disalbe Right click

Showing posts with label வருமானம். Show all posts
Showing posts with label வருமானம். Show all posts

Saturday, August 19, 2017

மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்!

மாத சம்பளக்காரர்கள் கவனிக்க வேண்டிய வருமான வரி மாற்றங்கள்!
நிதியாண்டு 2017-18-ல் வருமான வரி விதிமுறைகள் மற்றும் முதலீடு குறித்த சலுகைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனை அறிந்துகொள்வதன் மூலம் மாத சம்பளக்காரர்கள் தங்களுக்கான வருமான வரியை இன்னும் துல்லிய மாகத் திட்டமிட்டுக்கொள்ள முடியும். இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள முக்கியமான வருமான வரி மாற்றங்கள் சிலவற்றைக் கீழே பட்டியலிட்டுள்ளோம்.
1. வருமான வரி வரம்பு குறைப்பு
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வருமானம் உள்ளவர்களுக்கு 2016-17-ம் ஆண்டில் 10% வருமான வரி விதிக்கப்பட்டது. இது நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வரம்புக்குள் வருமானம் கொண்ட 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வருமான வரியில் ரூ.12,500 மிச்சமாகும்.
2. வரிக்கழிவு குறைப்பு
பிரிவு 87A-ன் கீழ் வழங்கப்பட்ட வரிக்கழிவு (Rebate) ரூ.5,000-லிருந்து ரூ.2,500-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வரி கட்டுபவர்களுக்கு ரூ.2,500 இழப்பு ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும், இந்த வரிக்கழிவு சலுகையைப் பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.3.5 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தச் சலுகையைப் பெறுபவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு கணிசமாகக் குறைத்திருக்கிறது. இந்த வரிக்கழிவானது, இந்து கூட்டுக் குடும்பத்தினர் (ஹெச்.யூ.எஃப்), வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குக் (என்.ஆர்.ஐ) கிடையாது.
3. ராஜீவ் காந்தி பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டம் வரிச் சலுகை ரத்து

கடந்த 2012-13-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது ராஜீவ் காந்தி பங்கு சேமிப்புத் திட்டம் (Rajiv Gandhi Equity Savings Scheme – RGESS) அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதற்கு வரிச் சலுகையும் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 80சி-க்கு வெளியே வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சிசிஜி பிரிவின் கீழ் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. வரிச் சலுகை பெற பல குழப்பமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன (விளக்கமாகப் படிக்க: http://bit.ly/2uuqRfG). இதன் காரணமாக இதில் அதிகமான வர்கள் முதலீடு செய்ய முடியவில்லை.
இந்த நிலையில், 2017-18-ம் நிதியாண்டு முதல் இந்த வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வரிச் சலுகையின் மூலம் குறிப்பிட்ட சில தனிநபர்களே பயன்பெற்று வருவதால், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
4. வீட்டுக் கடன் வட்டிச் சலுகை குறைப்பு
நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் வீட்டுக் கடனில் திரும்பக் கட்டும் வட்டிக்கான வரிச் சலுகை குறைக்கப் பட்டுள்ளது. இது பற்றி முன்னணி ஆடிட்டரான எஸ்.சதீஷ்குமார் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கி, அதில் குடியிருந்தால் திரும்பக் கட்டும் வட்டியில் ரூ.2 லட்சம் வரைக்கும் நிதியாண்டில் வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் வரம்பு இல்லாமல் முழு வட்டிக்கும் வரிச் சலுகை தரப்பட்டது. அதே நேரத்தில், வீட்டு வாடகையை வருமானமாகக் காட்டுவது அவசியம். ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்கி, ஒரு வீட்டில் குடியிருந்து, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தால், அனைத்துக் கடன்களையும் திரும்பக் கட்டும் வட்டியில், மேலே கூறப்பட்டது போல் வரிச் சலுகை அளிக்கப்பட்டது.
நடப்பு 2017-18 ம் நிதியாண்டில், ஒருவர் வீட்டுக் கடனுக்கான வட்டியில் வரிச் சலுகையாக அதிகபட்சம் ரூ.2 லட்சம் மட்டுமே பெற முடியும் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு வீட்டில் இருந்துகொண்டு, மற்ற வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தவர்கள் அதிகமாக வரி கட்டும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக, வரிச் சலுகைக்காக வீடு வாங்குவது குறைந்து ரியல் எஸ்டேட் துறை மந்த நிலைக்குத் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும்.
எனினும், வீட்டுக் கடன் வட்டி மூலமான இழப்பை எட்டு ஆண்டுகளுக்கு எடுத்துச் செல்லும் முந்தைய சலுகை இப்போதும் தொடர்கிறதுஎன்ற சதீஷ்குமார், இழப்பை எட்டு ஆண்டுகளுக்கு எப்படி எடுத்துச் செல்வது என்பது பற்றியும் சொன்னார்.
வீட்டுக் கடன் மூலம் வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டதன் மூலம் நடப்பு 2017-18-ம் நிதியாண்டில் ரூ.1,20,000 கிடைத்திருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வாடகைத் தொகையில் நகராட்சிக்குக் கட்ட வேண்டிய வரி மற்றும் பராமரிப்புச் செலவைக் கழித்துக்கொண்டு, மீதியை வாடகை வரவாக எடுத்துக்கொள்ள வேண்டும். நகராட்சிக்கு கட்டிய சொத்து வரி ரூ.15 ஆயிரம் என வைத்துக் கொண்டு, அதைக் கழித்துக் கொள்வோம். மீதமுள்ள 1.05 லட்சத்தில் 33 சதவிகிதத்தைப் பராமரிப்புச் செலவான ரூ.34,650-யைக் கழித்தால் ரூ70,350-ஆகக் கிடைக்கும். இதனை வாடகையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த நிதியாண்டில் வீட்டுக் கடன் திரும்பக் கட்டும் வட்டி ரூ.2.25 லட்சம் என வைத்துக் கொள்வோம். இதிலிருந்து வீட்டு வாடகை ரூ.70,305-யைக் கழித்தால், அவருக்கு வட்டி மூலமான இழப்பு ரூ.1,54,650 ஆகும். இந்தத் தொகையை அடுத்த எட்டு ஆண்டுகளில் கிடைக்கும் வாடகை வருமானத்தில் ஈடுசெய்துகொள்ளலாம். இதேபோல், அடுத்து வரும் வருடங்களுக்கும் வீட்டு வாடகையையும், திரும்பக் கட்டும் வட்டியையும் கணக்கிட வேண்டும். வட்டிக் குறைந்தால் அல்லது வாடகை தொகை அதிகரித்தால் மட்டுமே இப்படி ஈடு கட்டுவது லாபகரமாக இருக்கும்என்றார்.

