disalbe Right click

Showing posts with label மோசடி குற்றங்கள். Show all posts
Showing posts with label மோசடி குற்றங்கள். Show all posts

Monday, September 11, 2017

வீட்டில் இருந்தபடியே சமபாதிக்க அழைக்கும் மோசடி விளம்பரங்கள்

Image may contain: one or more people

வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க அழைக்கும் மோசடி விளம்பரங்கள்

இளம் பெண்கள் குழந்தை வளர்ப்பு, குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், தங்கள் படிப்பும் திறமையும் வீணாகிறதே என்று வருந்துகிறார்கள்.
குழந்தைகள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த பிறகு, இனியாவது தங்கள் படிப்பை, திறமையைப் பயன்படுத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதுடன், குடும்பத்தையும் மேம்படுத்தலாமே என்ற எண்ணம் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வந்துவிடுகிறது.
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்தபடியே எப்படியாவது தங்கள் திறமையை நிரூபித்து, சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இளம் பெண்களுக்கும் நடுத்தர வயதுப் பெண்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது.
இவர்களைச் சுண்டி இழுப்பது ‘ஆன்லைன் ஜாப்’ என்ற விளம்பரம்.
வலை விரிக்கும் வலைதளங்கள்
‘நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் டாலர்களில் சம்பாத்திய மாக மாற்ற வேண்டுமா?’
‘ஒரு மணிநேரம் வெப்சைட் லிங்க்கை மவுஸால் க்ளிக் செய்தால் போதும், உங்கள் வங்கிக் கணக்கில் பணம் கிரெடிட் ஆகும்!’
‘உங்களுக்கு வருகிற இமெயில்களை க்ளிக் செய்து, அப்படியே உங்கள் நண்பர்களுக்கு ஃபார்வேர்ட் செய்தால், எத்தனை இமெயில்களுக்கு ஃபார்வேர்ட் செய்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல உங்கள் அக்கவுண்ட்டில் பணம் ஏறும்.’
‘வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் சம்பாதிக் கலாம். 2 மணிநேரம் வேலை செய்தால் போதும். முன்பணமாக இவ்வளவு கட்டுங்கள். மாதாமாதம் பணம் ‘கொட்டோ கொட்டென்று கொட்டும்.’
இதுபோன்ற ஆசை வார்த்தைகளைப் பார்க்கும்போது அனுபவம் இல்லாதவர்களுக்கு இயல்பாகவே ஈர்ப்பு வரத்தான் செய்யும். இத்தனை நாட்கள்தான் வீணடித்துவிட்டோம். இனியாவது சாதிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவது இயல்பு.
‘உட்கார்ந்த இடத்தில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம்’ என்று சொன்னவுடன் கண்களை மூடிக்கொண்டு பல ஆயிரங்களை முன்பணமாகக் கட்டி, செலுத்திய பணத்துக்கு பிஸினஸும் முறையாகக் கிடைக்காமல், ஆர்டர் எடுத்து ஓரிரண்டு மாதங்கள் செய்து கொடுத்த வேலைக்கும் ஊதியம் கிடைக்காமல் கண்ணீர் விடுபவர்கள் பெருகிவருகிறார்கள். முன்பணம் பெற்றுக்கொண்டு, தலை மறைவாகி விடும் நிறுவனங்கள் ஏராளம்.
இணையம் என்ற ‘அலாவுதீன் பூதம்’
“என்னிடம் ஒரு கம்ப்யூட்டர் இருக்கு மேடம், வீட்டில் இருந்தே ஆன்லைனில் சம்பாதிக்க முடியுமா?’’ என்று பலரும் கேட்கிறார்கள். இவர்களில் 99% பேர் ஏற்கெனவே பணம் கட்டி ஏமாந்து போனவர்களாகத்தான் இருப்பார்கள்.
முகமே தெரியாத நபர்களுக்கு முன்பணம் செலுத்திவிட்டு வெளியில் சொல்லவும் முடியாமல், மன உளைச்சலில் புழுங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு சில கேள்விகள்.
# உங்கள் நேரத்தையும் உழைப்பையும் போட்டுச் செய்து கொடுக்கிற வேலைக்கு, நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்?
# யாராவது வேலையே செய்யாமல் பணம் கொடுப் பார்களா, அல்லது குறைந்த உழைப்புக்கு அள்ளி அள்ளிப் பணம் கொடுப்பார்களா?
# வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யச் சொல்கி றார்கள் என்றால், அந்த வெப்சைட்டில் உள்ள தகவல்கள் சமூக விரோத செயல்களுக்குப் பயன்படுபவையாக இருந்தால்?
# வெளிநாட்டு நிறுவனத்துக்கு உங்களை ஏஜெண்ட்டாகப் போட்டு உங்கள் வங்கி அக்கவுண்ட்டை தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்திக்கொண்டால்?
கவனமாகச் செயல்படுங்கள்!
உங்களைப் பண மழையில் நனைய வைக்க அவர்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை?
ஆன்லைனில் முகம் தெரியாதவர்களிடம் முன் பணம் செலுத்தி ஆர்டர் எடுக்காதீர்கள்.
வெப்சைட் லிங்கை க்ளிக் செய்யவும், இமெயிலை ஃபார்வேர்ட் செய்யவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஏஜெண்ட்டாகச் செயல்படவும் சொல்கிற வேலைகள் பெரும்பாலும் ‘ஆன்லைன் ஜாப் - அள்ளலாம் பணத்தை’ என்ற வார்த்தை ஜாலத்துடன் விளம்பரப்படுத்தப்படும்.
அவை உங்கள் கண்களில் பட்டால், யோசிக்காமல் உதறித் தள்ளுங்கள். ‘யாராவது ஆன்லைனில் பிசினஸ் கொடுப்பார்கள். அதைச் செய்து பணம் சம்பாதிக்கலாம்’ என்ற எண்ணம் இருந்தால் உடனடியாக அதையும் கைவிடுங்கள்.
திறமைதான் அடிப்படை
அப்படியானால் ஆன்லைனில் சம்பாதிக்கவே முடியாதா என்றால், முடியும். இப்படிக் குறுக்கு வழியில் அல்ல.
உங்களிடம் உள்ள திறமைக்கு கம்ப்யூட்டர், இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்தலாம் என்று சிந்தியுங்கள்.
அதை நேரடியாகச் செய்கிற தொழிலாக்கி, அதற்கு ஆன்லைன் வசதிகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசியுங்கள்.
உங்களுக்குத் தையல் தெரியும் என்றால், விதவிதமாக டிஸைன் பிளவுஸ்கள் தைத்துத் தரும் தொழிலை வீட்டிலேயே தொடங்குங்கள். உங்கள் வீடு, உறவினர் வீடு, பக்கத்து வீடு, பக்கத்து தெரு, அக்கம் பக்கத்து ஊர் என உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் பிரபலமாகுங்கள். பிறகு அந்தத் தொழிலை ஆன்லைனில் உள்ள வசதிகள் மூலம் உலகறியச் செய்யுங்கள்.
எந்த வேலை செய்தாலும் முழு மனதுடனும் ஈடுபாட்டுடனும் உங்கள் திறமையை வெளிக்காட்டும்படி இருந்தால் வெற்றி உங்களைத் தேடிவரும். பணமும் கொட்டும். புகழும் கிடைக்கும். தோல்வி கிடைத்தால் சோர்ந்துவிடாமல் எப்படிச் சரி செய்வது என்பதை நிதானமாக யோசித்து, தவறை சரி செய்துகொண்டு முன்னேறுங்கள். வெற்றி உங்கள் கையில்!
முதலில் உங்கள் திறமையைக் கண்டறியுங்கள். அதை வளர்த்தெடுங்கள். பிறகு தொழிலாக்குங்கள். கம்ப்யூட்டர், இன்டர்நெட் மூலம் பிரபலப்படுத்துங்கள். இதுதான் உண்மையான ‘ஆன்லைன் ஜாப்’.
கட்டுரையாளர்:காம்கேர் கே. புவனேஸ்வரி
மென்பொருள் நிறுவன நிர்வாக அதிகாரி
தொடர்புக்கு: compcare@hotmail.com

நன்றி : தி இந்து நாளிதழ் - 11.09.2016

Friday, September 8, 2017

மக்களை ஏமாற்றும் மோசடி குற்றத்திற்கு இனி அபராதம் மட்டுந்தானா?

