disalbe Right click

Showing posts with label காவல்துறை. Show all posts
Showing posts with label காவல்துறை. Show all posts

Tuesday, June 11, 2019

காவல்நிலையத்தில் மனு ஏற்புச் சான்றிதழ் பெறுவதன் அவசியம்


காவல்நிலையத்தில் மனு ஏற்புச் சான்றிதழ் பெறுவதன் அவசியம் என்ன?
காவல்நிலையத்தில் நேரடியாக புகார் அளிப்பவர்கள் தங்களால் அளிக்கப்படுகின்ற புகார் சம்பந்தமான, மனு ஏற்புச் சான்றிதழ் எனப்படுகின்ற CSR ரசீதை  கண்டிப்பாக அவர்களிடமிருந்து கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், முதலில் புகார் அளித்த வாதி மீது, பிரதிவாதி புகார் அளித்து தப்பித்துக் கொள்ள  வாய்ப்புள்ளது. இன்றைய காவல்நிலையங்கள் அரசியல்வாதிகளுக்கும், செல்வந்தர்களுக்கும், அடிபணிந்து நடப்பதை பல செய்திகளில் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டு : 1
உதாரணமாக உங்களை ஒருவர் தாக்கியவுடன் காவல்நிலையத்திற்கு நேரடியாக சென்று எழுத்து மூலமாக புகார் அளிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் புகாருக்கு மனு ஏற்பு ரசீது வாங்கிவிட்டால் நல்லது. நீங்கள் முதலில் புகார் அளித்ததை மாற்ற முடியாது.  இல்லையென்றால், அந்த காவல் நிலையத்தில் உள்ள அலுவலர்கள் உங்களை தாக்கியவருக்கு வேண்டியவர்கள் என்றால், அவரிடமிருந்து ஒரு புகாரை எழுதி வாங்கி பதிவு செய்து கொண்டு, (நீங்கள்தான் அவரை முதலில் அடித்ததாகவும்,  அவர் உங்கள் மீது ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் கூறி) வழக்கை திசை திருப்பி உங்களை மிரட்டி பணிய வைக்க முடியும்.
எடுத்துக்காட்டு ;2
நீங்கள் உங்கள் நண்பருடன் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். ஒரு கார் வேகமாக வந்து உங்கள் நண்பர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விடுகிறது. காரின் நம்பரை குறித்து வைத்துக் கொள்கிறீர்கள். நண்பருக்கு விபத்தினால் பலத்த காயம் ஏற்பட்டு. உயிருக்கே ஆபத்து. உண்டாகிறது. நண்பர் சுயநினைவை இழக்கிறார். அருகில் உள்ளவர்கள் மூலம் நண்பரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு , புகார் அளிக்க காவல் நிலையம் செல்கிறீர்கள். புகாரை பெற்றுக் கொண்டு ரசீது தரவில்லை என்றால், ஏதோ தவறு நடக்கப்போகிறது என்று அர்த்தம். காவல் துறையினர் அந்த கார் உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு அவரது காரை ஒரு மணி நேரமாக காணவில்லை என்று புகார் எழுதி வாங்கிக் கொண்டு, அதனை முதலில் பதிவு செய்து, காரை திருடியவர்தான் விபத்தை உண்டாக்கிவிட்டார் என்று அந்த புகாரை முடித்து வைக்க முடியும். அந்த கார் உரிமையாளரை அந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க முடியும். 
எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்
ஆகையினால், காவல்நிலையத்தில் எந்தப் புகாரையும் நேரடியாக அளித்தால் மனு ஏற்பு சான்றிதழ் பெற தவறாதீர்கள். எல்லாக் காவல் நிலையங்களிலும் இது போல் நடப்பதில்லை என்றாலும், தயவு செய்து எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
அவர்கள் தர மறுக்கும்போது மனுதாரர் என்ன செய்ய வேண்டும்?
அவர்கள் புகார் மனு ஏற்புச் சான்றிதழ் தர மறுத்தாலோ, தட்டிக் கழித்தாலோ உடனடியாக அந்த மனுவின் ஒரிஜினல் காப்பி ஒன்றை பதிவுத்தபால் மூலமாக மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் அலுவலகத்திற்கும், அந்த காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்து விடுங்கள். இதை செய்வதன் மூலம் ஒரு நல்ல ஆதாரத்தை மற்றும் பாதுகாப்பை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
காவல்துறை இயக்குநர் அவர்களின் ஆணை
காவல்நிலையங்களில் எந்தப்புகார் அளித்தாலும், அதற்கு தாமதமில்லாமல் உடனடியாக மனு ஏற்புச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கடந்த 1997ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழக அரசின் உள்துறை வெளியிட்ட ஆணை நகல்,  காவல்துறை இயக்குநர் அவர்கள் வெளியிட்ட ஆணை நகல், மனு ஏற்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற  முகநூல் நண்பர் திரு Saravanan Palanisamy  அவர்கள் முகநூல் நண்பர் திரு  A.Govindaraj Tirupur அவர்கள் மூலமாக நமக்கு வழங்கி உதவியிருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் நன்றி. அதன் இணைப்பு கீழே உள்ளது.
https://drive.google.com/file/d/1-Lm3tVu8dHVE9eYQjwUtMEfvEpXht0Ky/view?fbclid=IwAR3xMs9rfQuFR04INEtS8uMmMOUwJiMNGcyPPsNuo7eEZaOgbfxYvoqWWto

