disalbe Right click

Tuesday, July 5, 2016

குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு-155,

குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு-155,
சட்டம் வகுத்தவர்கள் நமது நாட்டில் நடைபெறும் குற்றங்களை இரண்டு பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர்.
1) கைது செய்வதற்குரிய குற்றம். (Cognizable offence)
2) கைது செய்ய முடியாத குற்றம். (Non cognizable offence)
கைது செய்தற்குரிய குற்றங்களை செய்தவர்கள் பற்றிய புகாரை நாம், காவல்துறையினருக்கு குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு - 154 மூலம் தெரிவிக்க வேண்டும். நாம் எழுதும் புகாரின் தலைப்பிலேயே இதனை தெரிவித்தால் புகாரைப்பற்றி எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்ள காவல்துறை அலுவலருக்கு உதவியாக இருக்கும்.
கைது செய்ய முடியாத குற்றங்களைப் பற்றி புகார் செய்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு - 155 பயன்படுத்துகிறார்கள்.
குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, (Cr. P.C) பிரிவு : 154
*** ஒரு காவல்நிலைய எல்லைக்குள் கைது செய்ய முடியாத குற்றம் ஒன்று நடைபெற்று உள்ளதாக ஒருவர் புகார் அளிக்கும் போது, அதற்கென்று காவல் நிலையத்தில் வைத்து பராமரித்து வருகின்ற குறிப்பேட்டில் அதனை பதிவு செய்து அந்த வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். புகார் அளித்தவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
*** கைது செய்ய முடியாத வழக்கு ஒன்றை காவல் நிலைய அலுவலராலோ அல்லது காவல்நிலைய அதிகாரியாலோ தன்னிச்சையாக விசாரணை செய்வதற்கும், மேல்விசாரணைக்கு அனுப்புவதற்கும் முடியாது.
*** அதே நேரத்தில் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால், காவல் நிலைய அலுவலர்/அதிகாரி அந்த வழக்கை விசாரணை செய்யலாம்.
*** நீதிமன்ற உத்தரவு பெற்ற பிறகு காவல்நிலைய அலுவலர்/அதிகாரி அந்த வழக்கில், ”கைது செய்வதற்குரிய வழக்கில் உள்ள அதிகாரங்களில்கைது செய்வதைத் தவிர அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருப்பார்.
குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, (Cr. P.C) பிரிவு : 154 (4)
*** ஒரு வழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட குற்றங்கள் செய்யப்பட்டு இருந்து அதில் ஏதாவது ஒன்று கைது செய்யக்கூடிய குற்றமாக இருந்தால், அந்த வழக்கு கைது செய்யப்படக் கூடிய வழக்காக எடுத்துக் கொள்ளப்படும்.

குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு-160

குற்ற விசாரணைச் சட்டம் பிரிவு-160, என்ன செய்ய வேண்டும்?
அழைத்து விசாரணை செய்வதற்குள்ள அதிகாரம்
ஏதாவது ஒரு காரணத்திற்காக நம்மை அழைத்து விசாரிப்பதற்கு காவல் நிலைய அலுவலர் அல்லது அதிகாரிக்கு கொடுக்கப் பட்டுள்ள அதிகாரம் என்ன? நமக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் என்ன?  என்பதைப் பற்றி இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்நிலையத்தில் யாரோ ஒருவரால் கொடுக்கப்பட்ட புகார் மூலமாகவோ, அல்லது ஒரு வழக்கு நிகழ்வு மற்றும் சூழ்நிலைகளுடன் தொடர்பு உள்ளவர் போல் நாம் இருந்து, காவல்நிலைய அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நாம் குடியிருந்தால், நம்மை தன்முன் ஆஜராகுமாறு அந்த வழக்கு சம்பந்தமாக புலனாய்வு செய்து வருகின்ற காவல் நிலைய அலுவலர் அல்லது அதிகாரி எழுத்து முலமாக நமக்கு உத்தரவிடலாம்.
xxxxx என்பவர் xxxxx அன்று கொடுத்த புகாரின்படி தங்களிடம் (xxxxx வழக்கு சம்பந்தமாக தங்களை) விசாரணை செய்ய வேண்டியதிருப்பதால் தாங்கள் xxxxx அன்று காலை (அல்லது மாலை) xxxxx மணிக்கு xxxxx காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த உத்தரவு எழுத்து மூலமாக இருக்க வேண்டும்.
அதில் நிலைய முத்திரையுடன் அதிகாரியின் கையெழுத்தும் இருக்கவேண்டும்.
அழைக்கப்பட்ட எவரும் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
அந்த வழக்குக்கு உரிய ஆவணங்கள் ஏதேனும் நம்மிடமிருந்தாலோ அல்லது இருக்கிறது என்று அவர்கள் நினைத்தாலோ, அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த காவல்துறை அதிகாரி விரும்பினால் அதனை கொண்டுவரும்படியும் அதில் குறிப்பிட வேண்டும்.