5. என்.பி.எஸ் கூடுதல் வரிச் சலுகை தொடர்கிறது
நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்.பி.எஸ்) மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு 80CCD (1B) -ன் கீழ் வழங்கப்பட்ட ரூ.50,000-க்கான வருமான வரிச் சலுகை இந்த ஆண்டும் தொடர்கிறது. இது 80சி பிரிவுக்கு வெளியே தரப்படும் சலுகை என்பதால், மாத சம்பளக்காரர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்கள் கூடுதல் வரியை மிச்சப்படுத்த முடியும். இதற்குமுன்பு, என்.பி.எஸ் திட்டத்தில் 60 வயதுக்குப் பிறகுதான் பணத்தை எடுக்க முடியும் என்கிற நிலை இருந்தது. இப்போது மருத்துவம் போன்ற அவசரத் தேவைக்கு நாம் ஏற்கெனவே செய்த பங்களிப்பிலிருந்து 25 சதவிகித தொகையைத் திரும்ப எடுத்துக்கொள்ளலாம். இந்தத் தொகைக்கு வரிப் பிடித்தம் இல்லை என்பது கூடுதல் சலுகையாகும்.
7. பணவீக்க விகித சரிகட்டல் அடிப்படை ஆண்டு மாற்றம்
நீண்ட கால மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவதற்கான பணவீக்க விகித சரிக்கட்டல் அடிப்படை ஆண்டு 1981 என்பது 2001-ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான வரிதாரர்கள் பயன் அடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
8. சொத்துகளுக்கான நீண்ட கால ஆதாயம்
சொத்துகளுக்கான (மனை மற்றும் வீடு) நீண்ட கால ஆதாயம் கணக்கிடுவதற்கான கால வரம்பு மூன்று ஆண்டுகளாக இருந்தது. அது 2017-18 நிதியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் சொத்துப் பரிமாற்றம் நடப்பதோடு, சொத்து விற்பவர்கள் கட்டும் வரியும் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
9. பங்குகளுக்கான நீண்ட கால மூலதன ஆதாய வரி
பங்குகளை வாங்கும்போது பங்குப் பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax – STT) கட்டியிருந்தால் மட்டுமே நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகையைப் பெற முடியும். 2014, அக்டோபர் 1-ம் தேதிக்குப்பிறகு வாங்கப்பட்ட அனைத்து பங்குகளுக்கும் இது பொருந்தும்.
10. ஆதார் கார்டு, பான் எண் இணைப்பு
2017 ஜூலை 1 முதல், புதிய பான் கார்டு பெற ஆதார் எண் அவசியமாகும். மேலும், பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11. வரிக் கணக்கு தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம்
2017-18-ம் நிதியாண்டுக்கான, வருமான வரிக் கணக்கை 2018 ஜூலை 31-ம் தேதிக்குள் மாத சம்பளக்காரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கெடு தேதி தாண்டினால், வரிக் கணக்கு தாக்கலில் திருத்தம் ஏதும் செய்ய முடியாது. அதே நேரத்தில், கெடு தேதி தாண்டி, 2018 டிசம்பர் 31-க்குள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்தால், ரூ.5,000 அபராதம் கட்ட வேண்டும். இது தாமதக் கட்டணம் என்கிற பெயரில் வசூலிக்கப்படும். வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால், இந்த தாமதக் கட்டணம் ரூ.1,000 கட்ட வேண்டும்.
சுயதொழில் செய்பவர்களுக்கும் நிறுவனங் களுக்கும் தாமதக் கட்டணம் ரூ.10,000 என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தாமதக் கட்டணம், வரிக் கணக்கு தாக்கல் செய்யும்போது, கம்ப்யூட்டர் திரையிலேயே தாமதக் கட்டணம் காட்டப்படும் எனச் சொல்லப்படுகிறது.
12. ஒரு பக்க எளிய வருமான வரிப் படிவம்
2017-18-ம் நிதியாண்டில், ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவான சம்பளம் உள்ளவர்கள் (வணிக வருமானம் இருக்கக் கூடாது), வருமான வரிக் கணக்கை எளிமை யாகத் தாக்கல் செய்ய வசதியாக ஒரே ஒரு பக்கம் கொண்ட வருமான வரிப் படிவம் (Income Tax Return – ITR) அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
13. முதல் முறை வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு மீளாய்வு இல்லை
முதன்முதலாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்பவர்களின் வருமான விவரங்கள் மீளாய்வு (Scrutiny) செய்யப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. எனினும், மிக அதிக தொகையைப் பரிவர்த்தனை செய்து, அது குறித்த தகவல் வருமான வரித் துறைக்கு கிடைத்திருக்கும்பட்சத்தில் இது பொருந்தாது.
14. பத்து ஆண்டுகள் வரை வருமான வரிக் கணக்குகள் ஆய்வு
தற்போது, கடைசி ஆறு ஆண்டுகளுக்கு வருமான வரி விவரங்கள், குறிப்பாக அறிவிக்கப்படாத வருமானம் அல்லது சொத்து குறித்து வருமான வரித் துறையால் மீளாய்வு செய்யப்படுகிறது. இனி பத்து ஆண்டுகளுக்கான விவரங்கள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இதனால் வரிதாரர்கள், குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கான ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பழைய ஆவணங்களைப் பலரும் ஒழித்துக் கட்டியிருப்பர்கள். அவர்களிடம் இப்போது அந்த ஆவணங்களையும், ஆதாரங்களையும் கேட்டால், அவர்கள் எங்கே போவார்கள்?
வருமான வரி தொடர்பாக வந்துள்ள இந்த மாற்றங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு, நன்மை பெறுங்கள்!
நன்றி : நாணயம் விகடன் - 20.08.2017

