disalbe Right click

Monday, February 10, 2020

தமிழக அரசின் விபத்து நிவாரண திட்டங்கள்

தமிழக அரசின் விபத்து நிவாரண திட்டங்கள்
விபத்து நிவாரணத் திட்டம்-1
இந்த விபத்து நிவாரணத் திட்டம் ஒன்றின் கீழ் மரணமடையும் நபர்களின் வாரிசுகளுக்கு இந்திய அரசின் உதவித் தொகை ரூ.10,000/- மற்றும் மாநில அரசின் உதவித் தொகை ரூ. 5,000/- ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ. 15,000/- வழங்கப்படும்.
பயன் பெறுவதற்கான தகுதியுடையவர்கள்
தமிழ்நாடு அரசாணை 471, நிதித்துறை, (மு..பொ.நி.நி) நாள் 23.5.1989)-ல் கீழே குறிப்பிடப்பட்ட 44 வகை தொழிலாளர்களின் ஏழை வாரிசுதாரர்கள்.
  1. சலவைத் தொழிலாளி 
  2. காலணித் தொழிலாளி
  3. தச்சர்கள், மரவண்டி கட்டுவோர்.
  4. விலங்குகள் இழுத்துச் செல்லும் வண்டியோட்டிகள்
  5. கருமார், சுத்தியல் கருமார்
  6. பொன் வேலை செய்வோர் வெள்ளி வேலை செய்வோர்.
  7. கூடை முடைவோர்.
  8. கல் தச்சர்கள், கல்லில் குடைவோர், கட்டிடத் தொழிலாளி
  9. ஓடு தொழிலாளாகள்
  10. செங்கல் அடுக்குவோர்
  11. கிணறு தோண்டுவோர்
  12. கிணறு கட்டுவோர்கள்
  13. வேளாண்மைத் தொழிலாளர்கள் சிறுவிவசாயிகள் மற்றும் குறு விவசாயிகள் (2.5 ஏக்கருக்கு குறைவாக நில முள்ளவர்கள்)
  14. பதனீர் இறக்குவோர்
  15. கழிவு நீர் அகற்றும் தொழிலாளர்கள்
  16. பூச்சி மருத்து தெளிப்பவர்கள்
  17. பனை மரம் / தென்னை மரம் ஏறுவோர்.
  18. மீனவர்கள்(கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராகஅல்லாதவர்).
  19. கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள்.
  20. டிரக் ஓட்டுபவர்கள்.
  21. ஆட்டோ, ரிக்சா ஓட்டுநர்கள்
  22. தனியார் கார், வாடகைக்கார் மற்றும் பஸ் ஓட்டுபவர்கள்.(வாகனங்கள் சொந்தமாக இல்லாதவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள்.)
  23. முடி திருத்துபவர்.
  24. கை வண்டி இழுப்போர்.
  25. மிதி வண்டி ஓட்டுநர்
  26. தனியார் துறையிலுள்ள கைத்தறி நெசவாளர்கள்.
  27. மண்பாண்டம் மற்றும் மண் பொம்மைகள் செய்யும் குயவர்,குல்லாளர் மற்றும் வேளார்.
  28. வீடுகளில் பணிபுரிவோர்.
  29. பாம்பு பிடிக்கும் தொழில் ஈடுபடுவோர்.
  30. சினிமா படப்பிடிப்பின்போது சம்பந்தப்பட்ட சினிமா தொழிலாளர்கள் என்ற வகையில் அமையும் சினிமா நடிகர்கள்.
  31. தினக்கூலி பெறும் செங்கல் தொழிலாளர்கள்
  32. லாரிகளில் பாரம்/ ஏற்றி இறக்கும் ஏழைத் தொழிலாளர்கள்
  33. ஏழைத் தையல் தொழிலாளர்கள்.
  34. வெள்ளை அடிப்போர் வண்ணம் பூசுவோர் மற்றும் மின்வினைஞர்கள்.
  35. கிராமிய நடனக் கலைஞர்கள்
  36. சமையல் தொழில் செய்பவர்கள்.
  37. மாவு மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்கள்
  38. தனியார் பேருந்தில் பணிபுரியும் நடத்துநர்கள்.
  39. பந்தல் மேடை, மண்டபம், மாநாடு திருமணப் பந்தல், அலங்கார வளைவுகள் அமைக்கும் தொழிலாளர்கள்
  40. மலைகளிலுள்ள மரங்கள் மற்றும் பாறைகளில் ஏறி கல்பாசம் கடுக்காய் மற்றும் தேன் போன்ற வனப்பொருள்களைச் சேகரம் செய்யும் தொழிலாளர்கள் (கூட்டுறவுச் சங்கத்து உறுப்பினர்களாக இல்லாதவர்கள் மட்டும்).
  41. தனியாருக்குச் சொந்தமான கார், லாரி, டிரக் வேன்களில் வேலை பார்க்கும் டிரைவர் மற்றும் கிளீனர்கள்.
  42. பிளம்பர்.
  43. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள்.
  44. ஓவியர்கள்.