அந்த புகார் அல்லது வழக்கு சம்பந்தமாக எதனையும் மறைக்காமல் நமக்கு தெரிந்த அனைத்தையும் அவரிடம் தெரிவிப்பது மற்றும் ஆதாரங்கள் இருந்தால் அவற்றை ஒப்படைப்பது நமது கடமையாகும்.
ஆனால், ஒரு பெண்ணையோ அல்லது பதினைந்து வயதுக்குட்பட்ட ஒரு சிறுவனையோ அந்த புகார் அல்லது வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்வதாக இருந்தால் அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு சென்றுதான் ஒரு காவல் அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.
ஒருவேளை நாம் அந்த காவல்நிலைய அதிகார எல்லைக்குள் வசிக்காதவராக இருந்து நம்மை அவர்கள் விசாரணைக்கு அழைத்தால், நமக்கு ஏற்படுகின்ற நியாயமான போக்குவரத்து செலவை இந்தப் பிரிவின் கீழ் காவல்துறையினர் கொடுக்க வேண்டும்.
ஆனால், இந்தப்பிரிவில் உள்ளது போல எந்த காவல்நிலைய அலுவலரும் 100% நடந்து கொள்வதில்லை. அதனை அரசும் ஏனோ கண்டுகொள்ளவதில்லை.
பொதுமக்களும் சட்டம் தெரியாததாலும், பயத்தாலும் இதனை வற்புறுத்துவதில்லை.
****************************************  அன்புடன் செல்வம் பழனிச்சாமி 

பாஸ்போர்ட் எடுக்க பயனுள்ள 12 யோசனைகள்


பாஸ்போர்ட் எடுக்க பயனுள்ள 12 யோசனைகள்

வாழ்க்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள வேண்டிய விஷயங்களை அதிக சிரமமின்றி கடக்க உதவும் `ஒரு டஜன் யோசனைகள்’ பகுதியில், இந்தமுறை பாஸ்போர்ட் வாங்குவதற்கான வழிமுறைகள்! விண்ணப்பம், கட்டணம், புதுப்பித்தல், காத்திருப்பு நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இதோ...

விண்ணப்பம்

புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிப் பவர்கள்
http://www.passportindia.gov.in
என்ற ஆன்லைன் முகவரி மூலமாகவே விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதை உறுதிசெய்யும் விதமாக உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள பாஸ்போர்ட் இ-சேவை மையத்தின் முகவரியும், உங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தேதி, நேரமும் உங்களுக்கு பதிலாக கிடைக்கும். பிறகு, நீங்கள் வாங்கும் பாஸ்போர்ட்டுக்கு உரிய கட்டணத்தை இணையதளம் மூலமாகவோ அல்லது எஸ்பிஐ (SBI) வங்கி சலான் மூலமாகவோ செலுத்தி, உரிய நேரம் மற்றும் தேதியில் இ-சேவை மையத்துக்குச் செல்லவும்.

இணைக்க வேண்டியவை!

பிறப்புச் சான்றிதழ் (ஜனவரி 26, 1989-க்குப் பிறகு பிறந்தவர்கள், வருவாய்த்துறை அல்லது பதிவுத்துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களை மட்டுமே ஆதாரமாகக் காட்ட முடியும்), இருப்பிடச் சான்றிதழ், கல்வித்தகுதிக்கான சான்றிதழ், பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் செலுத்திய ரசீது. மேற்கண்ட ஆவணங்களின் நகல்களை விண்ணப்பத்தாரர் சுயகையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும். இந்த நகல்களின் அசல் ஆவணங்களை, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தன்று கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும்.