Saturday, August 5, 2017

வருமான வரித்தாக்கல் செய்யாவிட்டால் என்னவாகும்?

வருமான வரித்தாக்கல் செய்யாவிட்டால் என்னவாகும்?
புதுடில்லி : 2016 -17 ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதி என நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் அது ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, நள்ளிரவு 12 மணி வரை வருமான வரி அலுவலகங்கள் திறந்திருக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஒருவேளை, இன்றைக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. அரசு நிர்ணயித்த தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு, தாமதிக்கப்பட்ட வரி தாக்கல் என கூறுகின்றனர். வருமான வரித்தாக்கல் சட்டப் பிரிவு 139(4) ன்படி, அரசு நிர்ணயித்த காலக் கெடுவிற்குள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாதவர்கள், நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் எப்போது வேண்டுமானாலும் தங்களின் வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம்.
அதாவது, 2018 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் திருத்தப்பட்ட தாமதமான வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம். இதற்குள் வருமான வரியை தாக்கல் செலுத்துவோருக்கு அபராதமும் விதிக்க ப்படாது. 2018 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி அல்லது அதற்கு பிறகு வருமான வரியை செலுத்துவோருக்கு ரூ.10000 முதல் அபராதம் வசூலிக்கப்படும்.
அனைவரையும் வருமான வரி செலுத்த வைப்பதற்காக மத்திய அரசு தற்போது இந்த திருத்த்தப்பட்ட தாமத வரி முறையை கொண்டு வந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோருக்கு இத்தகைய வசதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர் நாளிதழ் – 05.08.2017

Monday, July 24, 2017

வருமான வரியின் வரலாறு என்ன?

வருமான வரியின் வரலாறு என்ன
இன்கம் டேக்ஸ் பற்றி A - Z தகவல்...
வருமானம் வரும் ஒவ்வொரு நாளும் சிறப்பான நாள்தான். ஆனால், வருமான வரித் தாக்கல் செய்யும் நாளில் எதற்கு வரி செலுத்த வேண்டும் என்று நிறையவே யோசிப்போம். அரசர்கள் காலத்தில் இருந்து நில வரி போன்று பல‌ வரிகள் இருந்தாலும் வருமான வரி என்பது ஆங்கிலேயர் காலத்தில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, கடந்த 150 வருடங்களாகத்தான் வருமான வரி (Income tax) வழக்கத்தில் இருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 24-ம் தேதி வருமான வரி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது, இதன் வரலாறு என்ன என்பதை அறிந்துகொள்ள வருமான வரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

