disalbe Right click

Showing posts with label உயில். Show all posts
Showing posts with label உயில். Show all posts

Friday, December 15, 2017

உயில் - சந்தேகங்கள் & பதில்கள்

1.எனக்கு தாத்தா சொத்து மற்றும் அப்பா சொத்து இருக்கிறது. இருவரும் உயிருடன் இல்லை. இந்த சொத்துக்களை என் பெயருக்கு மாற்றுவது எப்படி?
ஒருவர் இறந்தவுடன் அவரின் சொத்துக்கள் அவரின் வாரிசுகளுக்கு சட்டப்படி தானாகவே சென்றடையும். தனியாக எந்த செயலையும் செய்யத் தேவையில்லை. சொத்து ஆவணங்களை பெயர் மாற்றம் செய்யத் தேவையில்லை. அதாவது, தனியாக வேறு ஒரு ஆவணம் எழுத தேவையில்லை. அதனுடன் உரிமையாளரின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் இணைத்து வைத்துக்கொண்டாலே போதும். பட்டா, சொத்து வரி, மின் இணைப்பு ஆகிய ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய, உரிமையாளரின் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் இணைத்து உரிய அலுவலகத்தில் மனு செய்யவேண்டும்.
2.வீட்டுக் கடன் வாங்கி சம்பள பணத்தில் இஎம்ஐ கட்டி வீடு ஒன்று சொந்தமாக இருக்கிறது. எனக்கு ஒரே மகன் இருக்கிறான். அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. இந்த வீட்டின் உரிமை கொண்டாட என் மகனுக்கு உரிமை இருக்கிறதா?
உங்கள் சுய சம்பாத்ய சொத்தில் உங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது. உங்கள் மகனுக்கு எவ்வித உரிமையும் இல்லை.
3.அதிக சொத்து உள்ள ஒருவர் உயில் எழுதாமல் இறந்து விட்டால், அவரின் சொத்துக்கள் யாருக்கு போய் சேரும்?
அதிகமோ அல்லது குறைவோ, சொத்துக்கள் உள்ள ஒருவர் உயில் எழுதாமல் இறந்து விட்டால், அவரின் சொத்துக்கள் அவரின் சட்டப்படியான வாரிசுகளைச் சேரும். சட்டப்படியான வாரிசுகள் யார் என்பது அவரவரின் மத சட்டத்தை பொருத்தது
எடுத்துக்காட்டாக, இந்து மதப்படி, திருமணமான ஒரு ஆண், உயில் எழுதாமல் இறந்துவிட்டால், அவரின் சொத்துக்கள், அவரின் வாரிசுகளான 1. தாய், 2. மனைவி, 3. குழந்தைகள் ஆகிய மூவருக்கும் சமமாக சேரும்.
4.உயிலை பத்திரம் எழுதும் காகிதத்தில் தான் எழுத வேண்டுமா? அதனை பதிவு செய்தால்தான் செல்லுமா?
பத்திரம் எழுதும் காகிதத்தில் எழுதத் தேவையேயில்லை. வெள்ளைத்தாளில் எழுதலாம். அவசர நேரத்தில், கிடைக்கும் துண்டு காகிதத்திலோ அல்லது துணியிலோ கூட எழுதலாம். பதிவு செய்வது கூட விருப்பத்திற்குட்பட்டது. இப்படி எழுதப்படும் உயில் சட்டப்படி செல்லும். ஆனால், எழுதியவர் இறந்தபின்தான் உயில் அமலுக்கு / செயலுக்கு வரும் என்பதால், ஒரு உயிலின் நம்பகத்தன்மையை சந்தேகப்படும்போது, அதனை நிரூபிக்க, உயிலை பதிவு செய்வது உதவும்.