வெளியூரிலும் விண்ணப்பிக்கலாம்

வெளியூரில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதியிலேயேகூட பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க லாம். அவர்கள் தங்கிப் படிக்கும் இடத்தின் முகவரியை ‘தற்போதைய முகவரி’யாக அளித்து, அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

காத்திருப்பு நேரம்

பொதுவாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து விண்ணப்பம் காவல்துறைக்கு அனுப்பப்படும். நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பகுதியில்தான் வசிக்கிறீர்களா, ஏதேனும் குற்ற வழக்குகள் உங்கள் பெயரில் பதிவாகியுள்ளனவா என உங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து (5 முதல் 10 நாட்களில்) விசாரித்து, நீங்கள் குற்றமற்றவர் என காவல்துறை அறிக்கை பெற்ற பிறகே, பாஸ்போர்ட் வழங்கப்படும். எனவே, நார்மல் பாஸ்போர்ட் வாங்க குறைந்தது 25 நாட்கள் ஆகும்.

‘நான் உடனே வெளிநாடு செல்ல வேண்டும்’ என்பவர்கள் தட்கல் முறையில் 3 முதல் 5 நாட்களில் பாஸ்போர்ட் பெறமுடியும். ஆனால், காவல் துறையினரின் சரிபார்ப்புக்கு முன்னரே பாஸ்போர்ட்டை உங்கள் கையில் கொடுப்பதால் மூன்று வகையான இருப்பிடச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கட்டணமும் கொஞ்சம் அதிகம். போலீஸ் விசாரணைக்கு முன்னரே பாஸ்போர்ட்டை வழங்கினாலும், விசாரணையில் உங்கள் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தால், உடனே பாஸ்போர்ட் முடக்கப்படும்.

கட்டணம்

நார்மல் பாஸ்போர்ட்

(36 பக்கங்கள் கொண்டது) - 1,500 ரூபாய்.

60 பக்கங்கள் கொண்ட ஜம்போ பாஸ்போர்ட் (அடிக்கடி வெளிநாடு செல்கிறவர்கள் பயன்படுத்துவது) - 500 ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டும். தட்கல் - 3,500 ரூபாய்

மைனர் - 1,000 ரூபாய்

டேமேஜ் / லாஸ்ட் - 3,000 ரூபாய்

புதுப்பித்தல்

ஒருமுறை எடுக்கும் பாஸ்போர்ட் 10 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும். தற்போது பாஸ்போர்ட்டில் வருடங்களை நீட்டித்து ‘ரெனியூவல்’ செய்யப்படுவதில்லை. எனவே, பாஸ்போர்ட் காலாவதியானால் மீண்டும் புது பாஸ்போர்ட்தான் பெற வேண்டும். காலாவதி தேதிக்கு இன்னும் ஓராண்டு இருக்கும்போது தொடங்கி, காலாவதி தேதிக்கு பின் மூன்று ஆண்டுகள் வரை விண்ணப்பிக்கலாம். பழைய பாஸ்போர்ட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். விலாசம் மாறியிருந்தால் அதற்கான சான்றிதழ்களுடன் புதுப்பிக்கலாம். பாஸ்போர்ட் புதுப்பிக்க
http://www.passportindia.gov.in
என்ற இணைய முகவரியில், ரீ-இஷ்யூக்கான காரணத்தை க்ளிக் செய்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இரண்டாவது முறை விண்ணப்பித்தாலும் புதிதாக விண்ணப்பிப்பவர் போலவே பாஸ்போர்ட் சேவை மையங்களை அணுகி நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். வெளிநாட்டில் தங்கி இருக்கும்போது பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கு

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் எடுக்கும்போது, அவர்களின் பெற்றோருக்கு பாஸ்போர்ட் இருந்தால் காவல்துறை அறிக்கை தேவைப்படாது.

