disalbe Right click

Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

Wednesday, January 11, 2017

ஐ.டி.ஊழியர்கள் தங்கள் வேலையை தக்க வைக்க...

Image may contain: text

ஐ.டி.ஊழியர்கள் தங்கள் வேலையை தக்க வைக்க...

அவனுக்கென்னப்பா ஐடி ப்ரொஃபெஷனல்... ராஜா மாதிரி வாழ்க்கை அப்படினு பொதுவா பேசுறத கேட்டிருப்போம். ஆனா அங்க வேலபாக்குறவங்களுக்குத்தான் தெரியும் அதனோட கஷ்டம் என்னனு.

சரி மேல படிச்சு தெரிஞ்சுக்கலாம் வாங்க. ஐடி அல்லது தகவல் தொழில்நுட்பத் தொழில் துறை ஒரு வீரியமான வளர்ச்சியையும் தொடர்ந்த முன்னேற்றங்களையும் கண்டுவரும் துறை என்பதால் இத்துறை வல்லுனர்களும் பணியாளர்களும் தங்களை தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது.

இதன் மூலம் தங்கள் திறமைகள் முன்னேற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும். இந்தத் துறையில் உங்களுக்கு நீடித்த வேலையை உறுதிசெய்யும் ஐந்து முக்கிய குறிப்புகள் இதோ.

1. அப்-டு-டேட்-ஆ இருங்க! (அண்மை நிகழ்வுகளை அறிந்திருங்க)

உங்களை தினசரி நடக்கும் நிகழும் மாறுதல்களும் புதுமைகளும் தரும் அனுபவங்களைப் போல் வேறு எதுவும் இந்த ஐடி துறையில் நீடித்திருக்க உதவாது என வொர்க் பெட்டெர் ட்ரெயினிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்வப்னில் காமத் கூறுகிறார்.
2. சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளுங்கள் 

"சூழ்நிலைக்கேற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வதும் நிகழும் மாற்றங்களுக்குத் தயாராக இருப்பதும் கூட ஐடி பணியாளர்களுக்கு முக்கியமான ஒன்று. ஏனென்றால் இந்தத் துறை வேலைவாய்ப்பு வளர்ச்சியில் தேக்கம் என்பது மிக எளிதாகவும் விரைவாகவும் நிகழக் கூடியது" என்கிறார் மைன்ட் ட்ரீ நிறுவனத்தின் மனிதவள மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை துணைத் தலைவர் பங்கஜ் கன்னா.
3. உங்களை நீங்களே தயார்படுத்துங்கள் 

தன்னைத் தானே தயார்படுத்திக் கொள்வது தகவல் தொழில் நுட்பத் துறையில் ஒரு முக்கியமான அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி முறையாக கருதப்படுகிறது. "நல்ல நிறுவனங்கள் உங்களுக்கு நல்ல பயிற்று தளங்களை அமைத்துத் தருவதுடன் இவற்றில் மின்னனு பயிற்சிகளும் (இ மாடியுல்ஸ்), பயிற்றுனர்-கற்பவர் வகைப் பயிற்சிகளும் (பட்டி-மென்டர்), உள்துறை திறன் குழுக்களும், வளர்ந்து வரும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய பயிற்சி முகாம்கள் மற்றும் கலந்துரையாடல்கள் (ஒர்க்ஷாப்ஸ் அண்ட் செஷன்ஸ்) போன்ற நடவடிக்கைகள் மூலமும் பணியாளர்களை ஊக்குவிக்கின்றன.
4. நல்ல நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள்

நல்ல தொழிற்கூடங்களை அடித்தளமாகக் கொண்ட ஒரு நல்ல நிறுவனத்தை தேர்வு செய்யுங்கள்" என அவர் குறிப்பிடுகிறார்.
5. புதிய திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள் 

தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களை கவனிப்பது மட்டும் போதாது. "நீங்கள் என்ன நிகழ்ந்து கொண்டு இருக்கிறது என்பதை அறிந்தவராகவும், அதில் உங்களுக்கே உரிய பிடித்தமான பிரிவுகளை தேர்வு செய்து அதை உங்களின் கனவாகக் கொண்டு அறிவை வளர்த்துக் கொள்ளவும் திறன்களை மேம்படுத்தவும் முயலுங்கள்" என்கிறார் சர்கார்.
நன்றி : குட்ரிட்டன்ஸ் » தமிழ் » வகுப்புகள் » 06.01.2017

Sunday, January 1, 2017


மத்திய அரசு பணி - வயது வரம்பு அதிகரிப்பு

மத்திய அரசின் ‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக அதிகரிப்பு: ஓபிசி பிரிவினரின் வயது வரம்பு 33 ஆக இருக்கும்.

மத்திய அரசின் ‘குரூப்-பி’ பணிக ளுக்கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் உதவியாளர், வருமான வரி ஆய்வாளர், உதவி அமலாக்க அதிகாரி, அஞ்சலக ஆய்வாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்த வயது வரம்பு உயர்வு உத்தரவு பொருந்தும்.

மத்திய அரசின் ‘குரூப்-ஏ’ அதிகாரிகள் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அதேபோல், மத்திய அரசின் சார்நிலைப்பணி அதிகாரிகள் அதாவது குருப்-பி அதிகாரிகள் பணியாளர் தேர்வாணையம் (ஸ்டாப் செலக்சன் கமிஷன்) மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். அடிப்படை சம்பளம் ரூ.9,300 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 முதல் ரூ.4,600 வரையிலான பதவிகள் இந்த பிரிவின் கீழ் வருகின்றன.

தற்போது இந்த ‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 27 ஆக இருந்து வருகிறது. 27 என்பது பொதுப் பிரிவினருக்கான (ஓசி) வயது வரம்பு ஆகும். 

மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்த்தப்படுகிறது.

இந்த நிலையில், பணியாளர் தேர்வாணையத்தால் ரூ.4200, ரூ.4600, ரூ.4,800 தர ஊதியத்துடன் கூடிய பணிகளுக்கான வயது வரம்பை 27-லிருந்து 30 ஆக உயர்த்தி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி பின்வரும் பணிகளுக்கான வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்படுகிறது.

1. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய உதவியாளர்

2. உள்துறை அமைச்சக உதவியாளர்

3. ரயில்வே அமைச்சக உதவியாளர்

4. வெளியுறவு அமைச்சக உதவியாளர்

5. பாதுகாப்பு அமைச்சக உதவியாளர்

(மேற்கண்ட பதவிகள் அனைத் துக்கும் தர ஊதியம் ரூ.4,600)

6. இதர அமைச்சகங்களில் உதவியாளர் (தர ஊதியம் ரூ.4,200, ரூ.4,600)

7. வருமான வரி ஆய்வாளர்

8. மத்திய கலால் ஆய்வாளர்

9. கடத்தல் தடுப்பு ஆய்வாளர்

10. ஆய்வாளர்

11. உதவி அமலாக்க அதிகாரி
(மேற்கண்ட பதவிகள் அனைத் துக்கும் தர ஊதியம் ரூ.4,600)
12. அஞ்சலக ஆய்வாளர்

13. கோட்ட கணக்காளர்

14. போதைப் பொருள் தடுப்பு ஆய்வாளர்

(மேற்கண்ட பதவிகள் அனைத்துக்கும் தர ஊதியம் ரூ.4,200)

‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 30 ஆக உயர்த்தப்படுவதால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வயது வரம்பும் அதிகரிக்கப்படும்.

அதன்படி, எஸ்சி, எஸ்டி வகுப்பி னரின் வயது வரம்பு 35 ஆகவும், ஓபிசி பிரிவினரின் வயது வரம்பு 33 ஆகவும், மாற்றுத்திறனாளிகளின் வயது வரம்பு 40 ஆகவும் உயர்த்தப்படும்.

எஸ்எஸ்சி ‘குரூப்-பி’ பணிகளுக் கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டிஎன்பிஎஸ்சி ‘குரூப்-1’ தேர்வுக்கான வயது வரம்பும் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் படித்தும்வரும் தேர்வர்களிடம் கேட்டபோது, “மத்திய அரசைப் பின்பற்றி தமிழக அரசும் ‘குரூப்-1’ தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர். 

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகளுக்காக நடத்தப்படும் ‘குரூப்-1’ தேர்வுக்கான வயது வரம்பு தற்போது பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், மற்ற அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 35 ஆகவும் உள்ளது. 

பிஎல் பட்டம் பெற்றிருந்தால் அனைத்து தரப்பினருக்கும் கூடுதலாக ஓராண்டு வயது வரம்பு தளர்த்தப்படுகிறது.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 01.01.2017

Friday, December 30, 2016

புத்தாண்டில் வேலைக்குப் போகலாமா!


புத்தாண்டில் வேலைக்குப் போகலாமா!


இந்த ஆண்டு இந்தியா கண்ட அரசியல் பொருளாதார மாற்றங்களால் 2017-ம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்கிற ஆவலும் பதற்றமும் அதிகரித்துள்ளது. பண மதிப்பு நீக்க விவகாரமும் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது. 

அதிலும் இந்தியாவில் 80 கோடிக்கும் அதிகமானோர் வேலைக்குச் செல்லும் வயது வரம்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய வேலைச் சந்தை எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கவிருக்கிறது என்பதை அலச வேண்டிய நேரம் இது!

பெண்களுக்கு முதல் இடம்

‘இந்தியாவின் வேலைவாய்ப்பு எதிர்காலம்’ தொடர்பாகக் கிட்டத்தட்ட 2000 நிறுவனத் தலைவர்களிடம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சுற்றுலா, சுகாதாரம், உள்கட்டமைப்பு, உற்பத்தி ஆகிய துறைகள் 2017-ல் அதிகப்படி யான வேலை வாய்ப்பை அளிக்கப் போகின்றன எனத் தெரியவந்துள்ளது. 

தொழில்முனைவோருக்கும் பிரகாசமான வாய்ப்புகள் காத்திருப்பதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் 70 சதவீத நிறுவனங்கள் பெண்களை நியமிக்க உள்ளன. அமைப்புசாராத் தொழில்களில் மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்களிலும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கவிருக்கிறது. வழக்கம்போல டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வாய்ப்புகள் கொழிக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

வங்கி இல்லாமலா!

அதேநேரத்தில் இந்த ஆய்வைத் தாண்டி சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துவது, நிதித் தொழில்நுட்பம் (fin-tech), டிஜிட்டல் கட்டணம் செலுத்துதல் (digital payments), வங்கி உள்ளிட்ட துறைகளில் நிச்சயமாக வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதே. ஆனால், பண மதிப்பு நீக்கத்தால் மிகக் குறைவான சம்பள உயர்வைத்தான் எதிர்பார்க்க முடியும். சம்பளத்தில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் பதவி உயர்வு கிடைப்பதிலும் பின்னடைவு ஏற்படலாம்.

நம்பிக்கை இழக்க வேண்டாம்

மறுபக்கம் அமெரிக்காவில் வேலை செய்யக் கனவு காணும் இந்திய இளைஞர்களுக்கு டிரம்ப் என்ன சொல்லப் போகிறார் என்பதும் கேள்விக்குறியே. அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதையும், வெளிநாட்டினருக்குத் தற்காலிகமாக ஊழியர் அனுமதி விசாவான ஹெச்-1பி வழங்குவதையும் தன்னுடைய அதிபர் தேர்தலுக்கான பரப்புரையிலேயே வன்மையாகக் கண்டித்தார் டிரம்ப். இதன் தாக்கம், வேலை தேடி அமெரிக்கா செல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்களிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

ஆனாலும் இந்தியாவில் உள்ள மனிதவளம், தொழில் திறமை நிறைந்த ஊழியர்கள் இங்கே அதிகமாக இருப்பது, குறைந்த சம்பளத்தில் அதிகத் திறமைசாலிகள் கிடைப்பதால் உலகப் பெரு நிறுவனங்கள் இந்தியச் சந்தையை விட்டு வெளியேற மாட்டார்கள். எப்படி இருந்தாலும் தொழில்நுட்பமயமாதலை நோக்கி அரசே நகர்வதால் எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தகவல்தொழில்நுட்பத்தில் தங்களைத் தகவமைத்துக்கொள்வது அவசியம்.

 இத்தகைய பின்னணியில் புதிதாக வேலைக்குச் செல்ல முயற்சிப்பவர்கள் தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்வது?