மக்களை ஏமாற்றும் மோசடி குற்றத்திற்கு இனி அபராதம் மட்டுந்தானா?  
அனுமதியில்லாத பிளாட்கள் விற்பனை - ரூ.25 லட்சம் அபராதம் செலுத்த ஒப்புதல் : உயர்நீதிமன்ற வழக்கால் விடிவு
மதுரை: மதுரையில் அனுமதியின்றி பிளாட்கள் விற்பனை தொடர்பானவழக்கில், ரியல் எஸ்டேட் உரிமையாளர் 25 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒப்புதல் அளித்தார். முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாயை நீதிமன்றத்தில் வழங்கினார்.
மதுரை விவசாயக் கல்லுாரி அருகே நெல்லியேந்தல்பட்டி ராமநாதன் தாக்கல் செய்த மனு:
கொடிக்குளம் பகுதி மக்கள் நெல்லியேந்தல் கண்மாய் நீரை நம்பியுள்ளனர். அது 21 எக்டேர் பரப்பளவு கொண்டது. ஐயப்பன் ரியல் எஸ்டேட் உரிமையாளர் தனசேகரன் கண்மாய் கரையோரம் பிளாட்கள் அமைத்து, மணிகண்டன் நகரை உருவாக்கினார். 'லேஅவுட்'டிற்கு நெல்லியேந்தல் ஊராட்சியில் அனுமதிபெறவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராமநாதன் மனு செய்திருந்தார். பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆய்வில், கண்மாய் கரையை ரோடாக பயன்படுத்தியது உறுதியானது. நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள்: 
'லேஅவுட்'டிற்கு முறையான அனுமதியின்றி, மக்களை தனசேகரன் ஏமாற்றியுள்ளார். கண்மாய் கரையை ரோடாக மாற்றி பயன்படுத்த அனுமதித்துள்ளார். இதனால் இவர் மீது மோசடி உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்றனர்.
ரியல் எஸ்டேட் உரிமையாளர் தனசேகரன்,' 
எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன். குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க 25 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தத் தயார். முன்பணமாக 5 லட்சம் செலுத்துகிறேன். மீதியை செலுத்த ஆறு வாரங்கள் அவகாசம் தேவை,' என மனு செய்தார். 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.
நீதிபதிகள் உத்தரவு : 
5 லட்சம் ரூபாயை கண்மாய் பராமரிப்பு செலவிற்கு அரசு பயன்படுத்த வேண்டும். தனசேகரன் போன்றவர்களால், சட்டவிரோதமாக பிளாட்கள் விற்பனை செய்யப்படுவதால், அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்.மதுரையில் அனுமதியில்லாத கட்டடங்கள் முளைத்துள்ளது தெரியவருகிறது. இது மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகளின் தோல்வியை வெளிப்படுத்துகிறது. அவர்களுக்கு, தவறு செய்யும் அதிகார பலமிக்கவர் களிடமிருந்து சலுகைகள் கிடைப்பதை இது காட்டுகிறது என்றனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 08.09.2017 

Tuesday, September 5, 2017

மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -7

Image may contain: grass and text
மண்ணுளி முதல் ஈமு வரை..! - மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -7
நில மோசடிகள்

"இங்கே தோண்டுன வட்ட கிணத்தை காணோம் சார்... !' என சினிமாவில் நகைச்சுவைக்காக செய்யும் மோசடி வித்தைகள் எல்லாம் கொங்கு மண்டலத்தில் சர்வ சாதாரணம்.

அந்தளவுக்கு நிலமே இல்லாமல் ப்ளாட் விற்பனை, காடு, மலை என அனைத்தையும் லே அவுட் போட்டு விற்பனை செய்துவிட்டனர். 'படையப்பா படத்தில் வருமே, அதே மாதிரி 'இங்கே தான் கிரானைட் கற்கள் நிறைஞ்சிருக்கு' என மலையை காட்டி சாதாரணமாய் விலை பேசுவது போன்ற ரியல் எஸ்டேட்டில் ஏமாற்றும் வித்தைகளைக் கற்றறிந்த மலை முழுங்கி மகாதேவன்களைக் கொண்ட பகுதி கொங்கு மண்டலம்.
நிலத்தைக் காட்டி எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பது மிக சுவாரஸ்யமான விஷயம். அதைத்தான் இங்கு பார்க்கப் போகிறோம்...
தவணை முறை நில மோசடி
மாதத் தவணையில் ப்ளாட் விற்பனை... நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அதற்கும் கீழாக உள்ள மாத சம்பளம் வாங்குபவர்களை மையப்படுத்தி இன்றும் கொடி கட்டி நடந்து வரும் ரியல் எஸ்டேட் மோசடி. எப்படியாவது ப்ளாட் வாங்கி விட வேண்டும் என்பவர்கள்தான் மோசடியாளர்களின் டார்கெட்.

நகரின் மையப் பகுதியில் ஒரு அலுவலகத்தைத் தொடங்குவார்கள். மாதத் தவணைத்திட்டத்தில் ப்ளாட் விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்துவார்கள். எங்கோ ஓர் மூலையில் உள்ள சில ஏக்கர் இடத்தை ப்ளாட் போட்டுள்ளதாக சொல்வார்கள். 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. மாதம் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை 4 வருடங்கள் செலுத்தினால் போதும், 1200 சதுர அடி நிலம் உங்களுடையது என்பார்கள். எப்படியாவது சொந்த நிலத்தை வாங்க மாட்டோமா என ஏங்கி கிடக்கும் நடுத்தர வர்க்கத்தினர், இவர்கள் பேச்சில் அப்படியே மயங்குவார்கள்.
'முதலில் அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட தொகைக் கொடுக்க வேண்டும். அதன்பின்னர் மாதம் தோறும் தவணை. தவணை முடிந்ததும் நிலம் உங்களுக்கு கிரையம் செய்து தரப்படும்' என சொல்லுவார்கள். எப்படியாவது ஒரு ப்ளாட் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர்கள், பணத்தைக் கொட்டுவார்கள் மாதம் தவறாமல் தவணையும் செலுத்துவார்கள். கட்டிய பணத்துக்கு பக்காவாக ரசீதும் வழங்கப்படும்.
அவர்கள் குறிப்பிட்ட அந்த நாள் வரும். ஆனால் இடம் கிரையம் செய்து தரப்பட மாட்டாது. இடத்தை கிரையம் செய்து தரச்சொல்லி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முறையிட்டு விட்டு, நிறுவனம் பூட்டப்பட்டதும், தவணை முறை திட்டத்தில் பலகோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக காவல்நிலையத்துக்கு நடையாய் நடப்பார்கள்.
போலீசில் புகார் கொடுத்த பின்னர்தான் அவர்கள் பெயரில் நிலமே இல்லை என்பதும், நிலமே இல்லாமல் மோசடி செய்தார்கள் என்பதும் தெரியவரும். இது போன்று சில நூறு மோசடிகளாவது கொங்கு மண்டலத்தில் நடந்தேறி இருக்கும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இன்றும் இந்த மோசடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நிலமே இல்லாமல் மோசடி?
அவங்க பேர்ல நிலமே இல்லை. அப்புறம் எப்படி ப்ளாட் விற்பனை செய்வார்கள் என்கிறீர்களா? அதுதான் இங்கே தந்திரமே.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் வெறுங்கையால் முழம் போடுவதில் கில்லாடிகள். ஒரு கிராமத்தில் சில ஏக்கர் நிலத்தை வாங்குவது போல நில உரிமையாளரிடம் பேசுவார்கள். அதற்கு அட்வான்ஸாக சிறுதொகையை செலுத்தி ஒப்பந்தம் போடுவார்கள். அதன் பின்னர் அந்த ஏரியாவில் 15 ஏக்கர் நிலத்தை வாங்கியது போல, இடத்தை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்குவார்கள். மாத தவணை என்பதால், பணம் முழுவதும் கட்டி முடித்த பின்னர்தான் கிரையம் செய்து தர வேண்டும் என்பதால் எந்த பிரச்னையும் இருக்காது.
அதுவரை, 'உங்க இடம் இதுதான்!' என குறிப்பிட்டு ரசீது தருவார்கள்.. அவ்வளவுதான். பணம் எல்லாம் கட்டி முடித்த பின்னர்தான் அங்கு அவர்களுக்கு இடமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியவரும். அப்போது சில கோடிகளுடன் அவர்கள் எஸ்கேப் ஆகியிருப்பார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்த பின்னர்தான் அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வரும்.
இதில் இன்னொரு ரகமும் உண்டு. ஒரு இடத்தை காட்டி, மாத தவணையில் விற்பதாகச் சொல்வார்கள். 'லே அவுட்' போடுவார்கள். உங்களுக்குக் காட்டப்படும் இடம் 3 முதல் 4 பேருக்கு விற்கப்படும். இறுதியில் எல்லோருக்கும் பெப்பேதான். "தவறுதலாக இப்படி நடந்து விட்டது. இந்த இடம் இல்லை.. வேறு வேண்டுமானால் தருகிறேன்..!" என சொல்லி, மற்றொரு இடம் காட்டப்படும். மிகக் குறைந்த விலைக்குப் போகும் அந்த இடம் தான் உங்களுக்கு. இந்த நிலம் அப்படியே இருக்கும். மீண்டும் 'லே அவுட்', மாதத் தவணை விற்பனை என ஒன்றுக்கும் பெறாத மற்றொரு நிலம் கைமாற்றி விடப்படும்.
ஏமாற்றுவது இப்படித்தான்
அட நிலமே இல்லாம மோசடி நடக்குதா? நிலத்தை வாங்குறவங்க இதைக் கூட யோசிக்க மாட்டாங்களா? என்று தானே யோசிக்கிறீர்கள். யோசிக்க விட்டாதானே. அந்தளவுக்கு பேசுவார்கள். உங்கள் ஆசையைத் தூண்டி விட்டால், நீங்கள் அதன் பின்னால் எதையும் யோசிக்க மாட்டீர்கள். அதுதான் இவர்களின் டெக்னிக்.
"இந்த இடத்தோட இப்போதைய மதிப்பு 3 லட்ச ரூபாய். உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய்தான் வருது. வேணும்னா விசாரிச்சுக்கோங்க..." என்பார்கள்.