******************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 11.06.2019

Sunday, May 26, 2019

லுக் அவுட் நோட்டீஸ் என்றால் என்ன?

லுக் அவுட் நோட்டீஸ் பற்றி.......
படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.
லுக் அவுட் நோட்டீஸ்  என்றால் என்ன?
                                     இதனை ஆங்கிலத்தில் Look out Circular  சொல்கிறார்கள். தமிழில் கவன ஈர்ப்பு சுற்றறிக்கை என்று அழகாக கூறப்படுகிறது. குற்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஒருவர் அல்லது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வருகின்ற ஒரு நபர் சொந்த நாட்டை விட்டு, வேறு நாட்டுக்கு சென்றுவிடாமல் இருப்பதற்காகவும்,  வெளிநாடுகளில் இருந்து நமது நாட்டுக்குள் ஊடுருவி விடாமல் இருப்பதற்காகவும் வெளியிடப்படுகின்ற ஒரு அறிக்கை ஆகும்.
யாரால் வெளியிடப்படுகிறது?
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கின்ற ஒருவரின் நடவடிக்கைகளைப் பொறுத்து மத்திய அரசு ஆணையின்படி, அல்லது  CBI என்று சொல்லப்படுகின்ற (Central Bureau of Investigation)   மத்தியப் புலனாய்வுத் துறை தன் மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்ற கைதிகளின் நடவடிக்கைகளைப் பொறுத்து,  இந்திய காவல்துறையால் வெளியிடப்படுகின்ற ஒரு அறிக்கை ஆகும்.
யாருக்கு இது அனுப்பி வைக்கப்படுகிறது?
இந்த அறிக்கையானது குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் நமது நாட்டை விட்டு வெளியில் தப்பிச் செல்ல முடியாதவாறு, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பன்னாட்டு எல்லைச் சாவடிகள் செயல்படுகின்ற (Immigration Department) குடிவரவு துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாநிலங்களிலும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும்  அனுப்பி வைக்கப்படும்.
அந்த அறிக்கையில் என்ன விபரங்கள் இருக்கும்?
அந்த சுற்றறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நபரது பெயர், புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் விபரங்கள் இருக்கும். ஒரு வேளை குற்றம் சாட்டப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முற்படுகையில் மேற்கண்ட அதிகாரிகளால் கைது செய்யப்படுவார்.
கவன ஈர்ப்பு சுற்றறிக்கை ஆயுள் காலம் எவ்வளவு?
இதனது ஆயுள்காலம் அறிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து ஒரு ஆண்டு காலம் ஆகும். அதற்குப் பிறகு இது காலாவதி ஆகிவிடும். தேவை என்றால், மறுபடி பிறப்பிக்கப்படும்.
இந்த அறிக்கையை சம்பந்தப்பட்டவர் எதிர்க்க முடியுமா?
முடியும். தன்னைப்பற்றிய முழு விபரங்கள் மற்றும் நடவடிக்கைகளை குறிப்பிட்டு , வழக்கு தாக்கல் செய்து, உச்சநீதிமன்றத்தில் இந்த அறிக்கைக்கு தடை பெறலாம். ஆனால், வழக்கின் போக்கை கருத்தில் கொண்டு தான் விதித்த தடையை உச்சநீதிமன்றம் திரும்பப் பெறுவதற்கும் வாய்ப்புகள் உண்டு. சில நேரங்களில், வழக்கின் தன்மையைப் பொறுத்து, லுக் அவுட் நோட்டீஸிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் முதலிலேயே மறுப்பதும் உண்டு.



