'' என்று எதிர்காலத்தில் பள்ளிகளில் பாடமெல்லாம் நடத்துகிற வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த 12 இலக்க ஒற்றை அடையாள எண், இந்தியர்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவி நிற்கிறது.
தனிமனிதனின் கனவு!
இந்தியா குறித்த கனவு நம் எல்லோருக்குமே இருக்கிறது. சிலர் அதை நூலாகவும் எழுதியிருக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் தாங்கள் காணும் கனவை செயல்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. நந்தன் நிலக்கனிக்கு அது கிடைத்ததால் உருவானதுதான் இந்த `ஆதார்'.
இந்தியாவின் மிக வெற்றிகரமான ஐ.டி நிறுவனம், இன்ஃபோசிஸ். இதன் இணை நிறுவனர், நந்தன் நிலக்கனி. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்; மும்பை ஐ.ஐ.டி-யில் எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங் படித்தவர். 2008-ம் ஆண்டில் இவர் எழுதிய நூல், ‘Imagining India: The Idea of a Renewed Nation’. இதில் அவர், ‘விசேஷ அடையாளம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்திருந்தார்.
‘ஒவ்வொருவருக்கும் ஒரு எண் கொடுத்து, அந்த எண்ணை அடையாளமாக வைத்து லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் துவக்கலாம். இதன்மூலம் அரசின் சேவைகளைச் செழுமையாக்கி, ஊழலைக் குறைத்து இந்தியப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லலாம்’ என்பது அவரது சிம்பிள் ஐடியா.
2009-ம் ஆண்டு இந்த நூல் வெளியான சில வாரங்களில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து நிலக்கனிக்கு அழைப்பு வந்தது.
‘`அரசின் மானியங்களும் நலத்திட்ட உதவிகளும் நேரடியாக மக்களைச் சென்றடைவதற்கு, ஓர் அடையாள எண் உருவாக்கலாம். இதைச் செய்ய இருக்கும் Unique Identity Authority of India – அமைப்புக்கு நீங்கள் தலைமையேற்க வேண்டும்’ என்பது பிரதமரின் நேரடி வேண்டுகோள். அதை மறுக்காமல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறி ஆணையத்தின் பொறுப்பை உடனே ஏற்றுக்கொண்டார். ஆதார் பிறந்தது!
நீதியின் முட்டுக்கட்டை!
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆதார் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்த பி.ஜே.பி, ஆட்சிக்கு வந்தபிறகு, காங்கிரஸைவிட வேகமாக, அதிகமாக, பரவலாக, ஆழமாக, தீவிரமாக இதை அமல்படுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றங்களின் தீர்ப்புகளைக்கூட மத்திய அரசு கண்டுகொள்வதில்லை.
2013-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் ஓர் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.
* ஆதார் எண் இல்லாத காரணத்தால் ஒரு குடிமகனுக்குக் கிடைக்க வேண்டிய பலன்களை மறுக்கக் கூடாது.
* ஆதார் கட்டாயம் என எந்தெந்த அதிகார மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பினீர்களோ, அவர்களுக்கெல்லாம் தகவல் தெரிவித்து, அந்த அறிவிப்பை மாற்றி அமைக்க வேண்டும்.
* ஆதார் எண் பெறுவது சட்டப்படி கட்டாயமில்லை என்று மத்திய அரசு ஊடகங்கள் வாயிலாக பரந்த அளவில் விளம்பரம் செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை, இதையெல்லாம் செய்யக்கூடாது என உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
`ஆதார் எண் பெறுவது மக்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமே தவிர, அதைக் கட்டாயமாக்கக் கூடாது’ என்றும் அறிவுரை சொன்னது உச்ச நீதிமன்றம். ஆனால், இது எதுவுமே காதில் விழாததுபோல் நடிக்கிறது மத்திய அரசு.
தகவல்கள் யாருக்கு?
இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, தேவைப்படுபவர்களுக்கு தன் சேவைகளை அளிப்பது அரசின் கடமை. ``குடும்ப வருமானம், பாலினம், வயது, உடல் குறைபாடுகள் போன்ற விவரங்களின் அடிப்படையில்தான் சேவைகள் வழங்கப்பட வேண்டுமே தவிர, மக்களின் விரல் ரேகை, கருவிழிப்படலம் போன்ற பயோ மெட்ரிக் (உயிரியளவு) விவரங்களின் அடிப்படையில் தருவது சட்டவிரோதமானது’’ என்று உச்ச நீதிமன்றத்தில் ஆதார் திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் வாதிடுகின்றனர்.
