disalbe Right click

Showing posts with label இந்திய சாட்சிய சட்டம். Show all posts
Showing posts with label இந்திய சாட்சிய சட்டம். Show all posts

Friday, April 28, 2017

சாட்சி கையெழுத்து போட்டால் சிக்கல் வருமா?


சாட்சி கையெழுத்து போட்டால் சிக்கல் வருமா? 
மீபத்தில் நில அபகரிப்பு புகாரில் மாட்டிக் கொண்டார் நண்பர் ஒருவர். யாரோ ஒருவர் போலியாக தயாரித்த ஆவணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டதுதான் நண்பர் செய்த தவறு. இதற்காக நீதிமன்றத்திலிருந்து அவரை விசாரிக்க அழைப்பு வர, நண்பரின் குடும்பமே மிரண்டு போனது. நல்லவேளையாக, அவருடைய வழக்கறிஞர் நண்பர்கள் சிலர் அவருக்குத் தைரியம் சொல்ல, நீதிமன்றத்திற்குச் சென்று, பதில் சொல்லிவிட்டு வந்தார். சாட்சி கையெழுத்து போட்ட இன்னொருவரோ, நீதிமன்ற விசாரணை என்றவுடன் ஊரை விட்டே ஓடிவிட்டார்.  
சாட்சி கையெழுத்து போடலாமா? கூடாதா? சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா? பிரச்னையில் மாட்டாமல் இருக்க வேண்டுமெனில் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பல கேள்விகளை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
கையெழுத்து கட்டாயம்
''சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் கையெழுத்து இட்டதற்கு சாட்சியாக இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான். அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் போடும் கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து.
பதிவுத் திருமணம், பத்திரப் பதிவு, உயில் எழுதுவது, பாகப்பிரிப்பு பத்திரம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து போடுவார்கள். பொதுவாக குறைந்தபட்சம் இரண்டு சாட்சி கையெழுத்து வாங்குவது வழக்கமாக உள்ளது. சில ஆவணங்களில் சாட்சி கையெழுத்தைக் கட்டாயமாக வைத்துள்ளது சட்டம். உதாரணமாக, உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து அவசியம்.
கட்டாயமில்லை
சில ஆவணங்களில் சாட்சி கையெழுத்து வாங்குவது சட்டப்படி கட்டாயம் இல்லை என்றாலும், தொன்றுதொட்டு வந்த பழக்கத்தால் சாட்சி கையெழுத்து போடப்படுகிறது. இந்த ஆவணங்களில் சாட்சி கையெழுத்து இல்லையென்றாலும் அந்த ஆவணம் செல்லுபடியாகும். இதற்கு உதாரணம் புரோநோட். பொதுவாக புரோநோட்டில் சாட்சி கையெழுத்து வாங்குவது வழக்கம். ஆனால், சட்டப்படி புரோநோட்டில் சாட்சி கையெழுத்து இல்லையென்றாலும் செல்லு படியாகும். பாதுகாப்பிற்காக சாட்சி கையெழுத்து வாங்கப்படுகிறது.
கேரண்டி VS சாட்சி கையெழுத்து
வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்பது கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில் கேரன்டி கையெழுத்து போட்டவர்தான் அந்த கடனை திரும்பச் செலுத்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடியாக கடன் வாங்கிய நபரை அணுகாமல் கேரன்டி கையெழுத்து போட்டவரிடமே கடனை கேட்க வங்கிக்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரன்டி கையெழுத்தின் சாராம்சம்.
ஆனால், சாட்சி கையெழுத்து அப்படியில்லை. எந்த ஆவணமாக இருந்தாலும் அந்த ஆவணத்தை எழுதிக் கொடுத்தவர் எனக்கு முன்பாகதான் கையெழுத்து போட்டார் என்பதை ஊர்ஜிதப் படுத்த கையெழுத்து போடுவதுதான் சாட்சி கையெழுத்து. கேரன்டி கையெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஆவணத்தில் தனக்கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட்டார்.
சாட்சி கையெழுத்து போடும் போது அந்த ஆவணத்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவணத்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக, உங்கள் வீட்டை போலியாக வேறு ஒரு நபர் விற்கிறார். அந்த ஆவணத்தில் சாட்சியாக உங்களிடமே கையெழுத்து வாங்குகிறார் எனில், நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டதனாலேயே அந்த வீட்டை விற்க நீங்கள் ஒப்புக் கொண்டதாக ஆகிவிடாது. நீங்கள் அந்த ஆவணத்தின் தரப்பினராக சட்டப்படி கருதப்பட மாட்டீர்கள்.
ஆனால், சில விதிவிலக்கான நேரத்தில் சாட்சி கையெழுத்து போடுபவருக்குச் சிக்கல் வரவாய்ப்பிருக்கிறது. அதாவது, நெருங்கிய உறவினர் தயாரித்த ஆவணத்தில் கையெழுத்து போடுகையில் அந்த ஆவணத்தில் இருக்கும் தன்மை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, ஒரு தந்தை தனது மகளுக்கு ஒரு சொத்தை செட்டில்மென்ட் செய்து கொடுக்கிறார் எனில், அப்போது தனது மகனை அந்த செட்டில்மென்ட் டாக்குமென்டில் சாட்சியாக கையெழுத்து போட வைக்கிறார். இந்த சூழ்நிலையில் அந்த மகன், 'அந்த டாக்குமென்டில் இருக்கும் தன்மை எனக்கு தெரியாதுஎன சொல்வது நம்பும்படியாக இருக்காது.
காதல் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து
இளசுகளை பொறுத்தவரை காதல் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போடுவது மிகவும் பிரபலம். இதனால் ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ? என்று பலரும் பயப்படுகிறார்கள். ரிஜிஸ்டர் ஆபிஸில் நடக்கும் ஒரு காதல் கல்யாணத்திற்கு சாட்சி கையெழுத்து போட்டு, பிற்காலத்தில் அந்த தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து வரை போனால்கூட சாட்சி கையெழுத்து போட்டவருக்கு எந்தவித பிரச்சனையும் வராது.

