disalbe Right click

Sunday, November 8, 2020

கொடுக்கல், வாங்கல் - கடன் விதிமுறைகள்
அவசரத்திற்கு பணம் தேவைப்படுகிறது என்று உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ அல்லது வட்டிக்கு பணம் கொடுக்கின்ற தொழில் செய்பவர்களிடமோ நாம் கடனாக பணம் வாங்குகிறோம்.
அதிக வட்டி கிடைக்கிறது என்பதால், அதற்கென்று சில நிபந்தனைகளை வகுத்துக் கொண்டு, அடியாட்களை வைத்துக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுக்கின்ற தொழிலை சிலர் செய்து வருகிறார்கள்.
ஆனால், நமது அரசாங்கம் இதற்கென்று சில விதிமுறைகளை வகுத்து வைத்துள்ளது. அதனை பின்பற்றாமல். நீங்கள் கடன் வாங்கினாலும், கடன் கொடுத்தாலும் அது சட்ட விரோதம் ஆகிவிடும்! என்பது உங்களுக்குத் தெரியுமா?
கடன் கொடுப்பவருக்குண்டான விதிமுறைகள்:
வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் இருந்து கடன் வாங்கும் போது, கடன் பெறுபவர்களிடம் பல தாள்களில் கையெழுத்து வாங்குவார்கள். இதற்கென்று பல்வேறு விதிமுறைகளும், நடைமுறைகளும் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
அறிமுகமானவர்களுக்கோ அல்லது அறிமுகமானவர்கள் பரிந்துரைக்கின்றவர்களுக்கோ அவசரத் தேவைக்காக நீங்கள் அதிக வட்டிக்கு பணம் கொடுப்பவராக இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட தொகைக்கு மேல் ரொக்கமாக கொடுக்க கூடாது என்ற விதிமுறை இருக்கிறது.
ரொக்கமாக எவ்வளவு கொடுக்கலாம்?
கடன் வழங்கும் போது, 20 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ரூபாய் அதிகமான தொகையாக இருந்தால் எனில், அதை ரொக்கமாகவோ அல்லது பெயர் தாங்கிய காசோலை மூலமாகவோ நீங்கள் வழங்க முடியாது.
அதனை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தக்கூடிய காசோலையாகவோ, வரைவோலையாகவோ அல்லது மின்னணு பரிவர்த்தனை மூலமாகவோ மட்டுமே வழங்க வேண்டும்.
கொடுத்த கடனை தொகையை திரும்ப பெறுகின்ற போதும் இந்த முறையை கண்டிப்பாக நீங்கள் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், அது சட்டவிரோத செயலாகிவிடும்.
வாடகை மற்றும் கட்டணங்கள்
வீடுகளுக்கோ, கடைகளுக்கோ மற்றும் திருமண மண்டபங்களுக்கோ நீங்கள் வாடகை செலுத்துவதாக இருந்தாலும் மேற்கண்ட முறையை பின்பற்ற வேண்டும். கல்வி கட்டணங்கள் செலுத்துவதற்கும் இந்த விதிமுறை உண்டு.
அபராதம் உண்டு:
மேற்கண்ட விதிமுறையை நீங்கள் மீறியது தெரியவந்தால், உங்களுக்கு வருமான வரித்துறையால் அபராதம் விதிக்கப்படும்.
இதற்கென்று வரி விதிப்பும் உண்டு
கடன் வழங்குவதற்கென்று வரி ஏதும் கிடையாது. ஆனால், கொடுத்த கடனுக்கு நீங்கள் பெறுகின்ற வட்டிக்கு நீங்கள் வரி செலுத்த வேண்டும். ஒருவரது இதர வருமானம் என்ற பிரிவின்கீழ் இது வரும்.
பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள்
சிலர் சொத்து வாங்கும்போது, கொடுக்கின்ற முன்பணத்தை 20 ரூபாய் பத்திரம் வாங்கி அதில் அதனை எழுதியோ, டை அடித்தோ வைத்துக் கொள்கிறார்கள். இது சட்டப்படி செல்லாது. உங்களிடம் பணம் வாங்கியவர் மிகவும் நம்பிக்கையானவராக இருக்கலாம். எதிர்பாராவிதமாக அவர் இறந்துவிட்டால் நீங்கள் கொடுத்த தொகையை திரும்பப்பெறுவது கேள்விக்குறி ஆகிவிடும்.
ஒப்பந்த பத்திரங்கள் சட்டம்
ஒப்பந்த பத்திரங்கள் சட்டம் பிரிவு 17ன்படி, 5,000 ரூபாய்க்கு மேல் உள்ள சொத்தினை வாங்கும்போதோ அல்லது கொடுக்கும்போதோ போடப்படுகின்ற ஒப்பந்தங்களை கண்டிப்பாக பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
எச்சரிக்கையுடன் இருங்கள்!
மேற்கண்ட முறைகளை பயன்படுத்தாமல் கொடுக்கல், வாங்கல் செய்பவர்களுக்கு சட்டச்சிக்கல் வரும் என்பது நிச்சயம். எனவே எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 09.11.2020