மின்னஞ்சல் எழுதுதல்

ஒரு நிறுவனத்துக்குள் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக நாம் யார் என்பதைச் சொல்வது நம்முடைய விண்ணப்பக் கடிதம். இன்று பல நிறுவனங்கள் மின்னஞ்சல் மூலமாகத்தான் தங்களுடைய ஊழியர்களோடும் வேலைக்கு நியமிக்க இருப்பவர்களோடும் தொடர்புகொள்கின்றன. அவ்வாறு நாம் மின்னஞ்சல் எழுதும்போது ‘chat lingo’ எனப்படும் அரட்டை மொழியில் இல்லாமல் வேலைக்கு ஏற்றபடி நேர்த்தியாக எழுத வேண்டும். இல்லையேல் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பொறுப்பற்றவர் என்கிற எண்ணம்தான் வேலை வழங்குபவர்களுக்கு ஏற்படும். தெளிவான மொழிநடையில் இலக்கணப் பிழைகள் இல்லாமல் சுருக்கமாக மின்னஞ்சலை எழுதப் பழகுவது அவசியம்.
எம்.எஸ். எக்ஸல் பயன்படுத்துதல்

கணினியை அதிகம் பயன்படுத்துபவர்கள்கூட வெறும் தகவல்களைச் சேமிக்கவும் அட்டவணைகளை வரையவும்தான் எம்.எஸ். எக்ஸலை (MS Excel) பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால், விரைவில் இந்தப் புரோகிராமிங் முறை அலுவலக வேலைகள் பலவற்றுக்கு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிடும் எனப் பணிவாழ்க்கை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பட்ஜெட் தாக்கல், நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல், சிறிய புராஜெக்ட்களுக்குக் கணிதத் தீர்வுகள் காணுதல் இப்படி வேலை தொடர்பான பல விஷயங்களுக்கு எக்ஸல் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் அதைப் பயன்படுத்தப் பயிற்சி எடுப்பது நல்லது.

பவர்பாய்ண்ட் பயன்படுத்தலாமே!

ஒரு புதிய திட்டத்தை அனைவரையும் கவரும் விதமாகச் சிறப்பாகச் சமர்ப்பிக்கப் பவர்பாய்ண்ட் பிரசெண்ட்டேஷன் (PowerPoint Presentation) கைகொடுக்கும். கல்லூரி நாட்களிலேயே இதைப் பயன்படுத்தப் பழகுவது நல்லது.

இணையத்தைத் துழாவுதல்

இன்று பெரும்பாலான தகவல்கள் இணையம் மூலமாகவே சேகரிக்கப்படுகின்றன. தேடுபொறியில் எந்த வார்த்தையைத் தட்டச்சு செய்தாலும் கோடிக்கணக்கான தகவல்கள் வந்து குவியும். ஆனால் அவற்றில் எவையெல்லாம் நம்பத் தகுந்தவை, எந்தெந்த வலைத்தளங்களில் சரியான தரவுகள் கிடைக்கும் என்பதைக் கண்டறிய முக்கியச் சொற்களை (keywords) கண்டுப்பிடிக்கப் பயிற்சி அவசியம்.

பணிவாழ்க்கைத் தொடர்பாற்றல்

எல்லாவற்றுக்கும் மேலாக தொடர்பாற்றல் இன்றியமையாதது. நேர்முகத் தேர்வின்போதும் அதன் பிறகு மற்ற பணிச் சூழல் சந்திப்புகளின் போதும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழலுக்கு ஏற்பப் பேசவும் நடந்துகொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் துணிச்சலையும் மாற்றத்துக்கேற்பத் தகவமைத்துக் கொள்வதற்கான தயார்நிலையும் இருந்தால் என்னாளும் வெற்றி நமதே.