பெயர் மாற்றம்

பாஸ்போர்ட்டில் பெயரில் ஏதேனும் தவறுகள் இருந்தால், பெயர் சரியாக இருக்கும் ஆவணங்களை மீண்டும் சமர்ப்பித்து, பாஸ்போர்ட்டை ரீ-இஷ்யூ செய்துகொள்ளலாம். ‘மேஜர் நேம் சேஞ்ச்’ எனில், மாற்றப்பட்ட பெயரை, தங்களுடைய நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி உள்ள இடங்களில் பிரசுரமாகும் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்து, அந்த செய்தித்தாளோடு மற்ற தேவையான ஆவணங்களை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

திருமணத்துக்குப் பிறகு...

கணவரின் பெயரை தங்கள் பெயருடன் இணைக்க விரும்பும் பெண்கள் நவம்பர் 24, 2009-க்குப் பிறகு திருமணமாகி இருந்தால் திருமணச் சான்றிதழை இணைத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் திருமணச் சான்று அல்லது ஜாயின்ட் நோட்டரி அஃபிடவிட் (Joint Notary Affidavit) இணைக்க வேண்டும்.

பாஸ்போர்ட் தொலைந்தால்...

உடனே காவல் நிலையத்தில் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் உங்களுடைய பாஸ்போர்ட்டை பயன்படுத் தாதவாறு அது முடக்கப்படும். உங்களுடைய பாஸ்போர்ட் கிடைக்காத பட்சத்தில், அவர்கள் ‘Non Traceable’ சான்றிதழ் தருவார்கள். பிறகு பாஸ்போர்ட் ரீ-இஷ்யூவுக்காக விண்ணப்பித்து, தொலைந்த பாஸ்போர்ட்டின் நகல் (இருந்தால்), ‘அனக்சர் எல்’

என்ற உறுதிமொழிப் பத்திரம்,

நோட்டரி பப்ளிக் ஒப்புதல் இவற்றை எல்லாம் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏமாற வேண்டாம்!

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தெரியாதவர்கள், ஏஜென்டுகளை நாடும்போது கவனம் தேவை. அவர்கள் இஷ்டம்போல பணம் வசூலிக்கக்கூடும். உங்கள் பகுதியில் (வட்டாட்சியர் அலுவலகத்தில்) உள்ள இ-சேவை மையத்தை அணுகினால், உரிய செலவில் பாஸ்போர்ட் பெறமுடியும்.

மேலதிக தகவல்கள்

பாஸ்போர்ட் தொடர்பான சந்தேகங்களை மேலும் தெளிவுபடுத்திக்கொள்ள
www.passportindia.gov.in
என்ற இணையதள முகவரியையோ அல்லது 1800-258-1800 என்ற டோல்ஃப்ரீ எண்ணையோ தொடர்புகொள்ளுங்கள்.

சு.சூர்யா கோமதி

நன்றி : அவள்விகடன் - 01.12.2015

Saturday, July 2, 2016

RTIன் கீழ் ரிசர்வ் வங்கியில் விண்ணப்பிக்க


RTIன் கீழ் ரிசர்வ் வங்கியில் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

இந்திய ரிசர்வ் வங்கிக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இச்சட்டத்தின் கீழ் இந்தியக் குடிமக்கள் எழுத்து மூலமாக எத்தகவல்கள் அவர்களுக்குத் தேவையோ, அதனைத் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். 

மனுதாரரை தொடர்பு கொள்ள ஏதுவான தகவல்கள் (அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் நகலனுப்பி எண் (பேக்ஸ் எண்), மின்னஞ்சல் முகவரி) குறிப்பிடப்படவேண்டும். விவரங்கள் தேவைப்பட்டால் அவர்களைத் தொடர்பு கொள்ள வசதியாக இது இருக்கும். 

இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே தகவல்கள் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படுமாதலால், குடியுரிமைச் சான்றையும் விண்ணப்பத்துடன் அளிக்க வேண்டும். ஒரு இந்தியக் குடிமகன் ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவும் https://rtionline.gov.in/ என்ற லிங்க் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பப் பணம் செலுத்தி மனுவை அனுப்பலாம். உடனே அவருக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும். அதன் மூலமாகவே மனுதாரர் தனது மனுவின் நிலையை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.

