disalbe Right click

Showing posts with label இழப்பீடு. Show all posts
Showing posts with label இழப்பீடு. Show all posts

Saturday, September 16, 2017

27 வருடமாகியும் தராமல் இழுத்தடிக்கப்படும் இழப்பீடு!

27 வருடமாகியும் தராமல் இழுத்தடிக்கப்படும் இழப்பீடு!
கைக்கு வராத இழப்பீடு 27 ஆண்டாக இழுத்தடிப்பு
கோவை, தன், 8 வயதில், விபத்தில் தந்தையை இழந்தவருக்கு, 35 வயதாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை; தீபாவளிக்குள் பணத்தை வழங்க, அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை, சிட்கோவில் வசித்து வந்தவர் பழனிச்சாமி, 32; மனைவி இறந்த நிலையில், மகள் தங்கமணி, 8, மகன் மகேந்திரன், 5, ஆகியோரை, இவரும், இவரது தாயாரும் வளர்த்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்த பழனிச்சாமி, 1990, செப்., 25ல், சைக்கிளில் சென்ற போது, அரசு பஸ் மோதி பலியானார்.
இழப்பீடு கேட்டு, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில், குழந்தைகள் இருவரும், வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிமன்றம், 1.16 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, 1992ல், கோவை கோட்ட அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது.
இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. கூடுதலாக, 1.30 லட்சம் வழங்க, கோர்ட் உத்தரவிட்டது. வட்டியுடன் சேர்த்து, 3.60 லட்சம் ரூபாய் வழங்காமல், கோவை கோட்ட அரசுப் போக்குவரத்து கழகம் இழுத்தடித்து வருகிறது.
இதனால், கோவை கோர்ட்டில், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி உமாராணி, அரசு பஸ்சை, 'ஜப்தி' செய்ய உத்தரவிட்டார். அரசு டவுன் பஸ், ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. 'பாதிக்கப்பட்ட மனுதாரர்களுக்கு, இந்தாண்டு தீபாவளிக்குள் இழப்பீடு தொகை முழுவதும் செலுத்த வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.
பழனிச்சாமி இறக்கும் போது, மூத்த மகள் தங்க மணிக்கு வயது 8; தற்போது, 35 வயதாகிறது. மகன் மகேந்திரனுக்கு, 32 வயதாகிறது. இத்தனை ஆண்டுகளாக இழப்பீடு வழங்காமல், அரசுப் போக்குவரத்து கழகம் இழுத்தடித்து வருவது, இவர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் :16.09.2017

Thursday, January 26, 2017

கால் இழந்த பயணிக்கு 8 லட்சம் இழப்பீடு


கால் இழந்த பயணிக்கு 8 லட்சம் இழப்பீடு
சென்னை, சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள ஓட்டலில் பணியாற்றியவர், முகமது தாஹிர். இவர், 2014 ஏப்ரலில் சென்னை வருவதற்காக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் பயணம் செய்தார்.

ரயில் பெட்டியின் திடீர் அசைவால் நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த முகமது, பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சையின் விளைவாக, இடது காலில் மூட்டுக்கு கீழ் பகுதியும், வலது கால் பாதமும் அகற்றப்பட்டன. 

உரிய இழப்பீடு கோரி, சென்னையில் உள்ள ரயில்வே தீர்ப்பாயத்தில், முகமது தாஹிர் வழக்கு தொடுத்தார். தீர்ப்பாயத்தின் துணை தலைவர் முகேஷ்குமார் குப்தா, உறுப்பினர் மோகன் வழக்கை விசாரித்தனர்.

மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ், ''ரயிலில் இருந்து கீழே விழுந்ததும், பை மற்றும் ரயில் டிக்கெட் தொலைந்து போனது; உடல் உறுப்பையும் இழந்துள்ளார்; மன உளைச்சலும் அடைந்துள்ளார். தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார்.

தெற்கு ரயில்வே சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'படிக்கட்டில் முகமது பயணம் செய்துள்ளார்; விபத்துக்கு, ரயில்வே நிர்வாகம் பொறுப்பல்ல' என, கூறப்பட்டது. 

