disalbe Right click

Showing posts with label புகார். Show all posts
Showing posts with label புகார். Show all posts

Friday, September 8, 2017

புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை

புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை
காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
காவல் நிலையங்களில் புகார்களை பதிவு செய்யாத போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. புகார்களை பதிவு செய்வது தொடர்பாக 8 வழிகாட்டுதல்களை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளது.
மோசடிப்புகார்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, மதுரையைச் சேர்ந்த ஜி.திருமுருகன் உட்பட 69 பேர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி சி.டி.செல்வம் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.
இவற்றை விசாரித்து நீதிபதி சி.டி.செல்வம் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:
காவல்நிலையங்களில் அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு வழக்குகளில் உத்தரவிடப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுபடி போலீஸார் நடந்து கொள்ளாமல் இருப்பது கவலையளிக்கிறது. போலீஸார் தங்கள் விருப்பம்போல செயல்படுகின்றனர்.
இந்தியாவில் 2012-ம் ஆண்டில் 60 லட்சம் வழக்குகள் பதிவாயின. அதே அளவு புகார்கள் பதிவு செய்யப்படாமல் விடப்பட்டுள்ளன. போலீஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால் புகார்தாரர்களுக்கு பாதிப்பு ஏற்படும். வழக்கின் விசாரணையும் பாதிக்கப்படும். சில நேரங்களில் போலீஸார் உண்மைகளை திரித்து, சாதாரண குற்றத்தை கடுமையானதாகவும், கடுமையான குற்றத்தை சாதாரணமாகவும் மாற்றுகின்றனர். எனவே, தமிழக காவல்துறை இயக்குநருக்கு சில வழிகாட்டுதல்களை தெரிவிக்க விரும்புகிறது.
வழிகாட்டுதல்கள் சரியாக நடை முறைப்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். தவறு செய்யும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி நீதிமன்றம் தெரிவிக்கும் வழிகாட்டுதல்களை போலீஸாருக்கு டிஜிபி நினைவு படுத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
வழிகாட்டுதல்கள்
⧭⃝ புகார்களில் முகாந்திரம் இருந்தால் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இதற்கு முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டியதில்லை.
⧭⃝ புகாரில் குற்றம் நடந்திருப்பதற்கான முகாந்திரம் தெரியாமல் போனால், முதல்கட்ட விசாரணை நடத்தி முகாந்திரம் உள்ளதா என்பதைக் கண்டறிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
⧭⃝ விசாரணைக்குப் பின், புகாரில் உண்மையில்லை எனத் தெரிந்து, அந்தப் புகார் முடிக்கப்பட்டால், புகார்தாரருக்கு அதற்கான ஆவணத்தை, ஒரு வாரத்தில் வழங்க வேண்டும். அதில் புகார் முடிக்கப்பட்ட காரணத்தை குறிப்பிட வேண்டும்.
⧭⃝ புகாரில் உண்மை இருந்தும் வழக்குப்பதிவு செய்யாமல் கடமை தவறும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
⧭⃝ புகார் உண்மையானதா? பொய்யானதா? என்பதை பார்க்காமல், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா என்பதை மட்டும் பார்க்க வேண்டும்.
⧭⃝ குடும்பத் தகராறு, வணிகக் குற்றங்கள், மருத்துவ கவனக்குறைவு, ஊழல், தாமதப் புகார்கள் மீது 7 நாள்களுக்குள் முதல்கட்ட விசாரணை நடத்த வேண்டும்.
⧭⃝அதற்குமேல் புகாரை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை காவல்நிலையக் குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
⧭⃝ காவல்நிலைய பொது குறிப்பேடு, நிலையக் குறிப்பேடு, தினக் குறிப்பேட்டில் காவல் நிலையங்களுக்கு வரும் அனைத்து புகார்களின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 28.03.2015

Friday, February 3, 2017

பெட்டிசன் எப்படி எழுத வேண்டும்?


பெட்டிசன் எப்படி எழுத வேண்டும்?
இன்றைய பெரும்பாலான இளைய தலைமுறையினருக்கு இருக்கும் தயக்கம் இதுதான். 
தனக்குள்ள ஒரு பிரச்சணையை பிறர் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதுவதும், அதனை தீர்த்து வைக்க வேண்டுவதும் ஒரு கலைதான்.