5.நான் எழுதி வைக்கும் உயிலை குடும்ப உறுப்பினர்கள் யாரும் மாற்றாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் எழுதி வைக்கும் உயிலை குடும்ப உறுப்பினர்கள் யாரும் திருத்தாமல்/மாற்றாமல் இருக்க அதை பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். உயிலை உறையில் வைத்து மூடி பத்திரப்படுத்தி வைக்க பதிவு அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். அதற்கு ரூ.100 கட்டணம் உண்டு. உயிலை எழுதியவர் இறந்தபின், உயிலின்படி வாரிசு அதனை பெற்று, உறையை திறந்து உயிலை பதிவுக்கு சமர்ப்பிக்கலாம். எளிமையான வழி, நீங்களே பதிவு செய்து வைப்பதுதான்.
6.உயிலை எங்கு பதிவு செய்ய வேண்டும்? எவ்வளவு செலவாகும்?
உயில் எழுத விரும்புபவர் வசிக்கும் இடம் சார்ந்த அல்லது எந்த ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் உயிலை பதிவு செய்யலாம். எழுதப்பட்ட உயிலை பதிவுக்கு சமர்ப்பிக்க கால அவகாசம் எதுவுமில்லை. முத்திரைக் கட்டணம் எதுவுமில்லை. அதனால் முத்திரை தாளில் எழுத வேண்டிய அவசியமில்லை. உயில் பதிவுக் கட்டணம், அதில் எழுதப்பட்டுள்ள சொத்து மதிப்பில் 1% அல்லது அதிகபட்சமாக ரூ.500 மட்டும்.
7.இறங்கு வாரிசு உரிமை என்கிறார்களே அதன் அர்த்தம் என்ன?
இறங்குரிமை ஆங்கிலத்தில் Succession என அழைக்கப்படும். ”இறங்கு வாரிசு உரிமைஎன்ற வார்த்தை சரியானதல்ல. சொத்தின் உரிமையாளருக்கு மறைவுக்கு பின், யார்-யார் வாரிசு அதை எந்த விகிதத்தில் அடைவது என்பதை சொல்வது, இறங்குரிமை. இந்துக்களுக்கு, இந்து இறங்கு உரிமை சட்டம். கிறிஸ்துவர்களுக்கு, இந்திய வாரிசு உரிமை சட்டம்.
8.பூர்வ சொத்துக்கு உயில் எழுதி வைக்க முடியுமா?
இந்து இறங்குரிமை சட்டம் பிரிவு 30-ன் படி, பூர்வீக சொத்தில் தனக்குள்ள பங்கை மட்டும் ஒருவர் உயில் மூலம் எழுதி வைக்கலாம்.
9.ஆர்டிஐ சட்டப்படி குடும்பத்தின் தலைவர் யாருக்கு சொத்தை உயில் எழுதி வைத்திருக்கிறார் என்பதை குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் மகன் கேட்டு பெற முடியுமா?
குடும்பத்தில் சேர்ந்து வாழும் மகன் கூட கேட்டு பெறமுடியாது. தகவல் அறியும் உரிமை சட்டம் என்பது, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிந்துகொள்ள விரும்பும்அரசாங்கத் தகவல்களை”, அரசாங்க துறைகளிடம் இருந்து பெற வகை செய்யும் சட்டம். தனிநபர் விஷயங்களை பெற அதை பயன்படுத்த முடியாது.
10.உயில் ஒருவர் எந்த வயதில் எந்த சூழலில் எழுத வேண்டும்? உயில் எழுதுவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?
எந்த வயதில்எழுத வேண்டும்என்பதை விட எந்த வயதில் எழுதலாம் என்பதே சரியாக இருக்கும். 18 வயதுக்கு மேற்பட்ட, நல்ல மன நிலையில் உள்ள யாரும் உயில் எழுதலாம். உயிலுக்கு மற்றொரு பெயர், “விருப்புறுதி ஆவணம்”. அதாவது விருப்பத்தை மட்டும் தெரிவிக்கும் ஆவணம். உயிருடன் இருக்கும்போது எத்தனை உயில்கள் வேண்டுமானாலும் மாற்றி மாற்றி எழுதலாம். இறப்பதற்கு முன் கடைசியாக எழுதப்பட்ட உயில் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆகவே, உயில் எழுதுவதில் சிக்கல் எதுவும் இருப்பதில்லை. எழுதியவர் இறந்தபின், அதை செயல்படுத்துவதில்தான் சிக்கல் அதிகம்.