இதையடுத்து, தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், 'ரயிலில் இருந்து மனுதாரர் கீழே விழுந்துள்ளார்; இதை, ரயில்வே மறுக்கவில்லை. 

'முகமது தாஹிருக்கு, எட்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். ஆறு சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. 

நன்றி : தினமலர் நாளிதழ் - 27.01.2017

Thursday, May 7, 2015

கேஸ் சிலிண்டர் விபத்து , இழப்பீடு


கேஸ் சிலிண்டர் விபத்து , இழப்பீடு - வழிகாட்டுதல்

உங்கள் சமையலறையில் 50 லட்சம் ..? !(பாரதி தம்பி)
*********************************************************
'நாம் கியாஸ் சிலிண்டர் வாங்கும் போது, அதற்கான இன்ஷூரன்ஸ் தொகையையும் சேர்த்துதான் கட்டுகிறோம். எதிர்பாராதவிதமாக சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இன்ஷூரன்ஸைப் பயன்படுத்தி 40 லட்சம் ரூபாய் வரையிலும் இழப்பீடு பெற முடியும். ஆனால், இந்தச் செய்தியை இன்ஷூரன்ஸ் நிறுவனமோ, கியாஸ் நிறுவனமோ மக்களுக்குச் சொல்வது இல்லை!’ இப்படி ஒரு செய்தி குபீரெனப் பரவுகிறது. அது உண்மையா? 

உண்மைதான்! ஆனால், முழு உண்மை அல்ல. எரிவாயு இணைப்பை நாம் பெறும்போதே, ஒவ்வோர் இணைப்பின் மீதும் இரண்டு வகையான இன்ஷூரன்ஸ் எடுக்கப்படுகின்றன. ஒன்று, சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனம் எடுப்பது; மற்றொன்று நமது கியாஸ் ஏஜென்சி எடுப்பது. இந்த இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் தொகையை, கியாஸ் ஏஜென்சிகளும் கியாஸ் நிறுவனங்களுமே செலுத்திவிடும்; வாடிக்கையாளர்களாகிய நாம் செலுத்தவேண்டியது இல்லை.

ஒருவேளை கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டு உயிர் அல்லது பொருட்சேதம் ஏற்பட்டால், இதற்கான தொகையை இன்ஷூரன்ஸ் மூலம் பெற்றுக்கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் யார் பாதிக்கப்பட்டாலும் இது பொருந்தும். இதன்படி, தனிநபருக்கான விபத்துக் காப்பீடு 5 லட்சம் வரையிலும், மருத்துவச் செலவுகள் 15 லட்சம் வரையிலும், உடைமைச் சேதாரம் 1 லட்சம் வரையிலும் அதிகபட்சமாக இழப்பீடு பெற முடியும். இந்த இழப்பீட்டுக்கான உச்சவரம்பு எல்லா வகையிலும் சேர்த்து தனிநபருக்கு 10 லட்சம், குறிப்பிட்ட ஒரு விபத்துக்கு 50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இப்படி ஒரு இன்ஷூரன்ஸ் இருப்பது குறித்து, கியாஸ் ஏஜென்சிகளும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் மக்களுக்கு எந்தத் தகவலும் சொல்வது இல்லை. இது தொடர்பான விழிப்புஉணர்வும் மக்களிடம் இல்லை. இதனால் கியாஸ் சிலிண்டர் விபத்துக்கள் எத்தனையோ நடந்திருந்தும், கடந்த 20 ஆண்டுகளில் ஒரு கிளெய்ம்கூட செய்யப்படவில்லை. ஆனால், ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய், பிரீமியம் என்ற பெயரில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்குச் செல்கிறது.