நீங்கள் எழுதுகின்ற மனுவின் மூலமாக அதனை படிக்கும் அதிகாரியானவர், உங்களது பிரச்சணையை மிகத் தெளிவாக புரிந்து கொண்டால்தான் அதனை அவர் தீர்க்க முற்படுவார்.
உங்களது மனுமூலமாக உங்களுக்குள்ள பிரச்சணையை படிக்கின்றவர்களுக்கு, கண்ணாடியில் தனது முகத்தை பார்ப்பது போல, அது மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.
உங்களுக்குள்ள பிரச்சணை மற்றவர்களைவிட உங்களுக்குத்தான் மிக நன்றாகத் தெரியும். ஆகையால், அதனை நீங்கள் எழுதுவதுதான் நல்லது.
பெட்டிசன் எப்படி எழுத வேண்டும்?
கருப்பு அல்லது புளு கலர் மை பேனாவால் எழுதுங்கள். வேறு கலர் மையை கண்டிப்பாக பயன்படுத்தாதீர்கள்.
பெட்டிசனின் இடதுபுறம் 1 இஞ்ச் அகல மார்ஜின் விடுங்கள். பக்கம் எண் எழுதுங்கள். நான்கு புறமும் 1 இஞ்ச் அகல மார்ஜின் இருந்தால் உங்களது பெட்டிசன் மிக அழகாக இருக்கும்.
முதலில் சுருக்கமாக தலைப்பை எழுதுங்கள். அதன் கீழ் அடிக்கோடிடுங்கள். பின்பு, உங்களது பெயர் மற்றும் வயதை குறிப்பிட்டு முழு முகவரியை தெளிவாக எழுதுங்கள். 
அதற்குப்பின் பெறுநர் முகவரியை எழுதுங்கள். பெறுநர் முகவரியில் பெறுபவரின் பெயரை குறிப்பிட்டிருந்தால் அதற்கு முன் உயர்திரு என்றும், பெயருக்குப் பின்பு அவர்கள் என்றும் சேர்த்துக் கொள்ளுங்கள். 
பதவியை மட்டும் குறிப்பிட்டிருந்தால், உதாரணமாக மேலாளர் என்று இருந்தால், அதற்குப் பின்னால் அவர்கள் என்று சேர்த்துக் கொண்டால் போதுமானது. பதவிக்கு முன்னால் உயர்திரு என்று போட தேவையில்லை.
அதற்கு அடுத்து எதுபற்றி எழுத நினைக்கிறீர்களோ அதனைப்பற்றி சுருக்கமாக (பொருள்) எழுத வேண்டும். உங்களது கடிதத்தை முழுமையாக படிக்காமலேயே உங்களது பிரச்சணையை அதிகாரி உணர்ந்து கொள்ள இது உதவும். 
உதாரணமாக ஏதேனும் சான்றிதழ் பெற வேண்டியது இருந்தால், ............................ சான்றிதழ் வேண்டுவது சம்பந்தமாக. என்று பொருளில் குறிப்பிட வேண்டும். 
உங்கள் பிரச்சணை சம்பந்தமாக ஏதாவது செய்தி, ஆணை, சுற்றறிக்கை அல்லது கடிதத்தை நீங்கள் பார்த்திருந்தால், அதனைப்பற்றி பொருளுக்கு கீழே (பார்வை) குறிப்பிட வேண்டும். அவைகள் ஒன்றுக்கு மேற்பட்டிருந்தால், அவைகளை தேதிவாரியாக வரிசைப் படுத்துங்கள். தங்களது பிரச்சணையின் வீரியத்தை அதிகாரிக்கு இது உணர்த்தும்.
அதன்பிறகு மரியாதைக்குரிய அய்யா/அம்மா, என்று தொடங்கி தங்கள் பிரச்சணைகளை எழுத வேண்டும். தேவையில்லாத விஷயங்கள் இருக்கக் கூடாது. ஒவ்வொரு வரிகளுக்கு இடையில் போதுமான இடைவெளி இருக்கும்படி எழுதுங்கள். ஒவ்வொரு சம்பவத்தையும் ஒவ்வொரு பத்தியில் குறிப்பிடுங்கள். நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துங்கள். அடித்தல், திருத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிவில் உங்கள் பிரச்சணையை தீர்ப்பதற்கு அதிகாரியிடம் பணிவுடன் வேண்டுங்கள். அவர்களுக்கு ஆணையிடாதீர்கள். 
அதற்குக் கீழே நாள் மற்றும் இடம் குறிப்பிடுங்கள். அதற்குக் கீழே மறக்காமல் கையொப்பம் செய்யுங்கள்.
என்னென்ன இணைக்க வேண்டும்?