ம. சுசித்ரா

 நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் – 29.12.2016

Monday, October 31, 2016

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு


இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - என்ன செய்ய வேண்டும்?
வீடுகளுக்கு இணையதள இணைப்பு: இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் அரசு கேபிள் நிறுவனம்- வங்கிக்கடன் பெற்றுத்தரவும் திட்டம்
தமிழகம் முழுவதும் தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக வீடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் இணையதள இணைப்பு வழங்கும் திட்டத்தில், இளைஞர்களைத் தொழில்முனைவோராக்கும் முயற்சியில் அரசு கேபிள் டிவி நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்கு வங்கிக்கடன் வசதியையும் செய்துதர திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின்கீழ் அரசு கேபிள் டிவி நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்குத் தமிழகம் முழுவதும் 73 லட்சம் கேபிள் இணைப்புகள் உள்ளன.
அரசு கேபிள் டிவி நிறுவனம் கேபிள் இணைப்புகள் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி அலுவலகங்களில் அரசு இ-சேவை மையங்களை அமைத்து, அவற்றின் மூலம் பொதுமக்களுக்கு வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளிடம் இருந்து வழங்கப்படும் சான்றுகள், அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், வாக்காளர் அடையாள அட்டை அச்சிட்டு வழங் குதல் ஆகிய பணிகளைச் செய்து வருகிறது. சமீபத்தில் கூடுதலாக, ஆதார் பதிவுக்கான வசதியையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது தனியார் இணைய சேவை நிறு வனங்களுக்குப் போட்டியாக அரசு கேபிள் டிவி நிறுவனமும் பொது மக்களுக்கு இணைய இணைப்பு வழங்கும் திட்டத்தில் இறங்கியுள் ளது. இதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி வெளி யிட்டு, தனியாரான ‘வோடபோன்’ நிறுவனத்துடன் கைகோத்துள்ளது. இந்த நிறுவனத்தின் உயர்நிலை இணைப்பைப் பெற்று பொதுமக்களுக்கு வழங்குகிறது.
இது தொடர்பாக அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.குமரகுருபரன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்வர் அரசு கேபிள் டிவியின் இணைய இணைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அவர் தொடங்கி வைக்கும் முன்னரே, நாங்கள் இதற்கான பணிகளில் இறங்கி, ஆயிரத்து 300 இணைப்புகளைக் கைவசம் வைத்திருந்தோம். இதற் கான தொலைத்தொடர்பு அனு மதியும் முறையாக பெறப்பட்டுள் ளது.
முதலில், அரசு கேபிள் நிறுவன ஆபரேட்டர்கள் மூலம் இத்திட்டத் தைச் செயல்படுத்த முயற்சி எடுத் தோம்.
அவர்கள் முதலில் இத்திட் டத்துக்கான பைபர் ஆப்டிக்கல் கேபிள், இணைய இணைப்பை பிரித்தளிக்கும் தளவாடப் பொருட்களை வாங்க வேண்டும். அதற்கு ஒருவருக்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் வரை செலவாகும்.
ஆனால், ஆபரேட்டரின் அலுவ லகம் வரையிலான இணைப்பை அரசு கேபிள் டிவி நிறுவனமே சொந்த செலவில் வழங்கும் என தெரிவித்திருந்தோம். அதன்படி 32 பேர் மட்டுமே இத்திட்டத்தில் இணைந்து, பொதுமக்களுக்கு இணையதள இணைப்புகளை வழங்கினர்.
அப்போது சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதனால், திட்டத்தை முழுமை யாக செயல்படுத்த முடியவில்லை. தேர்தல் முடிந்து மீண்டும் அரசு பொறுப்பேற்றதும், பணிகளைத் தொடங்கினோம். தொடர் முதலீடு, ஆட்கள் நியமனம் போன்றவற்றால் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சிரமம் இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்தே, தொழில் முனைவோராக முயற்சிக்கும் இளை ஞர்கள் மூலம் இத் திட்டத்தைத் செயல்படுத்த முடி வெடுத்தோம். தற்போது இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது டன், தொழில்முனைவோர் மேம் பாட்டு நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுடன் கைகோர்த்துள் ளோம்.
இத்திட்டத்தில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிக்கடன் ஏற்பாடும் செய்ய முடிவெடுத்துள்ளோம். இத்திட்டத் தில் இணைபவருக்கு பொதுமக் களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத் தொகையில் 46 சதவீதம் வழங்கப்படும்.
தற்போது இத்திட்டத்தில் சேர 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுடன் நாங்கள் பேசி வரு கிறோம். மத்திய அரசின் வட்டார அளவிலான இணையதள திட்டத் தைத் தமிழக அரசு செயல்படுத்தும் என முதல்வர் ஏற்கெனவே கடந்த ஆண்டு அறிவித் திருந்தார் . அத்திட்டத்துக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. அதற்கு முன் னோடியாக, தற்போது தமிழக அரசே இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
திட்டத்தில் இணையவும், இணைப்புக்காக வும், பழுது தொடர்பான தகவல் களுக்கும் ‘18004252911’ என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இணைப்பு பெற்றவர்கள் ஆன் லைன் மூலம் கட்டணம் செலுத் தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தைப் பொறுத்தவரையில், மாதம் ரூ.299 முதல் ரூ.1,349 மாத கட்டண அடிப்ப டையில், இணைய வேகத்துக்கு ஏற்றவகையில் திட்டங்கள் அறி விக்கப்பட்டுள்ளன. இக்கட்டணம் தவிர, கூடுதல் வரிகள் ஏதும் விதிக்கப்படுவதில்லை என்பதால் வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.
இணையதள இணைப்பு குறித்து, கேபிள்டிவி தொழில்நுட் பப் பிரிவு நிபுணர் கூறும்போது,
‘‘அரசு இணையதள இணைப்பைப் பொறுத்தவரை, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை உள்ளது.
வாடிக்கையாளர்களின் வீட்டு இணைப்பில் உள்ள தொ ழில்நுட்ப கோளாறுகளை, இங்கு இருந்தபடியே சீரமைக்க முடியும். தற்போது அதற்குத் தேவையான ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .
இணைப்பு அறுபட்டிருந்தால் மட்டுமே, வாடிக்கையாளர்கள் தங்கள் பகுதி முகவரை அணுக வேண்டிவரும்’’ என்றார்.
கி.கணேஷ்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 31.10.2016


Tuesday, July 12, 2016

பள்ளியில் ஆசிரியை ஆவதற்கு


பள்ளியில் ஆசிரியை ஆவதற்கு என்ன செய்ய வேண்டும்?


இன்ஜினீயர், டாக்டர், விஞ்ஞானி போன்ற பணிகளில் சேர இன்றைய இளைஞர்கள் பெரிதும் ஆசைப்பட்டாலும் அவர்களுக்கு ஆசிரியர் பணி மீதான ஈர்ப்பும் குறைந்துவிடவில்லை. பெரும்பாலான பெண்கள் ஆசிரியர் பணியை விரும்புகிறார்கள். இதர அலுவலகப் பணிகளைக் காட்டிலும் குடும்பத்தை நன்கு கவனித்துக்கொள்ள ஏற்ற பணியாக அவர்கள் கருதுவது ஆசிரியர் வேலையைத்தான்.
தயாராவது எப்படி?
இரண்டு வழிகளில் ஆசிரியர் பணியில் சேரலாம். ஒன்று பிளஸ் 2 முடித்துவிட்டு 2 ஆண்டுக் கால இடை நிலை ஆசிரியர் பயிற்சியை முடிக்க வேண்டும். அதன் பிறகு ஆசிரியர் தகுதி தேர்வெழுதிப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் ஆகலாம். மற்றொன்று பட்டதாரி ஆசிரியர் பணி. இதற்குப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு பி.எட். பட்டம் பெற வேண்டும். அதன் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்வெழுதிப் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேரலாம். தற்போது பெரும்பாலானோர் பட்டதாரி ஆசிரியராகவே விருப்பப்படுகிறார்கள். முதுகலைப் பட்டதாரிகள் பி.எட். முடித்துவிட்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஆகலாம். எனவே, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு அடிப்படைக் கல்வித்தகுதியாக இருப்பது பி.எட். பட்டம்.
இரண்டாண்டு காலப் படிப்பு
தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரி களும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 600-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் பி.எட். பட்டம் வழங்கப்படுகிறது. முன்பு ஒரு ஆண்டுக் காலமாக இருந்த பி.எட். படிப்பு கடந்த ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுக் காலமாக மாற்றப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இடங்கள் கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகிறது.
தனியார் கல்லூரிகளில் உள்ள பி.எட். இடங்களைக் கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பி விடுவார்கள். அரசு மற்றும் அரசு கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரத்தில் வழங்கப்படுகின்றன. ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை என்பதால் ஒரேயொரு விண்ணப்பம் போட்டால் போதும். கலந்தாய்வின்போது தங்களுக்கு விருப்பமான கல்லூரியைத் தேர்வுசெய்துகொள்ளலாம்.
எங்கே படிக்கலாம்?
பி.எட். படிப்புக்கு அரசு கல்லூரிகளில் ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் தேசியத் தர மதிப்பீட்டு கவுன்சில் (நாக்) அங்கீகாரம் பெற்றிருந்தால் ரூ.46,500. தர அங்கீகாரம் பெறவில்லை எனில் கல்விக்கட்டணம் ரூ.41,500 நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இப்படி ரெகுலர் கல்லூரியில் சேர்ந்து பி.எட். படிப்பது ஒருபுறம், இன்னொரு புறம் தொலைதூரக் கல்வி திட்டத்தில் 2 ஆண்டுக் கால பி.எட்.-ஐ படிக்கலாம். இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரிகள் இதில் சேரலாம்.
இதற்கு 2 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவமும் அவசியம். இதற்கான நுழைவுத்தேர்வு, சிறப்பு மதிப்பெண் (பட்டப் படிப்பு மதிப்பெண், ஆசிரியர் பணி அனுபவத்துக்கு மதிப்பெண்) அடிப்படையில் நடைபெறு கிறது. இதுபோன்று பணியில் இருந்துகொண்டும் தொலைதூரக்கல்வி மூலம் பி.எட். பட்டம் பெறலாம்.

நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 12.07.2016

Friday, June 24, 2016

எளிதாக ரெஸ்யூமை உருவாக்க

எளிதாக ரெஸ்யூமை உருவாக்க என்ன செய்ய வேண்டும்?
வேலைவாய்ப்புத் தேடலில் முதல் படி ரெஸ்யூமைத் தயார் செய்வதுதான். வேலைக்கு விண்ணப்பிப்பவரின் தகுதி, திறமைகளைச் சரியாக அடையாளம் காட்டும் வகையில் ரெஸ்யூம் அமைந்திருந்தால் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வரும் வாய்ப்புகள் அதிகம். நல்ல ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடிப்படையான கோட்பாடுகளும், வழிகளும் இருக்கின்றன.
அது மட்டும் அல்லாமல் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப வேலைவாய்ப்புக்கான பரிசீலனை முறைகளும் மாறியிருக்கின்றன. எனவே அதற்கேற்ப ரெஸ்யூம் தயாரிப்பையும் அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு 
பெரும்பாலான நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்களை மனிதர்கள் பரிசீலிப்பதில்லை. பிரத்யேக மென்பொருள்கள் ரெஸ்யூம்களைப் பார்த்து, வடிகட்டுகின்றன. இதற்குப் பிறகே மனித வள அதிகாரி அவற்றைப் பரிசீலிக்கிறார்.
ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவியும்போது, எல்லா ரெஸ்யூம்களையும் படித்துப் பார்த்துப் பொருத்தமானவற்றைத் தேர்வு செய்வது அலுப்பூட்டக்கூடியது; நேரத்தை விழுங்கக்கூடியது. அதனால்தான் ரோபோ தேர்வு மென்பொருள்களைக் கொண்டு சரியான ரெஸ்யூம்களை அகழ்ந்தெடுக்கின்றனர். இவை ஆட்டமேட்டட் டிராக்கிங் சிஸ்டம் (ஏடிஎஸ்) என்றும் குறிப்பிடப்படுகின்றன.
எனவே மென்பொருள் வடிகட்டலில் தப்பிப் பிழைக்கக் கூடியதாக ரெஸ்யூமைத் தயாரிப்பது அவசியம். ஆனால் இதை நினைத்து அதிகம் கவலைப்பட வேண்டாம். ஏனெனில், ரெஸ்யூம் அப்டேட்டான தன்மையுடன் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதற்கேற்ப மாற்றங்களைச் செய்து கொள்ளவும் உதவும் இணையதளங்களும், செயலிகளும் இருக்கின்றன.
பொதுவாக ரோபோ தேர்வு மென்பொருள்கள் ரெஸ்யூம்களில் குறிப்பிட்ட வார்த்தைகள், பதங்களைத் தேடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேலைக்கான தகுதி, அனுபவம், படிப்பு ஆகியவற்றை உணர்த்தக்கூடிய சொற்களை அவை தேடிக் கண்டுபிடிக்கின்றன. அதோடு மோசமான அமைப்பு, எழுத்துப் பிழைகளையும் கண்டுணர்ந்து அதனடிப்படையில் வடிகட்டிவிடுகின்றன.
எனவே, ரோபோக்களின் கடைக்கண் பார்வையைப் பெற முதல் வழி ரெஸ்யூம் எளிமையாக, புரியும்படி இருக்க வேண்டும். அலங்கார அமைப்புகளையும், வார்த்தை ஜாலங்களையும் தவிர்த்துவிட வேண்டும்.
முடிந்தால் வேர்டு பைலாக இருந்தால் நல்லது. முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்ட புல்லட் புள்ளிகளைப் பயன்படுத்தலாம். இப்படி நிறைய அம்சங்களைக் கவனிக்க வேண்டும். வேலைக்கான விவரிப்பு, தகவல் தொடர்புக்கான முகவரி ஆகியவற்றையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று வேலைவாய்ப்பு தேர்வு வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த முறையில் ரெஸ்யூம் தயார் செய்ய உதவி தேவை என்றால், எச்லூம் (http://www.hloom.com/ats-resume-samples/) தளத்துக்குச் சென்று பார்க்கலாம். இந்தத் தளத்தில் பலவிதமான ரெஸ்யூம் மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமாக மென்பொருள் பார்வைக்கு ஏற்ற வகையிலான ரெஸ்யூம் மாதிரிகள் ஏடிஎஸ் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ரெஸ்யூம் அருகிலும் அதற்கான வழிகாட்டுதல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பார்த்து பரிசீலித்துப் பொருத்தமான ரெஸ்யூம் மாதிரியைத் தேர்வு செய்துகொள்ளலாம். அப்படியே நகெலெடுக்க வேண்டும் என்றில்லை, இவற்றை ஒரு வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம்.
ரெஸ்யூமை எப்படி வடிவமைப்பது எனத் தெரிந்துகொண்ட பின், அதில் முக்கிய விவரங்களை எப்படி இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். என்ஹான்ஸ்சிவி (https://www.enhancv.com/ ) இணைதளம் இதற்கு வழிகாட்டுகிறது. ரெஸ்யூமில் இடம்பெற வேண்டிய தகவல்களைத் தெரிந்து கொள்வதோடு, மாதிரி ரெஸ்யூம்களையும் பார்க்கலாம். ரெஸ்யூம்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள இந்தத் தளம் உதவும்.
இதே போல ஜாப்ஸ்கேன் (https://www.jobscan.co/ ) இணையதளம், ரெஸ்யூமில் ரோபோ தேர்வாளர் கவனிக்கக்கூடிய குறிச்சொற்கள் இருக்கின்றனவா? எனக் கண்டறிந்து சொல்கிறது. இந்தத் தளத்தில் ரெஸ்யூம் விவரம் மற்றும் அதன் அருகே விண்ணப்பிக்கும் பணிக்கான விவரங்களைச் சமர்ப்பித்தால் இரண்டையும் பரிசீலித்து அந்த ரெஸ்யூம் எப்படி இருக்கிறது எனும் தகவல் தந்து வழிகாட்டுகிறது. ஆனால் இது கட்டணச் சேவை.
ரெஸ்யூமைக் கவனமாகத் தயார் செய்த பிறகு அதன் தன்மை குறித்து உறுதி செய்து கொள்ள விரும்பினால், ரெஸ்ஸ்கோர் (http://rezscore.com/) தளம் வழிகாட்டுகிறது. அடிப்படையில் இந்தத் தளம் ரெஸ்யூமின் பல்வேறு அம்சங்களை அலசி ஆராய்ந்து அதற்கு மதிப்பெண் கொடுக்கிறது. ரெஸ்யூமை இந்தத் தளத்தில் பதிவேற்றி அது எந்த அளவு சிறந்ததாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
இன்னும் வழிகாட்டுதல் தேவை எனில் ரியல் ரெஸ்யூம் (https://www.visualcv.com/resume-samples) தளத்தில் ஆயிரக்கணக்கான ரெஸ்யூம்களைப் பார்வையிடலாம். எல்லாமே தொழில் வல்லுநர்களின் ரெஸ்யூம் மாதிரிகள். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணிகளுக்கான ரெஸ்யூம் மாதிரிகளையும் பார்க்கலாம்.