அதே நேரம், இந்த முறையில் கிளெய்ம் செய்ய வேண்டுமானால், அதற்கு பல நிபந்தனைகள் இருக்கின்றன. விபத்து ஏற்பட்டதும் உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்க வேண்டும். அவர்கள், சம்பந்தப்பட்ட கியாஸ் நிறுவனத்திடமும் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமும் தெரிவிப்பார்கள். பிறகு, அதிகாரிகள் குழு நேரில் வந்து ஆய்வு செய்வார்கள். அதுவரையில் விபத்து நடந்ததற்கான தடயங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும். விபத்து குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்க வேண்டும். யாருக்கேனும் உயிர் இழப்பு ஏற்பட்டிருந்தால், மரணச் சான்றிதழ், போஸ்ட்மார்ட்டம் அறிக்கை ஆகியவற்றை இணைக்க வேண்டும். விபத்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்திருந்தால், அதற்கான மருத்துவமனை/ மருந்துப் பொருட்களின் ரசீதுகளை இணைக்க வேண்டும். விபத்தின் மூலம் உடைமைகளுக்கு சேதம் ஏற்பட்டிருந்தால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒரு சர்வேயரை நியமித்து சேத மதிப்பைக் கணக்கிடும். ஆனால், இவையெல்லாம் விபத்துக்குப் பிறகான நடைமுறை.

விபத்துக்கு முன்னரே நாம் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் ஏகமாக இருக்கின்றன. நீங்கள் பயன்படுத்தும் அடுப்பு, கியாஸ் டியூப், லைட்டர் உள்ளிட்ட பொருட்கள் ஐ.எஸ்.ஐ தரச் சான்று பெற்றவையாக இருக்க வேண்டும். அப்படி சான்று பெற்றிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் கியாஸ் ஏஜென்சியிடம் உரிய கட்டணம் செலுத்தி, தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். சமையல் அறை அல்லாத இடங்களில் கியாஸ் சிலிண்டரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. நமது பெயரில் நாம் பெற்ற கியாஸ் சிலிண்டராக இருக்க வேண்டும். அவசரத்துக்குக் கடன் வாங்கிய சிலிண்டரில் விபத்து ஏற்பட்டால், கிளெய்ம் செய்ய முடியாது. இப்படிப் பல நிபந்தனைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் நிறைவேற்றி இருந்தால் மட்டுமே, விபத்து ஏற்பட்டால் இழப்பீடு கோர முடியும்.

'ஐ.எஸ்.ஐ சான்று பெற்ற பொருட்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்’ என்ற முதல் இரண்டு விஷயங்களிலேயே நம் ஆட்கள் அத்தனை பேரும் ஃபெயில் ஆகிவிடுவார்கள். இத்தனை சிக்கலான நிபந்தனைகளை வைத்துக்கொண்டு, அதை மக்களுக்குத் தெரிவிக்காமல் இருப்பது ஏன்?

'இது தொடர்பாக விளம்பரங்கள் செய்வது இல்லை என்பது உண்மைதான். அதற்காக இதை நாங்கள் மறைக்கிறோம் எனச் சொல்ல முடியாது. எல்லா விவரங்களும் எங்கள் இணையதளங்களில் வெளிப்படையாக இருக்கின்றன’ என்கிறார்கள் எரிவாயு நிறுவன ஊழியர்கள்.

கியாஸ் சிலிண்டர் விபத்துச் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்துகொண்டே இருக்கின்றன. சிலிண்டர்களை எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் கையாள்வது இதற்கு முக்கியக் காரணம் என்றால், காலாவதியான சிலிண்டர்கள் இன்னொரு காரணம்.

அது என்ன காலாவதியான சிலிண்டர்?

'இந்த சிலிண்டர், எரிவாயு நிரப்பும் தரத்துடன்தான் இருக்கிறது’ என, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு சிலிண்டரும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அந்தச் சோதனையில் சிலிண்டரில் ஏதேனும் குறை இருப்பது தெரியவந்தால், அது சரிசெய்யப்பட்டு இந்தியத் தர நிர்ணய அமைப்பு (ஙிuக்ஷீமீணீu ஷீயீ மிஸீபீவீணீஸீ ஷிtணீஸீபீணீக்ஷீபீs) சான்று அளித்த பின்னரே, மீண்டும் பயன்பாட்டுக்கு விட வேண்டும். ஒரே சிலிண்டரில் இரண்டாவது முறையாகக் குறை இருப்பது கண்டறியப்பட்டால், அது பயன்பாட்டில் இருந்து அகற்றப்படும்.