"1860-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி வருமானத்துக்கு வரி வசூலிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தியவர் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்த சர் ஜோம்ஸ் வில்சன். ஆரம்பத்தில் பிரிட்டிஷ்காரர்களிடம் மட்டுமே இன்காம் டேக்ஸ் வசூலிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் பணியாற்றிய பிரிட்டிஷ்காரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இன்காம் டேக்ஸ் வசூலிக்கக்கூடாது எனப் போராடி இருக்கிறார்கள். ஆனால், வரி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே வருமானவரியாக 30 லட்ச ரூபாய் வசூலாகி இருக்கிறது. இந்தியா சுதந்திரம் பெறும்போது 1945-46-ம் ஆண்டுக்கான வருமான வரியாக 57 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்தது. 1970-ம் ஆண்டின் தொடக்கத்தில் 1,000 கோடி ரூபாயும், 2000-ம் ஆண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாயும் Income tax வசூலிக்கப்பட்டிருக்கிறது.
நடப்பு ஆண்டில் (2017-2018) ஒன்பது லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக‌ வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொர் ஆண்டும் வருமானவரி இலக்கு அதிகமாகிக்கொண்டே வருகிறது. அடுத்த நிதி ஆண்டில் பத்து லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இலக்கு நிர்ணயிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்திய அரசுக்கு மிகப்பெரிய வருமானம் வருமானவரிதான். இந்த வரியை மிகப்பெரிய நிலையான திட்டங்கள் நிறைவேற்றப்பயன்படுத்துகிறது அரசு. குறிப்பாக, ஆற்றுப்பாலங்கள், சாலைகள் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்படப் பல நாடுகளில் வருமானவரி அதிகமாகவே உள்ளது. பல நாடுகளில் 30 சதவிகிதம் என்ற அளவில் இருப்பதைக் கணக்கில்கொண்டு, நம் நாட்டில் ஐந்து முதல் 30 சதவிகிதம் வரை வருமானவரி வசூலிக்கப்படுகிறது. அதாவது, வருமானத்துக்கு அதிகபட்சமாக 30% மட்டுமே வரி. சீனாவில் 45 சதவிகிதம், அமெரிக்காவில் 39.6 சதவிகிதம் என வசூலிக்கப்படுகிறது. 1970-ம் ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களிடம் வருமான வரியாக 90 சதவீதத்துக்கு அதிகமாக வசூலிக்கவும் செய்திருக்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும்.
தற்போது இரண்டரை லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு Income tax செலுத்த தேவையில்லை. 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஐந்து லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி செலுத்த தேவையில்லை. அரசு திட்டங்களிலும், அரசு நிறுவனங்களிலும் முதலீடு செய்யப்பட்டால் அதற்கு குறிப்பிட்ட தொகைக்கு வரியில் இருந்து விலக்கு வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் இருந்தே விவசாயத்திற்கும், அறக்கட்டளை போன்றவற்றுக்கும் வரி செலுத்தத் தேவையில்லை என்பது நடைமுறையில் இருக்கிறது.
தனி நபருக்குத்தான் வருமானவரி. குடும்பத்தில் ஒவ்வொருவரின் வருமானமும் இரண்டரை லட்சம் ரூபாய்க்குள்தான் இருக்கிறது என்றால் வருமான வரி செலுத்துவதில்லை. அதாவது, குடும்பத்தில் உள்ள நான்கு பேரின் வருமானம் பத்து லட்ச ரூபாய் என்றால் குடும்ப வருமானத்துக்கு வரி செலுத்த தேவையில்லை. அதிக வருமானவரி வசூலிப்பதில் மகாராஷ்ட்ரா மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப் மாநிலங்கள் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Income tax செலுத்த உதவியாக பான் கார்டு வழங்கும் முறை 1994-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 20 வருடங்களில் சுமார் 30 கோடி பேர் பான் கார்டு வாங்கி இருக்கிறார்கள். பான் இல்லாமல் எந்த விதமான பணப்பரிமாற்றமும் செய்ய முடியாது என மாறி இருக்கிறது வருமானவரித் துறை. இனி வரும் காலங்களில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை உயரும். இதன்மூலம் நாடும் வளம் பெறும்" என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
நன்றி : விகடன் செய்திகள் -24.07.2017

Saturday, June 3, 2017

ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற்றால் அபராதம்

ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பெற்றால் அபராதம்!
புதுடில்லி:'எந்த ஒரு பரிவர்த்தனையிலும், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வாங்கினால், அதே அளவு தொகையை, அபராதமாக செலுத்த நேரிடும்' என, வருமான வரித் துறை எச்சரித்து உள்ளது.
ஊக்குவிப்பு
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை தொடர்ந்து, ரொக்கப் பரிவர்த்தனையை குறைக்கவும், மின்னணு பரிவர்த்தனையை அதிகரிக்கவும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை நடந்தால், அந்த பணத்தை வாங்குபவர்கள், அதே அளவு தொகையை அபராதமாக செலுத்தும்வகையில், நிதி மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
இது, இந்த ஆண்டு, ஏப்ரல், 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், பல்வேறு பத்திரிகைகளில், வருமான வரித் துறை நேற்று வெளியிட்டு உள்ள விளம்பரங்களில் கூறியுள்ளதாவது:
கறுப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், ரொக்கப் பயன் பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்யக் கூடாது.
ஒரு நாளில் அல்லது ஒரு நபர் அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை நடந்தால், பணத்தை வாங்குபவர்கள், அதே அளவு தொகையை அபராதமாக செலுத்த நேரிடும்.
இது போன்ற பரிவர்த்தனைகள் நடப்பது தெரியவந்தால், blackmoneyinfo@incometax.gov.in என்ற இ - மெயில் முகவரிக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் தருவோர் குறித்த விபரங்கள் ரகசியமாக வைத்திருக்கப்படும். இவ்வாறு அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


நன்றி : தினமலர் நாளிதழ் - 02.06.2017

Thursday, May 25, 2017

அரசு ஊழியர்களுக்கு வருமானவரி கணக்கீடு செய்ய...

