தங்கம் மீது நம் மக்களுக்கு இருக்கும் ஆசை அளவில்லாதது. அக்ஷய திருதி வந்தால் தங்கம் வாங்குவார்கள்; தீபாவளிக்கு முன்பு தாந்த்ரேயாஸ் வந்தாலும் வாங்குவார்கள். இதுபோக, குழந்தைகளின் எதிர்காலத்துக்கென பணம் கிடைக்கும் போதெல்லாம் தங்கம் வாங்கிப் போடுவார்கள். மகன் அல்லது மகளின் திருமண செலவுக்குத் தேவையான பணத்தைக்கூட பிறகு ஏற்பாடு செய்துகொள்ளலாம்; முதலில் தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் நம்மவர்கள்.
நம் மக்கள் மட்டுமல்ல, பல்வேறு நாட்டின் அரசாங்கங்களே தங்கள் நாணயத்தின் ஏற்ற இறக்கத்துக்கு தங்கத்தைத்தான் காப்பாகக் கொள்கின்றன.
தவிர, சர்வதேச நிதியம் (IMF) போன்ற அமைப்புகளிடம் கடன் வாங்கும்போது, அதற்கு காப்பாக தங்கம் மற்றும் டாலர் நோட்டுக்களைத்தான் நாடுகள் கொடுக்கின்றன.
ஆக, தங்கம் என்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் முக்கியமான சொத்து என்பதில் சந்தேகமே வேண்டாம். இதற்கு முக்கியமான காரணம், எப்போது வேண்டுமா னாலும் இதை வைத்து கடன் வாங்கலாம் என்பதினால்தான்.
நான் ஒருமுறை, ஒரு கிராமத்தில் இருக்கும் வங்கியின் கிளைக்கு ஒரு ஆய்வுக்குச் சென்றிருந்தேன். வங்கியின் கடன் சதவிகிதம் எவ்வளவு என்று பார்ப்பதுதான் நான் செய்த ஆய்வு. அப்போது அதிர்ச்சியான ஒரு உண்மையைத் தெரிந்துகொண்டேன், வங்கிகள் தந்த கடனில் கிட்டத்தட்ட 80% தங்க நகைக் கடன்.
சரி, ஏன் பலரும் தங்கத்தை அடமானமாக வைத்துக் கடன் வாங்குகிறார்கள்
இந்தக் கேள்விக்கான காரணங்கள் பல…
* கடன் பெறுவதற்கு கடன் மதிப்பீடு செய்யப்படுவதில்லை.
* கடன் பெறுவதற்கு மாத வருமானச் சான்றிதழ்கள் கேட்கப்படுவதில்லை.
* சில மணி நேரத்தில் (தனியார் நிறுவனங்களில் சில நிமிடங்கள்தான்) பெற இயலும்.
* ஒவ்வொரு மாதமும் தவணை முறையில் கடனைத் திருப்பிச் செலுத்த அவசியமில்லை.
* தனிநபர் கடனைவிட வட்டி விகிதம் குறைவு.
* தங்கம் ஈடாக இருப்பதால், எந்தக் கேள்வியும் கேட்கப்படுவது இல்லை.
* தங்கத்தை அடமானமாக வைத்துக் கடன் வாங்குவதால், எந்தவித நஷ்டமும் கிடையாது.
இந்த காரணங்களைத் தவிர, மற்றொரு முக்கியமான காரணமும் சொல்லப்படுகிறது. தங்கம் என்பது ஒரு இறந்த சொத்து (Dead
asset). அதிலிருந்து எந்த வருமானமும் கிடைப்பதில்லை. எனவே, அதை வைத்துக் கடன் வாங்குவதால், எந்தவித நஷ்டமும் கிடையாது என்று சொல்பவர்களும் பலர் இருக்கவே செய்கிறார்கள்.
மேலோட்டமாகப் பார்த்தால், இது உண்மை போலத் தோன்றும். ஆனால், இதில் உண்மை இல்லை. தங்கத்தை அடமானமாக வைத்து நாம் பெறும் கடனுக்கான வட்டி, செயலாக்கக் கட்டணம், அபராதக் கட்டணம், மதிப்பீட்டுக் கட்டணம், முன்கூட்டியே கடனை திரும்பச் செலுத்துவதற்கான கட்டணம் எனப் பல செலவுகள் இருக்கின்றன. இவை வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள் இவற்றை வசூலிக்காமலும் இருக்கும்.
ஆனால், தங்க நகைக் கடன்களை தேசியமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளிலும் பெறலாம். அதிகமானவர்கள் இந்த நிறுவனங்களில் தான் நகைக் கடன் வாங்குகிறார்கள். ஓரளவுக்கு நியாயமான வட்டி, அரசு விதித்த விதிமுறைகளைப் பின்பற்றுவது என பல பாசிட்டிவ் அம்சங்கள் இதில் இருப்பதால், நகை அடமானக் கடன் பெற இந்த நிறுவனங்களையே மக்கள் நாடுகிறார்கள்.