பார்வையில் குறிப்பிட்டுள்ள கடிதம், உத்தரவு அல்லது ஆணை போன்ற ஆவண நகல்களை இணையுங்கள். 
நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்
மேலதிகாரிகளுக்கு நகல் அனுப்ப நினைத்தால், பணிவுடன் நகல் சமர்ப்பிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு அதன் கீழ் அவர்களது முகவரியை குறிப்பிடுங்கள்.
எழுதிய பெட்டிசனை ஒரு நகல் (ஜெராக்ஸ்) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அனுப்புகின்ற கடிதங்களை பதிவுத்தபால் மூலம் அனுப்புங்கள். தபால் அலுவலகத்தில் அதற்காக தருகின்ற ரசீதுகளை எடுத்து வைத்துள்ள விண்ணப்ப நகலில் ஒட்டி பத்திரப்படுத்துங்கள். மேல்முறையீடு செய்ய அவை உதவும்
**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Friday, October 14, 2016

ரேஷன் கடைகளில் வழங்கும் பொருள்கள் குறைபாடு


ரேஷன் கடைகளில் வழங்கும் பொருள்கள் குறைபாடு 
என்ன செய்ய வேண்டும்?

ரேஷன் பொருள்கள் வழங்குவதில் குறைபாடுகள் இருந்தால் தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் குறித்த குறைபாடுகள் இருந்தால், குடும்ப அட்டைதாரர்கள் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் அலுவலகத்துக்கு 

044-28592828 என்ற எண்ணிலும், 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் அலுவலகத்துக்கு 

9445190660, 
9445190661, 
9445190662 
ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

நன்றி : தினமணி நாளிதழ் - 14.10.2016

Monday, October 3, 2016

ஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார்


ஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?

நீங்கள், ஒரு நுகர்வோர் எனில் ஒரு பிராண்ட்- இன் தயாரிப்புப் பொருட்கள், அல்லது சேவையின் தரம் பற்றி உங்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், நீங்கள் ஒரு நுகர்வோர் புகார் தாக்கல் செய்து அதைச் சரி செய்ய முடியும். 

ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைப் பொறுத்து ஒரு நுகர்வோர் பல்வேறு வகையான புகார்களைத் தாக்கல் செய்ய இயலும். 

ஒரு நுகர்வோருக்குப் பிரச்சனைகள் இருந்தால், அவர் அந்தப் பிரச்சனை சம்பந்தப்பட்ட தேவையான ஆவணங்களுடன் ஒரு நுகர்வோர் நீதிமன்றம் சென்று அவருடைய பிரச்சனைகளைப் பதிவு செய்யலாம். 

இது தான் தற்பொழுது இருக்கும் நடைமுறை. 

இதற்கு மாற்றாக, நுகர்வோராகிய நீங்கள் ஒரு நுகர்வோர் புகாரை இணைய மூலமும் பதிவிட இயலும்.

 இணைய மூலம் உங்களுடைய பிரச்சனைகளைப் பதிவிடப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வலைத்தளம் அரசாங்கம், நுகர்வோர் ஆன்லைன் ஆதார மற்றும் அதிகாரமளித்தல் மையம் (http://consumerhelpline.gov.in/) என அழைக்கப்படும் ஒரு வலைத்தளத்தை நடத்தி வருகின்றது. 

இது ஒரு நுகர்வோர் புகார் மற்றும் குறைகளை நிவர்த்திச் செய்யும் மையம் ஆகும். இது நுகர்வோர் ஒருங்கிணைப்புக் கவுன்சிலால் நடத்தப்படுகின்றது. இதற்கு இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆதரவு வழங்குகின்றது.   