சிலிண்டரின் தலைப்பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கின்றன அல்லவா? அதில் ஒரு கம்பியின் பக்கவாட்டில், சிலிண்டரின் எடை விவரங்கள் இருக்கும். இன்னொன்றில், காலாவதி தேதி குறித்த எண்கள், சுருக்கெழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஜனவரி முதல் மார்ச் வரையில் கி, ஏப்ரல் முதல் ஜூன் வரையில் ஙி, ஜூலை முதல் செப்டம்பர் வரை சி, அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் ஞி. உதாரணத்துக்கு உங்கள் சிலிண்டரில் கி–15 என எழுதப்பட்டிருந்தால், அதன் எக்ஸ்பயரி தேதி மார்ச் 2015 என அர்த்தம். இந்தத் தேதிக்குப் பிறகு சிலிண்டரைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. கியாஸ் கசிவு முதல் சிலிண்டர் வெடிப்பது வரை பல அபாயம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகம். காலாவதித் தேதியைக் கடந்து இருந்தாலோ, மிக நெருக்கத்தில் இருந்தாலோ,  அந்த சிலிண்டரை நிராகரிக்கும் உரிமை நுகர்வோருக்கு உண்டு!

காப்பீடு பெற...

சென்னைப் புறநகர் பகுதியில் உள்ள கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் ஒருவரிடம் பேசியபோது, ''கியாஸ் ஏஜென்சி தரப்பில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் எடுக்கிறோம். கியாஸ் கம்பெனி தரப்பில் எடுக்கணீப்படும் இன்ஷூரன்ஸ் தனி. என் அனுபவத்தில் இதுவரை யாரும் இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பண்ணியது இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அடுப்பு, லைட்டர், டியூப் போன்றவற்றின் தரத்தை உறுதிப்படுத்தி சான்றிதழ் வாங்கிக்கொள்ள வேண்டும். இதற்காக எங்கள் பிரதிநிதிகள் சென்றால் மக்கள் யாரும் ஒத்துழைப்பதும் கிடையாது. ஒருவேளை இனிமேல் யாரேனும் இப்படி தரச் சான்றிதழ் பெற்று உரிய முறையில் பராமரித்தால், ஏதேனும் விபத்து ஏற்படும்போது இன்ஷூரன்ஸ் கிளெய்ம் பண்ணலாம்'' என்றார்.

நன்றி : விகடன் செய்திகள் - 07.05.2015

Saturday, April 25, 2015

வாகனங்கள் மூலம் விபத்து நடந்தால் இழப்பீடு


வாகனங்கள் மூலம் விபத்து நடந்தால் இழப்பீடு பெற 
என்ன செய்ய வேண்டும்?
************************************************************
சட்டம் உன் கையில்: வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி


நிறைவான ஒரு வாழ்வை எண்ணி இருக்கும் பலரின் கனவுகளை, வாழ நினைத்த வாழ்வை, எதிர்காலத்தை சிதைக்க வல்லது எதிர்பாராமல் நடைபெறும் விபத்து. அதுவும் மோட்டார் வாகனங்களினால் ஏற்படும் விபத்து களால் ஏற்படக்கூடிய இழப்பு பல நேரங்களில் ஈடு செய்ய முடியாதது. இன்று உலக அளவில் சாலைகளின் தரமும் போக்குவரத்தின் தரமும் உயர்ந்துள்ளது. அது உலகின் பொருளாதார வளர்ச்சியை பறை சாற்று கிறது. ஆனால், இந்த பொருளாதார வளர்ச்சி வாகன நெரிசலை ஏற்படுத்துவதுடன் பல விபத்து களுக்கும் வழிவகை செய்கிறது.

WHO  (World Health Organisation) வின் கணிப்புப்படி கிட்டத்தட்ட உலகில் ஓர் ஆண்டில் சுமார் 1 கோடி மக்களுக்கு மோட்டார் வாகன விபத்துகளால் பலவிதமான உடல் காயங்கள், ஊனங்கள் ஏற்படுவதாகத் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 6 லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள் என்றும் கூறுகிறது. இது பொருளாதார வளர்ச்சி யின் விளைவா அல்லது மனித இனத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமா? இந்தியாவை பொறுத்தவரை வாகன விபத்தினால் ஏற்படக்கூடிய உயிர் இழப்பும், விபத்து களை சந்தித்தவர்களுக்கு உடல் உறுப்புகளில் ஏற்படும் காயங்களும், நிரந்தர ஊனங்களும், பலரின் வாழ்வின் தரத்தில் பெரும் அளவில் மாறுதல்களை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. இவ்வாறான விபத்துகளில் மாட்டிக் கொள்பவர்களுக்கு இன்று பெரிதும் கை கொடுப்பது ‘MOTOR VEHICLES ACT   1988’