Friday, August 7, 2020

மண்டல துணை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்

மண்டல துணை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்

1. வருவாய் ஆய்வாளர்கள் நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களுடைய பணிகள் மற்றும் பணி அமைப்பினை மேற்பார்வையிடுதல்.

2. வருவாய் வரி வசூல், கடன்கள் வசூல் மற்றும் இதர துறைகளுக்கும் வசூலித்துத்தர தக்க இனங்கள் ஆகியவற்றின் வசூல் பணிகளை ஆய்வு செய்தல்.

3. கிராமக் கணக்குகளை தணிக்கையிடுதல்.

4. “மற்றும்பிமெமோ இனங்களை தணிக்கையிட்டு வெளியேற்று நடவடிக்கைக்கான ஆணைகளை பிறப்பித்தல்.

5. புறம்போக்கு இடங்களிலுள்ள மரங்களை தணிக்கை செய்தல் மற்றும் அவற்றில் மகசூலை ஏலம்விட நடவடிக்கை எடுத்தல்.

 6. முதியோர் உதவித்தொகை மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாறிகளின் விவரம் சரிபார்த்தல்.

7. பட்டா பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.

8. பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்

9. மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.

10. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக மணல், கல்போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.

11. வரி வசூல்காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.

12. வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.

 13 பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கை செய்தல்.

14. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நிலக்குத்தகை நிலமாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தல் மற்றும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தல்.

 15. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.

 16. நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவர் என்பதை சரிபார்த்தல்.

 17. வனக் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.

 18. பயிர்கள் நிலையை மேல் பயிராய்வு செய்தல்.

 19. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி, வரி தள்ளுபடி இனங்கள்

மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புக்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.

 20. வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று வழங்குதல்.

 21. நகல்கள் கேட்டுவரும் மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல்.

 22. சாதிச் சான்று வழங்குதல் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் தவிர).

 23. நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறுகளை திருத்தி ஆணைகள் வெளியிட ஆவன செய்தல்.

24. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்கள் குறித்த ஆணைகள் பிறப்பித்தல்.

25. கால்நடைப் பட்டிகளை பார்வையிடல், மற்றும் அது தொடர்பாக கணக்குகளை சரிபார்த்தல், கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின் நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.

26. மழைமானிகள் தணிக்கையிடுதல்.

27. கிராமக் கல் டெப்போக்கள் மற்றும் நில அளவை கற்களை தணிக்கை செய்தல்.

28. அரசு புறம்போக்கு நிலங்களை தணிக்கையிட்டு ஆட்சேபனையுள்ள ஆக்கிரமணங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தல்.

 29. வருவாய் ஆய்வாளர்களின் தன் பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.

 30. வருவாய் ஆய்வாளரின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.