பதிவு புகார் கொடுக்க விரும்பும் நுகர்வோர், முதலில் இந்தத் தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அந்த வலைத்தளத்தில் உள்ள ஆன்லைன் பதிவு படிவத்தில் நுகர்வோரின் பெயர், மின்னஞ்சல், முகவரி மற்றும் தொலைப்பேசி எண் போன்ற விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும். 

அதன் பிறகு அவருக்கு உரியப் பயனாளர் ஐடி மற்றும் கடவுச்சொல் உருவாக்கப்படும். புகார் பதிவு ஒரு நுகர்வோர், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு பிராண்ட் அல்லது சேவைக்கும் எதிராகப் புகார் தெரிவிக்க இயலும். ஆன்லைன் புகார் அமைப்பு வலைத்தளத்தில் பல்வேறு துறைகள், பிராண்டுகள், மற்றும் சேவைகளை உள்ளடக்கிய ஒரு மெனு உள்ளது. 

அதைப் பயன்படுத்தி ஒரு நுகர்வோர் தன்னுடைய புகாரைப் பதிவு செய்யலாம். செயல்முறை புகாரின் தன்மை, அந்தப் புகாருடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் அதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் ஆகியவற்றை அந்தத் தளத்தில் பதிவேற்ற வேண்டும். 

புகாரின் விளைவுகள் மற்றும் நுகர்வோர் கோரும் நிவாரணம் போன்றவற்றையும் அந்தத் தளத்திலேயே பதிவிடலாம். 

புகாரின் தற்பொழுது நிலைமை புகார் சமர்ப்பிக்கப்பட்ட பின் அந்தப் புகாருக்கு உரிய எண் மின்னணு முறையில் உருவாக்கப்பட்டு அந்தப் புகாருக்கு ஒதுக்கப்படும். 

அந்தப் புகார் தீர்க்கப்படும் வரை, புகாருக்கு உரிய எண்ணைப் பயன்படுத்தி அந்தப் புகாரின் நிலையைக் கண்காணிக்க இயலும்.      

Written by: திரு Batri Krishnan

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » 03.10.2016



Wednesday, September 14, 2016

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482


குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482

உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் அளிக்கப்படுகின்ற புகார்களை அவர்கள் பதிவு செய்ய மறுக்கின்ற போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ்வர்களிடம் அதுபற்றிய  புகாரினை ( ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவுத்தபால் மூலம்) அனுப்பி, உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு ஒரு நெருக்கடியை மனுதாரர் ஏற்படுத்த முடியும். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் நமது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது?

இதுபோன்ற சூழ்நிலையில் குற்ற விசாரனை முறைச் சட்டம் பிரிவு 156(3)ன் கீழ், நாம் நீதிமன்றத்தை நாடுவது நல்ல பலனைத்தரும்.  இதனையே சுருக்கமாக கோர்ட் டைரக்‌ஷன் என்கிறார்கள்.

சிலர் இதற்காக நேரடியாக உயர்நீதிமன்றத்தினை நாடுகிறார்கள். அது அவசியமில்லை. நேரடியாக இதற்காக தங்களை அணுகக்கூடாது என்று உயர்நீதி மன்றமும் அறிவித்துள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகினாலே போதுமானது. 

குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 482ன் கீழ் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு சாதகமாக நீதிமன்றமானது   உத்தரவிடலாம்.

இந்தப் பிரிவின் கீழ், போலீசில் அளிக்கப்படும் புகார்களை அவர்கள்   பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவு செய்ய அவர்களுக்கு  உத்தரவிடும் படியும், நடைபெறுகின்ற விசாரணையை வேறு ஏஜன்சிக்கு மாற்றவும், வழக்கை ரத்து செய்யவும் நாம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கலாம்.

