முன்பெல்லாம் கிரெடிட் கார்டு வைத்திருப்பது அந்தஸ்தின் அடையாளம். இப்போது கிரெடிட் கார்டு வாங்க யாராவது அகப்பட மாட்டார்களா? என்கிற ரீதியில் வங்கிகளே கூவிக் கூவி கடன் அட்டையை வழங்கத் தயாராக இருக்கின்றன.

செல்போன் வைத்திருப்பவர்களுக்கு வாரத்துக்கு ஒரு நாளாவது ஒரு முறையாவது கிரெடிட் கார்டுக்கான வலை வீசப்படுவது நிச்சயம். கிரெடிட் கார்டு வாங்கலாமா வேண்டாமா என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. இது அநாவசியம், தேவையை மீறியது, அது செலவுக்கே வழிவகுக்கும் என்போர் சிலர். கிரெடிட் கார்டை வாங்கிவிட்டு அதைக் கொண்டு கண்டதையும் வாங்கிக்குவித்து பின்னர் கடனைக் கட்ட முடியாமல் அவதிப்படும் கூட்டம் மறுபக்கம்.
எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு என்பது அத்துறை வல்லுநர்களின் அறிவுரையைக் கேட்ட பிறகு முடிவெடுப்பது சிறப்பாக இருக்கும் என்கிற ரீதியில் சில நிதி ஆலோசகர்களிடம் பேசியதிலிருந்து அவர்கள் தந்த ஆலோசனைகள்…
நவீன பொருளாதாரம் வழங்கும் எந்த வசதிகளையும் உடனடியாக புறக்கணிக்கவோ, அதைக் கொண்டாடவோ தேவையில்லை. கவனத்தோடு பயன்படுத்தலாம். தேவையில்லை என்றால் விட்டு விடலாம். அப்படித்தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதைப் பார்க்க வேண்டும்.
ஆனால் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்கிறோம் என்கிற எண்ணம் இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு மூலம் அதிக கடன் வாங்கிவிட்டு கட்ட முடியவில்லை என்றால் அதற்கு வட்டி, அபராதம், தாமதக் கட்டணம் என இன்னபிற வகைகளில் கூடுதல் பணத்தையும் இழக்க வேண்டும்.
எனவே நமது வருமானத்தை வழக்கம்போல திட்டமிட்டுகொண்டு, அதற்குள் கிரெடிட் கார்டு பயன்பாட்டையும் வைத்துக் கொண்டால் சிக்கல்கள் இல்லாமல் இருக்கலாம்.

கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி?