மேற்குறிப்பிட்ட 44 வகை தொழில்களில் ஏதாவது ஒன்று செய்பவராக இருக்க வேண்டும். அவ்வாறு மேற்குறிப்பிட்ட 44 தொழில்களில் ஏதாவது ஒரு தொழில் செய்பவராக இருந்து தொழிலில் ஈடுபட்டிருக்கும் போதோ அல்லது சாதாரணமாக இறப்பு நேரிட்டாலோ நிவாரணம் பெற தகுதியுடையவராவார்.
விண்ணப்பப் படிவம் எங்கு கிடைக்கும்?
வட்டாட்சியர் அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, முழுமையாக நிரப்பி செய்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அல்லது சமூகப் பாதுகாப்புத் திட்டத் துணை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்
(மரணமடைந்த தேதியிலிருந்து 1.5 வருடங்களுக்குள் மனு செய்ய வேண்டும்.)
நிரப்பப்பட்ட இந்த விண்ணப்பத்துடன் முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை &  இறப்புச்சான்று நகல்களையும் இணைக்க வேண்டும்
விபத்து நிவாரணத் திட்டம்-2
இந்த விபத்து நிவாரணத் திட்டம் இரண்டின் கீழ் மரணமடையும் நபர்களின் வாரிசுகளுக்கு இந்திய அரசின் உதவித் தொகை ரூ.10,000/- மற்றும் மாநில அரசின் உதவித் தொகை ரூ. 5,000/- ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ. 15,000/- வழங்கப்படும்.
பயன் பெறுவதற்கான தகுதியுடையவர்கள்
கட்டிடத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள்
விண்ணப்பப் படிவம் எங்கு கிடைக்கும்?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, முழுமையாக நிரப்பி செய்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்
(மரணமடைந்த தேதியிலிருந்து 1.5 வருடங்களுக்குள் மனு செய்ய வேண்டும்.)
நிரப்பப்பட்ட இந்த விண்ணப்பத்துடன் முதல் தகவல் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை &  இறப்புச்சான்று நகல்களையும் இணைக்க வேண்டும்
******************************* செல்வம் பழனிச்சாமி, 10.02.2020



தமிழ்நாட்டு நீதிமன்றங்கள்

தமிழ்நாட்டு நீதிமன்றங்கள்
ஒரு அரசாங்கத்தின் அடிப்படையான பணிகளில் நீதித்துறை முக்கியமானதாகும். நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது ஒரு நல்ல அரசாங்கத்தின் கொள்கையாகும். நீதித்துறையானது மிக சுதந்திரமாக, யாருடைய தலையீடுமின்றி, வழக்குகளில் விரைந்து நீதி வழங்க வேண்டும்.
நமது நாட்டில் உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் அனைத்து நீதிமன்றங்களும் இயங்குகின்றது.
நமது தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களின் பெயர்கள், அவற்றின் இருப்பிடங்கள் மற்றும் அவற்றின் அதிகாரங்கள் பற்றிய விபரங்களைத்  (2003-2006 கொள்கை விளக்கக் குறிப்பு மூலம்)   தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

*************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 10.02.2020

உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்களின் அதிகாரங்கள்

உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்களின் அதிகாரங்கள்
உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்கள் உயர்நீதிமன்றத்தின் நிர்வாகத்தலைவராக விளங்குகிறார். அவருக்கு உதவ பதிவாளர் (நிர்வாகம்), பதிவாளர் (கண்காணிப்பு), பதிவாளர்  (மேலாண்மை) ஆகியோர்கள் உள்ளனர். இவர்களுக்கு உதவி செய்ய துணைப் பதிவாளர்கள், உதவிப்பதிவாளர்கள் மற்றும் சார்பதிவாளர்கள் உள்ளனர்.
உயர்நீதிமன்ற பதிவாளர், அந்நீதிமன்ற மேல்முறையீட்டு விதிகளில் கூறப்பட்டிருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தும் உரிமை மற்றும் மேல்முறையீடுகள், மனுக்கள் மற்றும் வழக்கு நடவடிக்கைகள் போன்றவைகள் தொடர்பான உத்தரவுகளை பெற்றுக் கொள்ளும் உரிமை கொண்டவர். மேலும், 

