நீங்கள் நகரத்தையொட்டிய புறநகர்ப் பகுதியிலோ அல்லது கிராமத்தையொட்டிய பகுதியிலோ மனை வாங்க உத்தேசித்துள்ளீர்களா? ஆம் என்றால், குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக மனைக்கான அங்கீகாரத்தில் எக்காரணம் கொண்டும் சமரசம் செய்துகொள்ளாதீர்கள். அங்கீகாரம் இல்லாத மனையை வாங்கினால் பின்னர் அஞ்சும் நிலை ஏற்படலாம்.

நகரங்களில் இன்று காலி மனைகளைக் காண்பதே அரிதாகிவிட்டது. வீட்டுத் தேவை அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் நகரங்களுக்குள் வீட்டு மனை கிடைப்பதும் குதிரைக் கொம்பாகிவிட்டது. எனவே நகரத்தையொட்டிய புறநகர்ப் பகுதிகள் அல்லது கிராமங்களில்தான் மனைகளைத் தேடி மக்கள் செல்கிறார்கள். 

ஆனால், பல மனைகளை முறையாக அரசின் அனுமதி பெறாமல் விற்கப்பட்டுவிடுவதால், மனை வாங்கியவர்கள் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.

அனுமதி வழங்கும் அதிகாரம்
தமிழகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), நகர ஊரமைப்பு இயக்ககம் (டிடீசிபி) ஆகிய இரண்டு அமைப்புகள் மட்டுமே வீட்டு மனை லே-அவுட்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளன. பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு எந்த லே-அவுட்டுக்கும் நேரடியாக அனுமதி வழங்க அதிகாரம் இல்லை. இந்த விவரம் பலருக்கும் இன்னும் சரியாகத் தெரிவதில்லை. குறைந்த விலையில் கிடைக்கிறது என்று நினைத்துக்கொண்டு பஞ்சாயத்து அங்கீகார மனையை வாங்கிவிடுகிறார்கள்.

சிக்கல்கள்
இப்படி வாங்கிய மனையில் வீடு கட்ட அனுமதிக்கும்போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சி.எம்.டி.ஏ., டி.டீ.சி.பி. அங்கீகாரம் இல்லாமல் எந்தக் கட்டிட அனுமதியும் வழங்குவதில்லை. வங்கிகளும் வீட்டுக் கடன் கொடுப்பதில்லை. எனவே மனையை வாங்கி வைத்துவிட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்னையிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளும் உள்ளன. இதுபற்றி அரசு சொல்லும் வழிமுறைகளைப் பின்பற்றினால் சிக்கல் இல்லாத மனைகளை வாங்கிவிடலாம். 

அரசு சொல்லும் வழிமுறைகள் என்ன?
  • மனைகளைப் பிரித்து லே-அவுட் போட்டு விற்பனை செய்யும் புரோமோட்டர்கள், பிரதான சாலைக்குக் குறைந்தபட்சம் 30 அடி அகலம், குறுக்குச் சாலை என்றால் குறைந்தபட்சம் 21 அடி அகலத்தில் அமைக்க வேண்டும்.
  • வீட்டு மனைகளில் தெருக்களின் சாலை வசதி, வடிகால் வசதி, தெரு விளக்குகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். புரோமோட்டர்கள் இதை அமைக்காமல் இருந்தால், இவற்றை அமைக்கச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இதற்கான அபிவிருத்திக் கட்டணத்தை மனை விற்பனை செய்பவர்களைச் செலுத்த சொல்வது வழக்கம்.
  • மொத்த மனைப் பிரிவில் 10 சதவீத நிலத்தை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிக்கு புரோமோட்டர் தான பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுக்க வேண்டும். இதன் பிறகு இந்த 10 சதவீத பகுதிக்கும் புரோமோட்டருக்கும் தொடர்பு இல்லை என்றாகிவிடும்.
  • சம்பந்தப்பட்ட வீட்டு மனை பிரிவு எதிர்காலத்தில் வளர்ச்சி அடைலாம் அல்லவா? அப்போது அந்தப் பகுதியில் அரசின் சார்பில் அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடம், நியாய விலை கடை மற்றும் அரசு துறையின் கீழ் வரும் இதர கட்டிடங்கள் கட்ட இந்த 10 சதவீத இடத்தை ஊராட்சி நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளும்.

பஞ்சாயத்துக்குட்பட்ட மனையில் வீடு கட்ட என்னென்ன வழிமுறைகள் உள்ளன?
வழக்கமாக பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் 4,000 சதுர அடிக்கு மேல் உள்ள மனையில் வீடு கட்ட வேண்டும் என்றால் சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி-க்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அவர்களின் அனுமதி கிடைத்த பிறகு அதை ஊராட்சியில் விண்ணப்பித்து இன்னொரு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியைப் பெற்றுவிட்டால் வீடு கட்டத் தொடங்கலாம். 

ஒரு வேளை சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி அனுமதி பெற்று, அதன்பிறகு சம்பந்தப்பட்ட ஊராட்சியில் அனுமதி பெறாமல் இருந்தாலோ, ஏற்கெனவே சொன்னது போல லே-அவுட்டில் 10 சதவீத இடத்தை ஊராட்சிக்கு அமைப்புக்குத் தானமாக எழுதித் தரவில்லை என்றாலோ, அந்தக் குறிப்பிட்ட பகுதி புஞ்சை நிலம் என்றே வகைப்படுத்தப்பட்டிருக்கும். பின்னர் அந்த இடத்துக்கு பட்டா வாங்குவது, வீடு கட்ட அனுமதி வாங்குவது, வீட்டுக் கடன் வாங்குவதும் கடினமாகிவிடும்.

புறநகர்ப் பகுதிகளிலோ அல்லது கிராமப் புறங்களிலோ புதிதாக வீட்டுமனை வாங்க உத்தேசித் துள்ளவர்கள் இவற்றையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும்.


நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 30.04.2016