அப்போது அங்கு வருபவர்களிடம் அவர்களே கேட்பார்கள். அவர்கள், "நிலத்தின் மார்க்கெட் வேல்யூ 3 லட்சத்துக்கு மேலே...!" என சொல்வார்கள்" உண்மையில் அங்கு வருபவர் ஒன்று அவர்களின் ஆளாக இருப்பார் அல்லது நிலத்தின் மதிப்பு 3 லட்சத்துக்கு மேல் என ஏற்கெனவே நம்பவைக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
"மாசம் 5 ஆயிரம் கட்டினா போதும். இந்த இடம் உங்களுக்குச் சொந்தம். அப்போ இந்த நிலத்தோட மதிப்பு 15, 20 லட்சமா இருக்கும். நீங்க கட்டுறது வெறும் 2 லட்சம் தான். அப்போ 13 லட்சம் உங்களுக்கு லாபம். அதுவும் ரொம்ப ஈசியா மாச தவணையில கட்டிடலாம்" என இவர்கள் பேசுவது எல்லாம் மக்களின் ஆசையைத் தூண்டும் ரகம் தான். அடுத்து ரசீது. 'ஏமாற்றத்தானே போகிறோம். ரசீது எதற்கு தர வேண்டும்?' என இல்லாமல், கொடுக்கும் பணத்துக்கு பக்காவாக ரசீது வழங்குவார்கள்.
சாதாரணமாக பெயரை எழுதி பூர்த்தி செய்து கொடுக்காமல், அனைத்து விவரங்களுடன் அந்த ரசீது இருக்கும். 'ரசீதை பத்திரமா வைச்சுக்கோங்க. கிரையம் அன்னைக்கு தேவைப்படும்" என அவர்கள் ஒவ்வொரு முறை சொல்லும் போதும், 'இவர்களை எல்லாம் சந்தேகப்பட்டா அவ்வளவுதான்!' என மனசு சொல்லும். அந்தளவுக்கு இவர்களின் பேச்சும், நடவடிக்கையும் இருக்கும். இதையெல்லாம் மீறி ஒருவர் அந்த இடம் குறித்து விசாரித்தால் கூட பலரும் ஏமாறாமல் தடுக்க முடியும். ஆனால் 100ல் ஒரு இடத்தில் கூட அப்படி நடப்பதில்லை என்பதுதான் கொடுமை.
காட்டுக்கும், மலைக்கும் கூட லே அவுட் 
மிக குறுகிய காலத்தில் கோடிகளில் சுருட்ட முடியும் என்பதுதான் இந்த மோசடியாளர்களின் ஐடியா. இதில் இன்னுமொரு மோசடி இருக்கிறது. கேட்பாரற்று கிடக்கும் நிலத்தை லே அவுட் போட்டு விற்பது. கோவை, திருப்பூர் பகுதியில் இந்த மோசடி படு பிரபலம். அதாவது குறிப்பிட்ட இடத்தில் லே அவுட் போடுவார்கள். விற்பனையும் நடக்கும். ஆனால் உண்மையில் அது யாருக்கும் சொந்தமான இடமாக இருக்காது.

காடு, மலை, புறம்போக்கு என எந்த கணக்குமில்லாமல் லே அவுட் போட்டு விற்று விடுவார்கள் மோசடியாளர்கள். அப்ரூவல் இருக்கிறதா? ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், இன்வெஸ்ட் செய்து ஏமாந்த ஜனங்கள் எக்கச்சக்கம்.
இது தவிர அரசு விதிகளை மீறி, ஒரு ஏக்கரில் 12 ப்ளாட்களுக்கு பதிலாக அதிக ப்ளாட்களை போட்டு விற்று விட்டு எஸ்கேப் ஆகும் ரியல் எஸ்டேட் ஆசாமிகளும் உண்டு. இடத்தை வாங்கி வீடு கட்டும் போதுதான், இந்த இடத்தில் பார்க் வரணும். இது ரிசர்வ் லேண்ட் என அரசு தரப்பு சொல்ல.. சிக்கல் கிளம்பும்.
'இந்த நிலத்துல கிரானைட் இருக்கு பாஸ்..!'
இவற்றை எல்லாம் மீறி மற்றொரு நில மோசடி இருக்கிறது. அதுதான் விலை உயர்ந்த கற்கள் மண்ணில் இருப்பதாகச் சொல்லி ஏமாற்றி விற்பது. கோவையில் நடந்த மோசடி சம்பவம் ஒன்றைப் பார்க்கலாம்.