நன்றி : http://tnroadgl.com

Thursday, August 6, 2020

வாய்தா பற்றி வழக்கறிஞர் Dhanesh Balamurugan‎

வாய்தா பற்றி வழக்கறிஞர் Dhanesh Balamurugan

ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த வழக்கை விசாரிக்காமலோ அல்லது அடுத்த விசாரணைக்காகவோ ஒத்தி வைப்பது வாய்தா (Postpone) எனப்படும்.
வாய்தா வழங்கும் முறை பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 309 கூறுகிறது.
பிரிவு 309 - Power to postpone or adjourn Proceedings -
1. நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கும் அனைவரையும் விசாரித்து முடிக்கும் வரையில் ஒவ்வொரு வழக்கு விசாரணையையும் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து விசாரிக்க வேண்டும். வழக்கை ஒத்தி வைப்பது அவசியமானது என்று நீதிமன்றம் கருதினாலொழிய மற்றபடி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைக்கக்கூடாது. அவ்வாறு ஒத்தி வைத்தால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும்.
வரம்புரையாக - இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376, 376(அ), 376(ஆ), 376(இ), 376(ஈ)- ன் கீழான குற்றம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்போது, முடிந்த மட்டும் அந்த வழக்கு விசாரணையை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் 2 மாதத்துக்குள் முடிக்க வேண்டும். (இது புதிதாக சட்ட எண்- 13/2013 ன் படி இணைக்கப்பட்டு 3.2.2013 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது)
2. நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கு பின்னர் விசாரணை எதையும் துவக்குவதை தள்ளி வைப்பது அவசியமானது என்னும் முடிவுக்கு வருமானால் நிபந்தனைகள் அடிப்படையில் தள்ளி வைக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் சாட்சிகள் முன்னிலையாகி இருந்தால் காரணமில்லாமல் தள்ளி வைக்கக்கூடாது.
3. சூழ்நிலைகள் கைமீறியதாக இருக்கும் நிலையில் வாய்தா வழங்கலாம். மற்றபடி வழக்கு தரப்பினர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக வழக்கை தள்ளி வைக்கக்கூடாது.
4. வழக்கு தரப்பினரின் வழக்கறிஞர் மற்றொரு நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை காரணம் காட்டி வழக்கு விசாரணையை மற்றொரு தேதிக்கு மாற்றி வைக்கும்படி கோர முடியாது.
5. உரிய சந்தர்ப்பங்களில் வழக்கு செலவுத் தொகையை செலுத்த உத்தரவிடலாம்.
இதுபோக இன்னும் பல விளக்கங்கள் உள்ளது.
வழக்கு விசாரணையை துரிதப்படுத்த காவல்துறையினரின் ஒத்துழைப்பு கட்டாயம் வேண்டும். ஆனால் காவல்துறையை நீதிமன்றம் நம்பாது.
ஒரு வழக்கை ஒத்தி வைக்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது நீதிமன்றத்தின் இயல்பான அதிகாரத்தை பொறுத்ததாகும். ஆனால் இந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. வாய்தா வழங்கினால் அதற்கான காரணத்தை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும் என்று கு. வி. மு. ச பிரிவு 309(1) கூறுகிறது. ஆனால் பெரும்பாலான நீதிமன்றங்கள் இதனை பின்பற்றுவதில்லை. அதனால் தரப்பினர் ஆஜராகும் போது நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தால் தகுந்த காரணம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை வற்புறுத்த வழக்கின் தரப்பினர்களுக்கு உரிமை உண்டு.
தகுந்த காரணம் என்பது வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் அல்லது வல்லுநரின் அறிக்கைகள் வர வேண்டியுள்ளது அல்லது முக்கியமான சாட்சியை அழைத்து விசாரணை செய்ய வேண்டியுள்ளது என்பன ஆகும். வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு சாத்தியமில்லை என்ற நிலையில் தான் வாய்தா வழங்கப்படுகிறது.
வழக்கறிஞருக்கு வேறு கோர்ட்டில் வேலை இருக்கிறது என்பதெல்லாம் தகுந்த காரணம் கிடையாது.
தகுந்த காரணம் இருந்தால் நீதிமன்றம் வழக்கை 15 நாட்களுக்கு மேல் ஒத்தி வைக்கக்கூடாது.
எந்த ஒரு நீதிமன்றமும் வழக்கை விரைந்து முடிக்கவே விரும்புகிறது. ஆனால் சில வழக்கறிஞர்கள் தேவை இல்லாமல் வாய்தா கேட்பதால்தான் காலதாமதம் ஆகிறது.
எனவே தேவையில்லாமல் வாய்தா கேட்டால் கு. வி. மு. ச பிரிவு 309(2) ன் கீழ் செலவுத் தொகை தர வேண்டும் என்று கோரினால் தேவையில்லாமல் வாய்தா வழங்கப்படுவதை தவிர்க்கலாம்.
( எனக்கு தெரிந்து இதுதான் நடைமுறை)