இப்படிப்பட்ட உயிரியளவுத் தகவல்களை படமெடுக்கும் வேலையை தனியார் நிறுவனங் களிடம் அரசு விட்டிருக்கிறது. இதன்மூலம், அவற்றைப் பாதுகாக்கும் ட்ரஸ்டி என்கிற கடமையிலிருந்து அரசு தவறுகிறது. உயிரியளவு உட்பட தனிமனிதர்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை வாங்குவதும் விற்பதும் இன்றைய உலகில் பெரிய தொழிலாக மாறிவருகிறது. நம்மைக் குறித்த தகவல்கள் உலகில் எங்கெல்லாம் செல்கின்றன, யார் யார் கைகளில் அவை இருக்கும் என்பதெல்லாம் நம் கட்டுப்பாட்டில் இல்லை.
மக்கள் படும் பாடு
ஆதார் எண் பெற்ற ஏழைமக்கள் படும்பாடு சொல்லி மாளாது. ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களிலுள்ள பல ரேஷன் கடைகளில் விரல்ரேகைப் பதிவு இயந்திரங்கள் (fingerprint reader) பொருள் பெறச் செல்வோரின் கைரேகைகளை ஏற்றுக்கொள்ளாததால் சுமார் 30 சதவிகித மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரேஷன் பெறத் தகுதியானவர்களுக்குக்கூட ஆதார் இல்லாததால் பொருள்கள் மறுக்கப் படுகின்றன். சில கிராமங்களில் மின்சாரம், இணையத் தொடர்பு கிடைக்காததால் பொருள்கள் வாங்க முடியவில்லை. அரசின் தவறுகளுக்கு ஏழைகள் பாதிக்கப்படுவது என்ன நியாயம்? இன்று இந்தியாவில் பெரும்பாலான ஏழைகள் உயிர் வாழ்வதே, இந்த ரேஷன் கடைகளால்தான். ஏற்கெனவே ஏபில், பிபில் என்று அவர்களைப் பிரித்து, உணவுப் பொருள்களின் அளவையும் குறைத்து வயிற்றில் அடித்துக்கொண்டிருக்கும் அரசுக்கு, இப்போது ஆதார் அட்டையையும் வசதியான இன்னொரு மறுப்புக் கருவியாக மாற்றி இருக்கிறார்கள்.
ஒரு பேட்டியில் இதைப் பற்றிய கேள்வி எழுந்தபோது, ‘`ஆதார் முறையில் 5 சதவிகிதம் தவறு நடக்க வாய்ப்பிருக்கிறது’’ என்று பதற்றமே இல்லாமல் சொல்லி இருக்கிறார் நிலக்கனி. ஆனால், வெறும் ஐந்து சதவிகிதத் தவறு என்பது, இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் கிட்டத்தட்ட ஆறு முதல் ஏழு கோடி பேரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிடும் என்பதுதான் உண்மை!
சமீபத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்ப் பெறப்பட்ட தகவல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 85 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆதார் அடையாளங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன என்பதே அந்தத் தகவல். தகவல்கள் புதுப்பிக்கப்படாததே இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. ஆதார் அமைப்பில் ஏற்படும் தவறுகளை சரி செய்யவும், தகவல்களைப் புதுப்பிக்கவும் தேவையான அளவுக்கு ஆள்களோ, தொழில்நுட்பமோ, பிற வசதிகளோ நம் அரசிடம் இல்லை என்பதே கசப்பான உண்மை!
ராஜஸ்தானில் தபால் அலுவலகம் வாயிலாக பென்ஷன் பெறும் ஆயிரக்கணக்கான முதியோரும் பெண்களும், வங்கிக் கணக்கு தொடங்கி ஆதார் நம்பரைப் பெற்று அதனுடன் இணைக்காததால் பென்ஷன் கிடைக்காமல் தவிக்கின்றனர். ஆதார் அட்டை இல்லாததால் எவ்வளவு பேர் நலத்திட்டங்களிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள் என்கிற தகவல்கூட அரசிடம் இல்லை.
அடையாளம் வேண்டாம்!
தலித்துகள், ஆதிவாசிகள் அடையாளம் தொடர்பான ஒரு முக்கிய பிரச்னையை எழுப்புகிறார், துப்புரவுப் பணியாளர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் பெஜவாடா வில்சன். துப்புரவுப் பணியாளர்கள், செய்யும் தொழிலை அடையாளமாக வைத்து ஏற்கெனவே, ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். ``இந்த அடையாளத்தை அழிக்கும் தொழில்நுட்பம்தான் உடனடித் தேவை’’ என்கிறார் வில்சன். ‘`துப்புரவுப் பணியாளர்களைப் பற்றி முறையான சர்வேகூட செய்யாத அரசுகள் ஏன் எங்களுக்கு என்று ஒரு தொழில்நுட்பரீதியாக மாற்றமுடியாத அடையாளத்தைக் கொடுக்க இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றன?” என்கிறார் அவர். ஆதாருக்கு எதிரான உச்சநீதி மன்ற வழக்கில் இவரும் ஒரு மனுதாரர்.