கோவை மாவட்டத்தில் மலைப் பாறைகள் நிறைந்த பகுதி அது. அங்கு கிரானைட் கற்கள் நிறைந்திருப்பதாக சொல்லி ஒரு கும்பல் ஊடுருவுகிறது. திருப்பூரில் உள்ள தொழிலதிபர் அவர். கிரானைட் கற்கள் நிறைந்திருப்பதாக சில புகைப்படங்களை அவர்களிடம் அந்த கும்பல் காட்டுகிறது. " 'படையப்பா' படம் பார்த்தீங்களா? அதுல ரஜினிக்கு சொந்தமான இடத்துல வெட்ட வெட்ட கிரானைட் கற்கள் கிடைக்குமே அது மாதிரிதான் இந்த இடத்துலயும் வெட்ட வெட்ட கிரானைட் கிடைக்கும்" எனச்சொல்லி அவரை நம்ப வைத்தவர்கள், கிரானைட் அந்த விலைக்கு போகும், இந்த விலைக்கு போகும்.. என் இடத்தை வாங்குனா நீங்க பெரிய கோடீஸ்வரர். என்னை மறந்துடாதீங்க..!" என புரோக்கர் போல பேசி, ஆசையைத் தூண்டுவார்கள். "நீங்க சொன்னா இடத்தைப் பார்க்கலாம்..!" என்பார்கள்.
அந்த இடம் செல்ல நாள் குறிக்கப்பட்டது. மலைப்பாறைகள் நிறைந்த பகுதியில் விலை உயர்ந்த சொகுசு காரில் தொழிலதிபரும், மற்றவர்களும் வந்திறங்கினார்கள். இந்த இடத்தில் கிரானைட் கற்கள் உள்ளதாக சொல்லி, சாட்டிலைட் மேப்பில் (?)காட்டுவார்கள். அப்போது அங்கு மற்றொரு சொகுசு காரில் மற்றொருவர் வந்திறங்கினார். பரஸ்பர அறிமுகத்துக்கு பின்னால், காரில் இருந்து நகைப்பெட்டி ஒன்றை எடுக்கிறார். அதில் கிரானைட் கற்கள் மின்னுகிறது.
அவசரமாய் பெட்டி மூடப்பட்டு காரில் போடப்படுகிறது. "சரி.. இங்கே யூரின் போற மாதிரி, நிலத்தைப் பாருங்க. மத்ததை வெளியில போய் பேசிக்குவோம். இங்கே கிரானைட் இருக்குறது தெரிஞ்சுதுன்னா, பக்கத்து நிலத்துக்காரன் விலையை கன்னா பின்னானு கூட்டிடுவான்!" எனச்சொல்லி, அவசர அவசரமாய் தொழிலதிபரை காரில் ஏற்றிக்கொண்டு பறந்து விடுவார்கள்.
இன்னும் இருக்கு மோசடிகள்!
அதன் பின்னர் மீண்டும் ஆசை தூண்டப்படும். எல்லாம் முடிவான பின்னால், அட்வான்ஸ் என சில லட்சங்கள் கை மாறும். நிலத்தை கிரையம் செய்ய நாள் குறிக்கப்படும். அன்று இடத்துக்கு சென்றால் டிப் டாப் உடையணிந்து சிலர் நின்று கொண்டிருப்பார்கள். "கனிம வளத்துறை அதிகாரிகள் ரெய்டு...நாம் இங்கே இருக்க வேண்டாம்!' எனச்சொல்லி திரும்பி விடுவார்கள். "அதிகாரிகளைச் சமாளிக்க கொஞ்சம் பணம் வேணும்.. ஒரு 5 லட்சம் கொடுங்க!" என தொழிலதிபரிடம் கேட்டு வாங்குவார்கள். அதோடு சரி.. அவர்கள் எஸ்கேப்!

உண்மையில் அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது. கிரானைட் நிலம் அடிமாட்டு விலைக்கு கிடைக்கிறது என நினைத்து, பல லட்சங்களை இழந்த சம்பவம்தான் இது. இப்படி பல வகைகளில் நில மோசடிகள் அரங்கேறிய பகுதி கொங்கு மண்டலம்.
இப்படி பல மலைமுழுங்கி மகாதேவன்கள் நடமாடும் கொங்கு மண்டலத்தில் மக்கள் ஜாக்கிரதையாக இருப்பது ஒன்றுதான் மோசடியைத் தடுக்கும் வழி. ஆனால் மக்கள் எப்போது ஜாக்கிரதையாக இருந்தார்கள்?
இன்னும் ஏராளமான மோசடிகள் நித்தமும் அரங்கேறிக்கொண்டுதான் இருந்தன. மக்களை ஏமாற்றிய கதையும், மக்கள் ஏமாந்த கதையும் இங்கு ரொம்பவும் அதிகம். இன்னுமா மோசடிகள் இருக்கின்றன என்கிறீர்களா? நிறைய இருக்கின்றன. அவற்றை அடுத்த வாரம் பார்க்கலாம்...
- ச.ஜெ.ரவி
நன்றி : விகடன் செய்திகள் - 04.09.2015 