11. ஏற்கெனவே எழுதப்பட்ட உயிலை மீண்டும் மாற்றி எழுத முடியுமா?
உயிலுக்கு மற்றொரு பெயர், “விருப்புறுதி ஆவணம்”. அதாவது விருப்பத்தை தெரிவிக்கும் ஆவணம். உயிருடன் இருக்கும்போது எத்தனை உயில்கள் வேண்டுமானாலும் விருப்பபடி மாற்றி மாற்றி எழுதலாம். இறப்பதற்கு முன் கடைசியாக எழுதப்பட்ட உயில் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
12. உயில் மூலம் வந்த சொத்தை ஒருவர் தன் பெயரில் பதிவு செய்ய எவ்வளவு செலவாகும்?
உயில் மூலம் வந்த சொத்தை தனியாக பதிவு செய்ய தேவையில்லை. உயிலோடு, எழுதியவரின் இறப்பு சான்று இணைத்தால் போதும்.
ஒரு இந்து நபர் எழுதிய உயில் பொறுத்து, சொத்து சென்னையில் இருந்தாலோ அல்லது உயில் சென்னையில் எழுதப்பட்டிருந்தாலோ, உயிலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீதிமன்றம் மூலம் Probate பெறுவது அவசியம். Probate என்பது, அந்த உயில் உண்மையானது என, விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் வழங்கும் சான்றாகும். மற்ற மதத்தினர் எழுதும் உயில்கள் மற்றும் மற்ற ஊர்களில் உள்ள சொத்துக்களை பொறுத்த உயில்களை Probate -ப்ரொபெட் பெறுவது கட்டாயமில்லை. Probate கட்டணம், சொத்து மதிப்பில், 3%.
13.என்னிடம் சொத்து எதுவும் கிடையாது. ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து வைத்திருக்கிறேன்இதை அடிப்படையாக வைத்து உயில் எழுத முடியுமா?
தற்போது உள்ள சொத்து அல்லது கிடைக்கப்போகும் சொத்து ஆகியவற்றை உயிலில் எழுதலாம்.
14.வெளியூரில் உள்ள சொத்துகளுக்கு உயில் எழுதும் போது அதை அந்த ஊரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டுமா அல்லது எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளலாமா?
உயில் எழுத விரும்புபவர் வசிக்கும் இடம் அல்லது சொத்து அமைந்துள்ள இடம் சார்ந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் உயிலை பதிவு செய்யலாம்.
15.என்னுடைய அப்பா அவரின் பெயரில் உள்ள சொத்துகளை, அவரின் தம்பிக்கு உயில் எழுதி வைத்து விட்டார். இந்த நிலையில் அந்த சொத்தில் வாரிசுகள் உரிமையை கொண்டாட முடியுமா?
ஒருவர் தன் சுயசம்பாத்ய சொத்தை அவரின் தம்பிக்கோ அல்லது யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். உரிமை உள்ளது. அவரின் வாரிசுகள் உரிமை கொண்டாட முடியாது.
16.உயிலில் பலவகைகள் இருக்கின்றன என என் நண்பன் சொன்னான். அது உண்மையா?
உண்மை என்றால், அவற்றைப் பற்றி விரிவாக சொல்லவும்.
ஆம். உயிலில் பல வகை உள்ளன. சட்டம் சொல்லும் முக்கிய இருவகை. 1. தனிச்சலுகை உயில். 2.தனிச் சலுகையற்ற உயில். போரில் ஈடுபட்டிருக்கும் வீரர் உயில் எழுத இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, உயில், வாய் மொழியாக இருக்கலாம். துண்டு சீட்டில் எழுதலாம். கையொப்பம் இட தேவையில்லை. மற்ற உயில்களுக்கு இந்த சலுகை இல்லை. இதைத் தவிர, உரியவர் கைப்பட எழுதிய உயில், (Holograph Will), நிபந்தனை உயில் (Conditional Will) என சில வகைகளும் உள்ளன.
நன்றி : விகடன் பைனான்ஸ் இதழ் - 18.11.201