************************************************* அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 27.05.2019 

Sunday, April 7, 2019

காவல்துறையினரின் கட்டண சேவை!

காவல்துறையினரின் கட்டண சேவை!
ஒருவர் எப்படிப்பட்டவர்? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதிகார பூர்வமான முன் நடத்தை பற்றிய தகவல்களை  இணையம் வழியாக காவல்துறை அளிக்கிறது.
இதற்காக பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் காவல்துறையின் இணையதளமான.
WWW.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் பின்வரும் சேவைகளுக்காக கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன சேவைகள்?
தனிநபர் குறித்த விவரங்கள், வேலையாட்கள் குறித்த விவரங்கள்,   வாடகைதாரர்   குறித்த  விவரங்கள் வீட்டு வேலையாள்கள் குறித்த விவரங்கள் போன்ற சேவைகளைப் பயன்படுத்த விண்ணப்பிக்கும் தனிநபர் ரூ. 500, தனியார் நிறுவனங்கள் ரூ. 1,000 கட்டணம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டு டெபிட் கார்டு, இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் இக்கட்டணத்தை செலுத்தலாம்.
இந்த சேவையின் நோக்கம் என்ன?
காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையின் நோக்கம் முக்கியம்மாக என்னவென்றால், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனிநபர் ஒருவரின் தற்போதைய வீட்டு முகவரி, காவல் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் அந்த நபர் இதற்குமுன் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா? என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள் குறித்த விவரங்கள் மட்டுமே இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும். விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் காவல் முன் நடத்தை சரிபார்ப்புப் பணி முடித்து, அது குறித்த தகவல்கள் வழங்கப்படும்..
இந்த சேவைக்காக பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையை இணையதளத்திலிருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த அறிக்கையின் நகல் விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும்
விண்ணப்பத்தின் நிலை பற்றி அறிந்து கொள்ளலாம்
காவல் சரிபார்ப்பு அறிக்கையில் உள்ள QR Code ஸ்கேன் செய்தும், அல்லது காவல் சரிபார்ப்பு சேவையிலுள்ள "சரிபார்ப்பு' (Verify) என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையை PVR எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பத்தின் நிலை  (Status) குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.
இச்சேவை தொடர்பாக எழுகின்ற கேள்விகள், அதற்கான விளக்கங்கள் தமிழ், ஆங்கிலத்தில்  மேற்கண்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்து மற்றும் புகார் அளிக்கவும் முடியும்
இச்சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தாலோ அல்லது இச்சேவை பற்றிய தங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருந்தாலோ அதுபற்றி இணையதளம் வழியாக காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையில் பின்னூட்டம் (Feedback) என்ற பகுதியில்   அளிக்கலாம்.
மேற்படி பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகர ஆணையர் மற்றும் சென்னை மாநகர DC-II, IS ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும்.
முக்கிய அறிவிப்பு
இச்சேவையைப் பெற விரும்புபவர்கள் அளிக்கப்படும் விண்ணப்பத்திலுள்ள விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைகள் இருந்தால், அந்த  விண்ணப்பம் நிராகரிக்கப்படும்  அந்த சேவைக்காக  செலுத்தப்பட்ட கட்டணத் தொகையும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. இந்த சேவையில் காவல் துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
************************************** செல்வம் பழனிச்சாமி - 07.04.2019 