‘மோட்டார் வாகனங்கள் சட்டம் 1988’

இந்த சட்டம் ஜூலை 1989ம் ஆண்டில் இருந்து நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டம் இதற்கு முன் இருந்த 1939ம் ஆண்டு சட்டத்துக்கு மாற்றாக இயற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்துக்கான விதிகளும் 1989ம் ஆண்டே வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் முன் இழப்பீடு யாரெல்லாம் கேட்க முடியும்?

- விபத்தில் காயம் அடைந்தவர்கள்.
- சேதமடைந்த சொத்தின் உரிமையாளர்கள்.
- மோட்டார் வாகன விபத்தில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகள் அல்லது சட்டமுறை பிரதிநிதிகள்.
- வாரிசு அல்லது சட்டமுறை பிரதிநிதிகளின் சார்பாக ஒருவர்... ஆகியோர் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்யலாம். 

மனுவை எங்கே தாக்கல் செய்யலாம்?

1. விபத்து நடைபெற்ற இடத்தில் இருக்கும் தீர்ப்பாயம்.
2. இழப்பு நேர்கிறவர் வசிக்கும் அல்லது தொழில் நடத்தும் வரையறைக்குள் இருக்கும் தீர்ப்பாயம்.
3. எதிர்மனுதாரர் வசிக்கும் வரையறைக்குள் இருக்கும் தீர்ப்பாயம் ( Tribunal). 

மேலும் விபத்து பற்றி அறிவிப்பு எட்டியவுடன் தீர்ப்பாயமே தானே முன்வந்து (Suomotto) வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது. விபத்து நடந்தவுடன் அதன் எல்லைக்குட்பட்ட காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க, காப்பாற்ற துரித நடவடிக்கை எடுப்பதுடன் விபத்து பற்றி முதல் தகவல் அறிக்கை தயாரித்து, அது தயாரிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் அதிகார வரம்புக்குட்பட்ட தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை சட்டம் வலியுறுத்துகிறது. தீர்ப்பாயத்துக்கு முன் இருக்கும் மனுவினை இயற்கை நீதிக்கு உட்பட்டும், சட்டத்துக்கு உட்பட்டும் தகுந்த விசாரணை மேற்கொண்ட பின்னர் தீர்ப்பாயம் நிர்ணயிக்கும் இழப்பீட்டு தொகையை 

- விபத்தில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரோ,
- வாகன ஓட்டுநரோ,
- மோட்டார் வாகனம் காப்பீடு செய்யப்பட்டுள்ள காப்பீடு கழகமோ அல்லது மேற்குறிப்பிட்ட மூவரும் கூட்டாக கொடுக்க கடமைப் பட்டவர் ஆவர். இழப்பீட்டு தொகையை நீதிமன்ற நடவடிக்கையின் மூலமாகவோ அல்லது மக்கள் நீதிமன்றத்தின் ( Lok adalath  ) மூலமாகவோ பெறுவதற்கு சட்டம் வழிவகை செய்துள்ளது.

மோட்டார் வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்படும் இழப்பீடு கோரிக்கைகளை பரிசீலிப்பதற்கான அதிகாரம் இதற்கு அமைக்கப்பட்ட மோட்டார் விபத்து கோரிக்கை தீர்ப்பாயத்துக்கு (Motor Accidents Claims Tribunal) தான் உள்ளது. அது ஓர் உரிமையியல் நீதிமன்றத்தின் ( Civil Court  ) அதிகாரத்தை பெற்றுள்ளது. இழப்பீடு உத்தரவுக்கு எதிராக எதிர்தரப்பினர் மேல்முறையீடு, தீர்ப்பு தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் செய்யலாம். அவ்வாறு மேல்முறையீடு செய்யும் பொழுது ரூபாய் 20,000 அல்லது தீர்ப்பளிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் 50%, அதில் எது குறைவோ, வைப்பீடு செய்தால் மட்டுமே மேல் முறையீடு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் ஓட்டுநரின் மேல் தவறே இல்லாமல் விபத்து நடந்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பது இந்த சட்டத்தின் சிறப்பம்சம். விபத்து ஏற்படுத்திய வாகனம் அடையாளம் தெரியாத நிலையிலும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மத்திய அரசு ஓர் ஆதரவு நிதி ஏற்படுத்தி உள்ளது. அதன் மூலம் ஒரு தொகையை இழப்பீடாக பெறலாம்.