ஆனால், இங்கும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அந்த கையெழுத்தைப் போட்டது அந்த இருவரும்தான் என நிரூபிக்க வேண்டிய சூழ்நிலை ஏதாவது வரும்போது, சாட்சி கையெழுத்து போட்ட நபர்களிடம்தான் விசாரணை நடத்துவார்கள். 
என்ன சிக்கல்கள் வரும்?
சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல் வரும்? தற்போது நில அபகரிப்பு மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. ஒரு நிலத்தை ஒருவர் பெயரிலிருந்து இன்னொருவர் பெயருக்கு விற்கும்போது அந்த நபர்கள் போடும் கையெழுத்தை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் சாட்சி கையெழுத்து போடும் நபர் கையெழுத்து போடுவார். ஏதாவது பிரச்னை வரும்போது இந்த நிலத்தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல்லை என அந்த நிலத்தை விற்ற நபர்கள் சொல்லும்போது.அல்லது புரோநோட்டை எழுதி கொடுத்தவர் அதில் உள்ள கையெழுத்தை மறுக்கும்போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதிமன்றம் விசாரணைக்கு வரச் சொல்லும். இந்த இடத்தில்தான் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது. அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நபர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கியமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.
எந்த விவரமும் தெரியாமல் ஒருவர் சாட்சி கையெழுத்து மட்டும் போட்டிருந்தால்  எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை சாட்சி கையெழுத்து போடுபவரும் போலி நில விற்பனைக்கு உடந்தையாக இருந்திருந்தால், பிரச்னைகளை சந்திக்க நேரிடும். போலியான ஆவணங்கள் தயாரிக்க சாட்சி கையெழுத்து போடுபவர்கள் உடந்தையாக இருந்துவிடாமல் கவனமாக இருப்பது நல்லது.
நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற்காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற்பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும்!
பானுமதி அருணாசலம்
நன்றி : நாணயம் விகடன் - 25.12.2011 

Saturday, April 22, 2017

இந்திய சாட்சியச் சட்டம்,1872 (பிரிவு-134)


இந்திய சாட்சியச் சட்டம்,1872 - பிரிவு 134
நீதிமன்றத்தில் நாம் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, அது சம்பந்தமாக அதனுடன் இணைத்து நாம் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அல்லது சாட்சிகளின் அடிப்படையில்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகிறது. 