தனியார் நிதி நிறுவனங்களிலும், பான் புரோக்கர்கள் என்று சொல்லப்படுகிற நகை அடமானக் கடைகளிலும் தங்கத்தை அடகு வைத்து கடன் வாங்கலாம் என்றாலும் இங்கு வட்டி விகிதம் மிக மிக அதிகம். தவிர, அடமானம் வைக்கப்படும் தங்கத்துக்கு பாதுகாப்புக் கான உறுதியும் இருக்காது.
என்றாலும் தனியார் நிறுவனங்களை மக்கள் தேடிச் செல்லக் காரணம், டாப் சினிமா நடிகர்களை வைத்து செய்யப்படும் விளம்பரம்தான். இந்த விளம்பரங்கள் டிவிக்களில் திரும்பத் திரும்ப போட்டுக் காட்டப் படுவதால், மக்கள் மூளைச் சலவை செய்யப்படுகின்றனர்.
ஆனால், ப்ரைம் டைமில் இந்த விளம்பரங்களை ஒளிபரப்ப இந்த நிறுவனங்கள் எவ்வளவு செலவு செய்கிறது என்பதை நாம் மறந்தே விடுகிறோம். எந்தவொரு தொழிலிலும் லாபம் ஈட்டாமல் வீண் செலவு செய்யப்படுவதில்லை. இந்த நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு செய்யும் செலவுகளை வைத்தே அவை சம்பாதிக்கும் கொழுத்த லாபத்தை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
இந்த லாபத்தைக் கொடுப்பது யார்…? வேறு யார், நாம்தான்; நாம் கொடுக்கும் வட்டிதான். ஒருவரின் லாபம், இன்னொருவரின் நஷ்டம். தங்க நகைக் கடன் கொடுத்தவருக்கு லாபம் என்றால், வாங்கியவருக்கு…? சொல்லவே வேண்டாம், நஷ்டம்தான்
சரி, கடன் கொடுக்கும்போது தங்கத்தின் விலை இருந்ததைவிட குறைந்துவிட்டால் என்ன ஆகும்? முன்பெல்லாம், வங்கிகள் இதைப் பற்றி அதிகம் கவலைப்பட்டதில்லை. ஆனால், இன்றைய நிலைமை அப்படியில்லை. ஒரு பவுன் (எட்டு கிராம்) ரூ.32,000-ஆக இருந்த தங்கம், தடாலடியாக வீழ்ச்சிக் கண்டு ரூ.18,000-க்கு வந்தபோது, வங்கிகள் மார்ஜின் தொகை போதாமல் தவித்துப் போனது. சாதாரணமாக தங்கம் விலை நிலையாக இருக்கும்.
ஆனால், பல வருடங்களுக்குப்பிறகு திடீர் சரிவு நிகழ்ந்தது சமீபத்தில்தான். அதனால் இப்போது மாத ஆரம்பத்தில், சென்ற மாதத்தின் சராசரி தங்கத்தின் விலை நிலவரம் கொண்டு கடனாகத் தரப்படும் பணத்தின் அளவு மாற்றி அமைக்கப்படுகிறது. கடன் வாங்கியவர் இந்த வேறுபாட்டுத் தொகையைக் கட்ட வேண்டாம்.
ஆனால், இந்தத் தொகைக்கு அபராத வட்டி அதிகமாக வசூலிக்கப்படும். இந்த அபராத வட்டியைக் குறைக்க வேண்டுமானால், இந்த வேறுபாட்டுத் தொகையை வங்கிக் கணக்கில் கடன் வாங்கியவர் செலுத்தவேண்டும்.
ஏலமோ ஏலம்!
தங்க நகையை அடமானமாக வைத்து வாங்கப்படும் கடனை உரிய காலத்தில் திரும்பச் செலுத்தாவிட்டால் என்ன ஆகும்?
இதைப் பற்றி வங்கிகள் கடன் கொடுக்கும்போது விளக்கிச் சொல்வதில்லை. அடமானம் வைப்பவர் களும் படிவத்தை ஒழுங்காகப் படிக்காமல் கையெழுத்திட்டுவிடுகிறார்கள். காரணம் அவசரம். நம் பணத் தேவை என்கிற ஒன்றை மட்டுமே பார்க்கிறோம். வட்டியை எல்லாம் கணக்குப் போட்டுப் பார்ப்பதில்லை. ஆக, சில மாதங்களுக்கு என்று தேவைப்பட்ட கடன், ஒரு நிரந்தர தேவையாகி திரும்பக் கட்டமுடியாமல் போகும்போது, வங்கியானது அடமானம் வைக்கப்பட்டிருக்கும் நகைகளை ஏலத்தில் விற்று விட்டு, அதற்கு கொடுக்கவேண்டிய அசல் மற்றும் வட்டியை எடுத்துக்கொள்ளும்.