இவற்றில் உள்ள ரெஸ்யூம் மாதிரிகள் பிடித்திருந்தால் அதையே பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. ரெஸ்யூம் பற்றி இன்னமும் தெளிவு தேவை என்றால் கேள்வி பதில் தளமான குவோராவில் ரெஸ்யூம் வடிவமைப்பு தொடர்பான கேள்விகளைப் படித்துப் பார்க்கலாம். - https://www.quora.com/topic/Resumes-and-CVs வேலைவாய்ப்புத் துறையில் நிபுணத்துவம் மிக்க வல்லுநர்கள் தரும் விரிவான பதில்கள் நிச்சயம் புதிய பார்வையை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

இன்னொரு முக்கியக் குறிப்பு, வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பவர்களுக்குத் தொழில்முறை வலைப்பின்னல் சேவையான லிங்க்டுஇன் தளத்தில் கணக்கு இருந்தால் இன்னும் நல்லது. பல விதங்களில் அது உதவியாக இருக்கும். பேஸ்புக் கணக்கு நட்புக்கும், அரட்டைக்கும் வேண்டுமானால் ஏற்றதாக இருக்கலாம், ஆனால் தொழில்முறையாக நீங்கள் அடையாளம் காணப்பட வேண்டும் என்றால் லிங்க்டுஇன் நல்ல தேர்வாக இருக்கும்.
இது தவிர, ஒரு ரெஸ்யூமில் தவிர்க்க வேண்டிய முக்கிய அம்சங்களையும் அறிந்திருப்பது அவசியம். குறிப்பிட்ட சில பணிகள் தவிர பிறவற்றுக்கு ஒளிப்படத்தை இணைக்க வேண்டாம். உயரம், எடை போன்ற தனிப்பட்ட விவரங்களையும் தவிர்க்க வேண்டும் போன்ற 17 அம்சங்களை இந்த வரைபடச் சித்திரம் மூலம் அறியலாம்: 
http://www.resumetiq.com/17-things-to-avoid-in-resume-infographic/