*******************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

Saturday, August 27, 2016

பேப்பர், பேனா மூலம் போராடுபவர்கள்

பேப்பர், பேனா மூலம் போராடுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?
நமது நாட்டில் நமக்கான தேவைகளை பெறுவதற்கும், உரிமைகளை அடைவதற்கும் ஒவ்வொருவரும் போராடத்தான் வேண்டியதிருக்கிறது. 
பணவசதி உள்ளவர்கள்   லஞ்சம் மூலமாக அதனை அடைந்து விடுகின்றனர். பணவசதி இல்லாதவர்களும், லஞ்சம் கொடுக்கக்கூடாது என்ற வைராக்கியம் உள்ளவர்களும் சட்டத்தின் உதவியை நாடுகின்றனர்.
முன்பெல்லாம் பொதுமக்கள் கையாண்ட  “மொட்டைக் கடிதம்” என்ற ஒரு ஆயுதத்திற்கு அரசாங்கத்தில் பணியாற்றுபவர்கள் பயந்து நடுங்குவார்கள். 
தங்களது கோபத்தையும், ஆத்திரத்தையும் தணித்துக் கொள்ள சிலர் “மொட்டைக் கடிதத்தை” தவறாக பயன்படுத்தியதால் அரசாங்கம் அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்ற நிலையை எடுக்க வேண்டியது வந்தது.
ஆனால், இப்போதெல்லாம் உரிய ஆவணங்களுடன் புகார் அனுப்பினால்கூட அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. 
எத்தனையோ முறை விண்ணப்பித்து்ம் ஒரு நடவடிக்கையும் இல்லை என்று பொதுமக்கள் சலித்துக் கொள்வதை நான் மட்டுமல்ல, அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 
அவர்களுக்காகத்தான் இந்தப்பதிவு!
உளி, சுத்தியல் கொண்டு பாறையை உடைப்பதை பார்த்திருக்கிறீர்களா?
ஒரே அடியில் பாறை உடைந்து விடுகிறதா? இல்லை.
பலமுறை அடித்த பிறகுதான் பாறை உடையும். 
ஆனால், ஒவ்வொரு முறை சுத்தியலால் அடிக்கும் போதும் பாறைக்குள் சில மாற்றங்கள் ஏற்படும். பாறையின் வலிமை உள்ளுக்குள் பலவீனமாகும். அந்த மாற்றம் வெளியில் நமக்குத் தெரியாது. 
அதே போலத்தான் அரசாங்கத்திற்கு அனுப்பப்படுகின்ற புகார் மனுக்களும். 
ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்றுதடவை என்று அதோடு நிறுத்திக் கொள்ளாமல், தொடர்ந்து மனுக்களை துறை உயர் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு (வட்டம், கோட்டம், மாவட்டம், கோட்டை) அனுப்பிக் கொண்டே இருங்கள். தொடர்ந்து  போராடுங்கள். 
சுத்தியல் மூலமாக விழுகின்ற அடிகளால், பாறைக்குள் ஏற்படுகின்ற மாற்றத்தைப் போல, உங்களது தொடர்ச்சியான புகார்மனுக்கள் அரசாங்கத்துறைக்குள்ளும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தும். 
வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்! 
............................................................................................அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

Tuesday, August 23, 2016

ஆவணப்பதிவு - தடை கோரி விண்ணப்பம்

ஆவணப்பதிவு - தடை கோரி விண்ணப்பம் - என்ன செய்ய வேண்டும்?

கீழ்க்கண்ட லின்க்கை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

நன்றி : எனது முகநூல் நண்பர் திரு A Govindaraj Tirupur.


Tuesday, August 9, 2016

ஆன்லைன் மூலமாக காவல்துறையில் புகார்


ஆன்லைன் மூலமாக காவல்துறையில் கம்ப்ளைண்ட் செய்ய 
என்ன செய்ய வேண்டும்?

ஆன்லைன் மூலமாக காவல்துறையில் கம்ப்ளண்ட் செய்ய கீழே காணும் லின்க்கை கிளிக் செய்யுங்கள். 

http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?5

அதில்,   உங்களுடைய புகாரை பதிவு செய்யலாம்.

4 MPஅளவிற்கு தங்களிடம் உள்ள (PDF,PNG,JPEG) புகார் சம்பந்தமான  ஆவணங்களை தங்கள் புகாருடன் இணைக்கலாம்.

உங்கள் புகாரின் (CSR/FIR) நிலையை அறிந்து கொள்ளலாம்.

உங்கள் புகார் குறித்து காவல்துறையினர் எடுத்த முடிவை தெரிந்து கொள்ளலாம்.