வங்கிகளின் லாபம் நமது நஷ்டம் என்பதை ஏற்கெனவே சொல்லி இருந்தேன். இப்படி நகைக் கடன் எடுப்பதைவிட, நகையை நம் தேவைக்கேற்ப விற்றுவிட்டு, பின் சிறிது சிறிதாக வாங்கினால் நஷ்டத்தைத் தடுப்பது மட்டுமல்லாமல், லாபம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. ஆனால், தங்க நகைகளை விற்பதற்கு நம்மில் பலருக்கும் தயக்கம் நிறைய உள்ளது.
காரணம், நாம் போட்டு பயன்படுத்திய நகைகள் மீது நமக்கொரு அலாதியான பாசம் வந்துவிடுகிறது. சில நேரம் இது பயமாகவும் உருவெடுக்கிறது. பெண்கள் தங்கள் பாதுகாப்பு என்பதே தங்களிடம் இருக்கும் நகைதான் என்று உணர்வதால், எங்கே நகையை விற்றுவிட்டால் மறுபடியும் வாங்காமல் போய்விடுவோமோ என்று பயப்படுகிறார்கள்.
தவிர, நகையை அடமானம் வைத்து வாங்கப்படும் கடனில் முக்கால்வாசி, குறித்த காலத்தில் செலுத்தப் படாமல் ஆண்டுக் கணக்கில் நீட்டிக்கப்படுகிறது.
அந்த சமயம், பழைய கடன் நேர் செய்யப்பட்டு, புதுக் கடன் போல கணக்குக் காட்டப்படுகிறது. இவ்வளவு செய்தும், கடனைத் திரும்ப அடைக்க முடியாமல், நகையை ஏலத்தில் விடுவதைவிட, இரண்டு வருடத்துக்கு முன்பே அதை விற்றிருந்தால் குறைவான நஷ்டமே வந்திருக்கும். இதை ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்
நம் பணத் தேவை – ரூ.1 லட்சம்
கடன் காலம் – 24 மாதம்
வட்டி விகிதம் – 14%
மாதத் தவணை – ரூ.4,800.
தங்கம் விலை – கிராம் ரூ.2,900 (உதாரணமாக)
மார்ஜின் பிடித்தம் – 30%
சந்தையில் விற்கும்போது நமக்கு கிடைக்கும் விலை – ரூ.2,500
வங்கியானது ஒரு கிராம் தங்கத்துக்குப் போட்ட கடன் மதிப்பு – ரூ.2,000 (916 சுத்த தங்கம், கல் பதிக்காத நகை என்கிற கணக்கில்)
தேவையான தங்கம் – 50 கிராம் (50X2000 = 1,00,000)
கடன் வாங்கும்போது கொடுக்கப் படும் கட்டணங்கள்
செயலாக்கக் கட்டணம் – ரூ.1,000
ஆவணச் சான்றிதழ் – ரூ.350
மொத்தக் கட்டணம் – ரூ1,350
வட்டி – 4,800X24-1,00,000 = ரூ.15,200
மொத்தச் செலவு – ரூ.16,550
(இங்கு அபராத வட்டிக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.)
சரி, இப்போது மூன்று வகையான வாய்ப்புகளை எடுத்துக்கொள்வோம்.
1. தங்கம் விலை அப்படியே இருக்கும்போது!
சந்தையில் விற்கவேண்டிய தங்கம் – 40 கிராம்
40X2500=ரூ.1,00,000
மாதம் மாதம் தவணையாக செலுத்தும் பணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தங்கம் வாங்கினால்…
21X4,800=1,00,800
21 மாதங்களில் விற்ற தங்கத்தை மறுபடியும் வாங்கிவிடலாம். அப்போது நமக்குக் கிடைக்கும் லாபம் 3X4,800+1,350=ரூ.15,750.
எனவே, லாபம் = ரூ.15,750.
2. தங்கம் விலை கிராம் ரூ.3,000-ஆக உயரும்போது!
நாம் வாங்கும் தங்கத்தின் விலை சிறிது சிறிதாக உயரும்போது – 40X3000=ரூ.1,20,000
நமக்கு ஏற்படும் நஷ்டம்=3X4,800+1,350 =15,750-20,000=4,250.
ஆக, நஷ்டம் = ரூ.4,250.
3. தங்கம் விலை ரூ.2,800-ஆகக் குறையும்போது!