ஒரு விபத்து நேரிடும் போது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சங்கள்:

- விபத்தில் சிக்கியவர்களுக்கு மருத்துவ உதவி.
- விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்தின் எண்.
- ஓட்டுநரின் பெயர், வயது, முகவரி 
சேகரித்தல்.
- காவல்துறையினர் வரும் வரை விபத்து ஏற்படுத்திய வாகனத்தை பாதுகாத்தல்.
- காவல்துறையினரை முதல் தகவல் அறிக்கை தயாரிக்க உதவுதல்.
- சாட்சிகளை காவல்துறையினரிடம் அடையாளம் காட்டுதல்.
- மருத்துவ அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை சரியாக செய்தல்.

இந்தியாவை பொறுத்தவரை இன்று மோட்டார் வாகன விபத்து குறித்த வழக்குகள் ஏராளமாக தாக்கல் செய்யப்பட்டும் நிலுவையில் உள்ளன. அவ்வப்போது மக்கள் நீதிமன்றம் மூலமும் தீர்வுகள் பெறப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் கனரக வாகனங்களை காட்டிலும் இரு சக்கர வாகனம் போன்ற சிறிய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் பலர் விபத்துகளை அதிக அளவில் சந்திக்கிறார்கள். அது போல பல புள்ளி விவரங்களை பார்க்கும்போது பெண்களை விடவும் ஆண்கள் பலர் வாகன விபத்துகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.மேலும்,

- குடித்து விட்டோ, போதை வஸ்துகளை பயன்படுத்தி விட்டோ ஓட்டுபவர்கள்,
- அதிவேகத்துடன் ஓட்டுபவர்கள்,
- ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வயது 
வரம்பில்லாமல் ஓட்டுபவர்கள்,
-  சரிவர பயிற்சி இல்லாமல் ஓட்டுபவர்,
என்று விபத்துகளுக்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

 National Insurance Co. Ltd Vs Minor Deepika என்ற வழக்கின் தீர்ப்பு,  பெண்கள் பலரால் வரவேற்கப்பட்டு ஊடகங்களால் பாராட்டப்பட்ட. பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஒரு தீர்ப்பு. இந்த தீர்ப்பினை வழங்கியது முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசி திருமதி பிரபா ஸ்ரீதேவன் அவர்கள். ஒரு மைனர் குழந்தை விபத்தில் தன் பெற்றோர் இருவரையும் இழந்து விட்ட நிலையில் இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தந்தையின் வயது, வருமான இழப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு ஒரு தொகை நிர்ணயிக்கப்படுகிறது. தாயை பொறுத்தவரை இல்லத்தரசி என்பதால் இழப்பீடு தொகை என்று வரும்போது ஊதியம் ஈட்டாதவர் என்ற நிலைப்பாடு. 

ஆனால், இங்கு ஒரு பெண் அதுவும் ஒரு குடும்பத் தலைவி குடும்பத்துக்காக செய்யும் பணிகள், வீட்டை பராமரிப்பது, குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், குடும்ப கணக்கு வரவு செலவு பாரத்தை ஏற்று அவள் செய்யும் பணி ஈடு இணை இல்லாதது என்று கூறி அவளின் பணியை,  பெண்மையை போற்றி எழுதப்பட்ட தீர்ப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது.மோட்டார் விபத்துகளை பொறுத்தவரை இயற்கையான விபத்துகள் என்பதை காட்டிலும் செயற்கையாக (man made mistakes) என்று சொல்லக்கூடிய நிகழ்வுகள் தான் அதிகம். மனித உயிர் என்பது மதிப்பிட முடியாத ஒன்று. மேலும் ஒரு விபத்து என்பது ஒரு குடும்பத்தின் தலைவனுக்கு ஏற்படும் எனில் அந்த தலைவனை நம்பியுள்ள குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாதிப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரும் ஒரு கடமை உணர்வுடன் செயல்பட்டால் விபத்துகள் பெருமளவில் தவிர்க்கப்படும்.விபத்தை தடுப்போம்.. வாழ்வை நேசிப்போம்!