அதனை “பிரிண்ட்” எடுத்துக் கொள்ளலாம்.

http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?5

மேற்கண்ட லின்க்கை கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் இடது பக்கத்தில் உங்கள் பெயர், பாலினம், பிறந்தநாள், முகவரி, செல் நம்பர் மற்றும் இமெயில் ஐடி ஆகிய விபரங்களை நிரப்ப வேண்டும்.

வலது பக்கத்தில்  முதலில் குற்றம் பற்றிய தன்மைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் தங்களது புகாருக்கு ஏற்ற ஒன்றை தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

எந்த நாளில் குற்றம் நடந்தது என்பதை அடுத்து குறிப்பிட வேண்டும்.

 எந்த இடத்தில் குற்றம் நடந்தது என்பதைப் பற்றி அடுத்து குறிப்பிட வேண்டும்.

உங்கள் புகாரைப் பற்றி அடுத்து உள்ள பாக்ஸில் சுருக்கமாக டைப் செய்ய வேண்டும்.

அதற்கு கீழே டாக்குமெண்ட் (ஆவண நகல்கள்) இணைக்கப்பட்டு உள்ளதா, இல்லையா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.

அதற்கும் கீழே இருக்கும் சிறிய பாக்ஸில் அங்கு தெரிகின்ற செக்யூரிட்டி எண்ணை டைப் செய்ய வேண்டும்.

இறுதியாக உங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யவுடன் உங்களுக்கு பதிவு எண் வழங்கப்படும். 

அந்த பதிவு எண் மூலம் தங்கள் புகாரின் நிலையை அறியலாம்.

Friday, August 5, 2016

ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார்


ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க 
என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ஆன் லைனில் புகார் அளிப்பதற்கு  இங்கு  http://onlinegdp.tn.nic.in/  கிளிக் செய்யுங்கள்.

 அனைத்து மாவட்ட நிர்வாகத்தின் அன்றாட நிகழ்வுகளில் பொதுமக்களின் குறை தீர்ப்பு என்பது  இரண்டற கலந்த ஒன்றாகும்.

 அனைத்து அரசுத் துறைகளிலும் தகவல் தொழில் நுட்பத்தை கையாளுவது மிக முக்கிய பணி. பொது மக்களின் கோரிக்கையை கையாளுவது மாவட்ட நிர்வாகத்துக்கும் அரசு துறைகளுக்கும் இருக்கும் பணிகளிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்தது.

பெறப்படும் அனைத்து கோரிக்கைகளையும் ஆவணங்களின் துணைகொண்டு கண்காணிப்பது என்பது காலதாமத மட்டுமின்றி நிர்வாகத்துக்குத் தேவையான குறை தீர்ப்பு புள்ளி விவரங்களை துல்லியமாக பெற முடியாது. 

இணைய வழி நடைமுறையானது மாவட்ட நிர்வாகத்துக்கு உதவுவது மட்டுமின்றி கோரிக்கை தீர்வையும் எளிதாக்குகிறது .

ஆன்லைன் மூலமாக மாவட்ட நிர்வாகத்தின் வழியாகப் பெறப்படும் கோரிக்கை மனுக்கள், தொடர்புடைய துறைக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைப்பதுடன், அது பற்றிய விபரங்கள் மனுதாரருக்கும் தெரிவிக்கப்படுகிறது. 

மேற்படி துறையானது குறை தீர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்கிறது. மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து அதனை  கண்காணிக்கிறது. 

கோரிக்கை பெற்றவுடன் மாவட்ட நிர்வாகமானது, கோரிக்கையை தரம் பிரித்து சட்ட சிக்கல் மற்றும் நுண்ணிய கோரிக்கைகளை நன்கு ஆய்வு செய்து குறை தீர்ப்புக்கான ஆலோசனையை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்குகிறது.


நன்றி : 
திரு நல்வினை விஸ்வராஜு வழக்கறிஞர் அவர்கள்

Sunday, June 19, 2016

மின்புகார் அளிக்க


மின்புகார் அளிக்க என்ன செய்ய வேண்டும்?
மின்வெட்டு அல்லது கோளாறு தொடர்பான புகார்களை தெரிவிக்க 1912 என்ற 24 மணி நேர ஹெல்ப்லைன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மின் இணைப்பு, மின்வெட்டு, மின்கோளாறு உள்ளிட்ட புகார்களை அந்தந்த மாநில அரசுகளும், மின்வாரியமும் நிர்ணயித்த தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தான் நுகர்வோர் தெரிவிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் மின்சாரம் சம்பந்தமான புகார்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

இதனால் மின் நுகர்வோர் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாடு முழுவதும் மின் புகார்களை தெரிவிக்க 1912 என்ற ஒரே எண்ணை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்துள்ளது.