மனுவை அனுப்புதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 மற்றும் மத்திய அரசின் தகவல் அறியும் உரிமை விதிகள் 2012-ல் குறிப்பிட்டுள்ளபடி, சட்டப்பிரிவு 6(i)-ன்கீழ் தகவல் பெறுவதற்கான் விண்ணப்பங்களுடன் ரூ.10/- ரொக்கம் செலுத்தியதற்கான ரசீது/ கேட்புவரைவோலை/வங்கிக் காசோலை (சம்பந்தப்பட்ட கணக்கு அலுவலர் பெயரில்) இணைக்கப்பட வேண்டும்.

உங்கள் மனுவுடன் மனுக்கட்டணம் ரூ 10/- க்கான கேட்பு வரைவோலையாகவோ அல்லது வங்கிக் காசோலையாகவோ ரிசர்வ் வங்கியின் பெயருக்கு அனுப்பவும். கட்டணம் பணமாகவும் மனுவுடன் செலுத்தப்படலாம். 

மனுக்களை நகலிறக்கி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். ஒரு இந்தியக் குடிமகன் ஆன்லைன் போர்ட்டல் மூலமாகவும் https://rtionline.gov.in/ என்ற லிங்க் மூலமாக ஆன்லைனிலேயே விண்ணப்பப் பணம் செலுத்தி மனுவை அனுப்பலாம். உடனே அவருக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும். அதன் மூலமாகவே மனுதாரர் தனது மனுவின் நிலையை அவ்வப்போது தெரிந்துகொள்ளலாம்.

உங்களின் கோரிக்கையைத் தபால் மூலமாகவோ நேரிலோ தேவைப்படும் தகவல் அறியும் உரிமைக் கட்டணத்தைக் குறிப்பிடப்பட்ட சரியான முறையில் செலுத்தி, 

மத்திய பொதுத் தகவல் அதிகாரி, 
இந்திய ரிசர்வ் வங்கி, 
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு, 
அமர் கட்டடம் முதல் தள்ம், 
சர் P.M. ரோடு, 
மும்பை-1 

என்ற முகவரிக்கு அனுப்பலாம். ஆன்லைன் மூலம் https://rtionline.gov.in/ என்ற இணைப்பை அணுகி, கோரிக்கையை ஆன்லைன் மூலமாகவே,கட்டணப் பணத்தையும் செலுத்தி அனுப்பலாம். 

இந்திய ரிசர்வ் வங்கியில் நவம்பர் 16, 2009க்குப் பிறகு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் பணி என்பது மைய அலுவலகத்திலிருந்து பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, மைய அலுவலகத்தின் பல்வேறு துறைகளின் தலைமைப் பொது மேலாளர்கள் / ஆலோசகர்கள் / பொதுமேலாளர்கள் (பொறுப்பு) மத்திய பொதுத் தகவல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாதபட்சத்தில் அந்தந்த துறைகளின் இதர தலைமைப் பொது மேலாளர்கள் / பொதுமேலாளர்கள் பொது தகவல் அதிகாரிகளாக செயல்படுவார்கள். செயல் இயக்குநர், மேல்முறையீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உரிய விண்ணப்பம் உரிய கட்டணத்தோடு கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அவர் கேட்ட தகவல்களைக்கொடுக்க முடியுமா முடியாதா என்பதை ரிசர்வ் வங்கி அவருக்குத் தெரியப்படுத்தி விடும்.

தகவல் கிடைக்கப் பணம் தரவேண்டுமா ?

ஒருபக்கத்துக்கு (A3 or A4) (அச்சு அல்லது நகல்) ரூ.2/-.

