disalbe Right click

Saturday, October 28, 2017

விமான நிலையத்தில் பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள்

விமான நிலையத்தில் பயன்படுத்த வேண்டிய ஆவணங்கள் வெளியீடு
புதுடில்லி: விமான நிலைய முனையத்தில் நுழையவும், பாதுகாப்பு சோதனையின் போதும் காண்பிக்கப்பட வேண்டிய சான்று விவரங்களை விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
1. பாஸ்போர்ட்
2. வாக்காளர் அடையாள அட்டை
3. ஆதார் அல்லது மொபைல் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆதார்
4. பான் கார்டு
5 . டிரைவிங் லைசென்ஸ்
6. பணியிட அடையாள அட்டை
7. மாணவர்களின் அடையாள அட்டை
8. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்
9. பென்சன் அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
10. மாற்றுத்திறனாளி அடையாளி அட்டை
இதில் ஏதேனும் ஒன்றை காட்டினால் போதுமானது. விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரிய தலைவர் குமார் ராஜேஷ் சந்திரா கூறுகையில், மேற்குறிப்பிட்ட அட்டைகளை காண்பிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் அவர்கள், மத்திய மாநில அரசுகளில் பணிபுரியும் குரூப் கெஜடட் அதிகாரியின் லெட்டர் பேடில், புகைப்படம ஒட்டி, கையெழுத்து வாங்கி காண்பிக்கலாம்.
உள்நாட்டு விமான பயணத்தின் போது, பச்சிளம் குழந்தைகள் அல்லது சிறுவர்களை அழைத்து சென்றால், அவர்களின் பாதுகாவலர்களுக்கு உரிய சான்று இருந்தால், அவர்களுக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.10.2017  

Friday, October 27, 2017

கல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு

கல்வி கடன் முகாம்: பள்ளிகளுக்கு உத்தரவு
சென்னை: பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர, கல்விக் கடன் வழங்குவற்கான முகாம்களை, பள்ளிகளில் நடத்த, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
'பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர வசதியாக, அவர்களுக்கு, வங்கிகள் வாயிலாக, கல்விக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் அனுப்பிய சுற்றறிக்கையில், 'மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், கல்விக் கடன் முகாம் நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுக்களுடன் இணைந்து, பள்ளி களில் கல்விக் கடன் முகாம்கள் நடத்தி, மாணவர்களின் உயர் கல்விக்கு உதவ வேண்டும்' என, கூறியுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.10.2017 

டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்

'டிஜி' லாக்கரில் மாணவர் சான்றிதழ்: புதிய திட்டம் துவக்கம்
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், மாணவ - மாணவியரின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, மதிப்பெண் சான்றிதழ்களை, 'டிஜி லாக்கர்' திட்டத்தின் கீழ், பாதுகாக்கும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், www.digilocker.gov.in என்ற இணையதளத்தில், முக்கிய ஆவணங்களை, 'டிஜிட்டல்' வடிவில் சேமித்து வைக்கும் திட்டம் அமலில் உள்ளது. அதில், ஆதார் எண் வழியாக, ஒருவரின் வாகன உரிமம், வாகன பதிவுச்சான்று போன்ற அசல் ஆவணங்களை பதிவேற்றி, பாதுகாப்பாக வைக்கும் வசதி உள்ளது.
தற்போது, தமிழக அரசு பள்ளிகளில், 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியரின், மதிப்பெண் சான்றுகளை, பதிவேற்றம் செய்யும் திட்டத்தை துவக்கி உள்ளோம். முதல் கட்டமாக, சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி, மாணவர்களின், மதிப்பெண் சான்றிதழ்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன
இதுபோல, படிப்படியாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும். இதனால், நேர்முக தேர்வு, சேர்க்கை போன்ற நேரங்களில், அசல் சான்றை, மாணவர்கள் எடுத்து செல்ல தேவை இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.10.2017