Monday, August 28, 2017

ஈமு கோழி வளர்ப்பு மோசடி

Image may contain: 1 person, standing, outdoor and text
ஈமு கோழி வளர்ப்பு மோசடி

மண்ணுளி முதல் ஈமு வரை...!- மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -5
"வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறதும், ஈமு கோழி வளர்க்கறதும் ஒண்ணு. ஆரம்பத்துல ஜாலியாதான் இருக்கும். அப்புறம் அவமானம்தான் மிஞ்சும்” கொங்கு மண்டல விவசாயிகளை கடுப்படித்த எஸ்.எம்.எஸ்.களில் இதுவும் ஒன்று.
அந்தளவுக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈமுவை நம்பி, கடனாளி ஆனார்கள். “ஆத்தா ஆடு வளர்க்க சொல்லி கொடுத்தா, கோழி வளர்க்க சொல்லி கொடுத்தா.. ஈமு கோழி வளக்க மட்டும் சொல்லிக் கொடுக்கவே இல்லையே...”னு ஈமு கோழியில் முதலீடு பண்ணி, முச்சந்தில நின்னு புலம்பற நிலைமைக்கு தள்ளப்பட்டார்கள் கொங்கு விவசாயிகள். இப்படியெல்லாம் ஏமாற்ற அல்லது ஏமாற முடியுமா என்பதின் உச்சம்தான் இந்த ஈமு மோசடி..
எப்படி ஏமாத்துனாங்க... எப்படி ஏமாந்தாங்க.? அதைப்பத்திதான் இங்கே பார்க்கப்போறோம்.
கவர்ச்சிகரமான மோசடி!
விவசாயத்தில் இடுபொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை, விவசாயப் பொருட்களுக்கு சந்தை விலை இல்லாதது, பருவ மழை பொய்த்து போனது என தொடர் நஷ்டத்தால் நொந்து நொடிந்து போன விவசாயிகள், காடு கழனிகளை விற்றுவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம், அதிரடியாக கவர்ச்சிகரமாய் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ஈமு மோசடி.
"ஒன்றரை முதல் இரண்டு லட்ச ரூபாய் முதலீடு செய்யணும். அப்படி முதலீடு செஞ்சா, உங்கள் நிலத்தில் எங்க செலவுல ஈமு கோழிகளுக்கான கொட்டகை போட்டு தந்து, அதுல ஆறு ஈமு குஞ்சுகளை விடுவோம். அதற்கான தீவனத்தையும் நாங்களே தருவோம். அந்த ஈமு கோழிகளை நீங்கள் வளர்க்கணும். அதுக்கு மாதக் கூலியாய் ரூ. 6000 முதல் 9000 வரை கொடுப்போம். கோழி பெரிசான உடன் முதலீடு பணத்தை திரும்ப கொடுத்துட்டு பணத்தை வாங்கிக்குவோம். ஈமுவை வளர்க்க எல்லாத்தையும் நாங்க தந்துடுவோம். நீங்கள் வளர்த்தா மட்டும் போதும்," என விவசாயிகள் மத்தியில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது அந்த மோசடி.
ஆரம்பத்தில் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மோசடியாளர்களின் அடுத்தடுத்த அஸ்திரங்கள் விவசாயிகளை காலி செய்தது. அடுத்தடுத்த வாரங்களில் இந்த மோசடி செயல்வடிவம் பெற்றது. தினப்பத்திரிகைகளில் முதல்பக்கத்தில் சிரித்தன ஈமு கோழிகள். ஈமுவோட முட்டை, கறி, கொழுப்பு, தோல்னு எல்லாத்துக்கும் மதிப்பு இருக்கு. புரட்சி செய்யலாம் வாங்க என்று கோடம்பாக்கத்துல இருந்து கொங்கு மண்டலத்துக்கு இடம்பெயர்ந்து நம் ஹீரோக்கள் விவசாயிகளை அழைச்சு ஆசை காட்ட... மழை இல்லை, 'கரன்ட் கட்'னு ஏகப்பட்ட பிரச்னைகளோட இருந்த விவசாயிகள், இதுலயாச்சும் லாபம் கிடைக்குமானு முதலீடு பண்ண ஆரம்பிச்சாங்க.
நீங்க வளர்த்தா மட்டும் போதும்?
லட்சம் லட்சமாக பணத்தை வாங்கிட்டு, கொஞ்சம் ஈமு கோழியை கொடுத்தவங்க, 'அதுக்கு சாப்பாட்டை நாங்க கொடுத்துடுவோம். நீங்க வளர்த்தா மட்டும் போதும், நீங்க வளத்தா மட்டும் போதும்’னு முதலில் சொன்னவங்க, பின்னர் சிவாஜி படத்துல ஸ்ரேயாகிட்ட ரஜினி சொன்ன மாதிரி, ‘வளத்துப்பாக்கலாம் வாங்க'ன்னு விவசாயிகள்கிட்ட சொன்னாங்க. அதுக்கு அப்புறம் என்ன..? ஸ்டார்ட் மியூசிக் தான்.
ஈமு கோழி என்னவோ நெருப்பு கோழி மாதிரி ஆறடிக்கு வளர்ந்து நின்னுச்சு. ஆனா ஈமு கோழி கொடுத்தவன்தான் ஆபீசை மூடீட்டு போயிட்டான். இது தான் ஈமு மோசடியின் சுருக்கம். கிட்டத்தட்ட சில மாதங்களில் இந்த மோசடியில் ஏமாந்த விவசாயிகளின் எண்ணிக்கை பல ஆயிரம். ஏமாந்த தொகை பல நூறு கோடிகள்.
'ஈமுவை வைத்து மோசடி; ஈமு இல்லாமலும் மோசடி'
எப்படி இத்தனை பேரை ஒரே நேரத்தில் ஏமாற்ற முடியும்? என்பது உங்கள் கேள்வியாக இருந்தால், அதற்கு இவர்கள் பின்பற்றியது இரு முறைகள். முதல் முறை மற்ற மோசடிகளை போலத்தான். முதலில் முதலீடு செய்பவர்களுக்கு பணத்தை அள்ளி வழங்கி விட்டு, இறுதியில் ஒட்டுமொத்தமாக ஏமாற்றுவது.
இத்திட்டத்தில் ஆரம்பத்தில் சேரும் விவசாயிகளுக்கு, அடுத்தடுத்து வந்துசேரும் விவசாயிகளின் முதலீட்டு பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டது. "எனக்கு கரெக்டா பணம் வந்துடுச்சு. திரும்பவும் ஒரு ரெண்டு லட்சத்தை கடன் வாங்கி கட்டியிருக்கேன். ஒரே வருஷத்துல ரெண்டு லட்சமும் வந்துடும்” என்று ஆரம்பத்தில் இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் பேசியதுதான் ஆரம்ப கட்ட விளம்பரம்.
அதன் பின்னர் தான் பேப்பர் விளம்பரங்கள், சினிமா நடிகர்களின் புரட்சி விளம்பரங்கள் எல்லாம். முதலில் வந்த விவசாயிகள் கோழியை வளர்த்து முட்டையை கொடுக்க, அந்த முட்டையில் இருந்து வரும் குஞ்சு மீண்டும் சில லட்சங்களுக்கு விவசாயிகளிடம் கொடுக்கப்பட்டது.
இறுதி கட்டத்தில் அதிகரித்து வரும் விவசாயிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஈமு கோழிகள் இல்லாமல் போக, அப்போதும் கூட ஈமுவை கொடுக்காமல் 'பணத்தை கொடுத்தால் மட்டும் போதும். ஈமுவை வளர்க்காவிட்டாலும் மாத தவணை கொடுப்போம்' எனச்சொல்லியும் முதலீட்டை அள்ளிக்கொண்டது மோசடிக் கும்பல்.