நாம் வாங்கும் தங்கத்தின் விலை குறையும்போது – 40X2800=1,12,000.
நம் லாபம் =
3X4,800+1,350=15,750+12,000= 27,750.
ஆக, லாபம் = ரூ.27,750.
மேற்சொன்ன கணக்குகளை எல்லாம் பார்த்தால், நகையை அடமானம் வைத்து கடன் வாங்குவதைக் காட்டிலும், நகையை விற்று அவசர செலவுகளைச் சமாளிப்பதே சரி என்கிறீர்களா என நீங்கள் கேட்கலாம். இல்லை; நகையை அடமானம் வைத்து மிகக் குறுகிய காலத்தில், அதாவது 3 அல்லது 4 மாதங்களில் பணத்தைக் கட்டி நகையை மீட்டுவிட முடியும் என்பவர்கள் அடமானம் வைக்கலாம்.
அடுத்து, நகைக் கடன் மூலம் கிடைக்கும் பணத்தை பிசினஸில் போட்டு நல்ல லாபம் சம்பாதிக்க வாய்ப்புள்ளவர்கள் இந்தக் கடனை வாங்கலாம்.
ஆனால், எப்போது பணம் கிடைக்கும், எப்போது நகையை மீட்போம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லையெனில், அடமானக் கடனை வாங்கும்முன் யோசித்து முடிவெடுப்பதே நஷ்டத்தைத் தவிர்க்க உதவும்.
நகைக் கடன் – ஒரு விளக்கம்!
நகையின் தரமும், எடையும் சரிபார்க்கப்பட்ட பின்பே நகைக் கடன் வழங்கப்படும். தரத்தையும் எடையையும் சரிபார்க்க ஒவ்வொரு வங்கியிலும் மதிப்பீட்டாளர் ஒருவர் இருப்பார். அவருக்கு உரிய கட்டணம் செலுத்தவேண்டும்.
இது முடிந்தபின், வங்கி மேலாளர் ஒரு கிராம் கணக்கில் நகைக்கு உண்டான தொகையை நிர்ணயம் செய்வார். சில வங்கிகளில் மதிப்பீட்டாளரே அந்த வேலையைச் செய்வார். கடன் தொகை ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். ஹால்மார்க் முத்திரை உள்ள நகை 24 காரட் என்றால் கிராமுக்கு சுமார் ரூ.2100, 22 காரட் என்றால் ரூ.2,000 என கடன் தொகை கணக்கிடப்படுகிறது. அதேபோல் நகையில் உள்ள கல் அது வைரமாகவே இருந்தாலும், அந்த எடை கழிக்கப்படும். நகைக்கான முழுத் தொகையும் நமக்கு கடனாகத் தரமாட்டார்கள். ஒரு மார்ஜின் தொகையைப் பிடித்து வைத்துக்கொண்டு மீதமுள்ளதைத்தான் தருவார்கள். இதுவும் வங்கிக்கு வங்கி மாறுபடும்.
அதேபோல், கடனின் காலமும், வட்டி விகிதமும் மாறுபடும். தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் ஆறு மாதம் முதல் மூன்று வருடங்கள், தனியார் நிதி நிறுவனத்தில் மிகக் குறைந்த நாள் கணக்கில் திருப்பிக் கட்டும் விதமாக கடன் கொடுக்கப்படும். அதேபோல், மார்ஜின் தொகை 20-30% பிடிக்கப்படும். வட்டி விகிதம் 12% முதல் 17% வரை வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது.
இந்த வட்டி விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது. வங்கியின் கடன் விகிதம் மாறும்போது இந்த விகிதமும் மாறுபடக்கூடும். நிதி நிறுவனங்களில் வட்டி 24% வரை செல்கிறது. தவிர, அதிகபட்ச கடன் தொகையும் ரூ.50,000 முதல் ரூ.20 லட்சம் வரையில் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இன்னும் சற்று கூடுதலான அதிகபட்ச தொகையை வழங்குகிறார்கள். தவிர வங்கிகளில் விவசாயத்துக்குக் குறைவான வட்டியாக 8 – 8.5% வசூலிக்கிறார்கள்.
ஒரு வருடம் அல்லது குறைவான காலத்துக்கு எடுக்கப்பட்டால், மாதத் தவணை இல்லாமல் வட்டி மட்டும் மாதம்தோறும் கட்டிவிட்டு, வருடக் கடைசியில் ஒரே தொகையாக கடன் தொகையைக் கட்டமுடியும். ஆனால், ஒரு வருடத்துக்கு மேலான கடன் என்றால் வட்டி அத்துடன் அசல் தொகையும் நிர்ணயிக்கப்பட்டு, மாதம்தோறும் கட்டவேண்டும்.
நன்றி – நாணயம் விகடன் 16.10.2016