தனியாரிடம் தகவல்கள்
நம்மைப் பற்றிய ஆதார் தகவல்கள் ஏன் தனியார் நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும் என்கிற அடிப்படையான கேள்விக்கு இதுவரை உருப்படியான பதில் இல்லை. புதிய கைபேசி இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. புதிதாக ஜியோ சிம் கார்டு வாங்கும்போது உங்கள் கைரேகையை உறுதிசெய்ய ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயந்திரமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், புதிய இணைப்புப் பெறுபவரின் அடிப்படைத் தகவல்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கைக்குச் செல்கின்றன. ஒரு செல்போன் இணைப்புப்பெற தேவையான தகவல்களை மட்டும் அளிக்க வேண்டிய இடத்தில் நாம் ஏன் நம்முடைய ஒட்டுமொத்த விவரங்களையும் கொடுக்க வேண்டும்?
ஏன் இந்த அச்சம்?
ஆதார் சட்டம் குறித்த விவாதம் நாடாளுமன்ற மேலவையில் நடந்துகொண்டிருந்தபோதே ‘ட்ரஸ்ட் ஐடி’ என்கிற நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.``நீங்கள் வீட்டு வேலைக்கு அமர்த்த நினைக்கும் வேலைக்காரர், கார் ஓட்டுநர், டியூஷன் ஆசிரியர், பிளம்பர், எலெக்ட்ரிஷன் என வீட்டு வேலை செய்பவர்கள் பற்றிய விவரங்களை ஆதார் எண் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட மொபைல் ஆப் மூலம் உடனடியாக அறிந்து கொள்ளலாம்’ என்பதே அந்த விளம்பரம். ‘ஆதார் மையத்தின் தகவல் களஞ்சியம் ரகசியமானது, யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியாது என்கிற சட்டம் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறுவதற்கு முன்பே இப்படி ஒரு விளம்பரம் வந்தது எப்படி’ என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இப்படி ‘ஆதார் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு ஒரு தனிநபரின் முழுமையான பின்னணியை உங்களுக்குத் தருகிறோம்’ என்று மற்றொரு நிறுவனமும் விளம்பரம் செய்துள்ளது. இதுதான் ஆதாரின் எதிர்காலம். இதுதான் நம்மை அச்சமூட்டுகிறது.
தகவல்களை எங்கே வைத்திருக்கிறோம்?
அடுத்த முக்கியமான பிரச்னை, 120 கோடி இந்தியர்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களை ஆதார் ஆணையத்தின் ஒரே களஞ்சியத்தில் வைப்பது. ஆதார் தகவல் களஞ்சியம்தான் உலகத்திலேயே மிகப் பெரியதாக இருக்க முடியும். அமெரிக்காவின் உள்துறை அமைச்சகம் வைத்திருக்கும் களஞ்சியத்தைவிட இது 10 மடங்கு பெரியதாக இருக்கும். ஒரு மோசமான அரசுக்கு, குடிமக்களை வேவு பார்ப் பதற்கும், எதிர்ப்பாளர்களை முடக்குவதற்கும் இதைவிட சிறந்த ஆயுதம் இருக்க முடியாது. யூதர்களின் வீடுகளை இலக்கமிட்டுத் தாக்கிய ஹிட்லர் போன்றவர்களுக்கு நவீன தொழில்நுட்பம் வழங்கிய ஆயுதமாகக்கூட இதை மாற்றும் சாத்தியம் உள்ளது. அது தவிர, அந்நிய சக்திகள், ராணுவத் தாக்குதல் நடத்த நினைக்கும் நாடுகள் இந்தியாவை ஒரே சொடுக்கில் முடக்குவதற்கும் வாய்ப்பிருப்பதாக விவரமறிந்வர்கள் அஞ்சுகின்றனர்.
வேவு பார்க்கவா அரசு?
30 கோடி மக்களைக்கொண்ட அமெரிக்காவும், ஆறரைக் கோடி மக்களைக்கொண்ட பிரிட்டனும், இரண்டரைக் கோடி மக்களைக்கொண்ட ஆஸ்திரேலியாவும் தேசிய அளவிலான ஒற்றை எண் அடையாளத்தை உருவாக்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டன.
‘அதிக செலவாகும், தனிநபர் உரிமைக்கு ஊறு விளைவிக்கும்’ என்கிற இரண்டு காரணங்களைத் தான் இந்த நாடுகள் கூறியுள்ளன. ‘`இப்படிப்பட்ட திட்டத்தால், தனிமனித வாழ்க்கையில் அரசு ஊடுருவி அச்சுறுத்தும் நிலை ஏற்படும் '’ என்பது பிரிட்டன் அரசாங்கத்தின் கருத்து.
தொழில்நுட்பம் என்பது மக்களுக்கான கொள்கையின் வேலைக்காரனாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை கண்காணிக்கிற முதலாளியாகக் கூடாது. ஆதார் அதைத்தான் செய்கிறது. அதனால்தான், அது ஆபத்தானதாகப் பார்க்கப்படுகிறது!

ஆர்.விஜயசங்கர்
நன்றி : ஆனந்த விகடன் - 03.05.2017