அதாவது ஈமு வளர்ப்புக்கு நிலமும், நேரமுமில்லாதவர்களுக்கும் என தனித்திட்டத்தை துவக்கினர். அதாவது முதலீடு செய்பவரின் சார்பாக ஒரு இடத்தில் பண்ணையை அமைத்து கோழிகளைப் பராமரிக்கும் திட்டம்தான் அது. முதலீடு செய்தவர்கள் அவ்வப்பொழுது தங்கள் பண்ணையைப் பார்வையிட்டு வரலாம். ஆனால் அது நீங்கள் முதலீடு செய்த பண்ணை தான் என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது. ஒரே பண்ணையை திரும்ப திரும்ப காட்டி, 'இது தான் உங்கள் பண்ணை' என பல நூறு பேரை கூட ஏமாற்ற முடியும். இப்படியும் பல கோடிகளை ஈமு நிறுவனங்கள் சுருட்டின.
விவசாயிகளை ஏமாற்ற மாஸ்டர் ப்ளான்
அடுத்த முறை கொஞ்சம் வித்தியாசமானது. 'நாம சொல்லுற பொய்யில கொஞ்சமும் உண்மையும் கலந்திருக்கணும்' - இது 'சதுரங்க வேட்டை' படத்தில் மோசடியில் ஈடுபடும் நாயகன் பேசும். ஈமு மோசடியிலும் இது பொருந்தும். 'பெரும்பான்மையான விவசாயிகளை ஏமாற்ற வேண்டும் என்றால் அவர்கள் காலம் காலமாக செய்து வரும் தொழிலை ஒத்திருக்க வேண்டும். அதேநேரத்தில் கவர்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும். அப்படியென்றால் தான் பெரும்பான்மையான விவசாயிகளை ஆசை காட்டி, கவர்ந்திழுத்து ஏமாற்ற முடியும்.' இது தான் ஈமு மோசடியின் சுருக்கம்.
அப்படித்தான் விவசாயிகள் தாங்கள் காலம் காலமாக செய்து வரும் கால்நடை வளர்ப்பு தொழிலை ஒத்து அமைக்கப்பட்டது ஈமு மோசடி. தங்களின் தொழில் சார்ந்து இது இருந்ததாலும், சில லட்சங்களை போட்டால் கூடுதலாய் வருவாய் கிடைக்கும் என்பதாலும் இந்த தொழிலில் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டனர். சில லட்சங்களை கொடுத்து ஏமாற, ஈமு கோழிப்பண்ணை வாசல்களில் கால்கட்ட வரிசையில் காத்திருந்து பணம் கட்டி ஏமாந்து போனதுதான் இதன் உச்சம்.
மருத்துவ குண நலன் கொண்டதாம் ஈமு இறைச்சி?
ஈமுவோட முட்டை, கறி, கொழுப்பு, தோல்னு எல்லாத்துக்கு மதிப்பு இருக்குனு சொல்லியதும் விவசாயிகளை கவர்ந்திழுக்க பயன்படுத்தப்பட்டது. அதில் ஒன்றுதான் இந்த கோழி மருத்துவத்துக்கு உகந்தது என்பது.
"நல்லா வளர்ந்த ஈமு கோழி 5 ல இருந்து 6 அடி உயரத்துக்கு வரும். எடை 50 ல் இருந்து 60 கிலோ வரை இருக்கும். எப்படி பார்த்தாலும் 40 கிலோ கறி தேறும். ஒரு கிலோ ஈமு கோழி கறி 500 ரூபாய். ஒரு கோழியின் கறி மட்டும் 20 ஆயிரத்துக்கு போகும்.
இது தவிர இதோட முட்டை, கறி, கொழுப்பு, தோல்னு எல்லாம் நல்ல விலைக்கு போகும். கோழி தோலை சாயம் போட பயன்படுத்தலாம். இறகுகளை வைச்சு பிரஷ் தயாரிக்கிறாங்க. இதோட முட்டை ஓடு அலங்கார வேலைக்கு பயன்படுத்துறாங்க. எண்ணெய் மருத்துவத்துக்கு பயன்படுது. ஈமு கோழிகள்ல கொலஸ்ட்ரால் சுத்தமா இல்லை. ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், ஆஸ்த்துமா உள்ளவங்க தாராளமாக இதை சாப்பிடலாம். கோழிக்கறி, ஆட்டுக்கறிக்கு எல்லாத்துக்கும் மேல இனி ஈமு கோழிக்கறி தான் இருக்கும்," என இஷ்டத்துக்கும் சொல்லிதான் இந்த மோசடி அரங்கேறியது. கிட்டத்தட்ட அதன் எச்சத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் தங்கள் விளம்பரங்களுக்கு பயன்படுத்திக்கொண்டனர் மோசடிக்காரர்கள்.
உண்மையில் ஈமு வளர்ப்பு லாபமானது தானா?
ஈமுவை வைத்து மோசடி நடப்பது ஒரு புறம் இருக்கட்டும். உண்மையில் ஈமு வளர்ப்பது லாபமானது தானா? என நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். நிச்சயம் இல்லை என சொன்னவர்கள், ஈமுவின் பின்னணியை விளக்கினர்.
ஈமு கோழி ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பறவை இனம். 1980களில் ஆஸ்திரேலியாவில் வணிக ரீதியான ஈமு கோழி பண்ணைகள் இருந்தன. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு மதிப்பிழந்த ஈமுக்கள் தான் இங்கு வந்துள்ளன. ஈமு கோழி வளர்ப்பு என்பதே மோசடிதான். கொங்கு மண்டலத்தை மையப்படுத்தி நடந்த இந்த மோசடியில், முட்டை கொள்முதல், குஞ்சு உற்பத்தி என இங்கே மட்டுமே இது நடந்து வருகிறது.
ஆனால் இங்கு ஈமு கோழிக்கு தேவையான தீவன நிறுவனங்கள் இல்லை. கறியை வெட்டிப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இங்கு துவக்கப்படவில்லை, தோலை உரித்துப் பதப்படுத்தும் நிறுவனங்களோ, கறியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனங்களோ கூட இங்கு இல்லை. அப்படியிருக்க இவை எல்லாம் சுத்தப்பொய். ஈமுவை வைத்து மோசடி மட்டுமே நடந்தது என்பதுதான் உண்மை. ஈமுவின் அனைத்து உடல் பாகங்களை விற்றால் கூட சில ஆயிரங்கள் கூட தேறாது என்பதுதான் உண்மை நிலை. ஆனால் அதை விவசாயிகள் உணரத்துவங்கும் முன்னர் விவசாயிகள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.
கடைசி வரை பாம்பை காட்டாமல் மோடிவித்தை செய்யும் பாம்பாட்டி போலத்தான் இந்த மோசடியும். இந்த மோசடியில் ஈமு கோழி என்பது வெறும் கண்கட்டு வித்தையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை," என்றனர்.
இது விவசாயியின் புலம்பல்
விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து விவசாயிகள் சிலரிடம் பேசினோம். நடந்தவற்றை நகைச்சுவையாய் நம்மிடம் பகிர்ந்து கொண்ட ஒரு விவசாயினுடைய பேட்டி அப்படியே இதோ...
"ஈமு மோசடியில் பணம் போனது ஒரு பக்கம் மன உளைச்சல்னா, போற இடத்துல எல்லாம் " ஏன் மாப்ளே... ஈமு கோழி வளர்த்தா லட்சமா பணம் சம்பாதிக்கலாம்னு சொன்னியே? யாரு சம்பாதிப்பானு சொல்லவே இல்லையே”னு கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. நாமளே மறந்தாலும் விடாம ஞாபகப்படுத்துனாங்க. இழவு வீட்டுக்கு போனாலும் கட்டிப்பிடிச்சு அழற கேப்புல, "என்ன ஈமுல போனது, போனது தானா?'னு கேட்டு ரொம்ப அழ வைச்சாங்க. எப்படி ஏமாந்தேன்னு நினைச்சு பாத்தாத்தாங்க ரொம்ப கடுப்பாகுது.
சத்யராஜ், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பாக்கியராஜ்னு எல்லாரும் ஒரே அடியாய் கிளம்பி வந்து, ஈமுவுல அது இருக்கு. இது இருக்குனு எங்களை மூளைச்சலவை பண்ணிட்டு சூட்டிங் முடிஞ்சதும் பேக்கப் சொல்லிட்டு, பேமண்ட் வாங்கிட்டு போய்ட்டாங்க.
விவசாயத்துக்கு மழையும் இல்லை. கிணத்து தண்ணியை இறைக்க மோட்டார் போட்டா, கரண்ட்டும் இல்லை. ரியல் எஸ்டேட்காரன் வேற, கையில ஸ்டாம்ப் பேப்பரோட நிலத்தை சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தான். வயித்துப்பாட்டுக்கு வேற வழியில்லாமத்தானே ஈமுக்கோழியில இன்வெஸ்ட் பண்ணிட்டு, இருளடைஞ்சு போன எங்க வாழ்க்கையில வெளக்கு ஏத்தலாம்னு நினைச்சோம்.
ஆனா அப்புறம்தான் தெரிஞ்சது, அது விளக்கு இல்லை. கொள்ளினு. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிஞ்ச கதையாயிடுச்சு. எங்க சாப்பாட்டை குறைச்சிட்டு ஈமுவுக்கு நிறைய சத்தான உணவை கொடுத்து வளர்த்தோம். கடைசியில இப்படி பண்ணிட்டானுவ. நம்பி வளர்த்தோம். நெருப்பு கோழி மாதிரி ஆறடிக்கு வளந்து நின்னுச்சு. திடீர்னு ஒரு நாள் பாத்தா , ஈமு கோழியை கொடுத்தவன் ஆபிச இழுத்து மூடிட்டு போயிட்டானுங்க.
அப்படியெல்லாம் ஏமாத்த மாட்டாங்க. ஏதாவது விசேஷத்துக்கு போயிருப்பாங்க. வந்துடுவாங்கன்னு மனசை திடப்படுத்திகிட்டுதான் இருந்தோம். இதுக்கிடையில ஈமு சாப்பாடு இல்லாம செத்திர கூடாதேன்னு வூட்டுல இருக்கற அரிசி, பருப்பு எல்லாம் போட்டோம். ஆனா அதை எங்கே அது சாப்பிடுச்சு. சாப்பிட்டா சாப்பிடு, இல்லைனா போன்னு போலாம்னுதான் யோசிச்சோம். அப்ப தான் ஞாபகம் வந்துச்சு. சோத்துக்கு வழியில்லாம ஈமு கண்ணை மூடிக்கிட்டா…நாம தலையில துண்டைப் போட்டுக்கிட்டு தலைமறைவா திரிய வேண்டியதுதான்.. அதை நினைச்சு அது என்ன சாப்பிடும், அதை வாங்கலாம்னு போனா நாங்க வாங்குற அரிசி விலையை விட அது அதிகம்.
ஆபிசை மூடிட்டு போனவங்க. திரும்ப வரவே இல்லை...!
போலீஸ் ஸ்டேஷன் போய் ஈமுல மோசடி பண்ணீட்டாங்கன்னு சொன்னதும், " போ... போய் லைன்ல நில்லு!"ன்னு சொன்னது போலீஸ். லைன்ல நின்னா, எனக்கு முன்னாடி இருந்தவங்க “உங்களுக்கு எவ்வளவு போச்சு. அவ்வளவா? "னு ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டாங்க. ஸ்டேஷன்ல தந்த மரியாதையை பார்த்தா, முதலீடு பண்ணது கிடைக்காதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், 'போனால் போகட்டும் போடானு' பாட்டுப்பாடிட்டே (வேற வழி?) வீட்டுக்கு வந்தேன்.
ஈமுக்கோழிகளை என்னதான் பண்றது யோசிச்சா வழியே தெரியலை. ஆடு கோழின்னா அய்யானாருக்கு பலி கொடுத்து செஞ்ச பாவத்துக்கு பிராயசித்தமாவது பண்ணிக்கலாம். ஆனா ஆஸ்திரேலியாவுல இருந்து கொண்டாந்த இந்த ஈமு கோழிய என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சோம்.
கிலோவுக்கு 2 ஆயிரம் கிடைக்கும், 3 ஆயிரம் கிடைக்கும்னு ஆசை காட்டுனாங்க பாவி பயலுக. இப்ப என்னடான்னா விவசாயத்தையும் விட்டுட்டு வீதிக்கு வந்தது தான் மிச்சம்.
பல லட்சம் முதலீடு... கிடைச்சது சில ஆயிரம்... இதுவா புரட்சி?
இந்த நிலைமையில தான், ஈமு வாங்க, விற்க நாங்க இருக்கறோம்னு அந்த கர்நாடகா பார்ட்டியும், ஆந்திரா பார்ட்டியும் வந்தாங்க. ஒரு கோழி 500 ரூபாய், 600 ரூபாய்னா எடுத்துக்கறேன்னு சொன்னாங்க. பாத்து போட்டு கொடுங்க னு சொன்னோம். அதெல்லாம் முடியாதுனு கட்அன்ட் ரைட்டா சொல்லி அடிமாட்டு விலைக்கு, சாரி அடிஈமு விலைக்கு வாங்கிட்டு போயிட்டாங்க. பல லட்சம் முதலீடு பண்ணி சில ஆயிரங்களை மட்டும் சம்பாதிச்ச பின்னாடிதான் ஆரம்பத்துல அவங்க விளம்பரத்துல சொன்ன 'புரட்சி' க்கு அர்த்தம் புரிஞ்சது” என்றார் பரிதாபமாக.
ஆனால் சினிமா மாதிரி க்ளைமேக்ஸில் எல்லோரும் திருந்தி, இனி ஏமாறுவதில்லை என முடிவு செய்துவிடவில்லை என்பதுதான் வருத்தம். இந்த க்ளைமேக்ஸ் சற்று வித்தியாசம். ஈமு மோசடி பரபரப்பாய் இருந்த நேரம், பணத்தை இழந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கும், வீட்டுக்குமாய் நடந்து கொண்டிருந்த நேரம்... மற்றொரு புறம் சத்தமே இல்லாமல் இன்னொரு மோசடி. அங்கும் கேள்வியே இல்லாமல் முதலீடு செய்து கொண்டிருந்தனர் விவசாயிகள்.
அதில் ஈமுவில் பணத்தை இழந்தவர்களும் கூட இருந்தார்கள். அது என்ன மோசடி என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
- ச.ஜெ.ரவி (விகடன் செய்திகள் -21.08.2015)