பெரிய அளவு காகிதமெனில் அதற்குள்ள விலை, மாதிரிகள் ஏதேனும் அனுப்பினால் அவைகளுக்குரிய விலை, ஆவணங்களை ஆய்வு செய்ய : முதல் ஒரு மணி நேரத்திற்குக் கட்டணம் ஏதுமில்லை, அதற்கு அதிகமனால் குறைந்த அளவு, ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ரூ.5/- கட்டணம் விதிக்க வேண்டும்

சட்டப்பிரிவு 7(5) இன் கீழ் தகவல் அளிக்க வேண்டியிருந்தால் -

ஒரு தட்டு அல்லது குறுந்தட்டுக்கு ரூ.50/-
அச்சடித்த வெளியீடுகளுக்கு அதற்குரிய விலை அல்லது நகலெடுத்தால் பக்கத்துக்கு ரூ.2/-

எப்பொழுது செலுத்தவேண்டும்?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 7 (i) இன் கீழ், விண்ணப்பமும் அதற்குரிய கட்டணமும் கிடைத்த 30 தினங்களுக்குள், ரிசர்வ் வங்கி, கேட்ட தகவல்கள் அளிக்கப்படுமாயின் அதற்குரிய கட்டணங்களையும் கூடவே அறிவிக்கும்.

தகவல் கிடைப்பது எப்பொழுது ?

ரிசர்வ் வங்கி அறிவித்த கட்டணம் செலுத்தப்பட்டவுடன் நீங்கள் கேட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

 தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005

இந்திய அரசு 2005 ஆம் வருடத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றியுள்ளது (http://www.persmin.nic.in). 2005 அக்டோபர் 12 ஆம் தேதியிலிருந்து இது அமலுக்கு வருகிறது. பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் மறைவேதும் இல்லாமல், பொதுமக்களுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவும், அந்த நிறுவனங்களின் செயல்பாட்டுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொறுப்பேற்க வைக்கவும், பொதுமக்கள் அந்த நிறுவனங்களின் செயல்பாட்டினை அறிந்து கொள்ள வழிவகை செய்யும் சட்டம் தான் இச்சட்டம். இச்சட்டத்தின் பிரிவுகள் 8,9 இன் கீழ் சில வகையான தகவல்கள் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. தலைமைப் பொதுத்தகவல் அலுவலர் ஒருவரையும் நியமிக்க இச்சட்டம் வழிவகுக்கிறது.

இச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கியின் பொறுப்புகள்

இச்சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி பொது அலுவலகமாகக் குறிக்கப்படுகிறது. ஆகவே பொதுமக்களுக்குத் தகவல்கள் அளிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும்.

வெளிப்படைத்தன்மை அதிகாரியின் பெயர் மற்றும் முகவரி

தலைமைப் பொது மேலாளர் – பொறுப்பு
மனித வள மேலாண்மைதுறை 
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம் (20வது தளம்)
சாஹித் பகத் சிங் மார்க்-போர்ட்
மும்மை – 400 001
தொலைபேசி எண் 22610301

பிரிவு 4(1)(b) சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட வேண்டிய தகவல்கள்

(i) அமைப்பு / நிறுவனத்தின் விவரங்கள், பணிகள், கடமைகள்

(ii) அதிகாரிகள், அலுவலர்களது பணிகளும் அதிகாரங்களும்

(iii) மேற்பார்வையிடுதல், பொறுப்பேற்பது உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் விதம் பற்றிய நடைமுறைகள்

(iv) தனது பணிகளைச்செய்ய வங்கியின் வழிமுறைகள்

(v) வங்கி வைத்திருக்கும் / கையாளும் விதிகள், ஒழுங்குமுறைகள், அறிவுரைகள், அறிவுரைகளின் தொகுப்புகள், ஏடுகள் – அதிகாரிகளும் அலுவலர்களும் தங்கள் பணிகளைச்செய்யப் பயன்படுத்தும் ஏடுகள்

(vi) ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆவண வகைகளின் பட்டியல்

(vii) பொதுமக்கள் / அவர்கள் பிரதிநிதிகளைக் கலந்து முடிவுகள் எடுக்க / அமலாக்க ஏதேனும் திட்டம்/பழக்கம்

(viii) அறிவுரைக்காக குழுமம், குழு – 2 அல்லது அதற்கு மேற்பட்டதாக கொண்ட அமைப்பு – இந்த அமைப்புகளின் கூட்டம் பொது மக்களுக்குத் திறந்து விடப்படுகிறதா அல்லது கூட்டத்தில் நடப்பவை மக்களுக்குத் தெரியப்படுத்தப்படுகிறதா