அரசு ஊழியர்களுக்கு வருமானவரி கணக்கீடு செய்ய...
அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
வருமான வரிதானே… பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. காரணம், அப்போது வருமானம் குறைவு. எனவே, வரி செலுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கும் இல்லை. ஆனால் இப்போது கால ஓட்டமும், ஊதிய நிலைகளில் ஏற்பட்ட மாற்றமும் சேர்ந்து, பணியாளர்களுக்கான சம்பளத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தியுள்ளதால், வரி கட்ட வேண்டிய நிலைக்கு பலரும் உயர்ந்துள்ளனர்.
அரசு ஊழியர்களில் பலர் இப்போது வருமான வரி கட்டுபவர்களாக மாறியிருக்கிறார்கள். தமிழக அரசு ஊழியர்களுக்குப் பரிசீலனையில் உள்ள ஊதியச் சீரமைப்புக்குழு அறிக்கை நடைமுறைக்கு வரும்போது, இன்னும் பலர் வரி வட்டத்துக்குள் வந்துவிடக்கூடும். முன்பு ஆண்டுக்கொருமுறை கட்டிய வருமான வரியை தற்போது மாதம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம்.
ஊதியமும் ஓய்வூதியமும் ஒன்றே
வருமான வரிக் கணக்கீட்டைப் பொறுத்தவரை, ஊதியமும், ஓய்வூதியமும் ஒன்றுதான். மூத்தக் குடிமக்களுக்கான வருமான வரி வரம்பு வேறுபடும். அதுவும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்கு வரி விகிதம் ஒரே மாதிரியே இருக்கும்.
பணியில் உள்ள ஊழியருக்கு, அவருக்குச் சம்பளம் வழங்கும் அலுவலர் ஒவ்வொரு நிதியாண்டுக்கான வருமான வரியைக் கணக்கிட்டு டிடிஎஸ் பிடிப்பார். ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற ஆரம்பித்தபிறகு, ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் வருமான வரியைக் கணக்கிட்டு வரி பிடிப்பார்.
சார்நிலைக் கருவூல அலுவலர், உதவிக் கருவூல அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலர் எனப் பதவிப் பெயர்கள் பலவாக இருப்பினும், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கும் வேலையை இந்த அலுவலர்கள் செய்து வருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை, ஓய்வூதியம் வழங்குவதற்கென்றே அலுவலர் உள்ளார்.
இருவகை வருமான வரிக் கணக்கீடு
டியூ பேசிஸ் (Due basis) மற்றும் டிரான் பேசிஸ் (Drawn basis) என இரு வகையாக வருமான வரி கணக்கிடப்படக்கூடும். அதாவது, ஒரு நிதியாண்டு முழுக்க ஒருவர் பெறக்கூடிய அனைத்து வருவாய் இனங்களையும் கணக்கிட்டு, அதற்கான வருமான வரியை மார்ச் தொடங்கி பிப்ரவரி முடிய 12 மாத சமதவணைகளில் பிடித்தம் செய்வது டியூ பேசிஸ். வருமான வரியைக் கணக்கிட முடியாத இனங்கள், நிலுவை வரவுகள் போன்றவை முன்பே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தால், அவற்றைப் பட்டுவாடா செய்யும்போது வரியைப் பிடித்து விடுவது டிரான் பேசிஸ்.
டியூ பேசிஸ் அல்லது டிரான் பேசிஸ் இவற்றுள் எது முன்போ, அப்போதே வரிப் பிடித்தம் செய்ய வேண்டும் என்பதே டிடிஎஸ் விதிமுறை.
இவ்வாறு செய்வதால், ஒரு குறிப்பிட்ட தேதியில் வரி செலுத்த வேண்டியவரிடமிருந்து பிடித்தம் செய்ய வேண்டிய வரி, நிலுவை இல்லாமல் அரசுக் கணக்கில் போய்ச் சேர்ந்துவிடும்.
ஓய்வு பெறுவோர்
பணியிலிருந்து ஓய்வு பெறுவோர், 1. பணிக்கொடை, இறப்புப் பணிக்கொடை மற்றும் ஓய்வுப் பணிக்கொடை, 2. ஓய்வூதியம் கணக்கீடு, 3. ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம், 4. சொந்தக் காரணங்களுக்கான ஈட்டாத விடுப்பு ஊதியம் ஆகிய நான்கு பணப் பயன்களைப் பெறுவார்கள். இவற்றுள் முதல் மூன்று இனங்கள் வருமான வரி விலக்குப் பெற்றவை. நான்காவது இனமாக உள்ள மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம், வருமான வரிக்கு உட்பட்டது. எனவே, பணியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கான வருமான வரிக் கணக்கீடு பின்வருமாறு அமையும்.
ஊழியர் ஒருவர் 28.02.2018 அன்று ஓய்வு பெற உள்ளதாக வைத்துக்கொள்வோம். 2017-2018-க்கான இவரது வருமான வரியை மார்ச் 2017-லேயே கணக்கிட வேண்டும். அந்தக் கணக்கீடு பின்வருமாறு இருக்கும்.
1. மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை பெற உள்ள ஊதியம், 2. மார்ச் 2018 அன்று பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம். மேற்கண்ட இரண்டு இனங்களின் கூட்டுத் தொகைக்கு வரியைக் கணக்கிட்டு, மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 முடிய சம்பளம் வழங்கும் அலுவலர் பிடிக்க வேண்டும்.
மார்ச் 2018 முதல் அவர் ஓய்வூதியம் பெற ஆரம்பித்துவிடுவார். அப்போது, 2018-19-ம் நிதியாண்டுக்கான வருமான வரியானது, அவர் பெறப்போகும் ஓய்வூதியத்தின் கூட்டுத்தொகைக்குக் கணக்கிடப்பட்டு, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.
இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். இன்னொரு ஊழியர் 31.10.2017 ல் ஓய்வு பெறுவதாக வைத்துக்கொள்வோம். 2017-2018-ம் ஆண்டுக்கான இவரது வருமான வரிக் கணக்கீடு, பின்வரும் இனங்களின் கூட்டுத் தொகைக்குரியதாக இருக்கும்.
