கங்காரு மதர் கேர்’- குறைமாதக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம்!
பெண்ணின் கர்ப்பக்காலம் முழுமையாகப் பூர்த்தியடையாமல், ஏழு – எட்டு மாதங்களில் பிறக்கும் குழந்தைகளைக் `குறைமாதக் குழந்தைகள்’ என்கிறோம். பிறக்கும் குழந்தைகள் சராசரியாக மூன்று கிலோ எடை இருக்க வேண்டும். குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் இரண்டு கிலோவுக்கும் குறைவாகப் பிறக்கின்றனர். இக்குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து மருத்துவமனைகளில் பராமரிப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. குறைமாதக் குழந்தைகளுக்கு இன்குபேட்டரைத் தவிர்த்து `கங்காரு மதர் கேர்’ சிகிச்சை கொடுக்கப்படுகிறது. தற்போது தமிழகத்தின் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் எனப் பரவலாக இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
`கங்காரு மதர் கேர்’ சிகிச்சை முறை என்பது என்ன, அதன் பயன்கள் என்ன, எப்படிக் கொடுக்கப்படுகிறது? என்பவைத் தொடர்பான விவரங்களை அளிக்கிறார் சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள்நல மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவின் தலைவர் டாக்டர் கமலரத்தினம்.
கங்காரு மதர் கேர்
“கங்காரு தன் குட்டி வளரும்வரை இயற்கையாக வயிற்றில் அமைந்துள்ள பையில் வைத்துக் கவனித்துக்கொள்ளும். அதை அடிப்படையாகக்கொண்டு குறைமாதக் குழந்தையைத் தாயின் மார்பின் நடுவில் வைத்து அணைத்தவாறு கட்டிக்கொள்வதை ‘கங்காரு மதர் கேர்’ என்கிறோம்.
இது முதன்முதலாக கொலம்பியாவைச் சேர்ந்த டாக்டரால் 1980-ல் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் 2000-ல் இச்சிகிச்சை முறை அறிமுகமானது. அதைத் தொடர்ந்து 2010 முதல் மருத்துவமனைகளில் பிரபலமாகச் செய்யப்பட்டு வருகிறது. குறைந்தது ஒரு கிலோ எடையுள்ள குழந்தை முதல் அதிகபட்சம் இரண்டு கிலோ வரை எடையுள்ள குழந்தைகளுக்கு இச்சிகிச்சையை அளிக்கலாம்.
சிகிச்சை முறை
தாயின் மார்பில் குழந்தையை வைத்துக்கொண்டு பனியன் துணியால் கட்டிவிட வேண்டும். குழந்தையின் தலைக்குத் தொப்பி போன்ற உறையும் கால்களுக்கு சாக்ஸும் அணிவிக்க வேண்டும். இதன் மூலம் தாயின் சருமத்துக்கும் குழந்தையின் சருமத்துக்கும் நேரடித் தொடர்பு ஏற்படும். குழந்தையின் வெப்பநிலை தாய்க்கும் தாயின் வெப்பநிலை குழந்தைக்கும் கடத்தப்படுவதால் வெப்பநிலை சமன் செய்யப்படுகிறது. தாயின் மார்பகத்தின் அருகில் இருப்பதால் குழந்தை தாய்ப்பாலின் வாசம் அறிந்து தேடிச்சென்று பாலை அருந்தும். இதன்மூலம் குழந்தையின் எடை வேகமாக அதிகரிக்கும். நோய்த்தொற்று இல்லாமல் இருக்கும். தாய்க்கும் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
பயன்கள்
குறைமாதக் குழந்தை பிறந்ததை நினைத்து தாய் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். இச்சமயத்தில் குழந்தை தன்னுடனேயே இருக்கும்போது குழந்தைக்கும் தாய்க்குமான பாசப்பிணைப்பு அதிகரிக்கும். ரத்த ஓட்டம், ரத்தத் துடிப்பு சீராகும். ஆக்ஸிஜன் தேவையும் குறையும். தாயின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தை நீண்ட நேரம் தூங்கும். இதனால் குழந்தையின் முகம் புத்துணர்வுடன் காணப்படுவதோடு, அதன் எடையும் விரைவாக அதிகரிக்கும். குறைமாதக் குழந்தையின் இறப்பு விகிதம் குறையும்; நோய்த்தொற்று ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.
யார் வேண்டுமானாலும் செய்யலாம்
அம்மாதான் ‘கங்காரு மதர் கேர்’ செய்ய வேண்டும் என்பதில்லை. தாய்க்கு இயலாத நேரங்களில் தந்தை, தாயின் சகோதரி, பாட்டி, தாத்தா என யார் வேண்டுமானாலும் செய்யலாம். செய்பவர்கள் குளித்துச் சுத்தமாக இருப்பது அவசியம்.
படுத்த நிலையில் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சாய்வான சேரில் சாய்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ, இசை கேட்டுக்கொண்டோ இதைத் தொடரலாம். குழந்தை வளர்ப்பு என்பது தாய்க்கு மட்டுமே விதிக்ககப்பட்டதில்லை என்பதைக் குடும்பமும் உணர்ந்துகொண்டு பின்பற்றும்போது குழந்தையின் வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.
எவ்வளவு நாள்கள்?
குறைமாதக் குழந்தை சராசரி எடையை அடையும்வரை இதைத் தொடரலாம். பொதுவாக குழந்தையின் எடை இரண்டு கிலோவுக்கு மேல் அதிகரிக்கும்போது ஒரே நிலையில் மார்பில் படுத்திருக்காது. குழந்தைக்கு அசௌகரியம் ஏற்படும்போது தவிர்த்துவிடலாம்.
குறைந்தபட்சம் ஒருநாளில் காலையில் ஒருமணி நேரம் மற்றும் மாலையில் ஒருமணி நேரமாவது செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் வேண்டுமானாலும் தொடரலாம். அதிக நேரம் கங்காரு மதர் கேரைத் தொடரும்போது குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதை உணரலாம்.
எந்த மாதிரியான குழந்தைகளுக்கு அளிக்க இயலாது?
குறைமாதக் குழந்தைகளில் ஐ.சி.யூ-வில் இருக்கும் குழந்தைகள், சுவாசப் பிரச்னைகள் இருக்கும் குழந்தைகளுக்கு இச்சிகிச்சையை வழங்க இயலாது.’’
நன்றி : டாக்டர் விகடன்
– 01.12.2017