  • உரிய சட்டவிதிகளின் கீழ் எதிர்மனுதாரருக்கு அறிவிப்பு அனுப்புதல்.
  • வழக்கு விசாரணைக்கான தேதியை நிர்ணயித்தல்.
  • பதிவேடுகளை வழக்கு தொடர்பானவர்களுக்கு வழங்க உத்தரவிடுதல்.
  • ஆவணங்களை தயாரிக்க உத்தரவிடுதல்
  • மனுதாரர்கள் வசிக்கும் இடங்களைப் பொருத்து, வழக்கு தொடர்பான காலத்தை நீட்டிக்கவும் இவர் அதிகாரம் பெற்றுள்ளார்
  • நீதிமன்றத்திலோ அல்லது தன்னிடத்திலோ சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டு குறிப்பேடுகள், குறைதீர் மனுக்கள், விண்ணப்பங்கள் அல்லது ஏதேனும் வழக்கு நடவடிக்கைகளை திருத்தக் கோரும் அதிகாரத்தையும் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவுர், திருச்சிராப்பள்ளி மற்றும் கருர் ஆகிய மாவட்டங்களின் நீதி முறைமைகளை மதுரை உயர்நீதிமன்றம் கண்காணிக்கிறது. 
மதுரை உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்களின் முகவரி:
பதிவாளர் அவர்கள்
மதுரை உயர்நீதிமன்றம்,
மதுரை - 625 023.

மேலே கண்ட தென்மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களின் நீதி முறைமைகளையும், புதுச்சேரி மாநில நீதி முறைமைகளையும் சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அவர்களின் முகவரி:
பதிவாளர் அவர்கள்
சென்னை உயர்நீதிமன்றம்,
சென்னை - 600 104 

******************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.02.2020

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (Unemployed Youth Employment Generation Programme -UYEGP)

தமிழக அரசால், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை கொள்கை 2008-ன் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்குடன், வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட தொழில் மையம் மூலமாக  செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?
  1. இதில் பயன்பெற விரும்புபவர்கள் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்
  2. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
  3. விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.1.50 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்
  4. இதற்கான உரிய சான்றிதழை நோட்டரி பப்ளிக் அல்லது உறுதி மொழி ஆணையரிடம் இருந்து பெற வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கடன் தொகை எவ்வளவு?

  1. உற்பத்தி நிறுவனங்களுக்கு அதிகபட்ச தொழில் கடனாக ரூ.10 இலட்சம் வழங்கப்படுகிறது.
  2. சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.3 இலட்சம் வழங்கப்படுகிறது.
  3. வியாபாரத்திற்கு ரூ.1 இலட்சம் வழங்கப்படுகிறது. 
  4. வழங்கப்படுகின்ற தொகைகள் வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது.
  5. வழங்கப்படுகின்ற கடனுக்கு 25 சதவீதம் மானியம் உண்டு. அதிகபட்ச மானியம் 1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.
  6. நேரடி விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது
  7. கடன் பெறுவோரில் பொதுப் பிரிவினர் திட்ட முதலீட்டில் 10 சதவீதம் பங்கு தொகையாக முதலீடு செய்ய வேண்டும்
  8. ஏனைய பிரிவினர்களாகிய தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் திட்ட முதலீட்டில் 5 சதவீதம் பங்கு தொகையாக முதலீடு செய்ய வேண்டும்
  9. எஞ்சிய தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி மூலம் கடனாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க, மாவட்ட தொழில் மைய அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டிய அவசியமில்லை.
விண்ணப்பபடிவத்துடன்  (Project Report) திட்ட அறிக்கை, விலைப்புள்ளி (GST Number கொண்டது). கல்வித் தகுதிச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் நகல், இருப்பிடச் சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பான்கார்டு நகல் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் பட்சத்தில் அதற்கு உரிய சான்றிதழுடன் விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க வேண்டும்.