1. மார்ச் 2017 முதல் அக்டோபர் 2017 வரை பெறப்போகும் ஊதியம், 2. நவம்பர் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை பெற உள்ள ஓய்வூதியம், 3. 1.11.2017 அன்று பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம். இதற்கான வருமான வரி, 12 சம தவணைகளில் மார்ச் 2017 ஊதியம் தொடங்கிப் பிடித்தம் செய்யப்படும்.
21.11.2017 அன்று அவர் பணியிலிருந்து விடுபட்டு செல்லும்போது, அக்டோபர் 2017 வரையிலான காலத்தில் அவரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வரி மற்றும் நிலுவையாக உள்ள வரி பற்றிய சான்று ஒன்றை சம்பளம் வழங்கும் அலுவலர் வழங்க வேண்டும். இந்தச் சான்றின் அடிப்படையில், மீதமுள்ள வருமான வரி இவரது ஓய்வூதியத்திலிருந்து, ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.
தவிர்க்க முடியாத நிர்வாகக் காரணங்களினால் இவரது ஈட்டாத விடுப்பு ஊதியத் தொகையை முன்கூட்டியே கணக்கிட முடியாதபோது, விடுப்பு ஊதியம் தவிர்த்து மற்ற இடங்களின் மீதான வரியைக் கணக்கிட்டுப் பிடித்தம் செய்யப்படும். பின்னர், விடுப்பு ஊதியம் கணக்கிடப்பட்டு வரி சீரமைக்கப்படும். அல்லது காலம் தாழ்ந்து விடுப்பு ஊதியம் வழங்கப்படுமானால், அப்போதே வரி பிடித்தம் செய்யப்படும். விடுப்பு ஊதியம் மூன்று மாதங்களுக்குக் குறைவாகவும் இருக்கலாம்.
மறுவேலைவாய்ப்பு
ஆசிரியர்களுக்கு மறுவேலை வாய்ப்பு (Re-Employment) என்ற சலுகை உண்டு. அதாவது, ஓர் ஆசிரியரின் ஓய்வு பெறும் நாள் 31.12.2017 என்று வைத்துக் கொள்வோம். மற்ற அரசு ஊழியர் களைப் போல் ஓய்வுபெற்ற அன்றே ஆசிரியர், பணியிலிருந்து விடுவிக்கப் பட்டுச் சென்றுவிடுவது கிடையாது.
ஓய்வு பெறும் மாதம் எதுவாக இருந்தாலும், ஆசிரியர்கள் அந்த கல்வியாண்டின் கடைசி நாள் வரை பணியில் தொடர அனுமதிக்கப் படுகிறார்கள். கல்வியாண்டு என்பது ஜூன் முதல் நாள் தொடங்கி மே 31 வரை ஆகும். இதன்படி மேற்சொன்ன ஆசிரியர் 31.12.2017 அன்று ஓய்வு பெற்றிருந்தாலும் 01.01.2018 முதல் 31.05.2018 முடிய பணியில் தொடர்ந்து நீடிப்பார். இது அவரது மறுவேலை வாய்ப்புக் காலம் ஆகும்.
மறுவேலைவாய்ப்புக் கால ஊதியம் என்பது, அவர் ஓய்வுபெற்ற கடைசி மாதமான 2017 டிசம்பரில் பெற்ற ஊதியத்திலிருந்து, 01.01.2018 முதல் அவர் பெறப்போகும் ஓய்வூதியத்தைக் கழித்தால் கிடைப்பது. இன்னும் சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒருவர் ஜனவரி 2018-ல் பெறப்போகும் மறுவேலைவாய்ப்பு ஊதியமும், ஜனவரி 2018-ல் பெற உள்ள ஓய்வூதியமும் சேர்த்துதான் டிசம்பர் 2017-க்கான அவரது ஊதியம் ஆகும். அதன்படி 2017-2018 நிதியாண்டுக்கான அந்த ஆசிரியரின் வருமான வரி, பின்வரும் இனங்களின் கூட்டுத் தொகைக்குக் கணக்கிடப்பட வேண்டும்.
1. மார்ச் 2017 முதல் டிசம்பர் 2017 வரை பெறும் ஊதியம், 2. ஜனவரி 2018 முதல் பிப்ரவரி 2018 வரை பெறப்போகும் மறுவேலைவாய்ப்பு ஊதியம், 3. ஜனவரி 2018 பிப்ரவரி 2018 ஆகிய இரு மாதங்களுக்குரிய ஓய்வூதியம், 4. ஓய்வு பெற்ற மறுநாளுக்குப்பின் அவர் பெறத்தக்க மூன்று மாத கால ஈட்டாத விடுப்பு ஊதியம். இவற்றுக்கான வருமான வரி மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை சம்பளம் வழங்கும் அலுவலரால் பிடித்தம் செய்யப்படும்.
இவர் 31.05.2018 வரை மறுவேலை வாய்ப்பில் – பணியில் தொடர்வதால் 2018-2019-க்கான வருமான வரிக் கணக்கீடும் இதே சம்பளம் வழங்கும் அலுவலரால் கணக்கிடப்படக்கூடும். அது பின்கண்டவாறு இருக்கும்.
1. மார்ச் 2018 முதல் மே 2018 முடிய பெற உள்ள மறுவேலைவாய்ப்பு ஊதியம்,
2. ஏப்ரல் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை பெறப்போகும் ஓய்வூதியம்.
குறிப்பு: மறுவேலைவாய்ப்பு காலத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி வழங்கப்படாது. மறுவேலை வாய்ப்பு முடிந்து, ஓய்வூதியம் மட்டும் பெறும் ஜூன் 2018 முதல் ஓய்வூதியத்துடன் அகவிலைப்படி + மருத்துவப்படி சேர்த்துத் தரப்படும். வரிசை எண் 1 + 2-ல் கண்ட தொகைக்கு வரியைக் கணக்கிட்டு, அதை 12 சம தவணைகளாக்கி மார்ச் 2018 முதல் மே 2018 வரை, சம்பளம் வழங்கும் அலுவலரே பிடித்தம் செய்துவிடுவார். ஜூன் 2018 முதல் இவரது வருமான வரிக் கணக்கீடு, இவர் ஓய்வூதியம் பெற தேர்வு செய்துள்ள ஓய்வூதியம் வழங்கும் அலுவலரால் மேற்கொள்ளப்பட்டு, பிடித்தம் செய்யப்படும்.
ஊதியம் + ஓய்வூதியம் + மறுவேலை வாய்ப்பு ஊதியம் + விடுப்பு ஊதியங்களை வருமான வரிக்குக் கணக்கிட்டு, அதை 12 தவணைகளில் பிடித்தம் செய்ய வேண்டும் என்பதும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை. அரசு ஊழியர்கள் இந்த வரிக் கணக்கீடுகளைப் புரிந்து கொண்டால், வரி கட்டுவது சுமையாக இருக்காது.

நன்றி : நாணயம் விகடன் – 28.05.2017

Tuesday, May 16, 2017

வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!

தவறுதலாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரிப் படிவங்கள், வரி செலுத்துபவரை பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றன. மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், வட்டி, அபராதம் எனக் கூடுதல் செலவுகளையும் இழுத்துவிடுகிறது. ஆகவே, வரி செலுத்துபவர்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது அதிகக் கவனத்தோடு இருக்கும்பட்சத்தில், சிறிய தவற்றையும் தவிர்க்க முடியும். வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் என்னென்ன?
1.குறைபாடுள்ள படிவம் 26AS
படிவம் 26AS-ல் உள்ள குறைபாடுகளை, வரி செலுத்துபவர்கள் தங்களது வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்குமுன்பாக, வருமான வரி இணையதளத்தில் உள்ள படிவம் 26AS-ல் என்ன பதிவாகி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதில் வருமான வரிப் பிடித்தம், முன்கூட்டியே கட்டிய வரி (Advance Tax), சுய மதிப்பீட்டு வரி (Self- Assessment tax) என மூன்றும் இருக்கும். இந்த மூன்றில் ஏதேனும் ஒரு விவரம் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால், வரி செலுத்துபவருக்கு அதற்குரிய வரவு (Credit) கிடைக்காது.
உதாரணமாக, உங்களுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்தவர், அதை வருமான வரி இலாகாவுக்கு செலுத்தா விட்டாலோ, செலுத்தியபின் அதற்குரிய படிவத்தைத் (TDS Return) தாக்கல் செய்யா விட்டாலோ அல்லது தாக்கல் செய்யும்போது தவறு செய்திருந்தாலோ அதற்குரிய வரவு, உங்கள் 26AS-ல் வந்து சேராது.
ஆகவே, நீங்கள் வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் முன்பு 26AS-ல் உங்களுக்காகச் செலுத்தப்பட வேண்டிய வருமான வரிப் பிடித்தம், முன்கூட்டியே கட்டிய வரி (Advance Tax), சுய மதிப்பீட்டு வரி (Self-Assessment Tax) என மூன்றும் இருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டு, வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
2. தவறுதலான தனிநபர் விவரங்கள்
ஒவ்வோர் ஆண்டும் ஏராளமான வரிப் படிவங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. பெயர், வங்கிக் கணக்கு, இந்திய நிதி அமைப்புக் குறியீடு (IFSC Code) மற்றும் முகவரி போன்றவை சரியாகக் குறிப்பிடப்படாததால், ஏராளமான வரி தாக்கல் கணக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. உங்களுக்கு வர வேண்டிய அதிகம் செலுத்திய வரியும் (Refund) ரத்தாகக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆகவே, உங்கள் விவரங்களும், படிவத்தில் இருக்கக்கூடிய விவரங்களும் சரியாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்கவும்.
3. கணக்கில் வராத வருமானம்
பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, டிவிடெண்ட், காப்பீட்டு பாலிசி முதிர்வுத் தொகை ஆகியவை வருமான வரிக்கு உட்படாதவை. ஆனாலும், இவற்றின் விவரங்களை வரிக் கணக்குத் தாக்கலில் குறிப்பிட வேண்டும். இவை கட்டாயமாக இல்லையென்றாலும் வருமான வரி சம்பந்தமான தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்க இது உதவும்.
4. நிரந்தர வைப்பு நிதிக்கான வட்டி
வரிச் செலுத்துபவர்கள் நிறையபேர், தங்களுடைய ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டியை வருமான வரிக்கு உட்படுத்துவதில்லை. இது தவறான செயல். வங்கிச் சேமிப்புக் கணக்கில் ரூ.10,000 வரை பெறும் வட்டிக்கு மட்டும்தான் வரி விலக்கு உள்ளது. அதற்கு மேல் பெறும் தொகைக்கு உரிய வரியைக் கட்டும்பட்சத்தில் வருமான வரித் துறையின் கேள்விகளிலிருந்து தப்பிக்கலாம்.
5. சரியான படிவம்
வருமான வரித் துறையில் வரி தாக்கல் செய்ய ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு வகை வரிப் படிவங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். சரியான படிவத்தைப் பூர்த்திசெய்து தந்தால்தான் வரிப் படிவங்கள் சரியான முறையில் தாக்கல் செய்யப்பட்டதாக அர்த்தம். இல்லையெனில் உங்களது வரிப் படிவம் நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது.
6.படிவங்களைச் சரிபார்ப்பது
வருமான வரியை மின்னணு முறையில் (இ - ஃபைலிங்) செய்வதுடன், அதற்கான ஒப்புதல் படிவத்தை (Acknowledgement) 120 நாள்களுக்குள் கையொப்ப மிட்டு, மையப்படுத்தப்பட்ட செயலாக்க மையத்துக்கு (Centralized Processing Center) அனுப்ப வேண்டும் அல்லது டிஜிட்டல் கையொப்பமிட்டு வருமான வரி ஒப்புதல் படிவத்தைத் தாக்கல் செய்ய வேண்டும். அப்போதுதான் வருமான வரி தாக்கல் முழுமை அடையும்.
7. சொத்துகள் பற்றிச் சரியாகக் குறிப்பிடாமல் இருப்பது
வரி செலுத்துகிறவர்களில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருப்பார்கள். வருமான வரிச் சட்டத்தின்படி, ஒரே ஒரு வீட்டுக்கு மட்டும்தான் சுய ஆக்கிரமிக்கப்பட்ட வீடு எனக் கருதி வரி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்குச் சந்தையில் உள்ள வாடகை வருமானத்தைக் (Fair Market Value) குறிப்பிட்டு, அதில் 30 சதவிகிதத்தைப் பராமரிப்புச் செலவுக்காகக் கழித்துவிட்டு வரும் தொகைக்கு வருமான வரி கட்ட வேண்டும்.
8.முந்தைய பணியின் வருமானத்தைத் தவிர்த்தல்
வேலை செய்பவர் வேறு பணிக்கு மாறும்போது, முந்தைய பணியின் மூலமான வருமானத்துக்கு வரியைக் கணக்கிடாமல் விட்டு விடுதல். முந்தைய நிறுவனம் மூலம் பெற்ற வருமானம், தற்போது பணியாற்றும் நிறுவனம் மூலம் பெறும் வருமானம் என இரண்டு வருமானத்தையும் கணக்கிட்டு வருமான வரிப் பிடித்தம் செய்ய சொல்ல வேண்டும்.
9.வெளிநாட்டிலுள்ள சொத்துகளை அறிவிக்காதது
நீங்கள் இந்தியராக இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் உங்களுக்குச் சொத்துகள் இருந்தாலோ, வெளிநாட்டில் வருமானம் இருந்தாலோ, அதை இந்திய வருமான வரிச் சட்டப்படி வருமான வரிக் கணக்கில் குறிப்பிட்டு அதற்குரிய வரியைச் செலுத்த வேண்டும். மறைக்கப்படும் பட்சத்தில் வட்டி, அபராதத்துடன் சிறைத் தண்டணையும் உண்டு. ஆகவே, வெளி நாட்டுச் சொத்துகள் பற்றி முழுமையாகக் குறிப்பிடுவது அவசியம். 10.காலகெடுவுக்குள் வரிக் கணக்குத் தாக்கல்
காலகெடுவுக்குள் வரிக் கணக்குத் தாக்கல் செய்வது, வீணாக வட்டி செலுத்துவதைத் தவிர்க்க உதவும். மேலும் வருமான வரி துறையினர், நீண்ட காலமாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதவர் களைத்தான் குறி வைக்கிறார்கள்.
ஆகவே, இதிலிருந்து தப்பித்துக் கொள்ள, வருமான வரிக்கணக்குத் தாக்கலைச் சரியான தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.!
ஜி.கார்த்திகேயன், ஆடிட்டர், கோயம்புத்தூர்

நன்றி : நாணயம் விகடன் 21.05.2017