Monday, February 25, 2019

சட்டவிரோத கைது: போலீசாருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சட்டவிரோத கைது: போலீசாருக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சென்னை: 'சட்டவிரோத கைதுக்காக, போலீசாருக்கு எதிராகவும், இயந்திர கதியாக காவலில் வைக்க உத்தரவிடும் மாஜிஸ்திரேட்டுகளுக்கு எதிராகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட தயங்காது' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்து உள்ளது.
செம்மர கட்டைகள் கடத்தியதாக, ஒரு வாகனத்தை பிடித்து, ஐந்து பேருக்கு எதிராக, வனத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், சென்னை பாரிமுனை அருகில் நின்ற, மாநில, 'பில்லியட்ஸ்' விளையாட்டு வீரரும், அவரது பயிற்சியாளரும், கைது செய்யப்பட்டனர். இவர்கள், 2016, பிப்., 22ல் கைது செய்யப்பட்டனர்.
ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பில்லியட்ஸ் வீரர், தாக்கல் செய்த மனு:
பயிற்சி முடித்த பின், தங்கச் சாலையில் இறக்கி விடும்படி, பயிற்சியாளர் கேட்டார். வரும் வழியில், பாரிமுனை தம்புசெட்டி தெருவில், வாகனத்தை நிறுத்தும்படி கூறினார். மொபைல் போனில், அவரது நண்பருடன் பேசினார். அப்போது, முத்தியால்பேட்டை போலீசார், எங்களை கைது செய்தனர். எதற்காக கைது செய்து, காவலில் வைத்தனர் என்பது தெரியாது.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
பொறியியல் கல்லுாரி மாணவரான மனுதாரர், பில்லியட்ஸ் விளையாட்டு வீரராக உள்ளார். ஏன் கைது செய்யப்பட்டோம் என, தெரியாமல், சிறையில் உள்ளார். அவரது மனதில், இந்த சம்பவம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். அவர் மட்டுமின்றி, அவரது பெற்றோர், குடும்பத்தினரும் அதிர்ந்து போயிருப்பர்.
சட்டவிரோத கைது, ஒருவரது சுதந்திரத்தை மீறுவதாகும். இதனால் தான், ஒருவரை கைது செய்யும் போது, போலீசார் எவ்வளவு கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை, நீதிமன்றம் அவ்வப்போது உணர்த்தி வருகிறது.
மாஜிஸ்திரேட்டும், இயந்திரகதியாக காவலில் வைக்கும்படி, உத்தரவு பிறப்பிக்கின்றனர்.எனவே, சட்டவிரோதமாக கைது செய்யும் போலீசாருக்கு எதிராகவும், இயந்திரகதியாக காவலில் வைக்க உத்தரவிடும் மாஜிஸ்திரேட்டுக்கு எதிராகவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதற்கு, நீதிமன்றம் தயங்காது. இதை, போலீசாருக்கும், மாஜிஸ்திரேட்டுகளுக்கும், சுட்டிக் காட்டுகிறோம். நீதிமன்றம் பிறப்பித்த வழிமுறைகளை மீறியது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரியிடம் விளக்கம் கோரி, ஒழுங்கு நடவடிக்கையை, மாவட்ட வனத்துறை அதிகாரி எடுக்க வேண்டும். மனுதாரரை காவலில் வைக்க உத்தரவிட்ட, எழும்பூர் மாஜிஸ்திரேட், வரும், 2௮ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். மனுதாரருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. விசாரணைக்கு தேவைப்படும் போது, ஆஜராக வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
***********************************************நன்றி : தினமலர் நாளிதழ் - 26.02.2019