இருந்தாலும், அதிக சாட்சிகள் அல்லது ஆவணங்களின் அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்புகள் வழங்குவதில்லை. நாம் ஜெயிப்பதற்கு வலுவான சாட்சி அல்லது ஆவணம் ஒன்று மட்டும் இருந்தாலே போதுமானதாகும். 

எந்த ஒரு வழக்கிலும், ஏதாவது ஒரு சங்கதியை மெய்ப்பிப்பதற்கு இத்தனை சாட்சிகள் வேண்டுமென்பது இல்லை என்று  இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-134  தெளிவாகக் கூறுகிறது.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி- 23.04.2017

இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 125

இந்திய சாட்சியச் சட்டம், 1872 - பிரிவு 125   
 நடுவர் அல்லது காவல்துறை அதிகாரி அல்லது அலுவலர் எவரிடத்திலும்  குற்றம் ஏதேனும் செய்யப்பட்டது என்பது பற்றிய தகவல் அவர் எங்கிருந்து பெற்றார்? என்று சொல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. 
வருவாய்த்துறை அலுவலர் எவரும், பொது வருவாய்க்கு எதிராகக் குற்றம் ஏதேனும் செய்யப்பட்டது பற்றிய தகவல்களை அவர் எங்கிருந்து பெற்றார்?   என்று சொல்லவேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. 
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-125ன்  கீழ் குற்றம் சம்பந்தமான தகவல்களை அதை பெற்ற அதிகாரி அல்லது அலுவலர் எவரும் வெளியில் கூற வேண்டியதில்லை என்று மேற்கண்டபடி  தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆனால், அரசுத்துறை அதிகாரியிடம் குற்றம் சுமத்தப்பட்டவர், என்மீது குற்றமா, யார் சொன்னது? என்று  கேட்டுவிட்டால் புகார் மனுவை ஜெராக்ஸ் எடுத்து அவரது கையில் கொடுத்துவிடுகிறார்கள். புகார்தாரர் தாக்கப் படுகிறார். புகார் மீதான  நடவடிக்கை முடக்கப்படுகிறது. 
இதனால்தான் நாட்டில் நடக்கின்ற குற்றங்களை  பொதுமக்கள் கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். 
அதனால்தான், அரசுத் துறை மூலமாக வெளியிடப்படும் சில விளம்பரங்களில், நீங்கள் கொடுக்கின்ற புகார் ரகசியமாக பாதுகாக்கப்படும்! என்று விளம்பரம் வெளியிட வேண்டிய நிலைமை நம் நாட்டில் உள்ளது. 
இந்நிலை மாற வேண்டும். 
அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 23.04.2017

Monday, March 20, 2017

சாட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல!


சாட்சிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல!

ஒரே ஒரு சாட்சி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டனை வழங்கலாம். 
நீதிமன்றம் சாட்சியம் அளித்த சாட்சியின் நம்பகத்தன்மையை தான் பார்க்க வேண்டுமே தவிர எத்தனை சாட்சிகள் சாட்சியம் அளித்துள்ளார்கள் என்று பார்க்கக்கூடாது. ஒரே ஒரு சாட்சியின் வாக்குமூலம் மிகவும் நம்பகத்தன்மையுடன் இருக்கும் பட்சத்தில் அதற்கு ஆதரவாக கூடுதல் சாட்சியம் தேவையில்லை.
P. V. Haridas and Smt. Anuja Prabhussai Mohammed Badshaha Sayyad and Others 
 Vs
State of Maharastra, (2016-Cri.LJ-70-NOC-Bom),
Criminal Appeal No - 580&100/2007
Thanks to : Mr. Dhanesh Balamurugan Advocate
குறிப்பு: இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-134லிலும் எந்த வழக்கிலும் ஏதாவதொரு சங்கதியை மெய்ப்பிப்பதற்கு இத்தனை எண்ணிக்கையுள்ள சாட்சிகள் வேண்டுமென்பதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Tuesday, February 28, 2017

மறுக்கப்படாத சங்கதிகள் ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதிகளாக கருதப்படும்


மறுக்கப்படாத சங்கதிகள் 
ஒப்புக்கொள்ளப்பட்ட சங்கதிகளாக கருதப்படும்

5643 - மறுக்கப்படாத சங்கதிகள், ஒப்புக் கொள்ளப்பட்ட சங்கதிகளாக கருதப்படும், அ. வ. எண். 313 / 2011, 06.01.2017, நன்றி மாண்பமை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், ஜெயங்கொண்டம்
https://drive.google.com/file/d/0B5UMxA6DXC1wd2V2RWRHVVNKUlk/view?usp=sharing

நன்றி : Mr. A Govindaraj Tirupur

Saturday, July 16, 2016

நீதிமன்ற விசாரணை


நீதிமன்ற விசாரணை - என்ன செய்ய வேண்டும்?