நன்றி : தினகரன் நாளிதழ் 09.01.2015


Sunday, April 19, 2015

கேஸ் சிலிண்டர் மூலம் விபத்து ஏற்பட்டால்?


கேஸ் சிலிண்டர் மூலம் விபத்து ஏற்பட்டால்........? 
பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகிக்கும் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கும் திட்டம் பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.
தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 50 லட்சம் பேர் காஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகிறார்கள். தேசிய குற்றப்பதிவகம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி குஜராத் மாநிலத்துக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிகளவு காஸ் சிலிண்டர் விபத்துகள் நடைபெறுகின்றன.
இந்த விபத்தினால் பாதிக்கப்படும் நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் தொகையை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இல்லை.
காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்தி வருகின்றன. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால், அந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள் வார்கள். இந்த ஆய்வின்போது விபத்து நடைபெற்றதற்கான காரணங்கள் கண்டறியப்படும். விபத்தின் பாதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.
இதுபோன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் காஸ் ஏஜென்சியையோ, சம்பந்தப் பட்ட எண்ணெய் நிறுவனத்தையோ அணுகலாம்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஸ் சிலிண்டர் விபத்து சம்பந்தப்பட்ட நுகர்வோரின் வீட்டில் நடந்திருக்க வேண்டும். வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் வணிக ரீதியாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. அதேபோல் கோயில் திருவிழா மற்றும் சுற்றுலா செல்லும் இடங்களுக்கு சிலிண்டர் கொண்டு செல்லப்பட்டு விபத்து ஏற்பட்டிருந்தால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காது. கூரை வீடுகளில் சிலிண்டர் விபத்து ஏற்பட்டாலும் இன்சூரன்ஸ் தொகையை பெற முடியாது. சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டால் குறைந்தது ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காஸ் சிலிண்டர் விபத்து ஏற்பட்டால் அதற்கான இன்சூரன்ஸ் தொகை பெறுவது குறித்து கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
சிலிண்டர் வெடி விபத்துகளை தவிர்க்க செய்ய வேண்டியவை:
டெலிவரி செய்யப்படும் சிலிண்டர் முறையாக சீல் செய்யப் பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
சிலிண்டரையும் அடுப்பையும் இணைக்கும் ரப்பர் டியூப்பை 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயம் மாற்ற வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் வரை உழைக்கும் கடினமான டியூப்பை பயன்படுத்த வேண்டும்.
தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு ரெகுலேட்டரை 'ஆஃப்' செய்ய வேண்டும்.
மின்சார சுவிட்சை போடும் போது ஏற்படும் சிறிய தீப்பொறியே காஸ் தீப்பிடிக்க போதுமானது. எனவே காஸ் கசிவு ஏற்பட்டிருப்பதை அறிந்தால் மின் சுவிட்சை போடவோ, அணைக்கவோ கூடாது.
கசிந்த காஸ் வெளியேற கதவு, ஜன்னல் ஆகியவற்றை திறக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜன்னல் கொக்கியை நீக்கும்போது ஏற்படும் சிறு உராய்வுகூட தீப்பொறியை உண்டாக்க போதுமானது.
* கசிவு ஏற்பட்டு இருப்பதை அறிந்தால் உராய்வு ஏற்படும் எந்த செயலையும் செய்யாமல் மெதுவாக வீட்டிலிருந்து வெளி யேறி, உடனடியாக தீயணைப்பு துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்த முறைகளை பின்பற்றி னாலே 95 சதவீத விபத்துகளை தவிர்க்க முடியும்.

நன்றி: தி இந்து நாளிதழ் 2015