கோவா தலைநகர் பனாஜியில் அனைத்து மாநில மின்சார துறை அமைச்சர்களின் இரு நாள் கருத்தரங்கு கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. அப்போது மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நாடு முழுவதும் ஒரே புகார் எண்ணை அமல்படுத்தும் புதிய முறையை அறிமுகம் செய்தார்.

1912 என்ற இந்த தொலைபேசி சேவை 24 மணி நேரமும் இயங்கும். இந்த எண்ணை மின் நுகர்வோர் தொடர்பு கொண்டால் உடனடியாக அந்தந்த மாநில அரசு துறைகளுக்கோ அல்லது மத்திய அரசின் கட்டுப்பாட்டு அறைக்கோ அழைப்பு செல்லும்.

அப்போது மின்சாரம் சம்பந்தமான புகார்களை தெரிவித்தால், உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவர். மேலும் புகார் சம்பந்தமான அனைத்து விவரங்களும் இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் கிடைக்கும்.

நேரடி கண்காணிப்பு

தவிர மின் உதவி எண்ணை நுகர்வோர் ஒருவர் தொடர்பு கொண்டால், அவரது பிரச்சினை என்ன? எப்பொழுது அவர் புகார் தெரிவித்தார். பிரச்சினையின் தீவிரம் என்ன? என அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும்.

மத்திய அரசும் நேரடியாக இந்த சேவையை கண்காணிக்கவுள்ளது. இதனால் 1912 தொலைபேசி சேவை மின் நுகர்வோருக்கு மிகுந்த பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 19.06.2016

Tuesday, June 7, 2016

வங்கி தீர்ப்பாயத்தில் புகார் செய்ய


வங்கி தீர்ப்பாயத்தில் புகார் செய்ய என்ன செய்ய வேண்டும்?
சென்னை: வங்கி தீர்ப்பாயம்(Ombudsman - ஓம்பட்ஸ்மேன்) என்பது வங்கி சேவைகள் குறித்து வாடிக்கையாளர்கள் செய்யும் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மத்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் சேவை. 

இந்த வங்கி தீர்ப்பாயம் 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இது திட்டம் ஒரு சட்ட ரீதியிலான அமைப்பாகும். 

இந்த அமைப்பு வங்கி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துகிறது. வங்கி வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் புகார்களை ஏற்று அவற்றை சரி செய்கிறது. மத்திய ரிசர்வ் வங்கியால் நியமனம் செய்யப்பட்ட மூத்த அதிகாரிகள் இந்த அமைப்பில் இருக்கின்றனர். இவர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் புகார்களை ஏற்று அவர்களின் புகார்களை சரி செய்ய ஆவன செய்கின்றனர். 

இந்த அமைப்பு அனைத்து வர்த்தக வங்கிகள், கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகிய அனைத்து வகை வங்கிகளையும் கட்டுப்படுத்துகிறது. 

தீர்ப்பாயம் ஏற்கும் புகார்கள் எப்படிப்பட்ட புகார்களை வங்கி வாடிக்கையாளர்கள் இந்த தீர்ப்பாயத்தில் தெரிவிக்கலாம் என்பதைப் பார்ப்போம் 

1. வங்கிகள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு செக்குகள், ட்ராப்ட்ஸ் மற்றும் பில்கள் போன்றவற்றிற்கான பணத்தை செலுத்தாத போது அல்லது பணத்தைச் செலுத்த கால தாமதம் செய்யும் போது இந்த அமைப்பில் புகார் தெரிவிக்கலாம். 