இந்திய சாட்சிய சட்டத்தின் அடிப்படையில்தான் நமது நாட்டு நீதிமன்றங்கள் தனது தீர்ப்புகளை வழங்கி வருகின்றன.

உரிமையியல் நீதிமன்றத்தில், ஒரு வழக்கை தாக்கல் செய்பவர்கள் வாய்மொழிச் சான்றுகள் மற்றும் ஆவணச் சான்றுகள் ஆகியவற்றை சரியான முறையில் அளிக்கா விட்டால், வழக்கின் முடிவு அவர்களுக்கு எதிராகவே அமைந்துவிடும்.

உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற குற்றவியல் வழக்குகளில் செய்யப்படுகின்ற பொதுவான   விசாரணையைப் பற்றி நாம் இங்கு காணலாம்.

விசாரணைகள்  

1) முதல் விசாரணை 

2) குறுக்கு விசாரணை

3) மறு விசாரணை

என மூன்று விதமாக செய்யப்படுகிறது. 

முதல் விசாரணை என்றால் என்ன?

வழக்கு தொடுத்தவரை  அல்லது அவரது சாட்சியை அவரது வழக்கறிஞர் அழைத்து  விசாரிக்கப்படுவது முதல் விசாரணை எனப்படுகிறது.

குறுக்கு விசாரணை என்றால் என்ன?

வழக்குத் தொடுத்தவரை அல்லது அவரது சாட்சியை எதிர்தரப்பு வழக்கறிஞர் அழைத்து விசாரிக்கப்படுவது குறுக்கு விசாரணை எனப்படுகிறது.

இதனை செய்வது எதிர்தரப்பு வழக்கறிஞரின் விருப்பத்தைப் பொறுத்தது ஆகும்.

மறு விசாரணை என்றால் என்ன?

வழக்கு தொடுத்தவரை  அல்லது அவரது சாட்சியை அவரது வழக்கறிஞர் மறுபடியும் அழைத்து  விசாரிக்கப்படுவது மறு விசாரணை எனப்படுகிறது.

இதனை செய்வது வழக்குத் தொடுத்தவரின் வழக்கறிஞரின் விருப்பத்தைப் பொறுத்தது ஆகும்.

விடை பொதி வினா

 சாட்சியை கேள்விகள் கேட்கும் வழக்கறிஞர் தான் பெற விரும்புகின்ற அல்லது எதிர்பார்க்கின்ற விடையை குறிப்பாக உணர்த்தும் எந்த ஒரு வினாவும் விடை பொதி வினா என்று அழைக்கப்படுகிறது.

உதாரணமாக,

நீங்கள்தான் குணசேகரனா?

சம்பவத்தன்று நீங்கள் சென்னையில்தான் இருந்தீர்களா?

உங்களிடம் மணிகண்டன் 2 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியிருந்தாரா?

மேற்கண்ட கேள்விகள் விடை பொதி வினாக்கள் ஆகும்.  

குறுக்கு விசாரணையில் மட்டும் இதனை கேட்க நீதிபதியின் அனுமதி தேவை இல்லை.

விடை பொதி வி்னாக்கள் முதல் விசாரணையிலோ அல்லது மறு விசாரணையிலோ எதிர்தரப்பினரால் ஆட்சேபிக்கப்பட்டால் நீதிபதியின் அனுமதியின்றி அவற்றை கேட்கக் கூடாது.

மறுவிசாரணை செய்யப்பட்ட பின்பு, விருப்பப்பட்டால்  வழக்குத் தொடுத்தவரை அல்லது அவரது சாட்சியை எதிர்தரப்பு வழக்கறிஞர் நீதிபதியின் அனுமதியோடு மீண்டும் குறுக்கு விசாரணை செய்யலாம்.

 -புலமை வெங்கடாச்சலம் அவர்கள் எழுதிய இந்திய சாட்சியச் சட்டம் என்ற நூலில் படித்தது-
*************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி************