disalbe Right click

Showing posts with label வழக்கறிஞர். Show all posts
Showing posts with label வழக்கறிஞர். Show all posts

Saturday, January 13, 2018

சட்டம் இயற்றுபவர்களே சட்டத்தரணிகளாக இருக்கலாமா?


1980-களில் நடைபெற்ற சம்பவம் ஒன்று நினைவுக்குவருகிறது. மத்திய சட்ட அமைச்சராகவும், அதற்கு முன்னால் மேற்கு வங்க முதல்வராகவும் இருந்த காங்கிரஸ் தலைவர் சித்தார்த்த சங்கர் ராய், தனது பதவிக் காலத்துக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றிவந்தார். அப்போது கேரளத்தில் பிர்லாவுக்குச் சொந்தமான ரேயான் தொழிற்சாலையில் (மாவூர்) ஒரு தொழில் தகராறு ஏற்பட்டது. தொழிலாளிகள் ஆலையை மூடிவிடும் முயற்சியை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் போராடிவந்தன. அதையொட்டி அங்குள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் பிர்லா நிர்வாகம் சார்பில் வாதாடுவதற்கு சித்தார்த்த ராய் அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதைச் சட்டை செய்யாத ராய், “நான் காங்கிரஸ்காரனாக வழக்கு நடத்த வரவில்லை. ஒரு வழக்கறிஞராகவே வந்துள்ளேன்என்று சமாளித்தார்.
வழக்காடும் தலைவர்கள்
அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு உருவாவதற்கு முன்னாலேயே தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் .சிதம்பரம் ஆஜரானது விமர்சனத்துக்கு உள்ளானது. ஏனெனில், அந்த இடஒதுக்கீட்டை அன்றைய காங்கிரஸ் கட்சி வரவேற்றது.
இரண்டு நிலைகள்
சாந்தி பூஷண், கபில் சிபல், அசோக் சென், .சிதம்பரம், அருண் ஜெட்லி இவர்களுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை உண்டு. மத்திய அமைச்சரவையில் பதவிவகிக்கும்போது வக்கீல் தொழில் அவர்களால் செய்ய முடியாது. ஆனால், பதவிக்காலம் முடிந்த அடுத்த நிமிடமே வக்கீல் உடுப்பை மாட்டிக்கொண்டு நீதிமன்றத்தில் காணப்படுவார்கள். அச்சமயத்தில், அவர்கள் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், வக்கீல்களாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தலாமா என்ற கேள்வி எப்போதுமே எழுப்பப்பட்டு வந்துள்ளது.
புதிய சர்ச்சை
எம்.பி.க்களும், எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவிக் காலத்தில் வக்கீல் தொழில் நடத்தக் கூடாது என்று ஒரு பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. அதையொட்டி, அகில இந்திய பார் கவுன்சில் ஒரு சுற்றறிக்கையையும் அனுப்பியிருப்பது புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
விதிகள் சொல்வது என்ன?
ஒருவர் வக்கீலாக இருக்க வேண்டும் என்றால்
எந்த நிறுவனத்திலும் (அரசு மற்றும் அரசு சாரா) வேலை பார்க்கக் கூடாது
➽ மேலும், அப்படிப்பட்ட நிறுவனங்களில் அவர்கள் தங்களது சட்டப் படிப்பின் காரணமாக சட்ட ஆலோசகராகவோ, சட்ட மேலாளராகவோ இருப்பினும், அவர்களால் நேரடியாக நீதிமன்றங்களில் வழக்கு நடத்த முடியாது
➽ அதேபோல், முழு நேரமும் வேறொரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்களை வக்கீல்களாகப் பதிவுசெய்துகொள்ள முடியாது.
➽ ஏதேனும் ஒரு தொழிலில் அவர்கள் நேரடிச் செயல்பாட்டில்லாத பங்குதாரர்களாகவோ () இயக்குநர்களாகவோ இருக்க வேண்டும் என்றால், அதற்கு பார் கவுன்சிலில் முன்அனுமதி பெற வேண்டும்
வக்கீல் தொழில் என்பது ஒரு கௌரவமான சுயேச்சைத் தன்மை பொருந்திய தொழில்அத்தொழிலுக்குக் குந்தகமான எந்த ஒரு செயலிலும் வக்கீல்கள் ஈடுபடக் கூடாது என்பதுதான் இதற்குக் காரணம்
அதேபோல் நாடாளுமன்றங்களிலும், சட்ட மன்றங்களிலும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசு மற்றும் அரசு சார்பான நிறுவனங்களில் ஊழியர்களாகப் பணிபுரிய முடியாது.
➽ தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் சொந்தத்தில் தொழில் நடத்துபவர்களும் வியாபாரிகளும் அம்மன்றங்களில் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தடையில்லை.
வரவேற்கத் தகுந்த  சுற்றறிக்கை
எம்.எல்..க்களும், எம்.பி.க்களும் தங்களது பதவிக் காலத்தில் வக்கீல்களாகப் பணியாற்றக் கூடாது என்று தடைவிதிப்பதற்காகப் போட்டுள்ள அகில இந்திய பார் கவுன்சிலின் சுற்றறிக்கை வரவேற்கத்தக்கதே. வழக்கறிஞர் தொழில் என்பது ஒரு முழு நேரப் பணி. மேலும், அத்தொழிலில் பணியாற்றுபவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடுவதற்குத் தடையில்லையென்றாலும், எம்.பி., எம்.எல்.ஏக்கள் பதவிகள் போன்றவை முழுநேரப் பணிகளாகும். மேலும், அந்தப் பதவியில் உள்ளவர்களுக்கு மாதச் சம்பளம், இதர படிகள், மற்றும் அரசின் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பதவியில் இல்லாவிட்டாலும் ஓய்வூதியம்
இது தவிர, தமிழ்நாட்டில் பதவியில் இல்லாத எம்.எல்.ஏக்களுக்கு ஓய்வூதியமும் உண்டு. முழு நேரம் கவனம் செலுத்தக்கூடிய பணியில் இருந்துகொண்டு, மற்றொரு முழு கவனமும் செலுத்த வேண்டிய வக்கீல் தொழிலில் ஈடுபடுவது கடினம். மேலும், பதவியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் நலனை முன்னிலைப்படுத்துவதைத் தவிர்த்து, தங்கள் தொழிலில் பணம் ஈட்டுவதிலேயே குறியாக இருப்பார்கள். வக்கீல்கள் சங்கத்திலும் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவார்கள்.
அன்றைய மத்திய சட்ட அமைச்சர்கள்
இன்றைய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நியமன நடைமுறை உருவாவதற்கு முன்னால் (1993-க்கு முன்) மத்திய சட்ட அமைச்சர்கள் மிகவும் பலம்வாய்ந்தவர்களாகக் காணப்பட்டார்கள். சட்ட அமைச்சரைக் காண்பதற்கு சட்ட அமைச்சகத்தின் வராந்தாக்களில் நீதிபதிகள் கைகட்டி நின்றதாகக் கூறுவார்கள். அப்பதவிக் காலம் முடிந்த பின்னரும் அவருக்கு உண்டான செல்வாக்கு குறைவதில்லை. ஏனென்றால், மீண்டும் அவர் அமைச்சராகிவிடுவாரோ () தற்போதைய அமைச்சரிடம் அவருக்கு நல்ல உறவு இருக்கும் என்று பயப்படும் நீதிமன்ற நடுவர்கள் உண்டு.
கூடவே கூடாது!
நேரடி அரசியலில் நுழைந்து, நாடாளுமன்றத்தின் உறுப்பினராகச் சேவை புரிய வேண்டும் என்று எண்ணக்கூடிய வக்கீல்கள், மீண்டும் தாங்கள் இழந்த சொர்க்கத்தை மீட்டிட வேண்டும் என்று பணம் எண்ணும் இயந்திரங்களாக நீதிமன்ற வளாகத்தில் உலாவக் கூடாது. நாடாளுமன்றப் பணிக்காலத்தில் அதற்கு உண்டான சேவைகளைச் செய்வதற்கே நேரம் போதாது. இதில் அவர்கள் கோப்புகளுடனும், அதனை ஒப்படைத்த இளம் வக்கீல்களுடனும் வழக்கு நடத்துவதற்குப் பெரும் நேரத்தைச் செலவிடுவது அவர்களை எந்தக் காரணத்துக்காகத் தேர்ந்தெடுத்தார்களோ அக்காரணத்தையே முறியடித்துவிடும்.
வழக்கறிஞர் உடையில் மக்கள் பிரதிநிதி
தமிழக சட்டப் பேரவைத் துணைத் தலைவராக இருந்த வக்கீல் ஒருவர், தினசரி சட்டப் பேரவைக்கே வக்கீல் உடுப்பில்தான் வருவார். காலையில் சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் தன்னுடைய சீருடையில் நீதிமன்றங்களில் காணப்படுவார். இதையெல்லாம் தடுத்து, ஒரு கண்ணியமான வக்கீல் தொழிலைப் பாதுகாக்க வேண்டுமென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவிக்காலத்தில் நீதிமன்றங்களில் சட்டத்தரணிகளாக - வழக்கறிஞர்களாக உலாவுவது தடுக்கப்பட வேண்டும். அகில இந்திய பார் கவுன்சிலின் முடிவு வரவேற்கத்தக்கதே!
-கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு),உயர் நீதிமன்றம், சென்னை.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 14.01.2018