(ix) அதிகாரி / அலுவலர் பெயர் முகவரி கொண்ட தொகுப்பு

(x) மாதச்சம்பளம் / சலுகைகள்

(xi) திட்டங்கள் / பட்ஜெட்டுகள் / உத்தேச செலவுகள்

(xii) பொருந்தாதது

(xiii) சலுகைகள் பெறுவோர் விவரம் அளிக்கப்பட்ட அனுமதி அல்லது அங்கீகாரம்

(xiv) மின்னணு முறையில் கொடுக்கப்பட்ட தகவல்களின் விவரங்கள்

(xv) தகவல் பெற குடிமக்களுக்கு உள்ள வசதிகள், பொது உபயோகத்துக்கான நூலகம், படிப்பறைகளின் வேலை நேரங்கள்

(xvi) பொதுத் தகவல் அதிகாரியின் பெயர், பதவி மற்றும் முகவரி

 கோரிக்கையை எங்கு அனுப்ப வேண்டும்

உங்களின் கோரிக்கையைத் தபால் மூலமாகவோ நேரிலோ தேவைப்படும் தகவல் அறியும் உரிமைக் கட்டணத்தைக் குறிப்பிடப்பட்ட சரியான முறையில் செலுத்தி, 

மத்திய பொதுத் தகவல் அதிகாரி, 
இந்திய ரிசர்வ் வங்கி, 
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு, 
அமர் கட்டடம் முதல் தள்ம், 
சர் P.M. ரோடு, 
மும்பை-1 

என்ற முகவரிக்கு அனுப்பலாம். 

ஆன்லைன் மூலம் https://rtionline.gov.in/ என்ற இணைப்பை அணுகி, கோரிக்கையை ஆன்லைன் மூலமாகவே,கட்டணப் பணத்தையும் செலுத்தி அனுப்பலாம். கோரிக்கையை அனுப்பும்போது, விண்ணப்பதாரருக்கு ஒரு பதிவு எண் தரப்படும். அதைக் கொணடு அவர் தனது விண்ணப்பத்தின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளமுடியும்.

மத்திய பொதுத் தகவல் அதிகாரி / மாற்று மத்திய பொதுத் தகவல் அதிகாரி, மேல்முறையீட்டு அதிகாரி

இந்திய ரிசர்வ் வங்கியில் நவம்பர் 16, 2009க்குப் பிறகு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் பணி என்பது மைய அலுவலகத்திலிருந்து பரவலாக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, மைய அலுவலகத்தின் பல்வேறு துறைகளின் தலைமைப் பொது மேலாளர்கள் / ஆலோசகர்கள் / பொதுமேலாளர்கள் (பொறுப்பு) மத்திய பொதுத் தகவல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இல்லாதபட்சத்தில் அந்தந்த துறைகளின் இதர தலைமைப் பொது மேலாளர்கள் / பொதுமேலாளர்கள் பொது தகவல் அதிகாரிகளாக செயல்படுவார்கள். செயல் இயக்குநர், மேல்முறையீட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் விண்ணப்பிக்க 

துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) 
இந்திய ரிசர்வ் வங்கி
மனிதவள மேலாண்மைத் துறை
16, ராஜாஜி சாலை
சென்னை - 600 001 044-25360823
044-25399203
Fax: 044-23565220

தகவல் அளிக்க ஆகும் காலம்

உரிய விண்ணப்பம் உரிய கட்டணத்தோடு கிடைத்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அவர் கேட்ட தகவல்களைக்கொடுக்க முடியுமா முடியாதா என்பதை ரிசர்வ் வங்கி அவருக்குத் தெரியப்படுத்தி விடும்.

சட்டப்பிரிவு 7(5) இன் கீழ் தகவல் அளிக்க 

ஒரு தட்டு அல்லது குறுந்தட்டுக்கு ரூ.50/-

அச்சடித்த வெளியீடுகளுக்கு அதற்குரிய விலை 
அல்லது நகலெடுத்தால் பக்கத்துக்கு ரூ.2/-

எப்பொழுது செலுத்தவேண்டும்?