வட்டியில்லா கடன் காலம்
கிரெடிட் கார்டு கடனை திருப்பி செலுத்த ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிட்ட கால அவகாசம் தருகிறது. இந்த காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.
மினிமம் தொகை
மொத்த நிலுவைத் தொகையில் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்தவும் வாய்ப்பு உண்டு. மீதமுள்ள தொகையைக் கடனாகக் கருதி அதற்கு வட்டி விதிக்கப்படும். ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கு வட்டி வீதம் அதிகம் கணக்கிடப்படும்.
பணமாக எடுத்தல்
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுத்துக் கொள்ளவும் முடியும். இதற்கு பரிமாற்றக் கட்டணம் மற்றும் வட்டியும் அதிகம். ரூ.1,000 பணம் எடுத்தால் அதற்கு ரூ. 250 ரூபாய் வரை பரிமாற்றக் கட்ட ணமாக இருக்கும். மேலும் பணம் எடுத்த நாளிலிருந்து திரும்ப கட்டும் தேதிவரை வட்டி கணக்கிடப்படும். வட்டி விகிதம் 35 % முதல் 40% என்கிற அளவில் இருக்கும்.
இஎம்ஐ வசதி
கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை மாத தவணையாக திருப்பி செலுத்தும் வசதியும் உள்ளது. ஆனால் இதற்கான வட்டியும் அதிகம். உங்கள் மாத வருமானத்திலிருந்து தனிநபர் கடன் செலுத்துவதுபோல செலுத்த வேண்டும்.
கடன் அளவு
நமது மாத வருமானத்தைப் போல குறைந்த பட்சம் மூன்று மடங்கிலிருந்து கடன் கிடைக்கலாம். நபர்களின் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனங்கள் இதை முடிவு செய்யும். ஆனால் கார்டை அதிகமாக பயன்படுத்துகிறோம், வருமானத்தின் எல்லை தாண்டி செலவு செய்கிறோம் என்று யோசித்தால் கிரெடிட் அளவைக் குறைக்கும்படி செய்து கொள்ளலாம். அல்லது திரும்ப அளித்து விடலாம்.
ஆஃபர்கள்
பண்டிகை காலங்களில் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கினால் 5 % முதல் 10% வரை கேஷ் பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதில் தெளிவு வேண்டும். பண்டிகை கால போனஸ் கிடைத்து அதை பில்லிங் தேதியில் கட்டிவிட முடியும் என்றால் துணிந்து வாங்கலாம். ஆனால் போனசை செலவு செய்துவிட்டு பண்டிகை ஆஃபர்களில் அள்ளினால் சிக்கல்தான்
கேஷ் பாயிண்ட்ஸ்
கிரெடிட் கார்டை பயன்படுத்தும் போது விருது புள்ளிகள் கிடைக்கும். இதற்கு சில சலுகைகள் உண்டு. ரூ. 100 ரூபாய்க்கு பயன்படுத்தினால் ஒரு புள்ளி என்கிற வீதத்தில் இது இருக்கலாம். அதிகப் புள்ளிகள் சேர்ந்தால், திரும்ப பொருள் வாங்கும் போது விலை குறைப்பு அல்லது சலுகை கிடைக்கும்.
சரியாகக் கையாண்டால் இந்த புள்ளிகள் மூலமும் பலன் பெறலாம். முந்தைய கடன் தொகையில் நிலுவை இருந்தால் மீண்டும் பொருள் வாங்கும் போது சலுகை கிடைக்காது. எனவே ஒரு கடனை முழுமையாக அடைத்துவிட்டு சலுகை பெறவும்.
அனுமதிகளில் கவனம்
தேவை என்ன என்பதைப் பொறுத்து கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்கு ஓகே சொல்லவும். கிரெடிட் கார்டு வாங்கும்போது கூடவே சில சலுகை கொடுக்கிறோம் என்று நிறுவனங்கள் சொல்லலாம்.
ஆனால் அவசியமிருந்தால் மட்டுமே உடன்படவும். ஒரு வருட மருத்துவக் காப்பீடுக்கு அனுமதி கொடுத்திருப்போம். ஆனால் அடுத்த ஆண்டும் உங்களுக்கு அறிவிக்காமலேயே பணத்தை பிடித்திருப்பார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் பொருளாதார நிலைமை குறித்து கணக்கில் எடுத்து கொள்ள மாட்டார்கள். எனவே ஆஃப்ஷன்களில் தெளிவு வேண்டும்.
திரும்ப ஒப்படைப்பது
கிரெடிட் கார்டை இனி பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து விட்டால் முறையாக ஒப்படைத்து நோ டியூ சான்றிதழ் வாங்க வேண்டும். கார்டை ஒப்படைக்காமல், நான் பயன்படுத்தவே இல்லையே என்று சொல்ல முடியாது. பராமரிப்பு கட்டணம், ஆண்டுக்கட்டணம் கணக்கிடுவார்கள். அதைக் கட்டவில்லை என்றால் அதற்கும் வட்டி கணக்கிடப்படும்.
சிபில் எச்சரிக்கை
நவீன வசதிகள் நமது வாழ்க்கைத் தரத்தை மாற்றலாம், ஆனால் அதை கையாளுவதில் சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் வேண்டும். கடனைக் கட்டாமல் சிக்கல் ஏற்படுத்தினால் நமது பெயரை சிபிலில் சேர்த்து விடுவார்கள். அது பிற வகையில் நமது கடன் வாங்கும் மதிப்பைக் குறைத்து விடும். தனிநபர் கடன், வீட்டுக்கடன் வாங்கத் திட்டமிடும்போது சிக்கலாகிவிடும்.
வருமானத்தையே செலவு செய்கிறோம்
கிரெடிட் கார்டு பயன்படுத்து பவர்கள் நமது வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் வருமானத்தை முன்கூட்டியே செலவு செய்வதா அல்லது கையில் வைத்துக் கொண்டு செலவு செய்வதா என்பதை முடிவு செய்து கொண்டால் கிரெடிட் கார்டு நல்லதா கெட்டதா என்பது விளங்கிவிடும்.

கிரெடிட் கார்டு - 10 டிப்ஸ்கள்

1.பில்லிங் காலத்துக்குள் வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும்.
2.ஆன்லைனில் பொருள்கள் வாங்கினால் விர்ச்சுவல் கீபோர்டு மூலம் பாஸ்வேர்டு கொடுப்பது பாதுகாப்பு.
3.கிரெடிட் கார்டிலிருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும்.
4.கேஷ் ஆஃபர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
5.ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டு இருந்தால், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு என பரிமாற்றத்தை தவிர்க்கவும்.
6.கிரெடிட் கார்டு கடனை அடைக்க வெளியில் கடன் வாங்க வேண்டும் என்றால் நிதி நிர்வாகத்தில் நீங்கள் வீக்.
7.பில்லிங் தேதியை தவற விட்டால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது சறுக்கலில் முடியலாம்.
8.குறிப்பிட்ட தேதிக்கு அடுத்த நாள் பணத்தைக் கட்டினாலும் அபராதக் கட்டணம், தாமதக் கட்டணம், அதற்கு வட்டி என கூடுதலாக கட்ட வேண்டும்.
9.கிரெடிட் கார்டு கடனை கட்டவில்லை எனில் தனிநபர் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன் வாங்குவது சிக்கலாகும்.
10.கிரெடிட் கார்டு தொலைந்துவிட்டால் கிரெடிட்கார்டு வழங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து அதன் செயல்பாடுகளை முடக்கிவிடவும்.
நீரை. மகேந்திரன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் -22.12.2014