**********************************************நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 03.06.2016 

Wednesday, June 1, 2016

உங்களது RESUME நன்றாக தோற்றமளிக்க

உங்களது RESUME நன்றாக தோற்றமளிக்க என்ன செய்ய வேண்டும்?
ன்டர்வியூவுக்கு சீவி சிங்காரித்துப் போவதுடன், `சி.வி’யையும் (CV – Curriculum Vitae) சிங்காரிக்க வேண்டும்.
‘‘சி.வி (Resume) என்பது நம்மை நாமே மார்க்கெட்டிங் செய்துகொள்ள ஏதுவானதொரு டாக்குமென்ட், ஒரு நிறுவனத்தில் நாம் சென்று பேசும் முன்பு, நம்மைப் பற்றி அவர்களுக்குச் சொல்லும் அறிமுக அறிக்கை. தகுதியிருந்தும் ஒழுங்கற்ற `சி.வி’யால் வேலை கிடைக்காமல் போனவர்கள் அதிகம் பேர். எனில், அதை எவ்வளவு கவனத்துடன் தயாரிக்க வேண்டும்?!’’ என்று வலியுறுத்தும் சென்னையைச் சேர்ந்த ஹெச்.ஆர் கன்சல்டன்ட் நந்தினி, தேவையான அம்சங்களுடன் தெளிவான `சி.வி’ தயாரிப்பதற்காக தந்த குறிப்புகள் இங்கே…
ஃபான்ட் சைஸ்: 10 (அ) 12
ஃபான்ட் டைப்: Times New Roman
பெயர்: பெரிதாக போல்டு (BOLD) செய்திருக்க வேண்டும்
பணி நோக்கம் (Objective): எந்தத் துறையில் திறம்பட செயல்பட விரும்புகிறீர்கள் என்பதைக் குறிப்பிடவும். ‘க்ளிஷே’வாக வெப்சைட்டு களிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்படும் அப்ஜெக்ட் டிவ்களை தவிர்த்து, தனித்துவமாக எழுதவும்.
கல்வித் தகுதி (Educational Qualification): ரிவர்ஸ் க்ரோ னாலாஜிக்கல் ஆர்டரில், அதாவது சமீபத்திய டிகிரி முதலிலும், அதன் கீழே இளங்கலை, பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு என்ற வரிசையில், மதிப்பெண்களுடனும் படித்த பள்ளி, கல்லூரி விவரங்களுடனும் எழுதவும். கட்டம் கட்டி இடத்தை நிரப்ப வேண்டும் என்றில்லை… பாயின்ட்டுகளாகக் கொடுத்தாலே போதுமானது.
முன் அனுபவம் (Experience): முன் அனுபவமுள்ளவர்கள் தற்போது வேலைசெய்யும் நிறுவனத்தின் பெயர், வகிக்கும் பதவி, எந்த வருடம், மாதம் முதல் எந்த வருடம், மாதம் வரை அங்கு பணிபுரிகிறீர்கள் போன்ற விவரங்களைக் குறிப்பிடவும். அங்கு நீங்கள் வகிக்கும் பொறுப்புகள் (Roles & Responsibilities) என்னென்ன என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவும். நீங்கள் பணிபுரிந்த ப்ராஜெக்ட்டின் பெயர், அதன் சுருக்கம், ஆரம்பித்த தேதி, முடித்த தேதி, முக்கியமாக அதில் உங்கள் பங்கு என்ன என்பதை ஹைலைட் செய்யவும். இதுவே உங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும்.
திறன்கள் (Skills): எந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அதற்குத் தேவையான திறன்களைக் குறிப்பிடவும். அதாவது, விற்பனைப் பிரதிநிதி வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அங்கு உங்களின் எழுத்துத் திறன் குறிப்பிடத் தேவையில்லாத ஒன்று. மாறாக, உங்களின் கம்யூனிகேஷன் ஸ்கில் பற்றிக் குறிப்பிடலாம்.
புகைப்படம்: ஜாப் போர்ட்டல்களில் அப்லோடு செய்யும்போது மட்டுமே புகைப்படம் தேவைப்படும். `சி.வி’யை நிறுவனத்துக்கு அனுப்பும்போதோ, நேர்காணலுக்குச் செல்லும்போதோ `சி.வி’யில் புகைப்படம் இணைப்பதைத் தவிர்த்துவிடலாம். அவசியம் வேண்டும் என்றால், `சி.வி’யின் மேல் வலது மூலையில் சந்தனம், குங்குமம், விபூதி ஏதுமில்லாத, கோட் – சூட் என ஃபார்மல் உடையில் உள்ள புகைப்படத்தை இணைக்கலாம்.
கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
 ஒன்றுக்கு இரண்டு முறை ஸ்பெல்லிங் செக், கிராமர் செக் செய்யவும். இது மிகவும் அடிப்படையான விஷயம்.
 மார்க்கெட்டிங், சேல்ஸ், கஸ்டமர் சப்போர்ட் போன்ற வேலைகளுக்கு கிரியேட்டிவ் `சி.வி’-க்கள் பயன்படும். மற்ற வேலைகளுக்கு வழக்கமான டெம்ப்ளேட்களையே பின்பற்றவும். இணையத்தில் ஆயிரக்கணக்கான டெம்ப்ளேட்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை முன்மாதிரியாக வைத்து நீங்களே ஒன்று தயார் செய்யவும். `சி.வி’ உங்கள் கைவண்ணத்தில் இருப்பதே சிறப்பு.
 மூன்று பக்கங்களுக்கு மேல் மிகாமல் பார்த்துக்கொள்ளவும்.
 ஜாப் டிஸ்க்ரிப்ஷன்களுக்கு ஏற்ப உங்கள் திறமைகளை ஹைலைட் செய்ய வேண்டும்.
 எல்லா வேலைகளுக்கும் ஒரே `சி.வி’யை ஃபார்வேர்டு செய்யக்கூடாது.
 நிறுவனம் தங்களுக்குத் தேவையான தகுதிகள் உள்ள `சி.வி’யை, கீவேர்ட்ஸ் கொடுத்துத் தேடுவார்கள். அந்தத் தேடலுக்குத் தகுந்தவாறு `சி.வி’ அம்சங்களை அமைக்கவும்.
சி.வி ரெடி… இனி தயாராகவேண்டியது நீங்கள்தான். வாழ்த்துகள்!’’
********************************************நன்றி : அவள்விகடன் - 31.05.2016 

நேர்முகத்தேர்வு


நேர்முகத்தேர்வு - என்ன செய்ய வேண்டும்?

ரு நிறுவனம் தனக்கான ஊழியரைக் கண்டடையும் தேர்வுகளின் முக்கியமான கட்டம், நேர்முகத் தேர்வு. அதில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை பற்றி சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு அலுவலர் தீபா சுந்தரராமன்…
கவனம் செலுத்த வேண்டியவை..!
 நேர்முகத் தேர்வுக்குச் சொல்லும் நிறுவனம் குறித்தும், நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலை குறித்தும் நன்கு தெரிந்துகொண்டு செல்லவும்.

 தேவையான சான்றிதழ்கள், சி.வி அனைத்தையும் முதல் நாளே சரிபார்த்து எடுத்துவைக்கவும்.

 ஃபன்கி, கேஷுவல் ஆடைகள் தவிர்த்து, ஃபார்மல் ஆடையில் செல்லவும்.

 ஒருவரின் பெர்சனாலிட்டி குறித்து, அவர் அணிந்துள்ள காலணியில் இருந்தும் முடிவெடுக்கப்படும். எனவே, சுத்தம் செய்யப்பட்ட காலணி முக்கியம்.
 மொபைலை சைலன்ட் மோடில் வைக்க வும் அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடவும்.
 நேர்முகத் தேர்வு அறைக்குள் செல்லும் முன் அனுமதி கேட்டுச் செல்லவும்.
 உள்ளே சென்றவுடன், அங்குள்ள அலுவலர்களை `கிரீட்’ செய்யவும். இது மிகவும் முக்கியம்.
 அவர்கள் `அமருங்கள்’ என்று கூறும்வரை காத்திருக்கவும். அல்லது, ‘நான் அமரலாமா?’ என்று கேட்டுவிட்டு அமரவும்.
 கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால் சரியான பதிலைச் செல்லவும். தெரியவில்லை என்றால் அதை நேர்மையாக ஒப்புக்கொண்டு, ‘இதைப்பற்றி நான் நிச்சயம் தெரிந்துகொள்கிறேன்’ என்று அதையும் பாசிட்டிவாகச் சொல்லவும். மழுப்பலான, குழப்பமான பதில்கள் வேண்டாம்.
 அங்குள்ள அனைத்து அலுவலர்களிடமும் சாந்தமாக நடந்துகொள்ளவும். அதில் ஒருவருக்கு உங்களின் மேனரிஸம் பிடிக்கவில்லை என்றாலும் வேலை கிடைக்காமல் போகக்கூடும்.
 கேள்வி கேட்கும் அலுவலரின் கண்களை அவ்வப்போது பார்த்தபடி பேசுவது, உங்கள் உறுதியை வெளிப்படுத்தும்.
 நேர்முகத் தேர்வுக்குப் பிறகு அவர்கள் உங்களைப் பற்றித் தரும் பின்னூட்டங்களை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொள்ளவும்… நெகட்டிவாக இருந்தாலும் கூட! வாதிட வேண்டாம்.