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 7 (i) இன் கீழ், விண்ணப்பமும் அதற்குரிய கட்டணமும் கிடைத்த 30 தினங்களுக்குள், ரிசர்வ் வங்கி, கேட்ட தகவல்கள் அளிக்கப்படுமாயின் அதற்குரிய கட்டணங்களையும் கூடவே அறிவிக்கும்.

தகவல் கிடைப்பது எப்பொழுது ?

ரிசர்வ் வங்கி அறிவித்த கட்டணம் செலுத்தப்பட்டவுடன் நீங்கள் கேட்ட தகவல்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

கேட்ட தகவலை ரிசர்வ் வங்கி தர மறுக்கலாமா ?

தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவு 8, 9 இன் கீழ், சில தகவல்கள் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதிக்கும் தகவல்கள்; பாதுகாப்பு, முக்கியத்துவம் வாய்ந்த, பொருளாதார, அறிவியல் சம்பந்தப்பட்ட நாட்டின் தகவல்கள்; அன்னிய நாடுகளுடனான உறவு; குற்றமாகக் கருதப்படுவதற்கு இட்டுச்செல்லும் தகவல்கள்

நீதிமன்றங்கள், நடுவர் மன்றங்கள் போன்றவைகள் தடைசெய்த தகவல்கள்; நீதிமன்ற அவதூறுக்கு இட்டுச்செல்லும் தகவல்கள்

பாராளுமன்ற, சட்டமன்ற தனி உரிமைகளை மீறும் செயலுக்கு இட்டுச்செல்லும் தகவல்கள்

வணிக நம்பிக்கை, வியாபார ரகசியங்கள், அறிவுச்சொத்துகள் சம்பந்தப்பட்ட தகவல்கள்; முன்றாவது நபரின் போட்டியிடும் தன்மையைப்பாதிக்கும் தகவல்கள்; பொதுவான மக்கள் நம்பிக்கைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் தகவல்கள்

அந்நிய அரசுகளிடமிருந்து வரும் ரகசியத்தகவல்கள், பிறரது உயிரையும், உடமையையும் பாதிக்கும் தகவல்கள்; தகவல் தரும் நிறுவனங்களைப் பாதிக்கும் தகவல்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அல்லது சட்டத்தை அமல் படுத்துபவர்களை பாதிக்கும் தகவல்கள்

ஏற்கனவே விசாரணை, ஆய்விலிருக்கும் விவரங்களைப் பற்றிய தகவல்கள், அமலில் உள்ள விசாரணை, ஆய்வைப் பாதிக்கும் தகவல்கள்

அமைச்சர் குழுக்காகிதங்கள், அமைச்சர்கள், செயலாளர்கள் பிற அதிகாரிகளுடன் கலந்துரையாடிய தகவல்கள்

தனி நபர் பற்றிய தகவல்கள் பொது நன்மை அல்லது பொதுக் காரியத்திற்கு அல்லது பொது நன்மைக்குச் சம்பந்தமில்லாத தகவல்கள்

ஒட்டுமொத்தமான பொதுநலன் கருதி தகவல்களை வெளியிடுதல் தேவை என்று தகுதி வாய்ந்த பொருத்தமான அதிகாரி திருப்திபட்டாலன்றி, பொருப்பாண்மையிலிருந்து ஒருவருக்குக் கிடைக்கும் தகவல்கள்

யாருக்கு மேல்முறையீடு செய்யவேண்டும் ?

(மேல் முறையீட்டு அதிகாரி)
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம்
சாஹித் பகத் சிங் மார்க்
மும்பை – 400 001
மின் அஞ்சல் : aaria@rbi.org.in
Tel : 022 - 22611083
Fax : 022 – 22632052

அல்லது

(மாற்று மேல் முறையீடு அதிகாரி)
நிர்வாக இயக்குநர்
இந்திய ரிசர்வ் வங்கி
மத்திய அலுவலகக் கட்டிடம்
சாகித் பகத் சிங் மார்க்
மும்பை – 400 001
மின் அஞ்சல் : aaria@rbi.org.in
தொலைபேசி : 022 - 22611097
நகலனுப்பி 022 – 22675277


மேற்கண்ட தகவல்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் https://www.rbi.org.in இணைய தளத்தில் இருந்து 03.07.2016 அன்று எடுக்கப்பட்டது.