Sunday, August 27, 2017

மண்ணுளி முதல் ஈமு வரை மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -6

Image may contain: one or more people and text
மண்ணுளி முதல் ஈமு வரை மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -6
குறி வைக்கப்படும் விவசாயிகள்ஈமு கோழி வளர்ப்பு மோசடி நடந்து முடிந்த நேரம்... அதே இடம்... அதே விவசாயிகள்... அதே போன்றதொரு மோசடி... ஒரே ஒரு வித்தியாசம்தான். ஈமு கோழிக்கு பதில் நாட்டுக்கோழி. ஈமு பண்ணைகளுக்கு பதில் நாட்டுக்கோழிப் பண்ணைகள். வெளிநாட்டு பறவையான ஈமு கோழியை வைத்து மட்டுமல்ல, நாட்டுக்கோழியை காட்டியும் ஏமாற்ற முடியும் என மோசடியாளர்கள் சவால் விடாத குறையாக அரங்கேற்றியதுதான் இந்த நாட்டுக்கோழி வளர்ப்பு மோசடி. 
"பணத்தை முதலீடு செய்யுங்கள் நாட்டுக்கோழி பண்ணை வைத்துத் தருகிறோம்... தீவனம் தருகிறோம்... மாதந்தோறும் போனஸ் தருகிறோம் என்று கூறி பணத்தை வசூல் செய்து, ஈமுவை மாதிரி இல்லாமல், துவங்கிய ஓரிரு மாதங்களிலேயே ஆயிரக்கணக்கான விவசாயிகளை ஏமாற்றி, இழுத்து மூடி விட்டு தலைமறைவாகினர் மோசடியாளர்கள்.
மோசடி நடந்தது எப்படி?ஈமுவுக்கான அதே மோசடி ஃபார்முலாதான் நாட்டுக்கோழி மோசடிக்கும். என்ன.. கோழிகளின் எண்ணிக்கை மட்டும் அதிகம். அதாவது ஒரு லட்சம் முதல் எத்தனை லட்சம் வேண்டுமானலும் முதலீடு செய்யலாம். முதலீடு செய்த உடன், முதலீட்டாளர்கள் இடத்தில் ஷெட் அமைத்து கொடுத்து, அங்கு சில நூறு நாட்டுக்கோழி குஞ்சுகள் விடப்படும். அதற்கான தீவனத்தை கொடுத்து விடுவார்கள். 
அவற்றை பராமரித்து வளர்த்தால், ஒரு லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் 10 ஆயிரம். ஒன்றரை லட்சம் என்றால், 15 ஆயிரம் ரூபாய். அதுவே 2 லட்சம் என்றால் 20 ஆயிரம் வழங்கப்படும். ஒரு ஆண்டுகள் கோழியை வளர்த்து ஒப்படைத்தால், இறுதியில் முதலீடு பணம் திரும்ப வழங்கப்படும் என ஈமு ஃபார்முலாவில் கவர்ச்சிகரமாக அமலாக்கப்பட்டது நாட்டுக்கோழி மோசடி. மோசடி அறிவிப்பு துவங்கிய உடன், விவசாயிகள் ஏராளமானோர் முதலீடு செய்ய, ஓரிரு மாதங்களில் முதலீடு பணத்தை ஆட்டையப்போட்டு தலைமறைவானது மோசடி கும்பல். 
ஈமு அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரிரு மாதங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பிலும் பல கோடியை இழந்தனர் விவசாயிகள்.
'அது ஈமு சார்... இது நாட்டுக்கோழி...'நாட்டுக்கோழி வளர்ப்பு மோசடி நடந்த காலகட்டம் என்பது கொங்கு மண்டலத்தில் பரபரப்பாக இருந்த காலகட்டம். வெளிநாட்டு பறவையான ஈமுவை காட்டி கோடிக்கணக்கில் சுருட்டியது பெரும் சர்ச்சையாகி, பணத்தை முதலீடு செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் வீட்டுக்கும் நடந்து கொண்டிருந்த நேரம். இந்த நேரத்தில் ஈமு பாணியில் நாட்டுக்கோழியை வைத்து எப்படி ஒரு பெரிய மோசடி நடந்தது என்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான். இப்படியெல்லாம் ஏமாற்ற முடியுமா என்பது தானே கொங்கு மண்டல ஸ்பெஷல். 
அதேதான் இங்கேயும். நாட்டுக்கோழியை மார்க்கெட் செய்ததே ஈமுவை வைத்துதான். "இது ஈமு மாதிரி இல்லை சார். இது நம்ம நாட்டுக்கோழி. நாட்டுக்கோழிக்கு இருக்குற டிமாண்ட் உங்களுக்கே தெரியும். ஈமு மாதிரி வெளிநாட்டு கோழியை கொண்டு வந்து உங்களை ஏமாத்தலை. 500 குஞ்சை நீங்க வளர்த்து கொடுத்தா, அதை மார்க்கெட்ல விக்கும் போது நல்ல வருமானம் வருது. அதுல ஒரு பங்குதான் உங்களுக்கு.
இந்த பிசினஸில் நீங்களும் ஒரு பார்ட்னர். அதனாலதான் உங்க கிட்ட இருந்து ஒரு முதலீடு பணம் வாங்குறோம். நீங்களே பாருங்க. கோழி வளர வளர உங்களுக்கு பணம் கொட்டப்போகுது. ஈமுல ஏமாந்திருக்கலாம்.. அது ஈமு சார். இது நம்ம நாட்டுக்கோழி. ஏமாத்தாது. உங்களுக்கு வித்தியாசம் புரியுதா இல்லையா?" என நாட்டுக்கோழி வளர்ப்பில் புரட்சி (?) செய்தார்கள் மோசடியாளர்கள்.
ஓரிரு மாதங்களில் தலைமறைவு'அட.. இது தெரியாம ஈமுவுல பணத்தை போட்டு ஏமாந்துட்டேனே...!' என ஈமுவில் பணத்தை இழந்தவர்களும், மீண்டும் கடனை உடனை வாங்கி, நாட்டுக்கோழியில் இன்வெஸ்ட் செய்தார்கள். ஈமுவுல விட்டதை நாட்டுக்கோழியில புடிச்சிரணும் என இருந்த விவசாயிகளுக்கு, இதிலும் அதிர்ச்சிதான். நாட்டுக்கோழி வளர்ப்புக்காக துவங்கப்பட்ட அலுவலகம் அடுத்தடுத்து மூடப்பட்டது. முதலீடு பணத்துடன் எஸ்கேப் ஆனது மோசடி கும்பல்.
அப்புறம் என்ன, நாட்டுக்கோழியிலும் விவசாயிகளுக்கு நாமம்தான். ஈமு மோசடியோடு, நாட்டுக்கோழி மோசடி தொடர்பான புகார்களையும் பெற்றது காவல்துறை. சில லட்சங்களை கொடுத்து சில நூறு கோழிக்குஞ்சுகளை வைத்து, கோழிக்குஞ்சாவது மிச்சம் என ஒரு சிலரும், எங்களுக்கு கோழிக்குஞ்சுகளை கூட கொடுக்கலையே என பலரும் காவல்நிலையத்துக்கும், வீட்டுக்கும் நடையாய் நடந்த கதை அரங்கேறியது. குறுகிய கால மோசடி என்றாலும், வெகு வேகமாய் ஆயிரக்கணக்கான விவசாயிகள், சில கோடிகளை இழந்தனர்.
நாட்டுக்கோழியோடு முடியவில்லை... ஈமு, நாட்டுக்கோழினு ரெண்டு தடவை ஏமாந்துட்டாங்களா? ரெண்டு தடவை அடிபட்டாதான் தெரியும் என்கிறீர்களா? ஆனால் அதோடு நின்று விடவில்லை என்பதுதான் அதிர்ச்சி. இதே பாணியில் ஆடு வளர்ப்பை அறிமுகப்படுத்தி காசு பார்த்தது மோசடி கும்பல். கோழி காலை வாரலாம். ஆடு காலை வாராது' எனும் கதையாக ஆசையை தூண்டி வலையில் சிக்க வைத்து ஏமாற்றத் துவங்கினர். பெரிய அளவில் ஆடு வளர்ப்பு மோசடி கை கொடுக்கவில்லை என்றாலும், சில கோடிகள் இதிலும் விவசாயிகள் ஏமாந்தனர்.
அட ஆட்டோடு முடியவில்லை. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்ற கதையாய், ஆடு, கோழிக்கு பதில் தேங்காயை வைத்து மோசடி செய்யப்பட்டதுதான் உச்சம். ஒரு லட்சம் முதலீடு செஞ்சா, தேங்காய்களை கொடுப்போம். அதை நீங்க கொப்பரையா மாத்தி தரணும். சிம்பிளான வேலை மாசம் உங்களுக்கு பணம் வரும், போனஸ் வரும்" எனச்சொல்ல இதிலும் சில ஆயிரம் விவசாயிகள், முதலீடை கொட்டினர். அதோடு சரி.. அந்த கும்பலும் எஸ்கேப். 
கோழி, ஆட்டோடு, கொப்பரை மோசடியும் சேர்ந்து கொண்டது. இப்படி விவசாயிகளை மையப்படுத்தி நடந்த மோசடிகள் நீண்டது. இதை மற்ற மோசடிகளோடு ஒப்பிடமுடியாது.
அரசின் அலட்சியமும் காரணம்விவசாயிகளை மையப்படுத்திய இந்த மோசடி குறித்து பொருளாதார நிபுணர் ஒருவரிடம் பேசினோம். 
"இவையெல்லாம் மிகப்பெரிய மோசடிகள். இது பணத்தை போட்டு, உழைக்காமல் வட்டியை எதிர்நோக்கும் சிட்பண்ட் மோசடியோ, நிதி நிறுவன மோசடியோ, ஆன்லைன் மோசடியோ இல்லை. ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க மாட்டோமா என நினைத்தவர்கள்தான் இதில் முதலீடு செய்தார்கள். கோழி வளர்த்து சம்பாதிக்கலாம் என்றுதான் விவசாயிகள் நினைத்தார்களே தவிர, ஒன்றுமே செய்யாமல் பணம் கிடைக்க வேண்டும் என நினைக்கவில்லை. எனவே இதை மற்ற மோசடிகளுடன் ஒப்பிட முடியாது.
விவசாயம் அழிந்து வரும் நிலையில், வேறு வழியில்லாமல்தான் விவசாயிகள் இதை நோக்கிச் சென்றனர். விவசாயிகள் செய்த தவறு, ஒரு பக்கம் பணத்தை இழந்த பின்னரும், மீண்டும் அதேபோன்ற மோசடியில் சிக்கியதுதான். இதில் விவசாயிகள் விழிப்புணர்வோடு இருக்கவில்லை என்பதை விட, அரசு இதில் கவனம் செலுத்தவில்லை என்பதும் முக்கிய காரணம்.
விவசாயத்தையும், விவசாயிகளையும் காக்க வேண்டிய அரசு, இப்படி பகிரங்கமாய் விளம்பரம் செய்து ஏமாற்றும் நிறுவனங்களை கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டக்கூட முயற்சிக்கவில்லை. அதனால்தான் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, இந்த வாரம் மோசடி வாரம் என தினம் ஒரு மோசடி அரங்கேறியது. இந்த மோசடிகளுக்கு விவசாய அழிவும் ஒரு காரணம். 
விவசாயத்தில் லாபம் கிடைக்காது என்றால், வேறு எதில் கிடைக்கும் என எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற கதையாக சுற்றிக்கொண்டிருந்த விவசாயிகள்தான் இந்த மோசடியில் சிக்கினர். தவிர, இந்த மோசடிகள் ரகசியமாக நடக்கவில்லை. மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட விவசாயமும், அரசின் அலட்சியமும்தான் இது போன்ற மோசடிகள் பெருக காரணமாக அமைந்தது," என்றனர்.
'மலைமுழுங்கி மகாதேவன்கள்'இதேபோல் கொங்கு மண்டலத்தில் பல மோசடிகள் அடுத்தடுத்து விவசாயிகளை மையப்படுத்தி நடந்தது. ஈமு பாணியில் தேக்கு மரம் வளர்ப்பு, கான்ட்ராக்ட் பார்மிங் என பல மோசடிகள் விவசாயம் சார்ந்த தொழிலை மையம்படுத்தி மோசடியாளர்களால் அரங்கேற்றப்பட்டன. இவை இல்லாமலும் சில மோசடிகள் அரங்கேறின. அவற்றில் பிரதானமானவை நில மோசடிகள். நிலமே இல்லாமல், ப்ளாட் போட்டு விற்பது, கிரானைட் இருப்பதாக சொல்லி ஒன்றுக்கும் பயனளிக்காத இடத்தை பல கோடிக்கு விற்பது, தங்கப்புதையல் இருப்பதாக சொல்லி ஏமாற்றுவது என விவசாயிகள் ஏமாந்த கதை சொல்லி மாளாது.
வெறுங்கையால் முழம் போடும் இந்த நில மோசடிகளையும், அதில் ஈடுபடும் மலை முழுங்கி மகாதேவன்களின் ஏமாற்று வித்தை பற்றியும் அடுத்த வாரம் பார்க்கலாம்...
- ச.ஜெ.ரவி (விகடன் செய்திகள் -28.08.2015