 வெளியே வரும் முன், மறக்காமல் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவும்.
இதையெல்லாம் செய்யாதீங்க..!
 முதல் மற்றும் முக்கியமான விஷயம், குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு நிமிடம்கூட தாமதமாக வரக்கூடாது. 15 நிமிடங்களுக்கு முன்னரே அந்த இடத்தை அடைந்துவிட வேண்டும்.

 பேக், லேப்டாப் போன்ற உடைமைகளை கால்களுக்கு அருகிலோ, நேர்காணல் செய்பவரின் மேஜை மீதோ வைக்கக் கூடாது.
 கொட்டாவி விடுவது, சூயிங்கம் மெல்வது கூடாது.
 கால் மேல் கால்போட்டு அமர்வது, நன்றாக சாய்ந்து அமர்வது கூடாது. அமர்ந்திருக்கும் நாற்காலியை சுற்றுவது, ஆட்டுவது கூடாது.
 இயல்பில் வாயாடியாக இருந்தாலும் அங்கே தேவைக்கும் அதிகமாகப் பேசக் கூடாது. கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் சுற்றி வளைக்காமல் பதில் சொன்னால் போதும்.
 கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் பதில் சொல்லாமல், முழு வாக்கியங்களாகப் பேசவும்.
 சம்பளம் குறித்த கேள்விகளை நீங்களாகத் தொடங்கக் கூடாது.
 சொந்த வாழ்க்கை, குடும்பம் பற்றியெல்லாம் தேவையில்லாமல் பேசக்கூடாது.
 படித்த பள்ளி, கல்லூரி குறித்தோ, ஏற்கெனவே பணியாற்றிய நிறுவனம் குறித்தோ எதிர்மறையான கருத்துகள் சொல்லக் கூடாது.
 திமிர், அலட்சியம் போன்றவை உங்கள் பேச்சில் வெளிப்படுவதாக நேர்காணல் காணும் அலுவலர் நினைத்துவிடக் கூடாது.
 அவர்களாக கைகொடுக்கும் வரை காத்திருக்கவும். நீங்களாகவே கைநீட்டக் கூடாது.
 நேர்காணல் முடிந்த அடுத்த நாளே போனில், நேரில் என்று நீங்கள் தேர்வாகிவிட்டீர்களா என்பது பற்றி கேட்கக்கூடாது.

 நேர்முகத்தேர்வு என்பது, உங்கள் தகுதியை சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நிரூபிக்கும் ஒரே வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

தீபா சொன்னவற்றை குறித்துக்கொள்ளுங் கள், இன்டர்வியூவில் ஸ்கோர் செய்யுங்கள்!

 டெலிபோனிக் இன்டர்வியூ!
ப்போது பெரும்பாலான நிறுவனங்கள், தொலை பேசியிலேயே நேர்காணல்களை முடித்துவிடுகிறார்கள். அந்த டெலிபோனிக் இன்டர்வியூ, வீடியோ ரெஸ்யூம், வீடியோ இன்டர்வியூ என அடுத்தடுத்த வெர்ஷனுக்கு நகர்ந்துகொண்டே இருப்பதற்கேற்ப நாமும் மாற வேண்டியது சூழலின் அவசியம். ஒரு டெலிபோனிக் இன்டர்வியூவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே…

 டெலிபோனிக் இன்டர்வியூதானே என்ற அலட்சியம் இல்லாமல், நேர்முகத் தேர்வு போலவே தயாராகவும்.
 ஃபார்மல் உடையே அணிந்துகொள்ளுங்கள். அது உங்கள் பேச்சிலும் எதிரொலிக்கும்.
 சூழல் மிகவும் முக்கியம். உங்களைச் சுற்றி எந்த இடையூறும் இல்லாத அமைதியான இடமாக இருக்க வேண்டும்.
 சி.வி, சான்றிதழ்கள் என்று அனைத்தும் உங்கள் அருகில் இருக்கட்டும். அது சம்பந்தமாக ஏதாவது கேள்விகள் கேட்கப்படலாம்.
 நேர்காணலை ஆரம்பிக்கும்போது, ‘குட் மார்னிங்’, ‘ஹலோ’வைக்கூட தன்னம்பிக்கை வெளிப்படும்விதமாகச் சொல்லுங்கள். உங்கள் குரல் மட்டுமேதான் இங்கு உங்களின் பிரதிநிதி என்பதால், அதில் உங்களின் உணர்ச்சிகளை அளவோடும், அழகாகவும் வெளிப்படுத்த வேண்டியது முக்கியம்.
 போன் உங்கள் உதட்டில் இருந்து சிறிது இடைவெளி யில் இருக்கட்டும். சத்தமாகப் பேசி கடுப்பேற்றவும் வேண்டாம், தேவைக்கும் தணிந்த குரலில் பேசி அவர்கள் பொறுமையை சோதிக்கவும் வேண்டாம்.
 இன்டர்வியூ செய்பவர் ஒருவேளை வேகமாகவோ, மெதுவாகவோ பேசினால்கூட, நீங்களும் அதற்கேற்ப பேசாமல், நிதானமாகவே பேசவும்.
 குறுக்கே பேசாதீர்கள். அவர்கள் ஒரு விஷயத்தை கேட்டு முடிக்கும்வரை அல்லது சொல்லி முடிக்கும்வரை அமைதி காத்து, பின்னர் தொடருங்கள்.
 இன்டர்வியூவின் முடிவில் சொல்லும் ‘தேங்க்யூ’வரை உங்கள் குரலில் அந்த எனர்ஜி நீடித்திருக்க வேண்டும்.

 டெலிபோனிக் இன்டர்வியூவை ஒருமுறை ரிகர்சல் பார்த்துக்கொள்வது நலம்!

நன்றி : அவள்விகடன் - 31.05.2016