2. வாடிக்கையாளர்கள் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வழங்கும் போது, அதை சரியான காரணங்கள் இல்லாமல் வங்கிகள் மறுக்கும் போது அல்லது அதற்காக கமிஷன் வாங்கும் போது 

3. வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தை எடுக்க விடாமல் செய்வது அல்லது தாமதமாக்குவது

 4. ட்ராப்டுகள், பே ஆர்டர்கள் அல்லது வங்கி செக்குகளை அனுப்பாத போது அல்லது அனுப்ப கால தாமதம் செய்யும்போது

 5. வேலை நேரத்தில் வங்கி வாடிக்கையாளரின் தேவைகளை கவனிக்காமல் இருக்கும்போது 

6. வங்கியால் அல்லது வங்கி முகவர்களால் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட வசதிகளை வழங்காதபோது அல்லது அதை வழங்க கால தாமதம் செய்யும்போது 

7. வைப்பு நிதிகளை சரியான நேரத்தில் திரும்ப செலுத்தாத போது அல்லது ரிசர்வ் வங்கியின் சட்ட திட்டங்களை கடைபிடிக்காதபோது 

8. இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களுக்கு வங்கிகளிடமிருந்து முறையாக சேவைகள் கிடைக்காவிட்டால் அவர்களும் இந்த அமைப்பில் புகார் தெரிவிக்கலாம். 

9. சரியான காரணம் இல்லாமல் டெப்பாசிட் அக்கவுண்டுகளை தொடங்க வங்கிகள் மறுக்கும்போது 

10. முன்னறிவிப்பின்றி வாடிக்கையாளரிடமிருந்து கட்டணங்கள் வசூலிக்கும்போது 

11. ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு ஆகியவற்றைக் கையாள்வதில் ரிசர்வ் வங்கியின் சட்டதிட்டங்களை வங்கிகள் அலட்சியப்படுத்தும்போது 

12. ஓய்வூதியத்தை உரிய வாடிக்கையாளர்களிடம் வழங்காதபோது அல்லது அதை வழங்க கால தாமதம் செய்யும்போது 

13. வரி செலுத்தும்போது அதை வங்கிகள் மறுக்கும்போது அல்லது அந்த தொகையை வாங்க கால தாமதம் செய்யும்போது 

14. அரசு வழங்கும் சலுகைகளை வழங்க மறுக்கும்போது அல்லது அதை வழங்க கால தாமதம் செய்யும்போது 

15. சரியான காரணம் இல்லாமல், முன்னறிவிப்பு இல்லாமல் வைப்பு நிதி கணக்குகளை வலுக்கட்டாயமாக முடிக்கும்போது 

16. கணக்குகளை முடிக்க மறுக்கும்போது அல்லது முடிக்க கால தமாதம் செய்யும் போது 

17. வங்கிகள் சட்டத்தின்படி, வெளிப்படையாக வங்கிகள் செயல்படாதபோது 

18. வங்கி கடன்கள் வழங்குவதில் குறைகள் இருந்தாலும் புகார் செய்யலாம் 

19. வட்டி வசூலிப்பதில் ரிசர்வ் வங்கியின் நடைமுறைகளைப் பின்பற்றாதபோது

 20. வங்கிக் கடனை சரியான நேரத்தில் வழங்காதபோது அல்லது கால தாமதம் செய்யும்போது

 21. சரியான காரணம் இல்லாமல் வங்கிக் கடனுக்கான விண்ணப்பங்களை நிராகரிக்கும்போது 

ஆனால் தீர்ப்பாயத்தில் புகார் செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட வங்கிகளில், வாடிக்கையாளர்கள் அது சம்பந்தமாக புகார் தெரிவித்திருக்க வேண்டும். 

அவ்வாறு புகார் தெரிவித்து 1 மாதத்திற்கும் மேலாக அதன் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அல்லது வங்கிகள் எடுக்கும் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்றால் வாடிக்கையாளர்கள் தீர்ப்பாயத்தில் புகார் செய்யலாம். 

எழுத்து மூலமாக புகார்களைத் தெரிவிக்கலாம். அல்லது ஆன்லைன் மூலமாக அதாவது 

https://secweb.rbi.org.in அல்லது BO/compltindex.htm 

என்ற இணையதளத்திற்குள் சென்று புகார் தெரிவிக்கலாம். அல்லது இமெயில் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். எனினும் புகார் தெரிவிக்க முறையான படிவம் எதுவும் வழங்கப்படவில்லை.

நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் - 04.04.2013

குறிப்பு:

E-mail address of Ombudsman officer 

http://www.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=164#